தமிழகத்தில் முழு முடக்கத்தால் குறைந்த வாகன போக்குவரத்து, கடலூரில் வீதியில் நடந்த திருமணம்

தமிழகத்தில் முழுநாள் ஊரடங்கு இன்று கடைப்பிடிக்கபடுவதால் பெரும்பாலான கடைகள் மூடப்பட்டுள்ளன. அத்தியவசிய தேவைக்கான மளிகை, ஆவின், மருந்து கடைகள் தவிர பிற கடைகள், வணிக வளாகங்கள் மூடப்பட்டுள்ளன. மக்கள் நடமாட்டத்தை கட்டுப்படுத்த காவல்துறையினர் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர்.

சென்னை,கோவை, மதுரை போன்ற நகரங்களில் அத்தியாவசிய போக்குவரத்து தவிர பிற போக்குவரத்து தடை விதிக்கப்பட்டுள்ளதால், சாலைகளில் அத்தியாவசிய சேவைகளுக்கான வாகனங்களின் போக்குவரத்து மட்டுமே பெரும்பாலும் காணப்படுகிறது. மக்கள் பொது வெளியில் வருவதற்கு கட்டுப்பாடுகள் இருப்பதால், நடமாட்டம் வெகுவாக குறைந்துள்ளதை காண முடிகிறது.

எல்லா நகரங்களிலும் வாகன சோதனை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

புதுச்சேரி தவிர பிற மாநிலங்களில் இருந்து வருபவர்கள் மற்றும் வெளிநாடுகளில் இருந்து விமானம் மூலம் தமிழகத்திற்கு வருபவர்கள் சுகாதாரதுறையால் கண்காணிக்கப்பட்டு வருகிறார்கள்.

சென்னை நகரத்தில் பல உணவகங்கள் மூடப்பட்டுள்ளன. உணவு பார்சலுக்கு மட்டுமே அனுமதி என்பதால், ஸ்விகி, ஸொமேட்டோ போன்ற உணவு எடுத்துச்செல்லும் பணியாளர்களுக்கு அனுமதி தரப்பட்டுள்ளது. அம்மா உணவகங்கள் வழக்கம்போல செயல்படும் என்பதால், அந்த உணவகங்களை நம்பி இருப்பவர்கள் அங்கு செல்ல தடை இல்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேபோல, தடுப்பூசி மையங்களுக்கு செல்லப்பவர்கள் பயணிக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. தமிழகம் முழுவதும் உள்ள அரசு மருத்துவமனைகளில் அவசர சிகிச்சை பிரிவை தவிர பிற அறுவை சிகிச்சை பிரிவுகள் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளன. கொரோனா பணிகளுக்காக மருத்துவர்கள் பல இடங்களில் பணியமர்த்தப்பட்டுள்ளதால், தமிழகம் முழுவதும் செயல்பட்டுவந்த மினி கிளினிக்கள் செயல்படவில்லை.

கேளிக்கை விடுதிகள், மால் மற்றும மக்கள் அதிகமாக ஒன்று கூடும் கடற்கரை பகுதிக்கு செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. கோயில் உள்ளிட்ட எல்லா வழிபாட்டு தலங்களும் மூடப்பட்டுள்ளன. பேருந்துகள் இயங்கவில்லை என்பதால், பேருந்து நிலையங்களும் வெறிச்சோடி காணப்படுகின்றன. சென்னை நகரத்தில் தூய்மை பணியாளர்கள் வேலைக்கு செல்வதற்கு மட்டும் சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகின்றன.

கடலூரில் கோயிலில் மறுக்கப்பட்ட திருமணம் - வீதியில் கரம் பிடித்த ஜோடி

கடலூரில் முழு ஊரடங்கால் கோயிலில் அனுமதி மறுக்கபட்டதால் கோயில் வாசலில் திருமணம் செய்து கொண்டு மணமக்கள் இல்லற வாழ்வில் இணைந்தனர்.

கடலூர் மாவட்டம் திருவந்திபுரத்தில் பிரசித்திபெற்ற தேவநாத சுவாமி கோயில் உள்ளது. முகூர்த்த தினங்களில் சுமார்‌ 200க்கும் மேற்பட்ட திருமணங்கள் இங்கே நடைபெறுவது வழக்கம்.

இந்நிலையில் தமிழகத்தில் கொரோனா நோய்த் தொற்று அதிகரித்து வருவதால் கோயில்களில் திருமணங்கள் நடத்த தடை விதிக்கப்பட்டது. மேலும் இன்று முழு ஊரடங்கு அமலிலுள்ளதால் கோயில்களுக்குள் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.

முன்னதாக, கோயிலில் திருமணம் ஏற்பாடுகள் செய்யப்பட்ட நிலையில், கோயிலுக்குள் திருமணம் செய்ய அனுமதி இல்லாத காரணத்தினால் மணமக்களுக்குக் கோயில் வாசலிலேயே திருமணம் செய்து வைத்தனர். இதில் சுமார் 20க்கும் மேற்பட்ட திருமணங்கள் கோயில் முன்பு இன்று‌ நடைபெற்றது.

சேலத்தில் இயங்கிய உழவர் சந்தை

சேலம் மாவட்டத்தில் உழவர் சந்தைகள் வழக்கம்போல செயல்பட்டு வருகின்றன. கொரோனா வைரஸ் தோற்று காரணத்தால் தமிழகத்தில் இன்று முழு ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டு உள்ளது.

நேற்று இரவு 10 மணி முதல் திங்கட்கிழமை அதிகாலை நான்கு மணிவரை ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டு உள்ளது.இதையடுத்து இன்று பேருந்துகள் ஓடவில்லை . கடைகள் அடைக்கப்பட்டு இருக்கின்றன. மருந்து கடைகள் மற்றும் பால் விற்பனை நிலையங்கள் மட்டும் திறந்திருக்கும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது.இந்த நிலையில் சேலம் மாவட்டத்தில் உள்ள 11 உழவர் சந்தைகள் வழக்கம்போல இயங்கி வருகிறது. சேலம் மாவட்டத்தில் உள்ள 11 உழவர் சந்தைகளும் அதிகாலை 5 மணிக்கு திறக்கப்பட்டுள்ளது . 11 மணி அளவில் உழவர் சந்தைகள் அடைக்கப்படும் என சேலம் உழவர் சந்தை அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர். பொதுமக்களின் அத்தியாவசிய தேவைக்காக உழவர் சந்தைகள் வழக்கம்போல செயல்பட தமிழகஅரசு அனுமதி அளித்துள்ளது என்றும் உழவர் சந்தை அதிகாரிகள் தெரிவித்தனர்.

ஒரே நாளில் உயர்ந்த கொரோனா பாதிப்பு

சேலம் மாவட்டம் காடையாம்பட்டி அருகே ஒரே கிராமத்தைச் சேர்ந்த 28 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதைத் கிராம மக்கள் மிகுந்த அச்சத்தில் உள்ளனர். காடையாம்பட்டி ஒன்றியம் காருவள்ளி ஊராட்சி மரக்கோட்டை குக்கிராமத்தில் சுமார் 80 க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர்.

இந்த கிராமத்தை சேர்ந்த பொதுமக்கள் பெரும்பாலானோர் கர்நாடகா மாநிலம் பெங்களூர் பகுதியில் வைரம் மற்றும் விலை உயர்ந்த பொருட்கள் விற்பனை செய்யும் பணியை செய்து வருகின்றனர். இவர்கள் ஆண்டுக்கு 10 மாதங்கள் கர்நாடகா மாநிலத்தில் தங்கி வேலை செய்து விட்டு இந்த கிராமத்திற்கு சுமார் இரண்டு மாதங்கள் வந்து தங்குவது வழக்கம். தற்போது நாடு முழுவதும் கொரோனா தொற்று காரணமாக மத்திய மாநில அரசுகள் பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்து வருகிறது. இந்த நிலையில் காருவள்ளி ஊராட்சி மரக்கோட்டை கிராமத்தைச் சேர்ந்த பலருக்கு திடீரென காய்ச்சல் சளி உள்ளிட்ட நோய்கள் ஏற்பட்டது.இதை தொடர்ந்து கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது. இதில் அந்த கிராமத்தைச் சேர்ந்த 28 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதிசெய்யப்பட்டது.

அவர்கள் அனைவரும் சேலம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். இதைத்தொடர்ந்து காடையாம்பட்டி வட்டார மருத்துவமனை சார்பில் மரக்கோட்டை கிராமத்தில் பரிசோதனை முகாம் அமைக்கப்பட்டு நூற்றுக்கும் மேற்பட்ட நபர்களிடம் கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

மேலும் தொற்று அதிகரிக்கும் என்பதால் அந்த கிராம மக்கள் மிகுந்த அச்சத்தில் உள்ளனர். மக்களின் அச்சத்தைப் போக்கும் வகையில் வட்டார வளர்ச்சி துறை மற்றும் வருவாய்த்துறை சார்பில் அந்த பகுதியில் உள்ள தெருக்கள் வீடுகள் அனைத்திற்கும் கிருமிநாசினிகள் தெளித்து வருகிறார்கள்.மேலும் தடுப்பு நடவடிக்கையாக அந்த கிராமத்தை தடை செய்யப்பட்ட பகுதியாக அறிவித்துள்ளனர். இது குறித்து காடையாம்பட்டி வட்டார மருத்துவ அலுவலர் சாது பகத்சிங் கூறும் போது, கர்நாடகா மாநிலத்தில் இருந்து காருவள்ளி ஊராட்சி மரக்கோட்டை கிராமத்திற்கு வந்த பலருக்கு திடீரென காய்ச்சல் சளி உள்ளிட்ட நோய்கள் ஏற்பட்டது.அவர்களை பரிசோசனை செய்ததில் முதல் நாள் 18 பேருக்கும் அடுத்த நாள் 10 பேருக்கும் கொரானா பாசிடிவ் என ரிசல்ட் வந்தது. அதைத் தொடர்ந்து வெளி மாநிலங்கள் மற்றும் சென்னை கோவை மதுரை உள்ளிட்ட பெரு நகரங்களில் இருந்து ஊருக்குள் வருபவர்கள் அனைவரும் வட்டார மருத்துவ மனையில் கண்டிப்பாக கொரோனா பரிசோதனை செய்து கொள்ள வேண்டும்.

அதோடு அந்த கொரோனா பரிசோதனை முடிவுகள் வரும் வரை தங்களை வீடுகளில் தனிமைப்படுத்திக் கொள்ள வேண்டும், அனைவரும் முகக் கவசங்கள் அணிந்து பாதுகாப்புடன் இருக்க அறிவுறுத்தியுள்ளோம். மேலும் அந்த கிராமத்தை தனிமைப்படுத்தி தடை செய்யப்பட்ட பகுதியாக அறிவித்துள்ளதாக கூறினார்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: