You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
ஆக்சிஜன் போதாமல் 26 நோயாளிகள் பலி: டெல்லி, பஞ்சாப் மருத்துவமனைகளில் அவலம்
கொரோனா நோய்த் தொற்று காரணமாக டெல்லி மருத்துவமனை ஒன்றில் சேர்க்கப்பட்டிருந்த 20 நோயாளிகள் ஆக்சிஜன் இல்லாமல் மரணத்தைத் தழுவி இருப்பதாக அந்த மருத்துவமனை கூறுகிறது.
பஞ்சாப் மாநிலம் அமிர்தசரஸ் மருத்துவமனையில் 6 பேர் ஆக்சிஜன் பற்றாக்குறையால் இறந்ததாகவும் செய்தி வெளியாகியுள்ளது.
முன்பாக, டெல்லி கங்காராம் மருத்துவமனையில் ஆக்சிஜன் கிடைக்காமல் 25 நோயாளிகள் இறந்தது குறிப்பிடத்தக்கது.
இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 3.32 லட்சம். சுமார் 2,200 பேருக்கு மேல் உயிரிழந்து இருக்கிறார்கள்.
நாளுக்கு நாள் கொரோனாவால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை கணிசமாக உயர்கிறது. இப்படி ஒரு பக்கம் நோயாளிகளின் எண்ணிக்கை அதிகமாவதால், தயார் நிலையில் இல்லாத இந்திய மருத்துவக் கட்டமைப்பு ஆட்டம் கண்டுள்ளது.
டெல்லி மருத்துவமனையில் ஆக்சிஜன் இல்லாமல் 20 பேர் பலி
அதோடு தடுப்பூசிகள், மருந்துகள், ஆக்சிஜன் சிலிண்டர்கள், மருத்துவமனை படுக்கைகள், வென்டிலேட்டர்கள் என இந்தியாவின் பெரும்பாலான மாநிலங்களில் பல அத்தியவசிய பொருட்கள் மற்றும் வசதிகளுக்கு தட்டுப்பாடு நிலவி வருகிறது. இந்த தட்டுப்பாட்டால் இந்தியாவில் நோயாளிகள் இறந்து போவது தொடர் கதையாகிக் கொண்டிருக்கிறது.
நேற்று இரவு டெல்லி ரோஹினி பகுதியில் இருக்கும் ஜெய்பூர் கோல்டன் மருத்துவமனையில் ஆக்சிஜன் போதாத நிலையில் 20 நோயாளிகள் உயிரிழந்ததாக மருத்துவமனை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இந்த விவரத்தை பி டி ஐ செய்தி முகமை தெரிவித்துள்ளது.
நேற்று வெள்ளிக்கிழமை இரவு 10 மணியளவில் தங்கள் மருத்துவமனையின் டேங்கில் ஆக்சிஜன் தீர்ந்துவிட்டதாகவும், ஆனால், சிலிண்டர்களை ஏற்பாடு செய்து அவற்றை ஆக்சிஜன் குழாய் இணைத்திருந்ததாகவும், ஆனால், போதிய அழுத்தத்தில் ஆக்சிஜன் கிடைக்காததால் தீவிர சிகிச்சைப் பிரிவில் இருந்த 20 நோயாளிகள் இறந்துவிட்டதாகவும் மருத்துவமனையின் மருத்துவ இயக்குநர் தீப் பலுஜா தெரிவித்துள்ளார்.
நேற்று டெல்லியின் முக்கிய மருத்துவமனைகளான மேக்ஸ் குழும மருத்துவமனைகள் மற்றும் சர் கங்கா ராம் மருத்துவமனையில், சில மணி நேரங்களுக்கு மட்டுமே ஆக்சிஜன் இருப்பதாகச் செய்திகள் வெளியாயின.
அதே போல இன்று காலை சுமார் 11.45 மணியளவில் ஜெய்பூர் கோல்டன் மருத்துவமனையில் அடுத்த அரை மணி நேரத்துக்கு மட்டுமே ஆக்சிஜன் கையில் இருப்பதாக, டெல்லி முதல்வர் அர்விந்த் கேஜ்ரிவால், பிரதமர் அலுவலகம், மத்திய சுகாதார அமைச்சர் ஹர்ஷ்வர்தன், மத்திய சுகாதார அமைச்சகம், பிரதமர் நரேந்திர மோதி, டெல்லி துணை நிலை ஆளுநர் ஆகியோரை டேக் செய்து ட்விட்டரில் பதிவிட்டு உதவி கோரி இருகிறது அம்மருத்துவமனை.
தங்கள் மருத்துவமனையில் 200 நோயாளிகள் இருப்பதாகவும், அதில் 80 சதவீதம் பேர் ஆக்சிஜன் உதவியோடு சிகிச்சையில் இருப்பதாகவும், 35 பேர் தீவிர சிகிச்சைப் பிரிவில் இருப்பதாகவும், அம்மருத்துவமனையின் இயக்குநர் கூறியுள்ளதாக பி டி ஐ முகமையின் ட்விட்டர் பக்கத்தில் செய்தி வெளியாகியுள்ளது.
ஒருவழியாக வந்த ஆக்சிஜன் டேங்கர்
நேற்றிரவு டெல்லி ரோஹிணியில் உள்ள ஜெய்ப்பூர் கோல்டன் மருத்துவமனையில் 20 நோயாளிகள் ஆக்சிஜன் போதாமல் இறந்த நிலையில், இன்று பிற்பகல் அந்த மருத்துவமனைக்கு ஒரு வழியாக ஆக்சிஜன் டேங்கர் வந்து சேர்ந்தது.
இந்த மருத்துவமனையில் உள்ள பிபிசி செய்தியாளர் ஜுபைர் அகமதுவிடம் பேசிய உயிரிழந்த நோயாளியின் உறவினர் ஒருவர், "நேற்று அவர் நிலையில் முன்னேற்றம் இருந்தது. எங்களுடன் வாட்சாப்பில் உரையாடத் தொடங்கியிருந்தார். ஆனால், ஆக்சிஜன் போதாமல் நேற்றிரவு இறந்துவிட்டார்" என்று கூறியுள்ளார்.
ஆக்சிஜன் இல்லாமல் பஞ்சாபில் 6 நோயாளிகள் பலி
டெல்லியைத் தாண்டி, தற்போது பஞ்சாப் மாநிலத்திலும் இந்த ஆக்சிஜன் தட்டுப்பாடு பிரச்சனை அதிகரிக்கத் தொடங்கி இருக்கிறது.
ஐந்து கொரோனா நோயாளிகள் உட்பட, மொத்தம் ஆறு நோயாளிகள் ஆக்சிஜன் பற்றாக்குறையால் அமிர்தசரஸ் மாவட்டத்திலிருக்கும் நீல்கண்ட் மருத்துவமனையில் உயிரிழந்திருப்பதாகச் செய்திகள் வெளியாகியுள்ளன.
அந்த ஆறு நோயாளிகளும் ஆக்சிஜன் பற்றாக்குறையால் தான் இறந்தார்கள் என அம்மருத்துவமனையின் நிர்வாக இயக்குநர் சுனில் தேவ்கன் உறுதி செய்துள்ளார்.
இப்படி நோயாளிகள் ஆக்சிஜன் பற்றாக்குறையால் இறந்ததை வெளியில் கூற வேண்டாம் எனவும், அவர்கள் மரணத்துக்கு வேறு விதமான உடல் உபாதைகள் காரணம் எனக் கூறுமாறும் அழுத்தம் கொடுக்கப்பட்டதாகவும் குற்றம் சாட்டியுள்ளார் நிர்வாக இயக்குநர் சுனில்.
எங்கள் மருத்துவமனைக்கு 50 ஆக்சிஜன் சிலிண்டர்கள் தேவை, ஆனால் இன்று ஐந்து தான் கொடுக்கப்பட்டிருக்கிறது. எங்கள் மருத்துவமனையில் மேலும் 12 கொரோனா நோயாளிகள் அனுமதிக்கப்பட்டிருக்கிறார்கள் எனக் கூறியுள்ளார் சுனில்.
நேற்று இரவு ஆக்சிஜன் விநியோகம் தொடர்பாக அம்மருத்துவமனை தங்களைத் தொடர்பு கொள்ளவில்லை என, கூடுதல் துணை ஆணையர் ஹிமான்சு அகர்வால் கூறியுள்ளார்.
"ஆக்சிஜன் தட்டுப்பாடு என எங்களை அணுகி இருந்தால் ஏற்பாடு செய்து கொடுத்திருப்போம்" எனக் கூறியுள்ளார் அவர். மேலும் இந்த சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்த தன் துறைக்கு உத்தரவிட்டுள்ளதாகவும் கூடுதல் துணை ஆணையர் கூறியுள்ளார்.
பிற செய்திகள்:
- என்.வி.ரமணா இந்தியத் தலைமை நீதிபதியாக பொறுப்பேற்பு - யார் இவர்?
- ஆக்சிஜன், படுக்கை பற்றாக்குறையால் கலகலக்கும் இந்திய மருத்துவமனைகள் - என்ன நடக்கிறது?
- 48 ஆக்சிஜன் சிலிண்டர்களை பதுக்கி வைத்தவர் டெல்லியில் கைது
- கொரோனா தடுப்பூசி: இரண்டாம் டோஸ் போடவில்லை என்றால் என்னவாகும்?
- கொரோனாவின் இந்திய திரிபு என்றால் என்ன? ஆபத்தும், பரவும் வேகமும் அதிகமா?
- அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை: டிராபிஃக் ராமசாமி எப்படி இருக்கிறார்?
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: