வைரஸ் கொல்லி மருந்து ரெம்டிசிவிர் ஏற்றுமதிக்கு இந்தியா தடை

ரெம்டிசிவிர்

பட மூலாதாரம், Getty Images

இந்தியாவில் கொரோனா வைரஸ் தொற்றுகளின் எண்ணிக்கை அதிவேகமாக உயர்ந்து வரும் நிலையில், வைரஸ் கொல்லி மருந்தான ரெம்டிசிவிர் மருந்தினை ஏற்றுமதி செய்வதற்கு இந்தியா தடை விதித்துள்ளது.

மருந்து மட்டுமல்லாமல் அதற்கான 'ஆக்டிவ் பார்மாசூட்டிகல் இன்கிரடியென்ட்' என்று சொல்லப்படும், மருந்து செய்வதற்கான கச்சாப் பொருளின் ஏற்றுமதியும் தடை செய்யப்பட்டுள்ளது என்கிறது பிடிஐ செய்தி முகமை.

கொரோனா வைரஸ் தொற்றிய நோயாளிகளுக்கு சிகிச்சை அளிப்பதற்கு இந்த மருந்து பயன்படுத்தப்படுகிறது. எனவே தற்போது இந்தியாவில் இந்த மருந்துக்கான தேவை அதிகரித்துள்ளது.

இந்த மருந்தினை இந்தியாவில் தயாரிக்கும் நிறுவனங்கள், தங்களிடம் உள்ள ஸ்டாக் விவரத்தையும், விநியோகஸ்தர்கள் விவரத்தையும், தங்கள் இணைய தளத்தில் வெளிப்படையாக அறிவிக்கவேண்டும் என்று இந்திய சுகாதார அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது.

இது தவிர, மருந்து ஆய்வாளர்களும் பிற அதிகாரிகளும் இந்த மருந்தின் கையிருப்பை சோதனை செய்து, இந்த முக்கியமான மருந்து கள்ளச்சந்தையில் விற்கப்படாமல் தடுக்க நடவடிக்கை எடுக்கவேண்டும் என்றும் அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது.

ஒவ்வொரு மாநில, யூனியன் பிரதேச சுகாதார செயலாளர்களும் இந்த பணியில் ஈடுபடுவார்கள் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தியாவில் கொரோனா தொற்றுவோர் எண்ணிக்கை திடீரென அதிகரிக்கிறது. ஏப்ரல் 11-ம் தேதி இந்தியாவில் 11.08 லட்சம் பேர் நோய்த் தொற்றுடன் உள்ளனர். இந்த எண்ணிக்கை வேகமாக அதிகரிக்கிறது. இதனால், கோவிட் 19 நோயாளிகளுக்கு சிகிச்சை அளிப்பதில், ரெம்டிசிவிர் மருந்தின் பயன்பாடும் அதிகரித்துள்ளது.

வரும் நாள்களில் இதன் தேவை இன்னும் அதிகரிக்கும். இந்தியாவில் 7 நிறுவனங்கள் இந்த மருந்தினை தயாரிக்கின்றன.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: