You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
மோதியின் மலரும் நினைவுகள்: "வங்கதேச விடுதலைக்காக போராடி கைதானவன் நான்"
வங்கதேசத்துக்கு அரசுமுறைப் பயணமாக சென்றுள்ள இந்திய பிரதமர் நரேந்திர மோதி, அந்நாட்டின் 50ஆம் ஆண்டு சுதந்திர தின நிகழ்வில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார்.
இதையொட்டி டாக்காவில் நடந்த தேசிய அணிவகுப்பு திடலில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த நிகழ்ச்சியில் பேசிய நரேந்திர மோதி, வங்கதேச விடுதலை போராட்டம், உங்களுக்கு மட்டுமல்ல, எனது வாழ்விலும் குறிப்பிடத்தக்க தருணம் என்று கூறினார்.
அப்போது எனக்கு 20 முதல் 22 வயது இருக்கும். எனது நண்பர்களுடன் வங்கதேச விடுதலைக்காக குரல் கொடுத்து போராட்டத்தில் பங்கெடுத்தேன். அது ஒரு சத்தியாகிரக போராட்டம். அந்த போராட்டத்தில் பங்கேற்றதற்காக நான் கைதானேன் என்று மோதி பேசினார்.
தனக்கு நினைவு தெரிந்த நாளில் தான் மேற்கொண்ட முதலாவது அரசியல் கைது அந்த நிகழ்வு என்றும் மோதி நினைவுகூர்ந்தார். வங்கதேச சுதந்திர நாளையொட்டி நடந்த நிகழ்வில் முஜிப் ஜேக்கட் ரக ஆடையை அணிந்தவாறு நிகழ்ச்சியில் நரேந்திர மோதி கலந்து கொண்டார். இந்நிகழ்வில் வங்கதேச பிரதமர் ஷேக் ஹசீனா, அந்நாட்டு அதிபர் அப்துல் ஹமீது ஆகியோரும் இருந்தனர்.
1971ஆம் ஆண்டில் பாகிஸ்தானிடம் இருந்து வங்கதேசம் விடுதலை பெற நடந்த போரில் இந்திய ராணுவம் ஆற்றிய பங்களிப்புக்காக இந்த 50ஆம் ஆண்டு நிகழ்வில் என்னை அழைத்து பெருமைப்படுத்தியதற்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன் என்று பிரதமர் நரேந்திர மோதி கூறினார்.இந்த நாளில் உங்களுடைய நாட்டுக்காக துணை நின்று போரிட்ட இந்திய வீரர்களின் தியாகத்தை எப்போதும் மறக்க மாட்டோம் என்று அவர் குறிப்பிட்டார்.
வங்கதேச சகோதர சகோதரிகளுடன் தோள் கொடுத்து நின்ற இந்திய ராணுவத்தின் வீரர்களுக்கு இந்த நேரத்தில் நான் வணங்குகிறேன். வங்கதேச விடுதலை போரில் பங்கு கொண்ட பல இந்திய வீரர்கள் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டுள்ளது எனக்கு மகிழ்ச்சி அளிக்கிறது.
வங்கதேசத்தில், சொந்த நாட்டு விடுதலைக்காக போரிட்டவர்களின் ரத்தம் மற்றும் இந்திய வீரர்களின் ரத்தம் கலந்து ஓடுகிறது. இதில் உருவான உறவை எந்தவித அழுத்தத்தாலும் பிரிக்க முடியாது. வங்கதேச சகோதர சகோதரிகள் மேட் இன் இந்தியா தடுப்பூசிகளை பயன்படுத்தியதில் இந்தியா மிகுந்த மகிழ்ச்சி அடைகிறது என பிரதமர் மோதி பேசினார்.
இந்த நிகழ்ச்சியில் பங்கெடுப்பதற்காக பிரதமர் நரேந்திர மோதி, சமீபத்தில் இந்தியாவிடம் ஒப்படைக்கப்பட்ட புதுப்பிக்கப்பட்ட இந்தியன் ஏர்லைன்ஸ் விவிஐபி விமானத்தை பயன்படுத்தினார்.
முன்னதாக, வங்கதேசத்தில் இந்திய பிரதமர் நரேந்திர மோதி வருகை தருவதற்கு எதிராக அந்நாட்டில் பரவலாக எதிர்ப்புக்குரல்களும் ஒலித்தன.
தலைநகர் டாக்காவில் உள்ள டாக்கா பல்கலைக்கழக வளாகத்தில் வியாழக்கிழமை மாணவர்களில் ஒரு பிரிவினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அவர்களை தடுக்க காவல்துறையினர் முற்பட்டபோது அங்கு தள்ளு முள்ளு ஏற்பட்டதில் சுமார் 40 பேர் காயம் அடைந்தனர்.
பாதுகாப்புக்காக நின்றிருந்த காவல்துறையினரை நோக்கி சிலர் கற்களை வீசினர். சில இடங்களில் தனியாக சிக்கிய காவலர்களை தாக்கவும் செய்தனர். அதனால் பலப்பிரயோகம் செய்து போராட்டக்கார்ரகள் கலைக்கப்பட்டதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.
பிற செய்திகள்:
- தமிழ்நாடு சட்டமன்ற தேர்தல் 2021: சிக்கிய ரூ. 265 கோடி - சிக்காமல் தப்பியது யார்?
- கன்னியாஸ்திரிகளை ரயிலில் இருந்து இறக்கிய போலீஸ் - என்ன நடந்தது?
- தமிழ்நாடு சட்டமன்ற தேர்தல் 2021: நீங்கள் அறிய வேண்டிய முக்கிய தகவல்கள்
- கரூரில் ரயில் நிலையத்தின் பெயரை சமஸ்கிருதம் கலந்து எழுத முயற்சி - எதிர்ப்புகளால் மாற்றிய நிர்வாகம்
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: