You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
ரஜினியுடனேயே இருப்பேன், பாஜகவுடன் நெருங்கிய உறவு உள்ளது - அர்ஜுனமூர்த்தி விளக்கம்
"எனக்கு இரண்டு கண்கள், ஒன்று மோதி, மற்றொன்று ரஜினி," என்று தெரிவித்திருக்கிறார் அவருடன் சமீபத்தில் கைகோர்த்த தமிழக பாஜகவின் முன்னாள் அறிவுசார் பிரிவு தலைவர் அர்ஜுனமூர்த்தி.
ரஜினிகாந்த் கட்சி தொடங்குவது தொடர்பான அறிவிப்பை இம்மாத தொடக்கத்தில் அறிவித்தபோது, அவருடன் இருந்த அர்ஜுனமூர்த்தியை தமது கட்சி தொடக்கப் பணிகளுக்கான தலைமை ஒருங்கிணைப்பாளராக நியமிப்பதாக கூறினார். மேலும், ரஜினியின் அரசியல் ஆலோசகர் போல செயல்பட்ட தமிழருவி மணியனை கட்சி தொடக்கப் பணிகளுக்கான மேற்பார்வையாளராக நியமிப்பதாகவும் ரஜினி தெரிவித்தார்.
இந்த அறிவிப்பை ரஜினி வெளியிடும் நாள்வரை தமிழக பாஜகவின் அறிவுசார் பிரிவின் தலைவராக அர்ஜுனமூர்த்தி செயல்பட்டார். அவரை தமது உத்தேச கட்சி நடவடிக்ககையின் தலைமை ஒருங்கிணைப்பாளராக ரஜினி அறிவித்த சில நிமிடங்களில், அர்ஜுனமூர்த்தியின் ராஜிநாமாவை ஏற்பதாக பாஜக தலைமை தெரிவித்தது. அதே நாளில் ரஜினி தொடங்கும் ஆன்மிக அரசியலுக்கு பல்வேறு மாநில பாஜக தலைவர்கள் தங்களின் ட்விட்டர் பக்கங்கள் மூலம் வாழ்த்துகளை பகிர்ந்தனர்.
இந்த நிலையில், உடல் நலக்குறைவைக் காரணம் காட்சி தாம் அரசியல் கட்சி தொடங்கப்போவதில்லை என்ற அறிவிப்பை செவ்வாய்க்கிழமை தனது ட்விட்ட ர் பக்கத்தில் பகிர்ந்த அறிக்கை வாயிலாக ரஜினிகாந்த் தெரிவித்தார்.
இதைத்தொடர்ந்து மாற்று அரசியல் காணும் தமது நம்பிக்கை பொய்த்துப் போனதாகக் கூறி இனி அரசியலுக்கே வரமாட்டேன் என்று தமிழருவி மணியன் புதன்கிழமை அதிகாலையில் அறிவித்தார்.
இதேவேளை, அர்ஜுனமூர்த்தி தமது நிலைப்பாட்டை விளக்குவதற்காக செய்தியாளர்களை சென்னை அண்ணாநகரில் உள்ள அவரது வீட்டுக்கு புதன்கிழமை பிற்பகலில் அழைத்திருந்தார்.
அப்போது பேசிய அவர், "ரஜினி அரசியலுக்கு வர இயலாத நிலை தொடர்பாக வெளியிட்ட அறிவிப்பை சக குடும்பத்தினர் ஒருவருக்கு ஏற்பட்ட நிலையின்போது எடுக்கப்படும் முடிவு போலவே கருத வேண்டும்," என்று கேட்டுக்கொண்டார்.
"எனது இரண்டு கண்களில் ஒரு கண் நரேந்திர மோதி, இன்னொரு கண் ரஜினிகாந்த். இந்த இருவருமே தமிழ்நாட்டுக்கு ஏதாவது செய்ய வேண்டும் என்ற எண்ணத்தைக் கொண்டவர்கள். அதனால் ஈர்க்கப்பட்டே இருவரின் தலைமையை நான் ஏற்றேன்."
"ரஜினி மிகவும் மன உளைச்சலில் இருக்கிறார். இது அனைவருக்கும் தெரியும். தற்போது மருத்துவர்களின் ஆலோசனை காரணமாக ஏற்பட்ட நிர்பந்தத்தாலேயே ரஜினி கட்சயைத் தொடங்கவில்லை என்பதை அனைவரும் புரிந்து கொள்ள வேண்டும்," என்று அர்ஜுனமூர்த்தி வலியுறுத்தினார்.
"நமது வீட்டில் இருக்கும் ஒருவர் உடல் நலமில்லை என்றால் அவரை விட்டு, விட்டு எப்படி நாம் செல்வோம்? அதனால் ரஜினியுடனேயே தொடர்ந்து இருப்பேன். எனக்கு பாஜகவுடன் நெருங்கிய உறவு உள்ளது. அங்குள்ள தலைவர்கள் மீது எனக்கு மிகுந்த நன்மதிப்பு உள்ளது. மீண்டும் பாஜகவில் சேருவது பற்றி இப்போதைக்கு முடிவு செய்யவில்லை," என்று அவர் கூறினார்.
செய்தியாளர் சந்திப்பின் முடிவில், தமது நிலைப்பாட்டை விளக்கும் ஒரு பக்க அறிக்கையையும் அர்ஜுனமூர்த்தி பகிர்ந்து கொண்டார்.
முன்னதாக, தமது அரசியல் கட்சி முயற்சிகளுக்கு உறுதுணையாக இருந்ததற்காக அர்ஜுனமூர்த்திக்கும் தமிழருவி மணியனுக்கும் தமது அறிக்கையிலேயே ரஜினிகாந்த் நன்றி தெரிவித்துக் கொண்டிருந்தார்.
அவரது அறிக்கை வெளியான சில நிமிடங்களில் "ரஜினி சாரின் இதயம் கடுமையான சோகத்தில் இருக்கும் என்பதை அறிவேன். அவரது முடிவுக்கு எனது மனமார்ந்த ஆதரவு," என்று அர்ஜுனமூர்த்தி கூறியிருந்தார்.
இதில் தமிழருவி மணியன் செய்தியாளர்களை சந்திப்பதை தவிர்த்து விட்டு அறிக்கை வாயிலாக மட்டுமே பதிலளித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
அர்ஜுனமூர்த்தி, பாஜகவில் இருந்தபோது அக்கட்சியின் சமூக ஊடக விவகாரங்கள், தேர்தல் உத்தி விவகாரங்கள் தொடர்பாக மாநில தலைமையுடனும் பாஜக சார்பு அமைப்புகளுடனும் நெருக்கமான உறவை கொண்டிருந்தார்.
அவர் தனக்கு கிடைத்த மிகப்பெரிய பொக்கிஷம் என்று ரஜினி இம்மாத தொடக்கத்தில் அறிவித்து விட்டு அவரையே உத்தேச கட்சியின் தொடக்க விவகாரங்களுக்கான தலைமை ஒருங்கிணைப்பாளர் ஆக நியமிப்பதாக ரஜினி கூறியபோது, அவர் ஊடகங்களின் கவனத்தையும் ஈர்த்தார்.
"ரஜினியை பாஜக இயக்கி வருவதாக சில கட்சியினர் விமர்சித்து வந்த நிலையில், பாஜகவில் இருந்த அர்ஜுனமூர்த்தி, ரஜினியுடன் கைகோர்த்திருப்பதில் இருந்தே அதுவரை தாங்கள் முன்வைத்த விமர்சனம் உறுதியாகிறது," என்று அரசியல் கட்சிகளின் சில தலைவர்களும் அரசியல் ஆய்வாளர்களும் விமர்சித்தனர்.
மேலும், தகவல் தொழில்நுட்ப நிறுவனங்களை நடத்தி வரும் அர்ஜுனமூர்த்தி, திமுகவின் முரசொலி மாறன் காலத்தில் அவரது ஆலோசகராக இருந்தார் என்றும் அவரது குடும்பக்கத்துக்கு நெருக்கமானவர் என்றும் சில ஊடகங்களில் செய்திகள் வெளிவந்தன. ஆனால், இது தொடர்பான தகவல்களை அர்ஜுனமூர்த்தி மறுக்காத நிலையில், அவர் தனது தந்தையுடன் எந்த காலத்திலும் இருக்கவில்லை என்றும் அவரது ஆலோசகராக அர்ஜுனமூர்த்தி இருந்ததில்லை என்றும் முன்னாள் மத்திய அமைச்சர் தயாநிதி மாறன் தனது ட்விட்டர் பக்கத்தில் விளக்கினார்.
இந்த நிலையில், கட்சி தொடங்கப்போவதில்லை என ரஜினி அறிவிப்பை வெளியிட்ட பிறகு, ரஜினியையும் மோதியையும் தனது இரு கண்கள் என்றும் பாஜக தலைவர்களுடன் தனக்கு நெருக்கமான உறவும் நன்மதிப்பும் இருப்பதாகவும் அர்ஜுனமூர்த்தி தெரிவித்திருப்பது அரசியல் கவனத்தை ஈர்த்திருக்கிறது.
பிற செய்திகள்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்