“இந்து மத கடவுள் அனுமன் எங்கள் ஊரில்தான் பிறந்தார்” உரிமை கோரும் கர்நாடகம், ஆந்திர பிரதேசம்

(இன்று 12 ஏப்ரல் 2021 திங்கட்கிழமை) இந்தியாவில் உள்ள சில முக்கிய நாளிதழ்களிலும் அவற்றின் இணையதளங்களிலும் வெளியான முக்கிய செய்திகள் சிலவற்றை இங்கே தொகுத்து வழங்குகிறோம்.)

அனுமன் பிறந்த ஊர் எது?

இந்து மதத்தில் கடவுளர்களில் அனுமனும் ஒருவர். அக்கடவுள் பிறந்த இடம் எது என்பதில்தான் தற்போது கர்நாடக மாநிலமும், ஆந்திர மாநிலமும் உரிமை கோரத் தொடங்கி இருக்கின்றன.

இரு மாநிலங்களும், தங்கள் மாநில எல்லைக்கு உட்பட்ட இடங்களில் ஒன்றைக் குறிப்பிட்டு, அங்குதான் அனுமன் பிறந்தார் எனக் கூறுவதாக டைம்ஸ் ஆஃப் இந்தியா பத்திரிகையில் செய்தி வெளியாகியுள்ளது.

கர்நாடகாவின் ஷிவமோகாவைச் சேர்ந்த மதத் தலைவர் ஒருவர், அனுமன் உத்தர கர்நாடக மாவட்டத்தில் உள்ள கொகர்னா எனுமிடத்தில் பிறந்ததாகக் கூறுகிறார்.

இதற்கு முன், கர்நாடகாவின் கொப்பல் மாவட்டத்தில் உள்ள அனெகுண்டி எனும் இடத்துக்கு அருகில் கிஷ்கிந்தாவில் இருக்கும் அஞ்சனாத்ரியில்தான் அனுமன் பிறந்தார் எனக் கூறப்பட்டு வந்தது குறிப்பிடத்தக்கது.

ஆந்திரப் பிரதேசமோ, தங்கள் மாநிலத்தைச் சேர்ந்த திருப்பதியில் இருக்கும் ஏழு மலைகளில் ஒன்றான இன்னொரு அஞ்சனாத்ரி மலைதான், அனுமன் பிறந்த இடம் என கூறி வருவதாக அச்செய்தியில் கூறப்பட்டுள்ளது.

தமிழகத்தில் ஒரே மாதத்தில் 75,000 பேருக்கு கொரோனா!

தமிழகத்தில் கடந்த ஒரு மாதத்தில் மட்டும் 75,832 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அந்த காலகட்டத்தில் கொரோனா பரவல் விகிதம் 10 மடங்கு அதிகரித்துள்ளதும் புள்ளிவிவரங்களின் வாயிலாக தெரியவந்துள்ளதாக தினமணியில் செய்தி வெளியாகியுள்ளது.

இதே நிலை தொடா்ந்தால், அடுத்த சில நாள்களிலேயே தினசரி பாதிப்பு 10,000-ஐ கடக்கலாம் என அஞ்சப்படுகிறது. தமிழகத்தில் கொரோனாவுக்கு இதுவரை 9,33,434 போ் பாதிக்கப்பட்டுள்ளனா்.

மாநில அரசு முன்னெடுத்த நடவடிக்கைகள் காரணமாக நோய்த் தொற்று கடந்த காலத்தில் பெரிதும் கட்டுப்படுத்தப்பட்டது. மார்ச் முதல் வாரம் வரையில் நாள்தோறும் 400 போ் வரை மட்டுமே கொரோனாவால் பாதிக்கப்பட்டு வந்தார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில், பொது மக்களின் அலட்சியம் காரணமாக கொரோனா பரவல் அதி தீவிரமாகி, அதன் விளைவாக தினசரி பாதிப்பு கடந்த ஒரு மாதத்துக்குள் 400-இலிருந்து 6,618-ஆக அதிகரித்துள்ளது என அச்செய்தியில் கூறப்பட்டுள்ளது.

மதுரை எய்ம்ஸ் - ஜப்பான் நிறுவனத்துடன் கடன் ஒப்பந்தம் கையெழுத்து

மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை கட்டடம் கட்டுவதற்காக இந்தியா - ஜப்பான் இடையே கடன் ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளதாக தினத்தந்தியில் செய்தி வெளியாகியுள்ளது.

மதுரை தோப்பூர் எய்ம்ஸ் மருத்துவமனை கட்டுமான பணிக்கு 2019 ஜனவரியில் பிரதமர் நரேந்திர மோதி அடிக்கல் நாட்டினார். அப்போது ரூ. 1264 கோடியில் இப்பணி மேற்கொள்ளப்படும் என அறிவிக்கப்பட்டது. அதையடுத்து சுற்றுச்சுவர் கட்டும் பணியை தவிர வேறு எந்த பணியும் நடக்கவில்லை.

பிரதான கட்டுமான பணிக்கான நிதியை ஜிக்காவிடம் (ஜப்பான் பன்னாட்டு கூட்டுறவு முகமை) மத்திய அரசு கோரி இருந்தது. இதில் நீடித்த இழுபறியால் இரு ஆண்டுகளாக பணிதுவங்கவில்லை. இதற்கிடையே 2021 மார்ச்சில் கடன் ஒப்பந்தம் கையெழுத்தாகும் என கடந்தாண்டு டிசம்பர் மாதம் மத்திய அரசு உத்தரவாதம் அளித்தது. ஆனால் மார்ச் மாதம் முடிவு வரை எந்த தகவலும் இல்லை.

இந்நிலையில் எய்ம்ஸ் மருத்துவமனை கட்ட இந்தியா - ஜப்பான் இடையே கடன் ஒப்பந்தம் கையெழுத்தானதாக தகவல் வெளியாகியுள்ளது. மதுரை எய்ம்ஸ் பற்றி தென்காசி மாவட்டம் பாவூர்ச்சத்திரத்தை சேர்ந்த சமூக ஆர்வலர் பாண்டியராஜா தகவல் அறியும் உரிமைச்சட்டத்தில் சில விவரங்களைகோரினார்.

இதற்கு பதில் அளித்த மத்திய அரசு, 'தமிழகத்தில் எய்ம்ஸ் மருத்துவமனை கட்ட இந்தியா - ஜப்பான் இடையே கடன் ஒப்பந்தம் கையெழுத்தாகிவிட்டது. இந்த ஒப்பந்த ஆவணம் கிடைத்த பிறகுதான் முழு விவரத்தையும் தெரிவிக்க முடியும்' என மத்திய அரசு தெரிவித்துள்ளது.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: