பெண் வாரிசை ஹெலிகாப்டரில் வரவழைத்து கொண்டாடிய ராஜஸ்தானிய குடும்பம்

மொஹர் சிங் மீனா

பட மூலாதாரம், MOHAR SINGH MEENA / BBC

"பெண் குழந்தைகள் மீது பெரும்பாலும் யாரும் பாசம் காட்டுவது கிடையாது. குடும்பத்தில் மகன் பிறந்தால் கொண்டாடுவார்கள். அதுவே பெண் குழந்தை பிறந்தால் பெரிய கொண்டாட்டம் இருக்காது. சில இடங்களில் குடும்பத்தினர் பெண் குழந்தை பிறந்ததற்காக கோகப்படுவார்கள். சட்டவிரோதமாக கருவிலேயே சிசு ஆணா பெண்ணா என்றும் பரிசோதனை செய்வார்கள். பெண் என தெரிய வந்தால் கருவிலேயே கலைக்கவும் முயற்சிப்பார்கள்"

"இப்படி எதுவும் எனது குடும்பத்தில் நடக்கவில்லை," என்று தமது குடும்பத்துக்கு மகன் வழியில் பிறந்த பெண் வாரிசு பிறந்த மகிழ்ச்சியை பெருமிதத்துடன் பிபிசியிடம் பகிர்ந்து கொள்கிறார் விவசாயி பிரஜாபத்.

"எங்களுடைய குடும்பத்தில் 35 ஆண்டுகளுக்குப் பிறகு பெண் வாரிசு பிறந்துள்ளதை நினைத்து ஆனந்தமாக இருக்கிறோம்," என்று அவர் கூறுகிறார். இவர்களின் குடும்பம் அந்த பெண் வாரிசை வரவேற்ற விதம் சுற்று வட்டாரங்களை பெரிய அளவில் ஈர்த்திருக்கிறது.

அப்படி என்ன செய்தார் பிரஜாபத்?

55 வயதாகும் மதன் பிரஜாபத், ராஜஸ்தானில் உள்ள நாகர் மாவட்டத்தின் நிம்ப்டி சந்த்வாதா கிராமத்தைச் சேர்ந்தவர். இவருக்கு ஒரு மகளும் மகனும் உள்ளனர். மூத்த மகளுக்கு 35 வயதும் இளைய மகனுக்கு 21 வயதும் ஆகிறது. இதில் மகனின் மனைவி சுகா தேவிக்கு கடந்த 2ஆம் தேதி பெண் குழந்தை பிறந்தது.

அந்த குழந்தைக்கு சித்தி என்று இவர்களின் குடும்பம் பெயர் சூட்டியது. நாகர் மாவட்ட மருத்துவமனையில் பிறந்த குழந்தை, சுகா தேவியின் தாத்தா வீட்டுக்கு சம்பிரதாயத்தின்படி அழைத்துச் செல்லப்பட்டது.

ஆனால், அந்த பிஞ்சு மழலையின் முதல் வெளியுலக பிரவேசம் வித்தியாசமாக இருக்க வேண்டும் என்று சிந்தித்தார் பிரஜாபத். 35 ஆண்டுகளுக்குப் பிறகு பிறந்த பெண் வாரிசு என்பதால் அதன் வரவேற்பு மிகப்பெரிய அளவில் இருக்க வேண்டும் என அவர் விரும்பினார். நிம்பாடியில் இருந்து தாய் வழி தாத்தாவின் பூர்விகத்துக்கு பேத்தி வரும்போது அது எதிர்காலத்தில் அவரது வாழ்நாளில் மறக்க முடியாத அனுபவமாக இருக்க வேண்டும் என்று கருதினார் பிரஜாபத். வித்தியாசமாக சிந்தித்தார்.

பிறகு மாவட்ட ஆட்சியரை சந்தித்து, எனது பேத்தியை மருத்துவனையில் இருந்து ஹர்சொல் கிராமத்துக்கு ஹெலிகாப்டரில் அழைத்து வர வர அனுமதி கோரினார்.

அவரது உணர்ச்சிகரமான யோசனையை ஏற்றுக் கொண்டு கொரோனா வழிகாட்டுதல்களின்படி ஹெலிகாப்டர் சேவையை பயன்படுத்த அனுமதி கொடுத்தார் நாகர் மாவட்ட ஆட்சியர் ஜிதேந்திர குமார்.

ராமநவமி நாளில், அந்த பிஞ்சுக்குழந்தை 10 நிமிட பயண தூரத்தில் உள்ள நிம்டி சந்த்வாதாவில் இருந்து நனிஹால் ஹர்சொல் கிராமத்துக்கு ஹெலிகாப்டரில் வந்தது. அதன் வரவை ஏராளமான கிராமவாசிகளும் குடும்ப உறுப்பினர்களும் ஹெலிகாப்டர் தரையிறங்க ஒதுக்கப்பட்ட இடத்தில் கூடி நின்று வேடிக்கை பார்த்தனர்.

குழந்தை ஹெலிகாப்டரில் இருந்து தரையிறங்கியதும் பூக்களைத் தூவி அதை வரவேற்றனர். குடும்ப பாரம்பரியப்படி குழந்தை வரவேற்கப்பட, ஒட்டுமொத்த மாவட்டம் முழுவதும் இந்த நிகழ்ச்சி பற்றிய தகவல்கள் பரவின.

சமூகத்துக்கு விடுக்கப்பட்ட நற்செய்தி

பெண் குழந்தை

பட மூலாதாரம், MOHAR SINGH MEENA / BBC

படக்குறிப்பு, பெண் வாரிசுக்கு கெளரவம் அளித்த குடும்பத்தின் முயற்சியை பாராட்டும் மாவட்ட நிர்வாக அதிகாரிகள்

ஒரு புறம் குழந்தையை வரவேற்க பிரஜாபத் காட்டிய ஆரவாரம் விமர்சிக்கப்பட்டாலும், அவர் குறிப்பால் உணர்த்திய செய்தி சமூக விழிப்புணர்வைக் கொண்டதாக பார்க்கப்படுகிறது.

ராஜஸ்தானில் பல தசாப்தங்களாக பாலின விகிதத்தில் வேறுபாடு நிலவுகிறது. அந்த வகையில், பிரஜாபத்தின் குடும்பத்தில் பிறந்த மகள் வாரிசுக்கு கிடைத்துள்ள இந்த கெளரவம், பெண்களின் பாலின சமமின்மைக்கு எதிரான சிறந்த விழிப்புணர்வு என கருதுவதாகக் கூறினார் சமூக செயல்பாட்டாளர் ராஜன் செளத்ரி.

இதுபோன்ற முயற்சிகள் தொடர்ந்தால் பிறகு கருவிலேயே பெண் சிசுக்களை அழைக்கும் கொடுமை மறையும் என்றும் அவர் தெரிவித்தார். ராஜஸ்தானில் பெண்களுக்கு சம அந்தஸ்தும் மரியாதையும் கொடுக்கப்பட இதுபோன்ற நிகழ்ச்சி ஊக்கமாக இருக்கும் என்று அவர் கருதுகிறார்.

பெண் குழந்தை

பட மூலாதாரம், MOHAR SINGH MEENA / BBC

படக்குறிப்பு, மகள் சித்தியுடன் தாய் சுகா தேவி

ஹர்சொல் கிராமத்தைச் சேர்ந்த ஷிவேந்திரா, இந்த நடவடிக்கையை ஊக்கம் தரும் முயற்சியாக பார்க்கிறார். "எங்களுடைய கிராமத்தில் ஹெலிகாப்டரில் பெண் வாரிசு வரவேற்கப்படுவதை நினைத்துப் பெருமைப்படுகிறோம். ஆணோ, பெண்ணோ இரண்டு குழந்தைகளையும் சமமாக நடத்த வேண்டும் என்பதை இது உணர்த்துகிறது," என்று அவர் குறிப்பிட்டார்.

இந்த கிராமவாசிகளின் சிந்தனை, பாலின சமத்துவத்தை வலியுறுத்தி வரும் அரசின் முயற்சிக்கும் உறுதுணையாக இருக்கும் என்று கூறுகிறார் நாகர் மாவட்டத்தின் ஆட்சியர் ஜிதேந்திர குமார் சோனி. தனது குடும்பத்தில் 35 ஆண்டுகளுக்குப் பிறகு பெண் வாரிசு பிறந்திருப்பதை நினைத்து மட்டுமின்றி தனது மகள் வரவேற்கப்பட்ட அனுபவத்தை நினைத்து சுகா தேவி நிச்சயம் மகிழந்திருப்பார் என்கிறார் ஜிதேந்திர குமார் சோனி.

எட்டாம் வகுப்பை தாண்டாத குடும்பம்

பெண் குழந்தை

பட மூலாதாரம், MOHAR SINGH MEENA / BBC

பெண்களின் பாலின சமத்துவத்தை சமூகத்தில் வலியுறுத்த வித்தியாசமாக சிந்தித்துள்ள பிரஜாபத்தின் குடும்பத்தில் அனைவரும் எட்டாம் வகுப்பை கடக்காதவர்கள். இந்த குடும்பத்தில் தாத்தாவான மதன் பிரஜாபத், ஏழாம் வகுப்பு வரை படித்துள்ளார். அவரது மனைவி முன்னி தேவி, மழைக்கு கூட பள்ளிக்கூடம் பக்கம் ஒதுங்காதவர். புதிய வரவான சித்தியின் தந்தை எட்டாம் வகுப்பு வரையும், தாய் சுகா தேவி மூன்றாம் வகுப்பு வரை படித்துள்ளார். விவசாயம் மட்டுமே இந்த குடும்பத்தின் ஒரே தொழில் ஆதாரம்.

சுகா தேவியின் தந்தை பஞ்ச்ராம் பிரஜாபத்தும் எட்டாம் வகுப்பு வரையும் தாய் இரண்டாம் வகுப்பு வரையும் படித்துள்ளனர்.

ஆனால், இந்த குடும்பம் தங்களுடைய பெண் வாரிசை வரவேற்க காட்டிய ஆர்வமும் உத்வேகமும், இவர்கள் வாழும் பகுதியின் சுற்று வட்டாரத்தில் ஆண், பெண் பாலின சமத்துவம் இல்லாத நிலையை தகர்க்கும் முயற்சின் அரிய தொடக்கமாக பார்க்கப்படுகிறது.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: