You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
தி.மு.க. கூட்டணியில் ம.தி.மு.கவுக்கு ஆறு இடங்கள் ஒதுக்கீடு; உதயசூரியன் சின்னத்தில் போட்டி
தி.மு.க. கூட்டணியில் ம.தி.மு.கவுக்கு ஆறு இடங்கள் ஒதுக்கீடுசெய்யப்பட்டு, ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளது. ஆறு இடங்களிலும் உதயசூரியன் சின்னத்தில் ம.தி.மு.க. போட்டியிடுகிறது.
வரவிருக்கும் சட்டமன்ற தேர்தலுக்கான கூட்டணிப் பேச்சுவார்த்தைகள் உச்சகட்டத்தை எட்டியிருக்கும் நிலையில், தி.மு.க. கூட்டணியில், காங்கிரஸ், சி.பி.எம்., ம.தி.மு.க. ஆகிய கட்சிகளுடன் உடன்பாடு எட்டப்படாமல் பேச்சு வார்த்தை நீடித்து வந்தது.
தி.மு.க. தனது தோழமைக் கட்சிகளுக்கு மிகக் குறைந்த இடங்களையே கொடுக்க முன்வந்ததால், இந்த இழுபறி நீடித்தது.
இந்த நிலையில், ம.தி.மு.கவின் நிர்வாகிகள் கூட்டம் இன்று நடைபெற்றது. இதற்குப் பிறகு ம.தி.மு.க. தி.மு.கவுடனான கூட்டணி பேச்சு வார்த்தைகளில் ஒரு உடன்பாடு எட்டப்பட்டது.
அதன்படி, தி.மு.க. கூட்டணியில் ம.தி.மு.க.வுக்கு 6 இடங்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன. இந்த ஆறு இடங்களிலும் தி.மு.கவின் சின்னமான உதயசூரியன் சின்னத்திலேயே ம.தி.மு.க. போட்டியிடும். இதற்கான ஒப்பந்தத்தில் ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோவும் தி.மு.க. தலைவர் மு.க. ஸ்டாலினும் கையெழுத்திட்டனர்.
இதற்குப் பிறகு செய்தியாளர்களிடம் பேசிய வைகோ, "ஒரு கட்சி 12 தொகுதிகளுக்குக் குறையாமல் போட்டியிட்டால்தான் ஒரே சின்னம் ஒதுக்கப்படும். 12 தொகுதிகளுக்கு குறைவாக போட்டியிட்டால் 6 தொகுதிகளிலும் 6 சின்னங்களில் போட்டியிட வேண்டிய சூழல் ஏற்படலாம். இது நெருக்கடியாகிவிடும் என்பதால், 12 நாட்களே பிரச்சாரத்திற்கு இருப்பதால் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிடும் முடிவுக்கு வந்திருக்கிறோம். சனாதன இந்துத்துவ சக்திகள் மூர்க்கத்தனமாக முயற்சிகளை மேற்கொண்டு, இந்தியை, சமஸ்திருதத்தை கொண்டுவந்து எல்லா இடங்களிலும் பரப்பும் முயற்சிகளை மேற்கொண்டிருப்பதால், எந்தக் கொள்கைகளுக்காக லட்சக்கணக்கான திராவிட இயக்கத் தொண்டர்கள் பாடுபட்டார்களோ, அந்த திராவிட பூமியில் அந்த சக்திகளை முறியடிக்க தி.மு.க.வுக்கு முழு ஆதரவையும் தருவோம் என்று சொல்லியிருக்கிறேன். மு. கருணாநிதி உடல்நலமின்றி இருந்தபோது, "உங்களுக்கு பக்கபலமாக இருந்ததைப் போல ஸ்டாலினுக்கும் இருப்பேன்" என்று தெரிவித்தேன். அதன்படியே இந்த உடன்பாடு ஏற்பட்டுள்ளது. முதல்முறையாக சட்டமன்றத் தேர்தலை தி.மு.கவுடன் சந்திப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது" என்று தெரிவித்தார்.
இதுவரை தி.மு.க. கூட்டணியில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி ஆகியவற்றுக்கு தலா ஆறு இடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன. இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சிக்கு 3 இடங்களும் மனித நேய மக்கள் கட்சிக்கு 2 இடங்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன.
2016ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலில் மக்கள் நலக் கூட்டணியில் இணைந்து போட்டியிட்ட ம.தி.மு.க., 0.87 சதவீத வாக்குகளைப் பெற்றது. 2011ஆம் ஆண்டுத் தேர்தலில் தாங்கள் கேட்ட இடங்களை அ.தி.மு.க. ஒதுக்காததால், தேர்தலைப் புறக்கணித்தது ம.தி.மு.க.
2006ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலில் அ.தி.மு.க. கூட்டணியில் 35 இடங்களில் போட்டியிட்ட ம.தி.மு.க. 6 இடங்களில் வெற்றிபெற்றது. 2001ஆம் ஆண்டுத் தேர்தலில் 211 தொகுதிகளில் போட்டியிட்டு ஒரு இடத்திலும் வெற்றிபெறவில்லை. 4.7 சதவீத வாக்குகளைப் பெற்றது.
1996ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலில் 117 இடங்களில் ம.தி.மு.க. போட்டியிட்டு, அனைத்து இடங்களிலும் தோல்வியடைந்தது.
1993ல் தி.மு.கவிலிருந்து வைகோ வெளியேறி புதிய கட்சியைத் துவங்கியதிலிருந்து நாடாளுமன்றத் தேர்தல்களில் கூட்டணி அமைத்துப் போட்டியிட்டிருந்தாலும், சட்டமன்றத் தேர்தல்களில் இணைந்து போட்டியிட்டதில்லை. ம.தி.மு.கவும் தி.மு.கவும் இணைந்து சந்திக்கும் முதல் சட்டமன்றத் தேர்தல் இதுவாகும்.
பிற செய்திகள்:
- Ind Vs Eng test: இங்கிலாந்துக்கு எதிரான நான்காவது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டியில் இந்தியா அபார வெற்றி
- போப் ஃபிரான்சிஸ்: இராக் கிறிஸ்தவர்களின் பாதுகாப்பு குறித்து ஷியா மதத் தலைவருடன் பேச்சு வார்த்தை
- கண்கலங்கிய கே.எஸ்.அழகிரி; ஐபேக் ஆலோசனை? கூட்டணியை உரசிய துரைமுருகனின் பேச்சு
- நெஞ்சம் மறப்பதில்லை: திரை விமர்சனம்
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: