எல் முருகனுக்கு ரூ. 2.64 கோடி மதிப்பில் சொத்து மற்றும் பிற தேர்தல் செய்திகள்

தமிழ்நாட்டில் திருப்பூர் மாவட்டம் தாராபுரம் தொகுதியில் போட்டியிடும் பாரதிய ஜனதா கட்சியின் மாநில தலைவர் எல். முருகன் தனது வேட்பு மனுவை வியாழக்கிழமை தாக்கல் செய்துள்ளார். இதையொட்டி அவர் தாக்கல் செய்துள்ள பிரமாண பத்திரத்தில் அவரது அசையா சொத்து, அசையும் சொத்து என மொத்தம் ரூ. 2.64 கோடி இருப்பதாக கூறியுள்ளார்.

தனது கையிருப்பு தொகையாக ரூ. 45 ஆயிரமும் தனது மனைவியிடம் ரூ. 75 ஆயிரம் இருப்பதாகவும் முருகன் கூறியுள்ளார். பாரதிய ஜனதா கட்சியின் மாநில தலைவராக முருகன் நியமிக்கப்படுவதற்கு முன்பு அவர் தேசிய தாழ்த்தப்பட்டோர் ஆணையத்தின் துணைத் தலைவராக இருந்தார். அவர் கடந்த 2016-17 நிதியாண்டில் ரூ. 7.04 லட்சம், 2017-18இல் 5.12 லட்சம், 2018-19இல் ரூ. 25.99 லட்சம், 2019-20இல் ரூ. 29.18 லட்சம், 2020-21இல் ரூ. 29.85 லட்சம் என்றவாறு வருமான வரி தாக்கல் செய்துள்ளார். மேலும், தன் மீது 23 குற்றவியல் வழக்குகள் நிலுவையில் உள்ளதாகவும் முருகன் வேட்பு மனுவில் கூறியுள்ளார்.

விவசாயிகள் வாங்கிய கூட்டுறவு கடன்களை தள்ளுபடி செய்வதாக கூறுவது ஏமாற்று வேலை - எடப்பாடி பழனிசாமி

தமிழ்நாட்டில் விவசாயிகள் வாங்கிய கூட்டுறவு கடன்களை தள்ளுபடி செய்வதாக திமுக தலைவர் ஸ்டாலின் கூறுவது ஏமாற்று வேலை என்று முதல்வர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

தமிழக சட்டமன்ற தேர்தலையொட்டி வியாழக்கிழமை அவர் நாகப்பட்டினம், சிதம்பரம் ஆகிய மாவட்டங்களுக்கு உட்பட்ட தொகுதிகளில் வேட்பாளர்களை அறிமுகம் செய்து வைத்து பரப்புரை செய்தார். அப்போது பேசிய அவர், காவிரி பிரச்னைக்கு தீர்வு கண்டது அதிமுக அரசு தான் என்று கூறினார்.

விவசாயிகளின் இன்னல்களை போக்கும் வகையில் அவர்களின் கூட்டுறவு கடன்களை தள்ளுபடி செய்தது அதிமுக அரசு என்று கூறிய அவர், ஏற்கெனவே தள்ளுபடி செய்து விட்ட கடன்களை தாங்கள் ஆட்சிக்கு வந்தால் தள்ளுபடி செய்வோம் என்று திமுக தலைவர் ஸ்டாலின் கூறுவது ஏமாற்று வேலை என்று குறறம்சாட்டினார். அதிமுகவில் சாதாரண விவசாயியால் கூட முதல்வர் ஆக முடியும், ஆனால், திமுகவில் அது சாத்தியமற்றது என்றும் முதல்வர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்தார்.

வேளச்சேரி ம.நீ.ம வேட்பாளர் சந்தோஷ் பாபுவுக்கு கொரோனா

சென்னை வேளச்சேரி சட்டமன்ற தொகுதியில் கமல்ஹாசன் தலைமையிலான மக்கள் நீதி மய்யம் கட்சியின் வேட்பாளரும் பதவிக்காலத்துக்கு முன்பே விருப்ப ஓய்வு பெற்ற ஐஏஎஸ் அதிகாரியுமான சந்தோஷ் பாபு தனக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக வியாழக்கிழமை இரவு அவர் தனது ட்விட்டர் பக்கத்தில், "எனக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது என்பதை எனது வேளச்சேரி வாக்காளர்களுக்கு தெரிவித்துக் கொள்கிறேன். எவ்வளவு துரதிருஷ்டவசமானவன் நான்! உண்மையிலேயே உங்களை எல்லாம் சந்தித்து ஆசிர்வாதம் பெற்று வாக்கு சேகரிக்க விரும்பினேன். இப்போது அதிஉயர் டிஜிட்டல் பிரசார முறையில் உங்களை சந்திப்பேன். எனது அணியினர் விரைவில் உங்களை பார்க்க வருவார்கள். மக்கள் நீதி மய்யம் கட்சிக்கும் எனக்கும் ஓட்டு போடுங்கள்," என்று கூறியுள்ளார்.

வேளச்சேரி தொகுதியில் அதிமுக சார்பில் எம்.கே. அசோக், காங்கிரஸ் சார்பில் ஜே.எம்.எச் ஹாசன் ஆகியோர் போட்டியிடுகிறார்கள்.

தேர்தல் விதிமீறல்: அருப்புக்கோட்டை அதிமுக வேட்பாளர் வைகைச்செல்வன் மீது வழக்கு

விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை தொகுதியில் தேர்தல் விதிகளை மீறி இரவு 10 மணிக்கு மேல் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டதாக அதிமுக வேட்பாளர் வைகைச்செல்வன் மீது காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

அங்குள்ள வச்சக்காரப்பட்டி காவல் நிலையத்தில் அவர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

எடப்பாடி பழனிசாமியை டெபாசிட் இழக்க வைப்போம் - திமுக வேட்பாளர் சம்பத்குமார்

சேலம் மாவட்டம் எடப்பாடி தொகுதியில் போட்டியிடும் தமிழக முதல்வரும் அதிமுக இணை ஒருங்கிணைப்பாளரும் எடப்பாடி பழனிசாமியை எதிர்வரும் தேர்தலில் டெபாசிட் இழக்க வைப்போம் என்று அத்தொகுதியில் அவரை எதிர்த்து களம் காணும் திமுக வேட்பாளர் சம்பத்குமார் தெரிவித்துள்ளார்.

அந்த தொகுதியில் போட்டியிடுவதற்கான தேர்தல் வேட்பு மனு தாக்கல் செய்த அவர், மக்கள் ஆதரவு எனக்கு உள்ளது. திமுக தலைமையிலான அணிக்கே தேர்தலில் வெற்றி கிடைக்கும். எடப்பாடி பழனிசாமியை இந்த தொகுதியில் தோற்கடிப்பேன் என்று தெரிவித்தார்.

டிடிவி கட்சியில் மனைவி வேட்பாளரானதால் கூடுதல் டிஎஸ்பி கணவர் இடமாற்றம்

திருநெல்வேலி மாவட்டத்தில் டி.டி.வி. தினகரன் தலைமையிலான அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் சார்பில் அம்பாசமுத்திரம் தொகுதியில் களம் இறங்கியுள்ள ராணி ரஞ்சிதத்தின் கணவர் வெள்ளத்துரை நெல்லை நகர காவல்துறை கூடுதல் கண்காணிப்பாளராக பணியாற்றி வந்ததால் அவரை இடமாற்றம் செய்து தேர்தல் ஆணையம் உத்தரவிட்டிருக்கிறது.

தற்போது அவர் மாநகர குற்ற ஆவண காப்பத்தில் பணியாற்றி வந்தார். இந்நிலையில், மாவட்ட தேர்தல் அதிகாரியின் அறிக்கை அடிப்படையில் இந்த இடமாற்றல் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. அவர் காவல்துறை தலைமையகத்துக்கு இடமாற்றம் செய்யப்பட்டிருக்கிறார்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: