You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
முதல்வர் வேட்பாளராக கருதும் ரங்கசாமி, வெளிப்படையாக ஏற்றுக் கொள்ளாத அதிமுக, பாஜக
- எழுதியவர், நடராஜன் சுந்தர்
- பதவி, பிபிசி தமிழுக்காக
புதுச்சேரியில் தேசிய ஜனநாயக கூட்டணி உறுதியானதில் இருந்து அதில் அங்கம் வகிக்கும் கட்சிகள் இடையே, "முதல்வர் வேட்பாளர்" யார் என்பதில் குழப்பம் நீடித்து வருகிறது.
இந்த கூட்டணியில் பாஜக, என்.ஆர்.காங்கிரஸ், அதிமுக ஆகிய கட்சிகளின் கூட்டணி கடந்த மார்ச் 9ஆம் தேதி உறுதிபடுத்தப்பட்டது.
அப்போது கூட்டணியின் முதல்வர் வேட்பாளர் யார் என்ற கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதிலளித்த புதுச்சேரி பாஜக பொருளாளர் நிர்மல் குமார் சுராணா, "தேர்ந்தெடுக்கப்படும் சட்டமன்ற உறுப்பினர்கள் தான் முதல்வர் வேட்பாளர் யார் என அறிவிப்பார்கள்," என்று தெரிவித்தார்.
குறிப்பாக, இந்த அறிவிப்பால் அதிருப்தியடைந்த என்.ஆர்.காங்கிரஸ் கட்சி நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்கள் அப்போது நடைபெற்ற கூட்டத்தில், முதல்வர் வேட்பாளராக ரங்கசாமியை அறிவிக்குமாறு வற்புறுத்தினர்.
இதன்பிறகு என்.ஆர்.காங்கிரஸ் தேர்தல் பிரசாரப் பயணத்தின்போது, ஒவ்வொரு கூட்டத்திலும் தாமே முதல்வர் வேட்பாளர் என்று பேசி வருகிறார்.
"தேசிய ஜனநாயகக் கூட்டணியில் முன்னாள் முதல்வர் மற்றும் பலருக்கு யார் முதல்வர் வேட்பாளர் என்பதில் குழப்பம் இருக்கிறது. இந்த கூட்டணிக் கட்சிக்கு இங்கு நானே தலைவராக இருக்கிறேன். அப்போது நான் தான் முதல்வராக வர முடியும். இதை நான் தொடர்ந்து கூறி வருகிறேன், இந்த கூட்டணி வெற்றி பெறும்போது நான் தான் முதல்வராக இருப்பேன். அதில் மாறுபட்ட கருத்துக்கு இடமில்லை. ஆகவே யார் முதல்வர் வேட்பாளர் என்ற குழப்பம் தேவையில்லை," என்று ரங்கசாமி தெரிவித்தார்.
இதற்கிடையே மதசார்பற்ற முற்போக்கு கூட்டணியின் வேட்பாளர்களை ஆதரித்து திராவிட கழகம் சார்பில் தேர்தல் பிரசார பொதுக்கூட்டம் சமீபத்தில் நடந்தது. அதில் பேசிய திராவிட கழக தலைவர் கி.வீரமணி, பாஜக முதல்வர் வேட்பாளருக்கு வேறு திட்டம் வைத்திருப்பதாவும், ரங்கசாமி, நமச்சிவாயம் இருவருமே முதல்வராக முடியாது என்றும் தெரிவித்தார்.
"தேசிய ஜனநாயக கூட்டணியில் நிறையப் பேர் முதலமைச்சர் கனவில் மிதக்கிறார்கள். ஆனால் இதில் யாருமே முதலமைச்சராகப் போவதில்லை என்பதை அனைவரும் குறித்து வைத்துக்கொள்ளுங்கள். பாஜகவின் திட்டமே வேறு, அவர்கள் முதல்வர் பதவிக்கு வேறொரு நபரைத் தயார் செய்து வைத்துள்ளனர். அதற்கு ஒரு பெண்மணியை தயார் செய்துள்ளனர், அவர்களும் தற்போது தயாராக இருக்கிறார். இங்கே அவரை ஆயத்தப்படுத்துவதற்கே தேர்தல் காலத்தில் அவரது முகத்தை அடையாளம் காட்டிவிட்டுச் சென்றுள்ளனர். ரங்கசாமியும் முதல்வராக வர முடியாது, பாஜகவில் இணைந்த நமச்சிவாயத்திற்கும் எதுவும் கிடைக்காது," என வீரமணி பேசினார்.
இந்த நிலையில், தேசிய ஜனநாயக கூட்டணி அதன் முதல்வர் வேட்பாளரை அறிவிக்க மறுப்பது பற்றி ரங்கசாமிதான் பதிலளிக்க வேண்டும் என்று காங்கிரஸ் கட்சியை சேர்ந்த முன்னாள் முதல்வர் நாராயணசாமி கூறினார் வலியுறுத்தினார்.
அவர் பேசும்போது, "கூட்டணியில் முதல்வர் வேட்பாளராக ரங்கசாமி அறிவிக்கப்படுவார் என எதிர்பார்த்த நிலையில் அந்த அறிவிப்பை வெளியிடாமல் பிரதமர் ஏமாற்றி வருகிறார்," என்று குற்றம்சாட்டினார்.
ஆனால், இந்த விவகாரத்தில் அரசியல் ஆய்வாளர்களின் பார்வை வேறாக உள்ளது.
"பாஜக தரப்பிலிருந்து உறுதியாக யார் முதல்வர் வேட்பாளர் என்று இதுவரை கூறவில்லை. இதில் கூட்டணிக் கட்சிகளுடன் தோழமையுடன் இருப்பது போல் தோன்றினாலும், பாஜக ஆட்சியைத் தான் இங்கே கொண்டு வர வேண்டும் என்ற முடிவில் கட்சியினர் இருக்கின்றனர். இந்த தேர்தலில் சரிசமமாக வெற்றி பெற்றாலும் இவர்கள் ஆட்சி அமைக்கவே முயற்சி செய்வார்கள். மேலும் புதுச்சேரியில் புதிதாகப் பொறுப்பேற்று இருக்கும் துணைநிலை ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜனை முதல்வராக்கவும் வாய்ப்பு இருக்கிறது," என்று அவர்கள் தெரிவித்தனர்.
சமீபகாலமாகத் தமிழிசை புதுச்சேரியில் உள்ள முக்கிய திட்டங்களுக்கும் ஒப்புதல் தருவது, மாநில பிரச்னைகளை சரி செய்வது, மக்கள் குறைகளை நேரடியாக சென்று கேட்டறிந்து தீர்ப்பது என ஒரு முதல்வர் போலவே செயல்பட்டு வருகிறார். இதை வைத்துப் பார்க்கும்போது எதிர்வரும் காலத்தில் உள்கட்சி பிரச்னைகளைக் காரணம் காட்டி தமிழிசையை முதல்வராக்க பாஜக முற்படலாம் என தோன்றுகிறது. மற்றொரு புறம் தென்மாநிலங்களில் காலூன்ற நிதித்துறை அமைச்சர் நிர்மலா சீதாராமனைக் கூட முதல்வர் வேட்பாளராக அமர்த்த வாய்ப்புகள் இருக்கின்றன. ஆனால் இந்த தேர்தல் முடிவுகளுக்கு பிறகே இந்த தேசிய ஜனநாயக கூட்டணியின் அடுத்த கட்ட நடவடிக்கை என்ன ஆகும் என்பது தெரியவரும்," என்கின்றனர் உள்ளூர் விவகாரங்களை கவனித்து வரும் அரசியல் விமர்சகர்கள்.
எதிர்வினையாற்றும் மு.க. ஸ்டாலின்
இந்த நிலையில், புதுச்சேரி சட்டமன்ற தேர்தலில் போட்டியிடும் மதசார்பற்ற முற்போக்கு கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து புதுச்சேரியில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் பிரச்சார கூட்டத்தில் பேசினார். அப்போது அவர், திமுகவிற்கு வெற்றி வாய்ப்பு அதிகம் இருப்பதாகக் கருத்துக்கணிப்புகள் வந்து கொண்டிருக்கின்றன. இதைத் தாங்கிக் கொள்ள முடியாத பாஜக கூட்டணி அரசு எப்படி இந்த வெற்றியைத் தடுக்கலாம் என நினைத்து வேலை செய்து வருகிறது என்று கூறினார்.
"புதுச்சேரியில் கடந்த ஐந்தாண்டுகளாக மத்திய பாஜக அரசு, புதுச்சேரியில் காங்கிரஸ் கூட்டணிக்கு தொல்லை கொடுத்தது. கடந்த இரண்டு மாதங்களாக புதுச்சேரியில் உள்ள சில அமைச்சர்கள், சபாநாயகர் மற்றும் மேலும் சில கட்சிகளை மிரட்டி அவர்கள் பக்கம் இழுத்துள்ளனர். பாஜக, என்.ஆர்.காங்கிரஸ், அதிமுக ஆகிய மூன்று கட்சிகள் அனைத்தும் மக்களை நம்பவைத்து ஏமாற்றுவது தான் வேலை," என்று ஸ்டாலின் பேசினார்.
ரங்கசாமி தனக்குத்தானே முதல்வர் என்று தன்னை அழைத்துக் கொண்டாலும், இரண்டு முறை புதுச்சேரிக்கு வந்த பிரதமர் மோதி, ஆட்சியில் வெற்றி பெற்றால் ரங்கசாமியே முதல்வர் என்றும் சொல்லவில்லை. தேசிய ஜனநாயக கூட்டணியில் உள்ள பிற கட்சிகளும் அவ்வாறு கூறவில்லை. எனவே முதல்வர் வேட்பாளர் யார் என்பதில் அக்கூட்டணிக்கு குழப்பம் இருப்பது தெளிவாகிறது. தேர்தல் முடிந்தால், பிரதமர் என்ன சொல்வார் என்று ரங்கசாமிக்கு தெரியும், இங்குள்ள அதிமுகவுக்கும் தெரியும்.
பிற செய்திகள்:
- காவிரிப் படுகையின் சிக்கல்கள் சட்டமன்றத் தேர்தலில் என்ன தாக்கம் செலுத்தும்?
- பாஜகவுக்கு எதிரான ஒன்றிணைந்த போராட்டத்திற்கு அழைப்பு – எதிர்க்கட்சி தலைவர்களுக்கு மம்தா எழுதிய கடிதம்
- சிறு சேமிப்புத் திட்ட வட்டி விகித குறைப்பை திரும்பப் பெற்ற நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன்
- ரஜினிக்கு தாதா சாஹிப் பால்கே விருது: இந்திய அரசு அறிவிப்பு
- கோவைக்கு வந்த யோகி ஆதித்யநாத்: கடைகள் மீது கல்வீச்சு, என்ன நடந்தது?
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: