You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
மியான்மர் ஆட்சிக் கவிழ்ப்பு: ராணுவ நடவடிக்கையால் 80க்கும் மேற்பட்டோர் உயிரிழப்பு
மியான்மரின் பாகோ நகரில், போராட்டத்தில் ஈடுபட்டவர்களில் 80 பேர் பாதுகாப்புப் படையினரால் கொல்லப்பட்டதாகச் செயற்பாட்டாளர்கள் கூறுகின்றனர்.
கொல்லப்பட்டவர்களின் உடல்களை ராணுவத்தினர் எடுத்துச் சென்றதாகச் செய்திகள் வெளியாகியுள்ளன. எனவே இறந்தவர்களின் எண்ணிக்கையை சரியாக தெரிவிக்க இயலாத சூழல் நிலவுகிறது.
மியான்மர் ராணுவத்தினர் கண-ரக ஆயுதங்களைப் பயன்படுத்தியதாக அங்கு இருந்தவர்கள், உள்ளூர் ஊடகத்திடம் கூறியுள்ளனர்.
மியான்மர் நாட்டில் கடந்த பிப்ரவரி மாதம் ராணுவம் ஆட்சி அதிகாரத்தைக் கைப்பற்றியது. அதன் பிறகு 600-க்கும் மேற்பட்டவர்கள் கொல்லப்பட்டு இடிருக்கிறார்கள்.
ஆட்சி அதிகாரத்தில் தன் பிடியை அதிகரித்துக் கொள்ள, மியான்மர் ராணுவம் அதிகப்படியான வன்முறையைக் கையில் எடுத்திருக்கிறது.
யங்கூன் நகரத்துக்கு அருகிலுள்ள பாகோ நகரத்தில் நடந்திருக்கும் கொலை, கடந்த வெள்ளிக்கிழமை நடந்ததாகக் கூறப்படுகிறது. அப்பகுதியில் உள்ள மக்கள் கட்டாயப்படுத்தப்பட்டு, அருகிலிருக்கும் கிராமத்துக்கு அனுப்பப்பட்டதால், இச்செய்தி வெளியாக ஒரு முழு நாள் ஆகிவிட்டது.
மியான்மர் ராணுவத்தால் கொல்லப்பட்டவர்களின் எண்ணிக்கை, இதை விட அதிகமாக இருக்கலாம் என 'அசிஸ்டென்ஸ் அசோசியேஷன் ஃபார் பொலிடிகல் பிரிசனர்ஸ்' என்கிற கண்காணிப்புக் குழு கூறியுள்ளது.
"இது இனப்படுகொலை போன்றது. அவர்கள் ஒவ்வொரு நிழலையும் சுடுகிறார்கள்" என மக்கள் போராட்டத்தை ஒருங்கிணைக்கும் யே ஹடுட் கூறியதாக, மியான்மர் நவ் செய்தி நிறுவனம் சுட்டிக் காட்டியுள்ளது.
கடந்த பிப்ரவரி 01-ம் தேதி மியான்மர் ராணுவம், அந்நாட்டின் ஆட்சி அதிகாரத்தைக் கைப்பற்றி, அடுத்த ஓராண்டு காலத்துக்கு அவசர நிலையைப் பிரகடனப்படுத்தியது. அப்போதிலிருந்து ஜனநாயகத்துக்கு ஆதரவாக, மியான்மர் முழுக்க தொடர்ந்து மக்கள் போராட்டம் நடந்து வருகின்றன.
கடந்த ஆண்டு மியான்மரில் நடந்து முடிந்த தேர்தலில், ஜனநாயகத்துக்கான தேசிய லீக் கட்சி மாபெரும் வெற்றி பெற்றது. அதன் தலைவர் ஆங் சான் சூச்சி மீண்டும் வெற்றி பெற்றார். அத்தேர்தலில் முறைகேடுகள் நடந்திருப்பதாகக் கூறுகிறது மியான்மர் ராணுவம். ஆனால் அக்குற்றச்சாட்டை மறுத்தது அந்நாட்டின் தேர்தல் ஆணையம்.
மியான்மரில் இருந்து வெளியேற்றப்பட்ட மக்கள் பிரதிநிதிகள் மற்றும் ஐக்கிய நாடுகள் சபைக்கான மியான்மர் தூதர், மியான்மர் ராணுவத்தின் மீது நடவடிக்கை எடுக்குமாறும், பொருளாதாரத் தடைகளை விதிக்குமாறும், ஆயுத விநியோகத்தை தடுக்குமாறும், அந்நாட்டின் மீது விமானங்கள் பறக்க தடை விதிக்குமாறும் ஐ நா பாதுகாப்புச் சபை உறுப்பு நாடுகளுக்கு, கடந்த வெள்ளிக்கிழமை அழைப்புவிடுத்தனர்.
மியான்மர் நாட்டின் அரசாங்கம் செயலிழப்பின் விளிம்பில் இருப்பதாக ஐநா கூட்டங்களில் எச்சரிக்கப்பட்டிருக்கிறது.
மியான்மர் நாட்டில் ஆட்சி செய்ய முடியாத நிலை உருவாகலாம், அப்படி ஒரு சூழலை மியான்மர் நாட்டின் ராணுவ நடவடிக்கைகள் உருவாக்கிக் கொண்டிருக்கிறது என சர்வதேச நெருக்கடி குழுவின் மூத்த ஆலோசகர் ரிச்சர்ட் ஹார்சே கூறியுள்ளார்.
மியான்மர் பின்னணி
மியான்மர், பர்மா என்றும் அறியப்படுகிறது. 1948-ம் ஆண்டு இந்த நாடு பிரிட்டனிடம் இருந்து விடுதலை பெற்றது. நவீன வரலாற்றில் பெரும்பாலான காலம் இந்த நாடு ராணுவ ஆட்சியில்தான் இருந்தது.
2010-ம் ஆண்டு வாக்கில் இந்தபிடி தளரத் தொடங்கியது. இதையடுத்து 2015-ம் ஆண்டு சுதந்திரமான தேர்தல்கள் நடத்தப்பட்டு, ஆங் சான் சூச்சி தலைமையில் அரசு அமைக்கப்பட்டது.
2017-ம் ஆண்டு காவலர்கள் மீது ரோஹிஞ்சாக்கள் நடத்தியதாக கூறப்படும் தாக்குதலுக்கு மிகக் கடுமையாக ராணுவம் எதிர்வினையாற்றியதால், சுமார் 5 லட்சம் ரோஹிஞ்சா முஸ்லிம்கள் நாட்டை விட்டு அண்டை நாடுகளில் தஞ்சம் புகுந்தனர்.
பிற செய்திகள்:
- அரக்கோணம் இரட்டைக் கொலை: பகைக்கு காரணம் பானை சின்னமா, மணல் கடத்தலா?
- இந்தியாவின் அனுமதியின்றி லட்சத்தீவு அருகே பயிற்சி நடத்திய அமெரிக்கக் கடற்படை
- கட்டாய ஓய்வுக்குப் பரிந்துரைக்கப்பட்ட 9 ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் - தகவல் ஆணைய உத்தரவு சொல்வது என்ன?
- வன்முறையில் தப்பிக்க இந்தியாவுக்கு தப்பி வரும் மியான்மர் மக்களின் துயரக் கதை
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: