You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
தமிழக சட்டமன்றத் தேர்தலில் முக்கியத்துவம் பெற்றுள்ள கோவை தெற்கு தொகுதி
- எழுதியவர், மு. ஹரிஹரன்
- பதவி, பிபிசி தமிழுக்காக
மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல் ஹாசன் போட்டியிடுவதாலும், தேசிய கட்சிகளான பாஜக மற்றும் காங்கிரஸ் நேரடியாக மோதுவதாலும் கோவை மாவட்டத்தில் உள்ள தெற்கு தொகுதி வரும் தேர்தலில் முக்கியத்துவம் பெற்றுள்ளது.
கோவை நகரின் மையப்பகுதியில் அமைந்துள்ள தெற்கு தொகுதியில் மாநகராட்சி வார்டு எண் 21 முதல் 47 வரையிலான காந்திபுரம், டவுன்ஹால், உக்கடம் மற்றும் இதரப் பகுதிகளைச் சேர்ந்த 26 வார்டுகள் இருக்கின்றன.
வணிகம் மற்றும் கல்வி நிலையங்கள் நிறைந்த இப்பகுதிகளில் படித்த இளைஞர்கள், வடமாநிலத்தவர்கள், இஸ்லாமியர்கள், கிறித்தவர்கள் என பல தரப்பட்ட வாக்காளர்களும் உள்ளனர். வரும் தேர்தலில் இவர்களின் வாக்கு யாருக்கு செல்லவிருக்கிறது என களத்தில் ஆய்வு செய்தோம்.
"ஒரு கட்சியின் தலைவர் நாங்கள் வசிக்கும் தொகுதியில் போட்டியிடுவார் என நாங்கள் எதிர்பார்க்கவில்லை. எங்கள் தொகுதியிலிருந்து ஒரு கட்சியின் தலைவர், சட்டமன்ற உறுப்பினராக தேர்வானால் எங்களது குரல் வெளியில் கேட்கும் என நம்புகிறோம்," என்கிறார் காந்திபுரத்தில் வசித்துவரும் மாணவி கீர்த்தனா.
சிலர் திமுக-அதிமுகவிற்கு மாற்று கட்சியாக மக்கள் நீதி மய்யம் அமையும் என்ற கருத்தையும் பதிவு செய்தனர்.
"நடிகராக இருந்த கமல் ஹாசன் தற்போது ஒரு அரசியல்வாதியாக பல்வேறு பிரச்னைகள் குறித்து பேசி வருகிறார். சமூக வலைதளத்தில் அவர் பேசும் அரசியல் வீடியோக்கள் பல முறை என்னை கவர்ந்துள்ளது. அதுமட்டுமின்றி திமுக அதிமுக கட்சிக்கு பதிலாக புதிய கட்சிகள் வர வேண்டும் என நான் நினைக்கிறேன்' என்கிறார் கல்லூரி மாணவரும் புதிய வாக்காளருமான ராஜீவ்.
இருப்பினும் கமல் ஹாசனின் பரப்புரையில் தெளிவு இல்லை என்ற கருத்தும் எழுகிறது.
'ஊழல் எதிர்ப்பு என்ற கொள்கையை முன்வைத்து கமலஹாசன் தேர்தல் பரப்புரைகளை செய்து வருகிறார். ஆனால், அதற்கான தீர்வாக எந்த திட்டத்தை முன்வைக்க உள்ளார் என தெளிவாக புலப்படவில்லை. அதேநேரத்தில், கொள்கை ரீதியான பிடிப்பும் இருப்பதாக தெரியவில்லை. இந்துத்துவா என்ற ஒற்றைக் கொள்கையை நோக்கி தேசத்தை மாற்றி வரும் இன்றைய அரசியல் சூழலில், கமல் தனது கொள்கையை தெளிவுபடுத்திட வேண்டும். அடுத்தடுத்த தேர்தல் பிரச்சாரங்களில் ஊழல் ஒழிப்பு என்பதை தவிர்த்து அவரது கொள்கையை வெளிப்படையாக தெரிவித்தால் மட்டுமே அவருக்கு வாக்களிப்பது பற்றி யோசிக்க முடியும்' எனக் கூறுகிறார் உக்கடம் பகுதியைச் சேர்ந்த தொழில் நிறுவன உரிமையாளர் பாலமுருகன்.
கோவை மாவட்டத்தில் உள்ள 10 சட்டமன்ற தொகுதிகளிலும் மக்கள் நீதி மய்யம் கட்சியினர் போட்டியிடுகின்றனர். குறிப்பாக, கோவை நகர பகுதியில் அமைந்துள்ள தெற்கு தொகுதியில் அக்கட்சியின் தலைவர் கமல் ஹாசனும், தொழிற்சாலைகள் அதிகமுள்ள சிங்காநல்லூர் தொகுதியில் துணைத் தலைவர் டாக்டர் ஆர். மகேந்திரனும் போட்டியிடுகின்றனர்.
திரைப்பட நடிகராக கமல் ஹாசனுக்கு உள்ள பிரபலம் கோவை தெற்கு தொகுதியில் உள்ள சிறுபான்மையினர் வாக்குகளை அறுவடை செய்ய உதவும் என அரசியல் பார்வையாளர்கள் தெரிவிக்கின்றனர்.
அதுமட்டுமின்றி, கோவை மாவட்டத்தின் நகரப்பகுதிகளில் மக்கள் நீதி மய்யம் கட்சிக்கான ஆதரவு கடந்த தேர்தல்களில் அதிகமாகவே இருந்துள்ளது. குறிப்பாக, கடந்த நாடாளுமன்ற தேர்தலில் கோவையில் வேட்பாளராகப் போட்டியிட்ட அக்கட்சியின் துணைத் தலைவர் மகேந்திரன் 1,44,829 வாக்குகள் பெற்று மூன்றாம் இடம் பிடித்தார். அந்த தேர்தலில் மக்கள் நீதி மையம் சார்பில் போட்டியிட்ட வேட்பாளர்களில் இவர்தான் அதிக வாக்குகளையும் பெற்றிருந்தார்.
அந்த வகையில், கோவையில் கமலஹாசன் போட்டியிடுவது அக்கட்சியின் வாக்குகளை மேலும் அதிகரிக்கும் என கணிக்கப்படுகிறது.
அதிமுக-பாஜக கூட்டணியில் முரண்
கோவை தெற்கு தொகுதியில் அதிமுக மற்றும் பாஜக கூட்டணி கட்சிக்கு இடையில் முரண்பாடுகள் நிலவி வருகின்றன.
கோவை மாவட்டத்தில் உள்ள 10 தொகுதிகளில் ஒரு தொகுதி மட்டும் பாஜகவிற்கு ஒதுக்கப்பட்டது. அதிமுக தரப்பில் அந்த அறிவிப்பு வெளிவந்த சில மணி நேரங்களில் மாவட்ட அதிமுக அலுவலகம் முன்பு கோவை தெற்கு தொகுதியில் தற்போது சட்டமன்ற உறுப்பினராக உள்ள அம்மன் அர்ஜுனனின் ஆதரவாளர்கள் பலர் ஆர்ப்பாட்டம் நடத்தினர். இந்த சம்பவம் பாஜக தரப்பினரையும், அக்கட்சியின் வேட்பாளராக அறிவிக்கப்பட்டிருக்கும் வானதி சீனிவாசனையும் முகம் சுளிக்க வைத்தது.
'கோவை தெற்கு தொகுதியின் சட்டமன்ற உறுப்பினராக பதவி வகித்து வரும் அம்மன்.கே.அர்ஜூனன், மிகச்சிறப்பாக பணியாற்றி வருகிறார். கடந்த 5 வருடங்களாக கவுன்சிலர்கள் இல்லாத குறையை தீர்க்கும் வகையில் குடிநீர், மின்சாரம் என தெற்கு தொகுதி மக்களுக்கான அடிப்படை வசதிகள் அனைத்தையும் செய்து தந்துள்ளார். கோவை தெற்கு தொகுதியை அதிமுகவிற்கு ஒதுக்கவில்லை என்பது கட்சியனருக்கு ஏமாற்றம் தான்' என தெரிவிக்கிறார் அதிமுக இளைஞர்பாசறை மாவட்டத் தலைவர் கோவை ராஜன்.
சுமார் 20க்கும் மேற்பட்ட வார்டு செயலாளர்கள், தங்களது ராஜினாமா கடிதத்தோடு மாவட்ட அதிமுக அலுவலகத்தில் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.
'அதிமுக தேர்தலில் வெற்றி பெறுவதற்காக தெற்கு தொகுதி மக்களை நேரில் சந்தித்து களத்தில் செய்த பணிகள் அனைத்தும் கூட்டணி கட்சிக்கு இத்தொகுதியை ஒதுக்கியதால் வீணாகிவிடும்' என நிர்வாகிகள் பலர் கருதுகின்றனர்.
அதிருப்தியில் உள்ள கோவை தெற்கு தொகுதி அதிமுக தொண்டர்களை மேல்மட்ட நிர்வாகிகள் சமாதானம் செய்து கூட்டணி கட்சியினர் வெற்றி பெற உழைக்குமாறு கேட்டுக் கொண்ட போதும் முழுமனதோடு அவர்கள் சம்மதிக்கவில்லை என தெரிய வருகிறது. இதனால் அதிமுக வாக்குகள் மற்ற வேட்பாளர்களுக்கு சிதறும் நிலை உருவாகியுள்ளது.
கோவை தெற்கு தொகுதியில் பாஜகவிற்கு அதிக வாக்குகள் கிடைக்கும் என உறுதியாக தெரிவிக்கின்றனர் பாஜக நிர்வாகிகள்.
'தமிழகத்தில் பாஜக வலிமையாக உள்ள மாவட்டங்களில் கோவை முதன்மையாக உள்ளது. கோவை நகரம் பாஜகவினரின் புன்னிய பூமியாக கருதப்படுகிறது. இங்குள்ள சிறுபான்மையினர் முதல் வட மாநிலத்தவர் வரை அனைவரின் மனதிலும் பிரதமர் நரேந்திர மோடி இருக்கிறார். மத்திய அரசின் திட்டங்களால் இங்கு பயனடைந்தவர்கள் ஏராளம். கூட்டணியில் 2 அல்லது 3 தொகுதிகள் வரை ஒதுக்கப்படும் என எதிர்பார்த்திருந்தோம். ஆனால், ஒரு தொகுதி மட்டுமே பாஜகவிற்கு வழங்கப்பட்டுள்ளது. இது ஏமாற்றம் என்றாலும், அதிமுக-பாஜக கூட்டணியின் மொத்த வாக்குகளையும் பெற்று வெற்றியடைவோம். மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவர் கமலஹாசன் தெற்கு தொகுதியில் போட்டியிடுவது எங்களின் வாக்கு வங்கியை எந்தவிதத்திலும் பாதிக்காது' என்கின்றனர் பாஜக நிர்வாகிகள்.
கடந்த தேர்தல்களில், இத்தொகுதியில் வசிக்கும் நகைப்பட்டறை தொழிலாளர்கள், சிறு-குறு வியாபாரிகளின் வாக்குகள் பாஜகவிற்கு கனிசமாக சென்றுள்ளது. ஜி.எஸ்.டி வரி விதிப்பு காரணமாக இந்த தேர்தலில் இவர்களின் வாக்குகள் மற்ற கட்சிகளுக்கு செல்லலாம் என கருதப்படுகிறது.
காங்கிரஸின் நம்பிக்கை
காங்கிரஸ் கட்சியனிரிடம் இதுகுறித்து பேசியபோது, 'மத்திய மாநில அரசுகளின் மக்கள் விரோத நடவடிக்கையால் கோபத்தில் இருக்கும் வாக்காளர்களின் ஆதரவு திமுக - காங்கிரஸ் கூட்டணிக்கு தான் உள்ளது. கடந்தமுறை ராகுல் காந்தி கோவை வந்தபோது, தொழில் நிறுவனத்தினரின் கோரிக்கைகளை பெற்றுக்கொண்டு, அவை அனைத்தும் நிறைவேற்றப்படும் என உறுதி அளித்துள்ளார். அந்த வகையில் தொழில் துறையினர் மற்றும் பொதுமக்களின் வாக்குகள் காங்கிரஸ் வேட்பாளருக்கு தான் கிடைக்கும்' என்கின்றனர்.
திமுக கூட்டணியில் காங்கிரஸ் சார்பில் மயூரா ஜெயக்குமார் போட்டியிடுகிறார். அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் தரப்பில் சேலஞ்சர் துரை, நாம் தமிழர் கட்சி சார்பில் அப்துல் வகாப் ஆகியோரும் இத்தொகுதியில் போட்டியிடுகின்றனர்.
கோவை தெற்கு தொகுதியில் பாஜக மற்றும் காங்கிரஸ் வேட்பாளர்களுக்கு இடையே கடும் போட்டி நிலவும் என எதிர்பார்க்கப்பட்டிருந்த நிலையில், கமலஹாசனின் வருகை இந்த தொகுதியை நட்சத்திர தொகுதியாக மாற்றியுள்ளது.
பிற செய்திகள்:
- ஜார்ஜ் ஃப்ளாய்ட் குடும்பத்தினருக்கு 196 கோடி ரூபாய் இழப்பீடு வழங்க நடவடிக்கை
- தொண்டாமுத்தூரில் எஸ்.பி.வேலுமணிக்கு எதிராக கார்த்திகேய சிவசேனாபதி - வெற்றி யாருக்கு?
- அதிருப்தியில் கோவை அதிமுக - பாஜக தொண்டர்கள்; தொகுதி ஒதுக்கீட்டில் ஏமாற்றம்
- தமிழக சட்டமன்ற தேர்தல் 2021: அதிமுக – தேமுதிக கூட்டணி உடைந்ததன் காரணம் இதுதான்
- தங்க பத்திரத்தை எவ்வாறு வாங்கலாம்? தங்க நகைகள் தவிர பிற முதலீடுகள் என்னென்ன?
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்