ஆன்லைன் வேலைவாய்ப்பு மோசடியில் பணத்தை இழக்கும் மக்கள்: எச்சரிக்கும் வல்லுநர்கள்

    • எழுதியவர், பிரமிளா கிருஷ்ணன்
    • பதவி, பிபிசி தமிழ்

கொரோனா காரணமாக தமிழ்நாட்டில் வேலையை இழந்துள்ள பலர், வீட்டில் இருந்தபடி ஆன்லைனில் வேலை செய்து சம்பாதிக்கலாம் என பரவும் விளம்பரங்கள் மூலம் தங்களிடம் இருக்கும் சிறிய சேமிப்பையும் இழக்கும் சம்பவங்கள் பல இடங்களில் நடக்கின்றன.

பல தனியார் நிறுவனங்களில் ஏற்பட்ட சம்பள குறைப்பு, தனியார் பள்ளிகளில் சம்பளம் தரப்படாத நிலையில் தவிக்கும் ஆசிரியர்கள், பட்டதாரி மாணவர்கள் என பலரும் ஆன்லைன் வேலைவாய்ப்பு விளம்பரங்களை நம்பி பணத்தை செலுத்தி ஏமாந்துள்ளனர் என தெரியவருகிறது.

வாட்சாப், பேஸ்புக் உள்ளிட்ட வழிகளில் பரவும் போலி விளம்பரங்களில் கொடுக்கப்படும் அலைபேசி எண்கள், இணையதளம் என பலவும் போலியானவை என பாதிக்கப்பட்டவர்கள் பணத்தை இழந்தபின்னர்தான் தெரிந்துகொண்டதாக கூறுகிறார்கள்.

முன்பணம் கேட்டால் உஷாராகவேண்டும்

சென்னையை சேர்ந்த தனியார் பள்ளி ஆசிரியர் சுமதி (பெயர் மாற்றப்பட்டுள்ளது) கடந்த இரண்டு மாதங்களாக சம்பளம் இல்லாததால் ஆன்லைன் வேலையில் சேர்ந்ததாகவும், போலி நிறுவனத்திடம் ரூ.3,000 வரை செலுத்தி ஏமாந்ததாகவும் கூறுகிறார்.

''நண்பர்களின் வாட்சாப் குழுவில் ஆன்லைன் நிறுவனத்தின் அலைபேசி எண் மற்றும் இ மெயில் இருந்தது. தொடர்பு கொண்டு பேசியபோது, ஆங்கிலத்தில் விரைவில் வெளியாகவுள்ள நாவல் தொகுப்பை முழுமையாக டைப் செய்து தரவேண்டும் என்றார்கள். கர்சீவ்(cursive) எழுத்தில் அளிக்கப்பட்டிருந்த பக்கங்களை பார்த்து டைப் செய்யவேண்டும் என்றார்கள். ஆனால் இந்த வேலைக்கு சேருவதற்கு ரூ.3,000 முன்பணமாக செலுத்தினால் ரூ.30,000க்கான வேலை தரப்படும் என்றார்கள். மாத சம்பளம் இல்லை என்பதால் இந்த வேலையில் வரும் பணம் பயன்படும் என நம்பி, கையில் இருந்த ரூ.3,000 ரூபாயை செலுத்தினேன். பணம் செலுத்தப்பட்ட பின்னர், இரண்டு அழைப்புகள் வந்தன. விரைவில் எனக்கு இ மெயில் அனுப்பப்படும் என்றார்கள். ஆனால் அதன்பின்னர் அவர்களை தொடர்பு கொள்ளமுடியவில்லை,'' என தன் அனுபவத்தை பகிர்ந்தார் சுமதி.

சுமதி தான் ஏமாந்த கதையை நண்பர்களிடம் தெரிவித்தபோது, அவரைப் போலவே ஐந்து நண்பர்களும் பணத்தை இழந்ததாக கூறினார்கள் என்கிறார் அவர்.

''பல போலி விளம்பரங்களில் தோன்றும் ஒரு பெண்''

சுமதி போல வேலையில்லாமல் திண்டாடும் பலரிடம் இருக்கும் சிறுதொகையை பறித்துக்கொள்ளும் போலி நிறுவனங்கள் இரண்டு அல்லது மூன்று மாதங்களில் இணையதள முகவரி மற்றும் அலைபேசி எண்ணை மாற்றி மீண்டும் வேலைக்கு ஆட்களை எடுப்பதாக கூறுவார்கள் என்கிறார் டெல்லியைச் சேர்ந்த சமூக செயற்பாட்டாளர் ஆர்.ஷாஜஹான்.

ஆன்லைன் விளம்பரங்கள் மூலம் நிகழும் மோசடிகள் குறித்து தொடர்ந்து பேஸ்புக்கில் பதிவிட்டு விழிப்புணர்வு ஏற்படுத்திவருகிறார் அவர். தமிழ்ப் புத்தகங்களுக்கு லேஅவுட் செய்யும் வேலையை முழுநேரத் தொழிலாக கொண்டிருந்தாலும், பொது மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த அவ்வப்போது வெளியாகும் விளம்பரங்களை தீவிரமாக ஆராய்ந்து பதிவிடுகிறார் ஷாஜஹான்.

ஆன்லைனில் டைப்பிங் வேலை செய்வதன் மூலம் வீட்டிலிருந்தபடியே மாதம் ஐம்பதாயிரம் சம்பாதிக்கலாம் என்பது போன்ற விளம்பரங்கள் மோசடிதான் என்கிறார் ஷாஜஹான். சமீபத்தில் ஆன்லைன் டைப்பிங் மற்றும் காபி-பேஸ்ட் செய்து தருவது மூலம் சம்பாதிக்கலாம் என வெளியான விளம்பரத்தை முழுமையாக ஆராய்ந்தது பற்றி அவர் விளக்கினார்.

தற்போது ஆன்லைனில் டைப் செய்து கொடுக்கவேண்டிய வேலைகள் இல்லை என்றும் டைப் செய்யவேண்டிய நிலையில் அந்த வசதி மொபைல் போனிலேயே இருப்பதால், அதற்காக செலவிட யாரும் தயாராக இல்லை என்றும் கூறுகிறார் அவர்.

''ஒரு செய்தித் தாளில் வெளியான செய்தி போல விளம்பரம் அமைந்திருக்கிறது. அழகாகச் சிரிக்கின்ற ஒரு பெண்ணின் படம் இதில் உண்டு. பொருளாதார நெருக்கடியால் வேலை போனதால் வீட்டிலிருந்தபடியே வேலை செய்ய முடிவு செய்தார் தில்லியைச் சேர்ந்த கிரன் சிங். வெறுமனே காபி-பேஸ்ட் செய்யும் வேலைதான். இதுபோல பல கம்பெனிகள் மோசடி செய்வதால், மிகவும் யோசித்த பிறகே இதில் இறங்கினார். சில கம்பெனிகள் மாதம் மூன்று லட்சம் ரூபாய் சம்பாதிக்கலாம் என்றெல்லாம் விளம்பரம் செய்கின்றன.

ஆனால் அவை எல்லாமே மோசடிகள்தான். உறுப்பினர் ஆவதற்காக ஆரம்பத்தில் 4,500 ரூபாய்தான் செலுத்த வேண்டும்.

ஷாஜகான் எழுதிய ஒரு விழிப்புணர்வுப் பதிவு:

குழந்தைகளையும் கவனித்துக் கொண்டே மாதம் ஒரு லட்சத்து இருபதாயிரம் சம்பாதிக்கிறார் கிரன் சிங் என்கிறது அந்த விளம்பரம். கூர்ந்து பார்த்தால், விளம்பரத்தில் வந்துள்ள கிரண் சிங் என்ற பெண்ணின் புகைப்படம் பல தளங்களில் பலவிதமான விளம்பரங்களில் வெளியாகியுள்ளது,''என்றார் ஷாஜஹான்.

கிரண் சிங், பவ்யா, ராஜ ஸ்ரீ, ஷியாமளா - எல்லாம் யார்?

''மாதம் ரூ.1,20,000 சம்பாதிப்பதாகக் குறிப்பிட்டு வெளியான விளம்பரத்தில் உள்ள 'கிரண் சிங்' படத்தை ஆராய்ந்தேன். ஆரோக்கியத்தைக் கெடுக்காமல் உடல் எடையைக் குறைக்கலாம் என்ற ஒரு நிறுவனத்தின் வலைதளத்தில் பவ்யா என்ற பெயருடன் இதே படம் இடம் பெற்றிருக்கிறது. புரொகிராமிங் கற்றுக் கொள்ளுங்கள் என்னும் ஒரு வலைதளத்தில் ராஜஸ்ரீ என்னும் மாணவியாக இவர் படமே இடம்பெற்றிருக்கிறது.

இன்டீரியர் டெகரேஷனுக்கான ஒரு நிறுவன விளம்பரத்தில் தாம்பரத்தைச் சேர்ந்த ஷியாமளாவாக இருக்கிறார் இவர். அது மட்டுமல்ல, இந்த விளம்பரச் செய்தியை எப்போது நீங்கள் திறந்தாலும், உறுப்பினர் ஆவதற்கு இன்றே கடைசி என்ற எச்சரிக்கையும் பார்க்கலாம்,'' என்கிறார் அவர்.

''ஆதார்,பேன் கார்ட் விவரங்களை தரவேண்டாம்''

ஒரு காலத்தில் தமிழகத்தில் பல நிதி நிறுவனங்கள் மோசடி செய்ததை போல தற்போது ஆன்லைன் வேலை என்ற மோசடி வலை விரிக்கப்படுகிறது என்கிறார் சி.ஒய். செக்யூரிட்டி நிறுவனத்தை( CySecurity Pte Ltd) சேர்ந்த பிரசன்னா.

''வேலையை இழந்தவர்களை குறிவைத்து இந்த விளம்பரங்கள் வெளியாகின்றன. முதலில், இதுபோன்ற விளம்பரங்கள் வந்தால், அப்படியே நம்புவதைவிட, குறைந்தபட்சம், சைபர் குற்றங்கள் பற்றிய விழிப்புணர்வு உள்ள நண்பர்களிடமாவது பேசுவது நல்லது. வேலைக்கு ஆட்கள் வேண்டும் என்ற நிலையில், அந்த நிறுவனம் பணம் கேட்பது என்பது உங்களுக்கு சந்தகேத்தை ஏற்படுத்தவேண்டும்.

அந்த நிறுவனத்தின் உண்மைதன்மை பற்றி ஆராய்ந்து முடிவு செய்யுங்கள். முடிந்தவரை உங்கள் ஆதார், பேன் கார்ட் உள்ளிட்ட விவரங்களை ஆன்லைனில் கேட்பவர்களிடம் தரக்கூடாது. உங்களது விவரங்களை கொண்டு ஒரு வங்கி கணக்கை கூட ஏமாற்றுக்காரர்கள் தொடங்கலாம். காவல்துறையினர் விசாரிக்கும்போது, நீங்கள் அகப்படலாம்,'' என்கிறார் பிரசன்னா.

சென்னையில் போலியான கால் சென்டர் நடத்தி சுமார் 500 நபர்களை ஏமாற்றிய ஒரு கும்பலை கடந்த ஆண்டு சென்னை காவல்துறை கைதுசெய்தது. ஆனால் இந்த கால்சென்டர் மூலம் ஏமாந்த பலரும் புகார் தெரிவிக்கவில்லை. நான்கு ஆண்டுகளாக அந்த நிறுவனம் செயல்பட்டது என்றும் ஏமாந்தவர்கள் தாங்கள் இழந்தது சிறுதொகை என்பதால் புகார் கொடுக்கவில்லை என்கிறார்கள் காவல்துறை அதிகாரிகள். சைபர் குற்றங்களைப் பொறுத்தவரை, சிறுதொகையாக ஆயிரக்கணக்கவர்களிடம் ஒரு சில தினங்களில் ஏமாற்றி வாங்கிவிட்டு, உடனே அந்த நிறுவனம் பற்றிய தகவல்களை இணையத்தில் அழித்துவிடுவார்கள் என்கிறார்கள். அதனால், சிறுதொகையாக இருந்தாலும், பொது மக்கள் புகார் தரவேண்டும் என்கிறார்கள் காவல் துறை அதிகாரிகள்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: