You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
போப் ஃபிரான்சிஸ்: இராக் கிறிஸ்தவர்களின் பாதுகாப்பு குறித்து ஷியா மதத் தலைவருடன் பேச்சு வார்த்தை
வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த தனது இராக் பயணத்தின் இரண்டாவது நாளில், ஷியா பிரிவு இஸ்லாமியர்களின் முக்கிய தலைவர்களில் ஒருவரை சந்தித்து இராக்கில் கிறித்துவர்களின் பாதுகாப்பு குறித்து ஆலோசித்தார் போப் ஃப்ரான்சிஸ்.
உலகில் வாழும் லட்சக்கணக்கான ஷியா பிரிவு இஸ்லாமியர்களின் ஆன்மிகத் தலைவரான ஆயதுல்லா அலி அல் சிஸ்தானி, போப் ஃப்ரான்சிஸ் உடனான சந்திப்பு அமைதியை வலியுறுத்துவதாக இருந்தது எனக் கூறினார்.
ஆயதுல்லா அலி தன் விருந்தினரான போப் ஃபிரான்சிஸை நஜஃப் நகரத்திலுள்ள தன் வீட்டில் வைத்து உபசரித்தார்.
கொரோனா பெருந்தொற்றுக்குப் பிறகு, போப் ஃபிரான்சிஸ் மேற்கொள்ளும் முதல் சர்வதேசப் பயணம் இது என்பது குறிப்பிடத்தக்கது. அதோடு போப் இராக்கில் மேற்கொள்ளும் முதல் பிரார்த்தனைப் பயணம் இது என்பதும் குறிப்பிடத்தக்கது.
கொரோனா பெருந்தொற்று மற்றும் பாதுகாப்பு அச்சத்தால் இந்த இராக் பயணம் இதுவரை போப் ஃபிரான்சிஸ் மேற்கொண்ட அதிக ஆபத்தான பயணமாக இருக்கிறது.
இந்த `அடையாளப்` பயணத்தை மேற்கொள்ள வேண்டியது, தன் கடமை என தான் நினைப்பதாக பத்திரிகையாளர்களிடம் கூறினார் 84 வயதான கத்தோலிக்க தேவாலயத்தின் தலைவர். இந்த நான்கு நாள் பயணத்தில் ஈராக்கின் பல பகுதிகளைப் பார்க்க இருக்கிறார் போப்.
என்ன பேசினார்கள்?
இரு மதத் தலைவர்களுக்கு மத்தியில் நடந்த பேச்சு வார்த்தை சுமாராக 50 நிமிடம் நீடித்தது.
2003-ம் ஆண்டு அமெரிக்க துருப்புகள் இராக் நாட்டுக்குள் படையெடுத்து வந்த பின், தொடர்ந்து அந்நாட்டில் இருக்கும் சிறுபான்மை கிறிஸ்தவ மக்கள் தாக்கப்பட்டு வருகிறார்கள்.
நஜஃப் என்ற புனித நகரில் இருக்கும் தனது வீட்டிற்கு வந்த போப்பிடம், "கிறிஸ்துவ மதத்தைச் சேர்ந்த குடிமகன்களும், சக இராக் மக்களைப் போல அமைதியாகவும், பாதுகாப்பாகவும், முழு அரசியலமைப்பு உரிமைகளோடு வாழ வேண்டும்" என உறுதியளித்தார் ஆயதுல்லா சிஸ்தானி.
இந்த பேச்சு வார்த்தைக்குப் பிறகு, போப் பிரான்சிஸ் புனித `உர்` நகரத்துக்குப் பயணப்பட இருக்கிறார். இந்த நகரத்தில் தான் இஸ்லாம், கிறிஸ்துவம், யூத மதத்தின் இறைதூதர் ஆப்ரஹாமின் பிறந்தார் என நம்பப்படுகிறது.
கிட்டத்தட்ட 10,000 இராக் பாதுகாப்புப் படைவீரர்கள், போப் ஃபிரான்சிஸின் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டு இருக்கிறார்கள். அதோடு கொரோனா வைரஸ் பரவாமல் இருக்க ஊரடங்கு உத்தரவும் விதிக்கப்பட்டு இருக்கிறது.
சில ஆயுதமேந்திய ஷியா குழுக்கள், போப் ஃபிரான்சிஸின் வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்தார்கள். இந்த பயணம் இராக்கின் உள்நாட்டு விவகாரங்களில் மேற்கத்திய ஆதிக்கத்தை அதிகப்படுத்திவிடும் என கூறுகிறார்கள்.
போப் என்ன கூறினார்?
இராக்கின் தலைநகரான பாக்தாத் விமான நிலையத்தில் போப் வெள்ளிக்கிழமை தரையிறங்கிய உடன், இராக்கின் பிரதமர் முஸ்தஃபா அல் கதிமி அவரை வரவேற்ற சிறிது நேரத்தில் "வன்முறை, தீவிரவாதம், பிரிவினைவாதம், சகிப்புத்தன்மை இல்லாமை போன்றவைகளை ஒரு முடிவுக்குக் கொண்டு வர வேண்டும்" என போப் அழைப்பு விடுத்தார்.
"போரின் மோசமான விளைவுகளை, தீவிரவாதத்தின் மிகப் பெரிய பிரச்னைகளை, ஒரு குறிப்பிட்ட பிரிவை சேர்ந்தவர்களின் முரண்பட்ட பிரச்சனைகளை இராக் அனுபவித்தது," என பேசினார் போப்.
"பல்லாண்டு காலமாக இந்த நிலத்தில் வாழ்ந்து வரும் கிறிஸ்தவர்கள், இந்த தேசத்தின் வாழ்கைக்கு பங்களித்த கிறிஸ்தவர்கள் ஒரு வளமான பாரம்பரியத்தைக் கொண்டிருக்கிறார்கள். அவர்கள் தொடர்ந்து அனைவருக்கும் சேவை செய்ய விரும்புகிறார்கள்" என போப் ஃபிரான்சிஸ் கூறினார்.
இராக்கில் குறைந்து வரும் கிறிஸ்தவ சமூக மக்கள், ஒரு முழு குடிமகனுக்கான உரிமைகளோடும், சுதந்திரத்தோடும், பொறுப்புணர்வோடும் கூடுதலாகப் பங்களிக்க வேண்டும் என்றும் குறிப்பிட்டார்.
உலகின் மிகப் பழமையான கிறிஸ்தவ சமூகம் ஒன்றின் மக்கள் தொகை, கடந்த 20 ஆண்டுகளில் 14 லட்சத்தில் இருந்து 2.5 லட்சமாக சரிந்திருக்கிறது.
இராக்கில் 2003-ம் ஆண்டு அமெரிக்க படையெடுப்புக்குப் பிறகு, அந்நாட்டின் கிறிஸ்தவர்களுக்கு எதிராக வெடித்த வன்முறைகளில் சிக்கிக் கொள்ளாமல் இருக்க இந்த கிறிஸ்தவ சமூகத்தைச் சேர்ந்த பலரும் வெளிநாடுகளுக்கு தப்பித்துச் சென்றுவிட்டனர்.
அதே போல் கடந்த 2014-ம் ஆண்டு ஐ.எஸ் தீவிரவாத அமைப்பு இராக்கின் வடக்கு பகுதியைக் கைப்பற்றிய போதும் ஆயிரக் கணக்கான கிறிஸ்தவர்கள் வேறு இடங்களுக்கு மாற்றப்பட்டார்கள். அவர்களின் வரலாற்று சிறப்புமிக்க தேவாலயங்கள் அழிக்கப்பட்டன. அவர்களது சொத்துக்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
கிறிஸ்தவர்கள் மதம் மாற வேண்டும் அல்லது நாட்டைவிட்டு வெளியேற வேண்டும் அல்லது உயிர் துறக்க வேண்டும் அல்லது வரி செலுத்த வேண்டிய கட்டாயத்துக்கு தள்ளப்பட்டார்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது.
பிற செய்திகள்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: