You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
காங்கிரஸ் தேர்தல் அறிக்கை: அனைத்து சாதியினரையும் அர்ச்சகராக்க நடவடிக்கை
பூரண மதுவிலக்கு, நீட் தேர்வு ரத்து, அனைத்து சாதியினரையும் அர்ச்சகராக்குவதற்கான நடவடிக்கை உள்ளிட்ட வாக்குறுதிகள் இடம்பெற்றுள்ள தேர்தல் அறிக்கையை தமிழக காங்கிரஸ் கட்சி வெளியிட்டுள்ளது. இந்த தேர்தல் அறிக்கையில் இடம்பெற்றுள்ள பிற வாக்குறுதிகள் என்னென்ன?
தமிழக சட்டமன்றத் தேர்தலுக்கான தேர்தல் அறிக்கையை இன்று தமிழக காங்கிரஸ் கட்சியின் தலைவர் கே.எஸ். அழகிரி வெளியிட்டார். எஸ். பீட்டர் அல்போன்ஸ் தலைமையிலான குழு இந்தத் தேர்தல் அறிக்கையை உருவாக்கியிருக்கிறது.
அரசு நிர்வாகத்தில் வெளிப்படைத் தன்மை, டெண்டர்களைப் பெறுவதில் வெளிப்படைத் தன்மை, அனைத்து சாதியினரையும் அர்ச்சகராக்க நடவடிக்கை, பூரண மதுவிலக்கு உள்ளிட்ட அம்சங்களை முக்கிய வாக்குறுதியாக இந்தத் தேர்தல் அறிக்கையில் காங்கிரஸ் கட்சி முன்வைத்துள்ளது.
இது தவிர, பின்வரும் விஷயங்களை தனது தேர்தல் அறிக்கையில் முன்வைத்துள்ளது காங்கிரஸ் கட்சி:
மாநகராட்சிகளுக்கான தேர்தல்களை நடத்த வலியுறுத்துவது, உள்ளாட்சி அமைப்புகளுக்கு ஏற்கனவே இருந்த அதிகாரங்களை மீண்டும் வழங்க வலியுறுத்துவது, உள்ளாட்சி அமைப்புகள் அனைத்திற்கும் தேர்தலை நடத்த வலியுறுத்துவது, மத்திய அரசின் பணிகளில் தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்கள் புறக்கணிக்கப்படுவதாக கருதுவதால், அந்தப் பணிகளில் ஒவ்வொரு மாநிலத்திற்கும் இட ஒதுக்கீடு வழங்கச் சொல்லி வலியுறுத்துவது, யுபிஎஸ்சியின் ஒரு கிளையை தென் மாநிலங்களில் அமைக்கச் சொல்வது, தமிழகத்தில் உள்ள அரசுப் பணிகளில் 74 சதவீதம் தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்களயே பணியமர்த்தச் செய்ய சட்டம் இயற்றுவது, புதிய தொழில்களைத் துவங்கவும் முதலீடுகளை ஈர்க்கவுமான திட்டங்கள் ஆகியவற்றை தனது தேர்தல் அறிக்கையில் காங்கிரஸ் கட்சி முன்வைத்துள்ளது.
மேலும், தமிழ்நாட்டில் பூரண மதுவிலக்கை அமல்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அதனால் ஏற்படும் வரி இழப்பைச் சரிசெய்ய குழு அமைத்து ஆராயப்படுமென்றும் காங்கிரஸ் கட்சி கூறியுள்ளது. தேசிய அளவில் மதுவிலக்குக் கொள்கையை அமல்படுத்த தமிழக அரசு குரல் கொடுக்குமென்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அரசுப் போக்குவரத்துக் கழகங்களைச் சீரமைக்க அமைக்கப்பட்ட தில்லை நாயகம் குழுவின் பரிந்துரைகளை அமல்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும். படித்த, வேலையில்லாத இளைஞர்களைக் கொண்ட கூட்டுறவு சங்கங்கள் உருவாக்கப்பட்டு அவற்றுக்கு மினி பேருந்துகள், அரசு பேருந்துகள் ஓடாத தடங்களில் பேருந்துகளை இயக்குவது ஆகியவற்றுக்கான உரிமங்கள் வழங்கப்படும்.
சட்டப்பேரவையிலும் நாடாளுமன்றத்திலும் பெண்களுக்கென 33 சதவீத இட ஒதுக்கீட்டை அமல்படுத்த வலியுறுத்தப்படும். கட்டாயக் கல்வி உரிமைச் சட்டத்தை 12ஆம் வகுப்புவரை நீட்டிக்க நடவடிக்கை எடுக்கப்படும்.
மண்டல் கமிஷன் பரிந்துரைகளின்படி மீனவர்களை பழங்குடியினர் பட்டியலில் சேர்க்க நடவடிக்கை எடுக்கப்படும். காணாமல் போகும் தமிழக மீனவர்களைக் கண்டுபிடிக்க ஐஎன்எஸ் கட்டபொம்மன் கடற்படைத் தளத்தில் இரண்டு ஹெலிகாப்டர்கள் நிறுத்தப்படும்.
வேளாண்மையைப் பொறுத்தவரை, மத்திய அரசின் விவசாயச் சட்டங்களுக்குப் பதிலாக மாநில அளவில் புதிய சட்டங்கள் உருவாக்கப்படும். விளைபொருட்களுக்கு எம்.எஸ். சுவாமிநாதன் கமிட்டி பிரிந்துரையின் அடிப்படையில் விலை நிர்ணயம் செய்யப்படும். முடக்கப்பட்ட உழவர் சந்தைகள் மீண்டும் செயல்பாட்டுக்குக் கொண்டுவரப்படும்.
பள்ளிக்கல்வியை மீண்டும் மாநிலத்தின் அதிகாரப்பட்டியலுக்குக் கொண்டுவர நடவடிக்கை எடுக்கப்படும். மத்திய அரசின் தேசிய கல்விக் கொள்கை 2020 ஏற்கப்படாது. நீட் தேர்வை ரத்துசெய்ய ஏற்பாடுகள் செய்யப்படும். மருத்துவக் கல்லூரி, பொறியியல் கல்லூரிகளில் அரசுப் பள்ளி மாணவர்களுக்கான இட ஒதுக்கீடு 10 சதவீதமாக உயர்த்தப்படும். தமிழ்நாட்டில் உள்ள மத்தியப் பல்கலைக்கழகங்கள் உட்பட அனைத்துக் கல்விக்கூடங்களிலும் 75 சதவீத இடங்கள் தமிழக மாணவர்களுக்காக ஒதுக்கப்படும். கேந்திரிய வித்யாலயா பள்ளிக்கூடங்கள் உட்பட அனைத்துப் பள்ளிக்கூடங்களிலும் தமிழ் கட்டாயமாக சொல்லித்தர வலியுறுத்தப்படும்.
கடற்கரைச் சாலையில் மீண்டும் சிவாஜி கணேசன் சிலையை வைக்க ஏற்பாடு செய்யப்படும். இந்து சமய அறநிலையத் துறைக்குச் சொந்தமான கட்டடங்களில் ஆக்கிரமிப்புச் செய்திருப்பவர்கள் வெளியேற்றப்படுவார்கள். இந்து சமய கோவில்களில் ஆகம விதிகளுக்குட்பட்டு, அர்ச்சகர் பயிற்சிக் கல்லூரியில் தேர்ச்சிபெற்ற அனைத்து சாதியினரும் அர்ச்சகராக ஏற்பாடுகள் செய்யப்படும்.
பொது விநியோகக் கடைகளில் வழங்கப்படும் அரிசியின் தரம் உயர்த்தப்படும். எந்தப் பொருளையும் வாங்குவதற்குக் காட்டாயப்படுத்தப்பட மாட்டாது. தமிழ்நாடு முழுவதும் நியாயவிலை மருந்துக் கடைகள் உருவாக்கப்படும். மணமக்களில் ஒருவர் பட்டியலினத்தவராக இருந்தால், அந்தத் தம்பதிக்கு மூன்று லட்ச ரூபாய் வழங்கப்படும்.
சாதி ஒழிப்பின் சமூக அவசியம் குறித்த கருத்துகள் பாடத்திட்டத்திலேயே சேர்க்கப்படும். பஞ்சமி நிலங்களை மீட்பதற்கான ஏற்பாடுகள் செய்யப்படும். நரிக்குறவர் சமூகத்தை பழங்குடியினர் பட்டியலில் சேர்க்க ஏற்பாடு செய்யப்படும். தமிழ்நாட்டில் வலிமையான லோக் ஆயுக்தா அமைக்கப்படும் என்ற வாக்குறுதிகள் காங்கிரஸ் தேர்தல் அறிக்கையில் இடம் பெற்றுள்ளன.
தமிழ்நாடு காங்கிரஸ் கட்சி வெளியிட்டிருக்கும் இந்தத் தேர்தல் அறிக்கையில், மாநில உரிமை சார்ந்த பல்வேறு விவகாரங்களில் தனது நிலைப்பாட்டை வெளிப்படுத்தியிருக்கிறது. இந்த சட்டமன்றத் தேர்தலில் தமிழ்நாடு காங்கிரஸ் கட்சி தி.மு.க. கூட்டணியில் இணைந்து 25 இடங்களில் போட்டியிடுகிறது.
பிற செய்திகள்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்