You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
தென் மண்டல ஐ.ஜி மற்றும் 9 காவல் அதிகாரிகளை இடம் மாற்ற தேர்தல் ஆணையம் உத்தரவு
(இன்றைய நாளில் நடந்த முக்கிய நிகழ்வுகளின் சுருக்கத்தை இந்த பக்கத்தில் வழங்குகிறோம்.)
தமிழ்நாட்டில் தென் மண்டல காவல் சரக தலைவராக (ஐ.ஜி) இருக்கும் முருகன் மற்றும் ஒன்பது காவல்துறை அதிகாரிகளுக்கு தேர்தல் பணிகளை ஒதுக்க வேண்டாம் என்று தலைமைத் தேர்தல் ஆணையம் உத்தரவிட்டிருக்கிறது.
இது தொடர்பாக தலைமைத் தேர்தல் ஆணையம் புதன்கிழமை இரவு பிறப்பித்த உத்தரவில், "ஆணையம் நியமித்த சிறப்பு காவல் பார்வையாளர் அளித்துள்ள தகவல் அடிப்படையில், தென் மண்டல காவல் ஐ.ஜி ஆக இருக்கும் எஸ். முருகனை தேர்தல் பணி அல்லாத பதவிக்கு இடமாற்றல் செய்யுமாறு கூறப்பட்டுள்ளது.
மேலும், சென்னை மத்திய குற்றப்பிரிவில் பணியாற்றி வரும் ஆர். அன்பரசன், எம். வேல்முருகன், ஹெச். கிருஷ்ணமூர்த்தி, மதுவிலக்கு பிரிவில் பணியாற்றி வரும் பி. கோவிந்தராஜா, பொருளாதார குற்றப்பிரிவு தலைமையகத்தில் பணியாற்றி வரும் எம்.எஸ்.எம். வளவன், வேலூரில் பணியாற்றி வரும் ஈ. திருநாவுக்கரசு, விழுப்புரத்தில் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் தடுப்புப்பிரிவில் பணியாற்றி வரும் எம். ராதாகிருஷ்ணன், ராமநாதபுரத்தில் உள்ள மாவட்ட குற்ற ஆவண காப்பகத்தில் பணியாற்றி வரும் பி.டி. சுபாஷ்,. திருச்சியில் மதுவிலக்குப் பிரிவில் பணியாற்றி வரும் பி. கோபாலன்சந்திரன் ஆகியோருக்கும் தேர்தல் பணி எதுவும் ஒதுக்காமல் அனைவரையும் காவல் தலைமை இயக்குநர் அலுவலகத்துடன் இணைக்கவும் தலைமைத் தேர்தல் ஆணையம் உத்தரவிட்டிருக்கிறது. இந்த ஒன்பது பேரும் காவல்துறையில் உதவி ஆணையாளர், துணை கண்காணிப்பாளர் பதவியில் இருப்பவர்கள்.
தமிழக சட்டமன்ற தேர்தல் 2021: எந்த தொகுதியிலும் போட்டியில்லை - அர்ஜுனமூர்த்தி விளக்கம்
ரஜினி தொடங்காத கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளராக அறிவிக்கப்பட்டு, பிறகு தனியாக கட்சி தொடங்கிய ரா. அர்ஜுன மூர்த்தி, எதிர்வரும் தமிழக சட்டப்பேரவை தேர்தலில் தனியாக போட்டியிடப்போவதாக அறிவித்த நிலையில், தற்போது அந்த முடிவை மாற்றிக் கொண்டிருக்கிறார்.
நடிகர் ரஜினிகாந்த் அரசியல் கட்சி ஒன்றைத் துவங்கப்போவதாக அறிவித்தபோது, ரா. அர்ஜுனமூர்த்தியை தலைமை ஒருங்கிணைப்பாளராக அறிவித்தார். அர்ஜுனமூர்த்தி அதற்கு முன்பாக பாரதிய ஜனதா கட்சியின் அறிவுசார் பிரிவின் தலைவராக இருந்தார்.
ஆனால், அடுத்த சில நாட்களிலேயே தான் கட்சி எதையும் தொடங்கப்போவதில்லை என அறிவித்தார் ரஜினிகாந்த்.
இதையடுத்து அர்ஜுனமூர்த்தி சொந்தமாக ஒரு கட்சியைத் தொடங்கப்போவதாக அறிவித்தார். அதன்படி, பிப்ரவரி 27ஆம் தேதியன்று இந்திய மக்கள் முன்னேற்ற கட்சி என்ற பெயரில் ஒரு கட்சியையும் அவர் தொடங்கினார். அந்தக் கட்சிக்கு ரோபோ சின்னமும் ஒதுக்கப்பட்டது. அதன் சார்பில் தேர்தல் அறிக்கையும் வெளியிடப்பட்டது.
இந்நிலையில் தற்போது அறிக்கை ஒன்றை வெளியிட்டிருக்கும் அர்ஜுனமூர்த்தி, "கால அவகாசம் போதாமையால் நேரத்திற்கு எதிரான ஒரு பந்தயத்தில் இருந்தோம். இருந்தபோதும் தேர்தல் அறிக்கையை வெளியிட்டபோது, பொதுமக்களும் ஊடகங்களும் அதனை வெகுவாக வரவேற்றன. ஆனால், அடுத்த சில நாட்களிலேயே எங்கள் கட்சி அறிக்கையில் குறிப்பிட்டுள்ள பல்வேறு நலன் மற்றும் மேம்பாட்டுத் திட்டங்களை மற்ற முன்னணி அரசியல் கட்சிகள் தமது தேர்தல் அறிக்கையில் உள்ளடக்கி வெளியிட்டன. ஆனால், காலத்திற்கு எதிரான ஒரு பந்தயத்தில் நாம் களமிறக்கப்பட்டுள்ளோம்.
அனைத்துத் தொகுதிகளுக்கும் அலை மோதும் விண்ணப்பதாரர்களிடமிருந்து வேட்பாளர்களைத் தரமறிந்து தேர்வுசெய்தல், தேவையான மற்ற வளங்களைத் தேர்வுசெய்வது, மாநிலம் முழுவதும் விரிவான களப்பிரச்சாரம் செய்வது ஆகியவற்றை இந்தக் குறுகிய காலத்தில் முழுமையான தரத்தில் செய்வது இயலவில்லை.
இந்தச் சூழலில் ஏப்ரல் ஆறாம் தேதி நடக்கவிருக்கும் தேர்தலில் கட்சியின் சார்பில் வேட்பாளர்களை நிறுத்த வேண்டாம் என இந்திய மக்கள் முன்னேற்ற கட்சி முடிவு செய்துள்ளது.
நாங்கள் தொடர்ந்து எங்கள் கொள்கையின் அடிப்படையில் எங்கள் களபலத்தை வளர்த்துக்கொள்வோம். தமிழ்நாட்டு அரசியலில் ஒரு மாற்று சக்தியாக இருப்பதற்கான எங்கள் பணியை வலுப்படுத்துவோம்" என்று அர்ஜுனமூர்த்தி கூறியுள்ளார்.
ரஜினி உத்தேசித்த அரசியல் கட்சியின் மேற்பார்வையாளராக அறிவிக்கப்பட்டிருந்த தமிழருவி மணியன், காந்திய மக்கள் இயக்கம் என்ற ஒரு அரசியல் கட்சியை நடத்தி வருகிறார். ரஜினி கட்சி ஆரம்பித்ததும் அதனுடன் தனது கட்சியை இணைக்க அவர் திட்டமிட்டிருந்தார். ஆனால், அரசியல் கட்சி தொடங்கப்போவதில்லை என ரஜினி அறிவித்ததையடுத்து, இனி தான் அரசியலில் ஈடுபடப்போவதில்லை என தமிழருவி மணியன் கூறினார். பின்னர் அவர் அந்த முடிவை தமது ஆதரவாளர்கள் கேட்டுக் கொண்டதன்பேரில் மாற்றிக் கொள்வதாக கூறினார். எனினும், எதிர்வரும் தமிழக சட்டப்பேரவை தேர்தலைப் புறக்கணிக்கப்போவதாக தமிழருவி மணியன் அறிவித்தார்.
பாஜக எம்.பி டெல்லியில் சடலமாக மீட்பு; தற்கொலையா என விசாரணை
பாரதிய ஜனதா கட்சியைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர் ராம் ஸ்வரூப் சர்மா இன்று காலை டெல்லியில் உள்ள அவரது இல்லத்தில் இறந்த நிலையில், சடலமாக மீட்கப்பட்டார்.
62 வயதாகும் ராம் ஸ்வரூப் சர்மா ஹிமாச்சல் பிரதேச மாநிலத்தில் உள்ள மண்டி மக்களவைத் தொகுதியில் 2014 மற்றும் 2019 ஆகிய ஆண்டுகளில் பாரதிய ஜனதா கட்சி சார்பில் வெற்றி பெற்றுள்ளார்.
அவரை மருத்துவமனைக்கு கொண்டு சென்றபோது ராம் ஸ்வரூப் சர்மா ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர் என்று டெல்லி காவல் துறையின் செய்தித் தொடர்பாளர் சின்மய் பிஸ்வால் தெரிவித்துள்ளார்.
இந்த மரணம் தற்கொலையாக இருக்கலாம் என்று முதல்கட்ட விசாரணையில் தெரிய வருவதாக தெரிவித்துள்ள டெல்லி காவல்துறை அவர் இருந்த அறையில் தற்கொலைக் குறிப்பு எதுவும் கண்டுபிடிக்கப்படவில்லை என்று தெரிவித்துள்ளது.
சர்மா தமது தொலைபேசி அழைப்புகள் எதற்கும் பதில் அளிக்காததால் அவரது உதவியாளர் காவல்துறை கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் தெரிவித்ததாக டெல்லி காவல் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
அதன் பின்பு டெல்லி காவல் துறையை சேர்ந்த ஒரு குழு அவரது இல்லத்துக்கு விரைந்தது. அங்கு அவர் இறந்த நிலையில் கண்டெடுக்கப்பட்டார்.
சர்மாவின் வீடு உள்ளே பூட்டப்பட்டிருந்தாகவும், தற்போது விசாரணை நடந்து வருவதாகவும் கூறியுள்ள டெல்லி காவல் துறை இறப்புக்கான காரணம் குறித்த தகவல்கள் உடல் கூராய்வுக்கு பின்னரே தெரியவரும் என்று தெரிவிக்கிறது.
ராம் ஸ்வரூப் சர்மா கடந்த சில மாதங்களாகவே உடல்நலமின்றி இருந்தார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
ராம் ஸ்வரூப் சர்மாவின் மரணத்தால், இன்று நடக்கவிருந்த தமது நாடாளுமன்ற கட்சிக் கூட்டத்தை பாரதிய ஜனதா கட்சி ரத்து செய்துள்ளது.
எப்பொழுதும் மக்களின் பிரச்னைகளை தீர்ப்பதற்கான உறுதிபூண்டிருந்த அர்ப்பணிப்பு மிக்க தலைவர் என்று ராம் ஸ்வரூப் சர்மா குறித்து இந்திய பிரதமர் நரேந்திர மோதி ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.
சமூக நலனுக்காக அவர் ஓய்வின்றி உழைத்தவர் என்றும் அவரது அகால மரணத்தால் மிகுந்த வலி உண்டாகி உள்ளதாகவும் நரேந்திர மோதி தனது இரங்கல் செய்தியில் குறிப்பிட்டுள்ளார்
இவரது மரணத்துக்கு பாஜக மற்றும் பிற அரசியல் கட்சியினரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
பிற செய்திகள்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்