You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
ஆக்சிஜன் சிலிண்டர்கள் டெல்லியில் பதுக்கல்: 48 சிலிண்டர்களை வைத்திருந்தவர் கைது
தீ போல பரவும் கோவிட் 19 நோய் இந்தியத் தலைநகர் டெல்லியில் ஊழித் தாண்டவம் ஆடிவருகிறது.சுனாமி அலையாக உயரும் தொற்றுகள், மனித உயிர்களைக் காப்பாற்ற போதிய ஆக்சிஜன் கிடைக்காத நிலை, ஆக்சிஜன் சப்ளையில் விளையாடும் அரசியல் பற்றிய புகார்கள், மருத்துவமனையில் படுக்கைப் பற்றாக்குறை என்று எல்லாம் சேர்ந்து மனிதப் பேரவலத்தை அரங்கேற்றி வரும் வேளையில் ஆக்சிஜன் பதுக்கலும், கள்ளச்சந்தை வணிகமும் சில மனிதர்களால் நடத்தப்படுவதை டெல்லியில் ஒரு சம்பவம் அம்பலப்படுத்தியுள்ளது.
32 பெரிய ஆக்சிஜன் சிலிண்டர்களையும் 16 சிறிய ஆக்சிஜன் சிலிண்டர்களையும் பதுக்கிவைத்திருந்த ஒரு நபரை டெல்லி போலீசார் வெள்ளிக்கிழமை கைது செய்தனர். அவரிடம் இருந்த சிலிண்டர்கள் மீட்கப்பட்டன.
தென் மேற்கு டெல்லியின் தஸ்ரத் புரி பகுதியில் போலீசார் நடத்திய சோதனையில் ஒரு வீட்டில் இந்த சிலிண்டர்கள் பதுக்கிவைக்கப்பட்டிருப்பது கண்டுபிடிக்கப்பட்டது என்றும், மேற்கொண்டு விசாரணைகள் நடப்பதாகவும் டெல்லி போலீஸ் கூறியுள்ளது என்கிறது ஏ.என்.ஐ. செய்தி முகமை.
கைது செய்யப்பட்ட அந்த வீட்டின் உரிமையாளர் பெயர் அனில்குமார் என்றும், அவர் 67 லிட்டர் கொள்ளளவு உள்ள பெரிய சிலிண்டர்களை வாங்கி அதை 10 லிட்டர் கொள்ளளவு உள்ள சிறிய சிலிண்டர்களில் அடைத்து ஒவ்வொன்றையும் ரூ.12,500 விலையில் விற்று வந்ததாக போலீஸ் விசாரணையில் தெரிய வந்திருக்கிறது என்று செய்தி வெளியிட்டுள்ளது தி இந்தியன் எக்ஸ்பிரஸ் பத்திரிகை.
கைது செய்யப்பட்ட நபர் தொழிற்சாலை வாயுக்களை விற்கும் தொழிலில் உரிமம் இல்லாமல் ஈடுபட்டிருந்தார் என்றும், மாயாபுரி பகுதியில் உள்ள அவரது முதன்மை கிடங்கு வரும் நாள்களில் ஆய்வு செய்யப்படும் என்றும் தென்மேற்கு தில்லி துணை காவல் கண்காணிப்பாளர் இங்கித் பிரதாப் சிங் தெரிவித்துள்ளார் என இந்தியன் எக்ஸ்பிரஸ் செய்தி கூறுகிறது.
இந்த வாயு உருளைகள் நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டு பிறகு, உரிமம் பெற்ற ஆக்சிஜன் விநியோகஸ்தரிடமோ, தேவைப்படும் ஒரு மருத்துவமனையிடமோ ஒப்படைக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனிடையே டெல்லியில் பல மருத்துவமனைகள் ஆக்சிஜன் பற்றாக்குறை காரணமாக புதிய கோவிட் 19 நோயாளிகளை சேர்ப்பதை நிறுத்திவிட்டன. ஏற்கெனவே உள்நோயாளிகளாக உள்ள பல கோவிட் 19 நோயாளிகளை டிஸ்சார்ஜ் செய்து வெளியே அனுப்புகின்றன.
இதனிடையே டெல்லியில் 24 மணி நேரத்தில் 348 கோவிட் 19 நோயாளிகள் உயிரிழந்துள்ளனர் என்றும், 24 ஆயிரம் பேர் நோய்த் தொற்றுக்கு ஆளானது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது என்றும் பிடிஐ செய்தி முகமை வெள்ளிக்கிழமை இரவு அரசு அறிக்கையை மேற்கோள் காட்டி செய்தி வெளியிட்டுள்ளது.
பிற செய்திகள்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: