கொரோனா தடுப்பூசி சான்றிதழில் இந்திய பிரதமர் மோதியின் படம் நீக்கம்: மத்திய சுகாதாரத் துறை நடவடிக்கை

மோடி

பட மூலாதாரம், Getty Images

(இன்று 12.03.2021, வெள்ளிகிழமை) இந்தியாவில் உள்ள சில முக்கிய நாளிதழ்களிலும் அவற்றின் இணையதளங்களிலும் வெளியான செய்திகள் சிலவற்றை இங்கே தொகுத்து வழங்குகிறோம்.)

சட்டப்பேரவைத் தேர்தல் நடக்க விருக்கும் மாநிலங்களில், கொரோனா தடுப்பூசி போடுபவர்களுக்கு வழங்கப்படும் சான்றிதழில் பிரதமர் நரேந்திர மோதியின் படத்தை நீக்க வேண்டும் என்று மத்திய சுகாதாரத் துறை அமைச்சகத்துக்கு தேர்தல் ஆணையம் கடந்த வாரம் கடிதம் எழுதியது. இந்நிலையில், தற்போது கொரோனா தடுப்பூசி சான்றிதழில் மோதியின் படத்தை நீக்கும் நடவடிக்கையில் சுகாதாரத்துறை அமைச்சகம் இறங்கியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளதாக இந்து தமிழ் திசையின் செய்தியில் குறிப்பிடப்பட்டிருக்கிறது.

தமிழ்நாடு, புதுச்சேரி, கேரளா, மேற்கு வங்கம், அசாம் ஆகிய மாநிலங்களில் சட்டமன்றத் தேர்தல் நடைபெற இருப்பதையொட்டி தேர்தல் நடத்தை விதிகள் அமலில் உள்ளன. அதன்படி, அரசு விளம்பரங்களில் அரசியல் கட்சித் தலைவர்களை பிரதானப்படுத்துவதற்கு தடைவிதிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் கொரோனா தடுப்பூசி போடுபவர்களுக்கு மோதியின் படம் அச்சடிக்கப்பட்ட சான்றிதழ் வழங்கப்பட்டு வந்தது. அது தேர்தல் நடத்தை விதிகளுக்கு எதிரானது என திரிணாமுல் காங்கிரஸ் கட்சி தேர்தல் ஆணையத்திடம் புகார் அளித்தது.

அதைத் தொடர்ந்து தேர்தல் ஆணையம் மத்திய சுகாதாரத் துறைக்குக் கடிதம் எழுதியது. அதில், தேர்தல் நடக்கவிருக்கும் மாநிலங்களில் தேர்தல் நடத்தை விதிகள் முறையாக கடைபிடிக்கப்பட வேண்டும் என்றும், அதன்படி, கொரோனா தடுப்பூசி சான்றிதழில் மோதியின் படத்தை நீக்க வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டது.

இந்நிலையில், தேர்தல் நடக்க இருக்கும் மாநிலங்களில் வழங்கப்படும் கொரோனா தடுப்பூசி சான்றிதழில் மோதியின் படத்தை நீக்கும் முயற்சியில் சுகாதாரத் துறை இறங்கியுள்ளதாக அச்செய்தியில் குறிப்பிடப்பட்டிருக்கிறது.

ஜனநாயக அந்தஸ்தை நாடு இழந்துவிட்டது: ராகுல் காந்தி குற்றச்சாட்டு

ராகுல்

பட மூலாதாரம், Getty Images

வெளிநாட்டு நிறுவனத்தின் அறிக்கை ஒன்றை சுட்டிக்காட்டி, ஜனநாயக அந்தஸ்தை இந்தியா இழந்துவிட்டதாக காங்கிரஸ் கட்சியின் முக்கிய தலைவரும் நாடாளுமன்ற மக்களவை உறுப்பினருமான ராகுல் காந்தி குற்றஞ்சாட்டியுள்ளார் என தினமணியில் செய்தி வெளியாகி உள்ளது.

அமெரிக்க அரசின் நிதியுதவி பெறும் 'ஃபிரீடம் ஹவுஸ்' என்ற தன்னார்வ அமைப்பானது, உலக நாடுகளில் நிலவும் ஜனநாயக சூழல் குறித்து ஆய்வு மேற்கொண்டது. அந்த அமைப்பு வெளியிட்ட அறிக்கையில், 'இந்தியாவில் பிரதமா் நரேந்திர மோதி தலைமையிலான அரசு கடந்த 2014-ஆம் ஆண்டில் பொறுப்பேற்றதிலிருந்து அரசியல் உரிமைகளும் மக்களுக்கான சுதந்திரமும் கடும் பாதிப்பைச் சந்தித்துள்ளன' என்று குறிப்பிடப்பட்டிருந்தது.

அதை அடிப்படையாகக் கொண்டு, ஸ்வீடனின் வி-டெம் மையம், இந்தியாவின் அந்தஸ்தை 'உலகின் மிகப் பெரும் ஜனநாயகம்' என்பதிலிருந்து 'அரசியல் சார்ந்த ஜனநாயகம்' என்று குறைத்து மதிப்பிட்டுள்ளது.

இவை தொடா்பான செய்தியைத் தனது சுட்டுரைப் பக்கத்தில் வியாழக்கிழமை பகிர்ந்த ராகுல் காந்தி, 'ஜனநாயக அந்தஸ்தை இந்தியா இழந்துவிட்டது' என்று குறிப்பிட்டுள்ளார். நாட்டில் பேச்சு சுதந்திரத்தையும் கருத்து சுதந்திரத்தையும் மத்திய அரசு ஒடுக்கி வருவதாக ராகுல் காந்தி தொடா்ந்து குற்றஞ்சாட்டி வருவது குறிப்பிடத்தக்கது என அச்செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.

அ.தி.மு.க. கூட்டணியில் தே.மு.தி.க. இல்லாதது கூடுதலாக 15 பேருக்கு போட்டியிட வாய்ப்பு - அமைச்சர் பாண்டியராஜன்

பாண்டியராஜன்

ஆவடி சட்டமன்ற தொகுதி வேட்பாளராக மீண்டும் அமைச்சர் பாண்டியராஜன் அறிவிக்கப்பட்டுள்ளார். இதையடுத்து அவர், நேற்று ஒரு நாள் முழுவதும் ஆவடி சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட பகுதியில் உள்ள அனைத்து மத வழிபாட்டு தலங்களிலும் சாமி தரிசனம் செய்து பிரசாரத்தை தொடங்கியதாகவும் பத்திரிகையாளர்களைச் சந்தித்து தேமுதிக பற்றிப் பேசியதாகவும் தினத்தந்தியில் செய்தி வெளியாகியுள்ளது.

முதலில் திருமுல்லைவாயல் பகுதியில் உள்ள மன்னாதீஸ்வரர் பச்சையம்மன் கோவிலில் தனது மனைவியுடன் சென்று சாமி தரிசனம் செய்தார். அவருடன் முன்னாள் அமைச்சர் எஸ்.அப்துல் ரஹீம் மற்றும் அ.தி.மு.க. நிர்வாகிகள் உடன் வந்தனர். பின்னர் திருநின்றவூர், திருவேற்காடு, கோவில்பதாகை உள்ளிட்ட பகுதிகளில் உள்ள கோவில், தர்கா, தேவாலயங்களுக்கு சென்று சாமி தரிசனம் செய்தார்.

அப்போது நிருபர்களிடம் அமைச்சர் பாண்டியராஜன் கூறியதாவது:-

அ.தி.மு.க. கூட்டணியில் தே.மு.தி.க. இல்லாதது, இன்னொரு 15 அ.தி.மு.க.வினர் கூடுதலாக போட்டியிட வாய்ப்பு கொடுத்திருப்பதாக நினைக்கிறேன். அ.தி.மு.க.வினரின் ஆசையை இது ஓரளவுக்கு ஈடுசெய்யும் என்று நம்புகிறேன்.

ஜெயலலிதா, 234 தொகுதிகளிலும் கடந்த முறை இரட்டை இலையை மலரச் செய்தார். நாங்கள் 185 தொகுதிகளிலாவது வெற்றி பெற தொண்டர்கள் மத்தியில் ஒரு எழுச்சியை ஏற்படுத்தி இருப்பதாக நம்புகிறேன் என கூறியதாக அந்த செய்தி கூறப்பட்டுள்ளது.அ.தி.மு.க. கூட்டணியில் தே.மு.தி.க. இல்லாதது கூடுதலாக 15 பேருக்கு போட்டியிட வாய்ப்பு - அமைச்சர் பாண்டியராஜன்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :