You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
காங்கிரஸ் கட்சியில் இணைந்த ஷகிலா: 'அரசியலில் குஷ்புவுடன் என்னை ஒப்பிட வேண்டாம்'
(இந்தியாவில் உள்ள சில முக்கிய நாளிதழ்களிலும் அவற்றின் இணையதளங்களிலும் வெளியான முக்கிய செய்திகள் சிலவற்றை இங்கே தொகுத்து வழங்குகிறோம்.)
சினிமாவை தாண்டி அரசியலில் காலடி எடுத்து வைத்திருக்கும் ஷகிலா, சென்னையில் நேற்று நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அதை தினத்தந்தி நாளிதழ் செய்தியாக வெளியிட்டுள்ளது.
சமீபத்தில் தமிழக காங்கிரஸ் கட்சியில் நடிகை ஷகிலா இணைந்தார். அவருக்கு கட்சியின் மனித உரிமை துறை பொதுச் செயலாளர் பதவி வழங்கப்பட்டது.
"தமிழகம் மட்டுமின்றி நாடு முழுவதும் பெண் குழந்தைகள், பெண்கள் மீதான வன்முறைகள் அதிகரித்து வருகின்றன. இது மிகுந்த மனவேதனையைத் தருகிறது. பாலியல் வன்கொடுமை சம்பவங்களில் ஈடுபடுபவர்களுக்கு தூக்கு தண்டனை விதிக்க வேண்டும்."
"பெண்களுக்கு நல்லது செய்ய வேண்டும் என்ற நோக்கத்தில்தான் நான் அரசியலுக்கு வந்து இருக்கிறேன். நடிகை என்பதை தாண்டி ஒரு தனி அடையாளம், தனி அதிகாரம் பெற விரும்புகிறேன். நல்லது செய்ய வேண்டும் என்றாலும் கூட ஒரு 'பவர்' வேண்டும்."
"காங்கிரசில் இருந்து குஷ்பு விலகியதால், அந்த இடத்தை நிரப்புவதற்காக நான் வந்துள்ளேனா? என்று கேட்கிறார்கள். நிச்சயமாக இல்லை. குஷ்புவுடன் என்னை ஒப்பிட வேண்டாம். எனக்கு அவர் சீனியர். காங்கிரசில் நான் இணைந்தது போல, இந்த கட்சியில் இருந்து அவர் விலகிச் சென்றதற்கும் ஒரு காரணம் இருக்கும்."
"கட்சித் தலைமை அனுமதி அளிக்கும் பட்சத்தில் நிச்சயம் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபடுவேன். அரசியல் ஒருபுறம் இருந்தாலும் எனது சினிமா பயணம் தொடரும்."
''சினிமாவில் இருந்து அரசியலுக்கு வந்துள்ளீர்கள். உங்களது அடுத்த கட்ட நகர்வுகள் எப்படி இருக்கும்,'', என்று நிருபர்கள் ஷகிலாவிடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு, "ஏன்... இப்பவே இத்தனை கேள்வி கேக்குறீங்க... அரசியலுக்கு இப்போதான் வந்திருக்கேன். கொஞ்சம் கொஞ்சமா பல விஷயங்களை கத்துக்கிட்டு இருக்கேன். இனி என் ஆட்டத்தை போகப்போக பார்ப்பீங்க, என சிரித்தபடி கூறினார்.
மேற்கு வங்கம், அசாம் மாநிலங்களில் முதல் கட்ட வாக்குப்பதிவு
மேற்கு வங்கம், அசாம் ஆகிய மாநிலங்களில் சட்டப் பேரவைத் தோ்தலுக்கான முதல் கட்ட வாக்குப்பதிவு சனிக்கிழமை நடைபெறவுள்ளது என்று தினமணி செய்தி தெரிவிக்கிறது.
காலை 7 மணிக்கு தொடங்கும் வாக்குப்பதிவு, கொரோனா பாதுகாப்பு நெறிமுறைகளைக் கடைப்பிடிக்க ஒரு மணி நேரம் நீட்டிக்கப்பட்டு மாலை 6 மணிக்கு நிறைவடைகிறது.
மேற்கு வங்கத்தில் 294 உறுப்பினா்களைக் கொண்ட மேற்கு வங்க சட்டப் பேரவைக்கு 8 கட்டங்களாக தோ்தல் நடைபெறவுள்ளது.
முதல் கட்டமாக, பழங்குடியின மக்கள் அதிகம் வசிக்கும் புருலியா, ஜாா்கிராம், பாங்குரா, கிழக்கு மிதுனபுரி, மேற்கு மிதுனபுரி ஆகிய மாவட்டங்களில் உள்ள 30 தொகுதிகளில் சனிக்கிழமை வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது.
அசாமில் 126 உறுப்பினா்களைக் கொண்ட சட்டப் பேரவைக்கு மூன்று கட்டங்களாக தோ்தல் நடைபெறவுள்ளது. முதல் கட்டமாக, 47 தொகுதிகளில் சனிக்கிழமை வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது.
இந்தியாவில் கொரோனா வைரஸ் தடுப்பூசி
இந்தியாவில் இதுவரை ஒட்டுமொத்தமாக வழங்கப்பட்டுள்ள கொரோனா வைரஸ் தடுப்பூசி டோஸ்களின் எண்ணிக்கை 5.69 கோடியாகியுள்ளது என்று இந்திய சுகாதார அமைச்சகம் வெள்ளியன்று தெரிவித்துள்ளது.
வெள்ளி இரவு 7 மணிக்கு வெளியிடப்பட்ட தற்காலிகத் தரவுகளின்படி இதுவரை 5,69,57,612 டோஸ்கள் வழங்கப்பட்டுள்ளதாக டைம்ஸ் ஆஃப் இந்தியா செய்தி தெரிவிக்கிறது.
தடுப்பூசி வழங்கப்பட்டுள்ளவர்களில் 80,66,471 மருத்துவ ஊழியர்கள் முதல் டோஸ் தடுப்பூசியையும், 51,27,234 மருத்துவ ஊழியர்கள் இரண்டு டோஸ்களையும் பெற்றுள்ளனர்.
60 வயதுக்கும் மேற்பட்ட 2,57,01,645 பேருக்கு இதுவரை தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது என்று இந்திய சுகாதார அமைச்சகம் தெரிவிக்கிறது.
பிற செய்திகள்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: