You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
தமிழகத்தில் புதிய கொரோனா கட்டுப்பாடு: 12ஆம் வகுப்பு பொதுத் தேர்வு தள்ளி வைப்பு, ஞாயிற்றுக் கிழமைகளில் முழு ஊரடங்கு
இந்தியாவின் பல மாநிலங்களில் கொரோனா இரண்டாம் அலை தீவிரமாக பரவி வரும் சூழலில் பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு வருகின்றன இந்நிலையில் தமிழகத்தில் ஏற்கனவே பல கட்டுப்பாடுகள் அமலில் இருக்கும் சூழலில் இன்று புதிய கட்டுப்பாடுகளை அரசு வெளியிட்டுள்ளது.
தமிழகத்தில் இன்று 10ஆயிரத்து 723 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
மாநிலத்தில் 65,635 பேர் கொரோனா தொற்றுக்கு சிகிச்சை பெற்று வருகின்றனர். தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வரும் சூழலில் புதிய கட்டுப்பாடுகள் இன்று அறிவிக்கப்பட்டுள்ளன.
புதிய கட்டுப்பாடுகள் என்னென்ன?
- மாநிலத்தின் அனைத்து பகுதிகளிலும் இரவு 10 மணி முதல் காலை 4 மணி முடிய இரவு நேர ஊடரங்கு அமல்படுத்தப்படும். இரவு நேர ஊரடங்கின்போது தனியார்/பொது பேருந்து போக்குவரத்து, வாடகை, ஆட்டொ, டாக்ஸி மற்றும் தனியார் வாகன உபயோகம் அனுமதிக்கப்படாது.
- பெட்ரோல் மற்றும் டீசல் பங்குகள் தொடர்ந்து செயல்படுத்த அனுமதிக்கப்படும்.
- மாநிலத்தின் அனைத்து பகுதிகளிலும் ஞாயிற்றுக் கிழமைகளில் முழு ஊரடங்கு அமல்படுத்தப்படும். அன்றைய தினம் இறைச்சி கடைகள், மீன் மார்கெட், காய்கறி கடைகள், சினிமா தியேட்டர்கள், வணிக வளாகங்கள் மற்றும் அனைத்து கடைகள் செயல்பட அனுமதிக்கப்பட மாட்டாது. இதை கடைபிடிக்காதவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும்.
- அத்தியாவசிய பணிகளான பால் விநியோகம், தினசரி பத்திரிகை விநியோகம், மருத்துவமனைகள், மருத்துவ பரிசோதனை கூடங்கள், மருந்தகங்கள், மருத்துவ துறை சார்ந்த அனைத்து பணிகள், ஆகியவை முழு ஊரடங்கின்போது அனுமதிக்கப்படும்.
- முழு ஊரடங்கு அமலில் இருக்கும் நாட்களில் திருமணங்களில் 100 பேர் மிகாமல் கலந்து கொள்ளலாம். இறப்பு சார்ந்த நிகழ்வுகளுக்கு 50 பேர் மிகாமல் கலந்து கொள்ளலாம்.
- முழு ஊரடங்கு அமலில் உள்ள நாட்களில், உணவகங்களில் காலை 6மணி முதல் 10 மணி வரையிலும், நண்பகல் 12 மணி முதல் மதியம் 3 மணி வரையிலும், மாலை 6 மணி முதல் இரவு 9 மணி வரையிலும் பார்சல் சேவை மட்டும் அனுமதிக்கப்படுகிறது. Swiggy, Zomato போன்ற மின் வணிகம் மூலம் உணவு விநியோகம் செய்யும் நிறுவனங்கள் மேற்கண்ட நேரங்களில் மட்டும் செயல்பட அனுமதிக்கப்படுகின்றது.
- சுற்றுலாத் தளங்களுக்கு உள்ளூர் மற்றும் வெளியூர் பயணிகள் செல்ல முற்றிலும் தடை
- தகவல் தொழில்நுட்பம் மற்றும் தகவல் தொழில்நுட்ப சேவை நிறுவனங்களில் குறைந்தபட்சம் 50 சதவீத பணியாளர்களை வீட்டிலிருந்தே பணிபுரிய அந்தந்த நிறுவனங்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
- 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கான தமிழ்நாடு பள்ளிக்கல்வித்துறை மூலம் நடத்தப்படும் பொதுத்தேர்வு தள்ளி வைக்கப்படுகிறது. இருப்பினும் 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு தற்போது நடைபெற்று வரும் செயல்முறைத் தேர்வு மட்டும் ஏற்கனவே திட்டமிட்டபடி நடத்தப்படும்.
- கல்லூரி மற்றும் பல்கலைக்கழக ஆசிரியர்கள் தங்கள் வீட்டிலேயே இணைய வழியாக வகுப்புகளை எடுக்க வேண்டும்.
- அரசு மற்றும் தனியார் கல்லூரி/பல்கலைக்கழக தேர்வுகள் இணைய வழியாக மட்டுமே நடத்தப்பட வேண்டும்.
- திரையரங்குகளில் 50 சதவீத பார்வையாளர்கள் அனுமதிக்கப்பட்ட நிலையில், கொரோனா தடுப்பு நடவடிக்கைகளான முகக்கவசம் அணிவது, சோப்பு அல்லது சானிடைசர் கொண்டு கைகளை சுத்தம் செய்வது, சமூக இடைவெளியை கடைப்பிடிப்பது ஆகியவற்றை திரையரங்க நிர்வாகம் உறுதி செய்ய வேண்டும்.
- பொதுமுடக்க நாட்களில் நிலையான வழிகாட்டு நடைமுறைகளை பின்பற்றி, தேநீர் கடைகள், உணவு விடுதிகள், காய்கறி கடைகள், பலசரக்கு கடைகள், உட்பட அனைத்து கடைகள், வணிக வளாகங்கள், அனைத்து ஷோரும்கள் மற்றும் பெரிய கடைகள் (நகை, ஜவுளி) ஒரே நேரத்தில் 50 விழுக்காடு வாடிக்கையாளர்களுடன் இரவு 9 மணி வரை மட்டும் செயல்பட அனுமதிக்கப்படும்.
- தடையின்றி தொடர்ந்து செயல்பட வேண்டிய தொடர் செயல்முறை தொழிற்சாலைகள் (continuous process industries) மற்றும் அத்தியாவசியப் பொருட்கள் தயாரிக்கும் தொழிற்சாலைகள் முழு ஊரடங்கின்போதும் செயல்பட அனுமதிக்கப்படுகிறது.
மீண்டும் கொரோனா கட்டுப்பாட்டு மையம்
முன்னதாக சென்னையில் மீண்டும் கொரோனா கட்டுப்பாட்டு மையம் செயல்பாட்டுக்கு வந்துள்ளது என சென்னை மாநகர ஆணையர் பிரகாஷ் தெரிவித்துள்ளார். சென்னை மாநகராட்சி அலுவலகத்தில் 100 தொலைப்பேசி இணைப்புகளைக் கொண்ட கொரோனா கட்டுப்பாட்டு மையம் செயல்பட தொடங்கியது என அவர் தெரிவித்துள்ளார்.
மீண்டும் ஊரடங்கு குறித்து அவதூறு பரப்பினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், தடுப்பூசி குறித்த தவறான தகவல்களைப் பரப்புவதைத் தடுக்க வேண்டும் என்றும் ஆணையர் பிரகாஷ் தெரிவித்துள்ளார்.
செய்தியாளர்களை சந்தித்த ஆணையர் பிரகாஷ், ''தடுப்பூசி குறித்த சந்தேகங்களுக்கு பொதுமக்கள் 044-46122300, 25384520 எண்களில் அழைக்கலாம். தடுப்பூசி தட்டுப்பாடு நிலவுவதாகவும், தடுப்பூசி செலுத்துவது தவறானது உள்ளிட்ட பல வதந்திகளை சமூகவலைத்தளங்களில் பரவுவதைக் கவனித்து வருகிறோம். அவதூறு பரப்புபவர்கள் மீது நடவடிக்கை எடுப்போம். சென்னை மாநகராட்சியை பொறுத்தவரை சுமார் மூன்று லட்சம் தடுப்பூசிகள் நம்மிடம் உள்ளன. அதனால் எந்த தட்டுப்பாடும் இல்லை,'' என்றார்.
பிற செய்திகள்:
- நடிகர் விவேக்: சினிமாவுக்கு பாதை அமைத்த, மதுரை அமெரிக்கன் கல்லூரி குறும்புகள்
- இந்தியாவில் ஒரே நாளில் 2.61 லட்சம் பேருக்கு தொற்று: பிரசாரத்தை ரத்து செய்த ராகுல்
- சென்னையில் கொரோனா கட்டுப்பாட்டு மையம் மீண்டும் துவக்கம் - வதந்திகளை பரப்ப வேண்டாமென எச்சரிக்கை
- 18 நாளாக உண்ணாவிரதம்: ரஷ்ய எதிர்க்கட்சி தலைவர் ஓரிரு நாளில் இறக்க நேரும் - மருத்துவர்கள்
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: