You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
வீட்டிலிருந்து பணி செய்வதால் ஊழியர்கள் மகிழ்ச்சியாக உணர்கிறார்களா? தெரிந்துகொள்ள ஒரு கருவி
உங்கள் இதயத்துடிப்பை, தூக்கத்தை, நடைப் பயிற்சியை ட்ராக் செய்யும் பேண்டை (wristband) நீங்கள் கைகளில் கட்டியிருப்பீர்கள் ஆனால் நீங்கள் எவ்வாறு உணருகிறீர்கள் என்பதை சொல்ல ஒரு பேண்ட் ஒன்று இருந்தால்?
அப்படி ஒரு கருவிதான் `மூட்பீம்`. இது உங்களை பணியமர்த்தியவர்களுக்கு நீங்கள் எவ்வாறு உணருகிறீர்கள் என்பதை சொல்லும். இந்த `மூட்பீம்` கருவி அலைப்பேசி செயலி மற்றும் வலைதள சேவையோடு இணைக்கப்பட்டிருக்கும். இதில் மஞ்சள் மற்றும் நீல நிறத்தில் இரு பொத்தான்கள் இருக்கும். நீங்கள் மகிழ்ச்சியாக இருந்தால் மஞ்சள் நிறத்தை அழுத்த வேண்டும் இல்லையென்றால் நீல நிறப் பொத்தானை அழுத்த வேண்டும்.
இன்றைய காலகட்டத்தில் ஊழியர்கள் பலர் வீட்டிலிருந்து பணி புரிவதால் அவர்களின் நலன் குறித்து நிறுவனங்கள் தெரிந்து கொள்ள இந்த கருவி உதவி செய்யும். தாங்கள் எவ்வாறு உணருகிறார்கள் என்பதை பொத்தானை அழுத்தி சொல்லிவிட்டால் மேலாளர்கள் ஊழியர்களின் நிலையை தெரிந்து கொள்வர்.
தொலைப்பேசி அழைப்புகள் ஏதும் இல்லாமல் ஒரே நேரத்தில் 500 பேரிடம் அவர்களின் நிலை குறித்து நிறுவனம் கேட்டறிந்து கொள்ள முடியும் என்கிறார் மூட்பீம்-ன் துணை நிறுவனர் கிறிஸ்டினா கால்மர் மெக்ஹா.
இந்த பேண்ட் முதலில் அவரின் பெண் குழந்தை பள்ளியில் எப்படி உணருகிறாள் என்பதை அறிந்து கொள்ள உருவாக்கப்பட்டுள்ளது அதன்பின் இது 2016ஆம் ஆண்டு வர்த்தக பயன்பாட்டிற்கு வந்துள்ளது.
பெருந்தொற்று காலத்திற்கு முன்னதாகவே மன அழுத்த பாதிப்பால் உலக பொருளாதாரத்தில் ஒரு ட்ரில்லியன் டாலர் வரை இழப்பு ஏற்பட்டுள்ளதாக உலக சுகாதார நிறுவனம் தெரிவித்திருந்தது. பெருந்தொற்று காலத்தில் மன அழுத்த பிரச்னை மேலும் அதிகரித்துள்ள நிலையில் ஊழியர்களின் மனநிலை குறித்து பெரும் கவலைகள் எழுகின்றன.
உலகளவில் பலர் வீட்டிலிருந்தே பணி செய்யும் சூழல் தொடரும் நிலையில், பல நிறுவனங்கள் அவர்களின் ஊழியர்களின் மன நிலையை சிறப்பாக வைத்துக் கொள்ள பல வழிகளை தேடி வருகின்றன. அதில் ஒன்றுதான் `மாடர்ன் ஹெல்த் என்ற செயலி`.
சான் ஃபிரான்ஸிஸ்கோவில் ஊழியர்களின் நலன் குறித்து கண்காணிக்க `மாடர்ன் ஹெல்த்` என்ற செயலி உள்ளது.
இதில் ஊழியர்களுக்கு மனநிலையை காத்துக் கொள்வதற்கான பல்வேறு உதவிகள் வழங்கப்படும். இதன்மூலம் மன அழுத்தத்தால் பாதிக்கப்பட்டவர்கள் நிபுணர்களை சந்தித்து உரையாடலாம். அவர்களுக்கு டிஜிட்டல் முறையில் தியானம் செய்வதற்கான வழிகாட்டல்களும் வழங்கப்படும்.
மைக்ரோசாஃப்டின் முயற்சி
வீட்டிலிருந்து பணி செய்வதால் பணியையும் வீட்டு வேலைகளையும் பிரித்துப் பார்க்க முடியாமல் பலர் சிரமப்படுகின்றனர் எனவே வேலை செய்யும் நேரம், ஓய்வு நேரம் ஆகியவற்றை பிரித்து பார்க்க "விர்ச்சுல் கம்யூட்" என்ற ஒன்றை மைக்ரோசாஃப்ட் அறிமுகப்படுத்துகிறது.
இதன் மூலம் அன்றைய நாளில் பணி முடிந்ததும் ஊழியர்களுக்கு ’நோட்டிஃபிகேஷன்’ ஒன்று வரும். அதில் அவர்கள் மீதமுள்ள பணி, அடுத்த நாளுக்கான பணி, இன்றைய நாளில் எவ்வாறு உணர்ந்தார்கள் போன்ற தகவல்களை குறிக்க வேண்டும். மேலும் அவர்கள் தியானம் செய்வதற்கான வழிகாட்டுதலும் வழங்கப்படும்.
நிறுவனங்களின் நடவடிக்கைகள் ஒருபுறம் இருக்க ஊழியர்களின் உடல் நலத்தில் கவனம் கொள்ளும் நிறுவனங்களுக்கு ஒரு விதத்தில் லாபமே கிடைக்கிறது என்கின்றனர் நிபுணர்கள்; அவ்வாறு இருக்கும் நிறுவனங்களில் ஊழியர்கள் குறைந்த நாள் விடுமுறை எடுக்கின்றனர், மகிழ்ச்சியாக தங்களின் பணிகளை செய்கின்றனர் என்கின்றனர் துறைசார் நிபுணர்கள்.
இம்மாதிரியான கருவிகளும், தொழில்நுட்பங்களும் ஊழியர்களின் நலனில் கவனம் செலுத்துவதில் நிறுவனங்களுக்கு உதவி செய்தாலும், பிரச்னைகளுக்கான ஆழ்ந்த காரணங்களை கண்டறிந்து ஊழியர்களின் மன நலத்தில் தொடர்ந்து கவனம் செலுத்துவதும் அவசியம் என்கின்றனர் நிபுணர்கள்.
பிற செய்திகள்:
- அமெரிக்க அதிபர் ஜோ பைடன் பிறப்பித்த மின்னல் வேக முதல் உத்தரவுகள் என்னென்ன?
- சசிகலாவுக்கு ஏற்பட்டது கொரோனா தொற்றா? எப்போது டிஸ்சார்ஜ்? டாக்டர் பேட்டி
- திருக்குறள் மீது சிறுவயதில் எழுந்த ஆர்வம்; ஓலைச்சுவடியில் எழுதும் பஞ்சாபியர் ஜஸ்வந்த் சிங்
- கோடைக்கால பயிற்சி வகுப்பில் இருந்து கோடைக்கால ஒலிம்பிக் வரை முன்னேறிய ஷிவானி கடாரியா
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: