You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
பாம்பன் புதிய ரயில் பாலப் பணியில் என்ன நடக்கிறது? கடற்கரை மணலை எடுத்து கட்டுமானமா?
- எழுதியவர், ஆ. விஜயானந்த்
- பதவி, பிபிசி தமிழுக்காக
இந்திய ரயில்வே நிர்வாகத்துக்கு சவாலான திட்டமாக பாம்பன் புதிய ரயில்வே கடற்பாலம் பார்க்கப்படுகிறது. தொடர் விபத்துகள், உயிர்ப் பலி, கடற்கரை மணல் சர்ச்சை என தொடர்ந்து கட்டுமான நிறுவனம் ஒன்றின் மீது புகார் சொல்லப்படுகிறது.
மீனவர்கள் என்ற பெயரில் சுற்றுகிறவர்களால்தான் பிரச்சனை என்றும், ஒப்பந்ததாரர்கள் மிரட்டப்படுகிறார்கள் என்றும் புகாருக்கு உள்ளாகும் ஒப்பந்த நிறுவன அதிகாரி ஒருவர் கூறுகிறார்.
என்ன நடக்கிறது பாம்பனில்?
106 ஆண்டு சிறப்பு
ராமநாதபுரம் மாவட்டம், பாம்பனில் உள்ள ரயில்வே பாலம் 1914 ஆம் ஆண்டு கட்டப்பட்டது. மண்டபம் மற்றும் மன்னார் வளைகுடாவில் அமைந்துள்ள ராமேஸ்வரம் தீவு ஆகியவற்றை இணைப்பதற்காக இந்தப் பாலம் கட்டப்பட்டது. 1988 ஆம் ஆண்டு தரைப்பாலம் கட்டப்படுவதற்கு முன்புவரையில் மண்டபத்துக்கும் ராமேஸ்வரத்துக்கும் இடையில் இணைப்பை வழங்கிய ஒரே பாலமாகவும் இது இருந்தது.
பழைய பாலத்தின் அடியில் படகுகள் செல்லும் வகையில் மடிப்புகளும் இருந்தன. சுமார் 106 ஆண்டுகளைக் கடந்தும் ரயில் போக்குவரத்துக்கு பெரும் உதவியாக இந்தப் பாலம் இருந்தது. தற்போது வரையில் எந்த விபத்தும் ஏற்பட்டதில்லை என்பதும் இதன் சிறப்பாகப் பார்க்கப்படுகிறது. அதேநேரம், கப்பல்கள் செல்லும் வகையில் பாம்பன் பாலத்தின் இடையே அமைக்கப்பட்டுள்ள ஹெர்சர் தூக்குப் பாலம், அண்மைக்காலமாக வலுவை இழந்துவிட்டது. இதன் காரணமாக ரயில் சேவைகளும் பாதிக்கப்பட்டன.
மீனவர்களின் அச்சம்
இதையடுத்து, பாம்பன் கடலின் மீது இருவழிப் பாதையைக் கொண்ட ரயில் பாலம் அமைப்பது என மத்திய அரசு முடிவெடுத்தது. இதற்கான செலவு 250 கோடி ரூபாய் என மதிப்பீடு செய்யப்பட்டது. தற்போது இதன் திட்ட மதிப்பீடு 450 கோடி ரூபாயாக அதிகரித்துவிட்டது. கடந்த 2019 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் புதிய பாலத்துக்கான பணிகள் தொடங்கின. கடந்த ஆண்டு ஜனவரி மாதம் முதல் பணிகள் வேகமாக நடந்து வருகின்றன. இடையில் வடகிழக்குப் பருவமழை தொடங்கியதால் பணிகள் தடைபட்டன. இதற்காக கிரேன், கலவை எந்திரங்கள், பாறையைத் துளைக்கும் கருவிகள் ஆகியவற்றைக் கொண்ட மிதவைகள் பயன்படுத்தப்பட்டன. இந்த மிதவைகள் காற்றின் வேகத்தால் கட்டுப்பாட்டை இழந்து பாம்பன் ரயில் பாலத்தின் மீது மோதும் சம்பவங்களும் நடந்தன. இதனால் மீனவர்கள் அச்சத்தில் ஆழ்ந்தனர்.
இந்நிலையில், புதிய ரயில் பாலப் பணிகளை மேற்கொண்டு வரும் ரஞ்சித் பில்டர்ஸ் நிறுவனத்துக்கும் பாம்பன் மீனவர்களுக்கும் இடையேயான உரசல் அண்மைக்காலமாக அதிகரித்துள்ளது. இதுகுறித்து பாரம்பரிய மீனவர் கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பாளர் சே.சின்னத்தம்பி, பிபிசி தமிழிடம் சில தகவல்களைப் பகிர்ந்து கொண்டார். அவர் கூறுகையில், `` ரஞ்சித் பில்டர்ஸ் என்ற நிறுவனம் பாலம் கட்டுவதில் பல்வேறு முறைகேடுகளில் ஈடுபட்டு வருகிறது. கட்டுமானப் பொருள்களைத் தரமில்லாமல் பயன்படுத்தியதாலும், கட்டுமானப் பணியில் ஈடுபடும் ஊழியர்களின் பாதுகாப்பில் கவனக்குறைவாக செயல்பட்டதாலும் மூன்று முறை விபத்துகள் ஏற்பட்டுள்ளன" என்கிறார்.
கடத்தப்பட்டதா மணல்?
தொடர்ந்து பேசுகையில், `` கடந்த 2020 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 9 ஆம் தேதி இரவு பாம்பன் ரயில் பாலத்தில் சென்னை விரைவு வண்டி வந்துகொண்டிருக்கும் போது கட்டுமான மிதவை கிரேன் ஒன்று பாம்பன் பாலத்தின் மீது மோதியது. ஆனால், அதிர்ஷ்டவசமாக எந்த விபத்தும் ஏற்படவில்லை. இதனால் ராமேஸ்வரத்துக்கு ரயிலில் செல்லமுடியாத நிலை ஏற்பட்டது. இந்தநிலையில், பாம்பன் வடக்கு கடற்கரையில் உள்ள கடற்கரை மணலை அள்ளி கட்டுமானத்துக்கு பயன்படுத்துகின்றனர். இதை மீனவர்கள் பலமுறை தடுத்தும் தொடர்ந்து செய்து வருகின்றனர். கடந்த பிப்ரவரி 14 அன்று பாம்பன் பேருந்து நிறுத்தம் அருகில் உள்ள கடற்கரையில் மண்ணை அள்ளியுள்ளனர். கிட்டத்தட்ட 7 டிப்பர் லாரிகளில் மணல் எடுத்துள்ளனர். இதுகுறித்து பாம்பன் காவல்துறை அதிகாரிகளிடம் மீனவர்கள் புகார் அளித்தனர். அதைத் தொடர்ந்து கட்டுமான நிறுவனத்தின் பிரதிநிதிகள் காவல்நிலையத்தில் ஆஜராகி, இனி இதுபோன்ற தவறுகள் நடக்காமல் பார்த்துக்கொள்வதாக எழுதிக்கொடுத்தனர்" என்றார்.
எம்.பி.யிடம் புகார்
இதையடுத்து பிபிசி தமிழிடம் பேசிய ராமநாதபுரம் ம.தி.மு.க மாவட்டச் செயலாளர் பேட்ரிக், `` புதிய ரயில்வே பாலத்துக்காக எங்கள் பகுதியில் கட்டுமானம் நடைபெறுவதை வரவேற்கிறோம். அதேநேரம், மீனவர்களின் வாழ்வாரத்தை அழிக்கும் வகையில் செயல்படுவதைத்தான் ஏற்க முடியவில்லை" என்கிறார். தொடர்ந்து பேசுகையில், `` கடற்கரையில் உள்ள மணல்களை அள்ளினால், அதனை தாழ்வான பகுதிகளில் கொட்ட வேண்டும். ஆனால், அதனை எடுத்துச் செல்வதற்கு எந்த உரிமையும் இல்லை. பாம்பன் பகுதியில் உள்ள மழைநீர் வடிவால் வாய்க்கால்களையும் இந்தக் கட்டுமான நிறுவனம் உடைத்துவிட்டது. மழைக்காலங்களில் இந்த வழியாகத்தான் தண்ணீர் கடலுக்குச் செல்கிறது. இதனை சரி செய்யாவிட்டால் மழைக்காலங்களில் சிரமமாகிவிடும்.
"வாய்க்கால்களை சரி செய்து கொடுங்கள்' எனக் கட்டுமான நிறுவனத்தின் மேலாளர் அப்துல் சமதுவிடம் தெரிவித்தோம். ஆனால், இன்று வரையில் சரிசெய்து கொடுக்கவில்லை. பாம்பன் ஊராட்சியிலும் நிதி இல்லை. இதுகுறித்து ரயில் பாலப் பணிகளை ஆய்வு செய்ய வந்த ராமநாதபுரம் எம்.பி நவாஸ்கனியிடமும் புகார் தெரிவித்தோம்" என ஆதங்கப்பட்டார்.
கடல் அரிப்பு அபாயம்
மேலும், "புதிய பாலப் பணிகளை ஓராண்டுக்கும் மேலாகச் செய்து வருகின்றனர். இந்தப் பணியின்போது கடலுக்குள் துரப்பண இயந்திரம் ஒன்று சிக்கிக் கொண்டது. இதற்காக தூத்துக்குடியில் இருந்து நீச்சல் வீரர் ஒருவரைக் கூட்டி வந்தனர். கடலுக்குள் இறங்கி அதனைக் கழட்டி எடுக்க முற்பட்டபோது, சரியான முறையில் ஆக்ஸிஜன் கொடுக்காததால் அவர் இறந்துவிட்டார். இதற்கு இழப்பீடு கேட்டபோது, `வடமாநிலத்துக்காரர்கள் இறந்தால் உடலை அனுப்பி வைத்துவிட்டு பத்தாயிரம் ரூபாயை மட்டுமே கொடுப்போம். எதற்காக லட்சக்கணக்கில் இழப்பீடு கொடுக்க வேண்டும்?' என கட்டுமான நிறுவனத்தின் பிரதிநிதிகள் தகராறு செய்தனர். மனிதர்களின் உயிரைப் பற்றியே இவர்கள் கவலைப்படவில்லை. அந்தப் பகுதியில் கலங்கரை விளக்கம் இருக்கிறது. 50 மீட்டருக்குக் கடல் உள்வாங்கிவிட்டது. தொடர்ந்து இவர்கள் பள்ளம் தோண்டுவதால் கடல் அரிப்பு ஏற்பட்டு அந்தப் பகுதியே அழிந்து போய்விடும் நிலை ஏற்பட்டுள்ளது" என்கிறார் கொதிப்புடன்.
மிரட்டல் புகார்கள்
மீனவர்கள் தெரிவிக்கும் குற்றச்சாட்டுகள் தொடர்பாக ரஞ்சித் பில்டர்ஸ் நிறுவனத்தின் மேலாளர் அப்துல் சமதுவிடம் பிபிசி தமிழுக்காக பேசினோம். ``மீனவர் சங்கங்களோடு இணக்கமான உறவில் இருக்கிறோம். புதிய பாலத்தைக் கட்டுவதற்கான பணிகளை பாலத்துக்குக் கீழே இருந்து தொடங்குவதாகத்தான் திட்டமிட்டிருந்தோம். இதனால் மீனவர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படும் என்பதால், வேறு இடத்தில் பணிகளை ஆரம்பித்தோம். இதில், 80 சதவிகித கான்கிரீட் பணிகள் நிறைவடைந்துவிட்டன. இன்னும் 20 சதவிகிதப் பணிகள்தான் உள்ளன. அதற்குள் இங்குள்ள ஒரு சிலர், ஒப்பந்ததாரர்களை மிரட்டி வருகின்றனர். அவர்கள் கொடுக்கும் தொல்லைகளை நாங்கள் பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை. அவர்களோடு சமாதானமாகப் பேசி வருகிறோம்" என்கிறார்.
தொடர்ந்து பேசுகையில், `` கட்டுமானப் பணிக்காக 2 ஜெட்டிகளை அமைத்தோம். அதில் ஒன்று வேலை நடக்கும் இடத்திலும் மற்றொன்றை பாம்பன் தரைப் பாலத்தின் இறக்கத்திலும் அமைத்தோம். புயல் காரணமாக ஜெட்டி முழுவதும் மண் சேர்ந்துவிட்டது. இதனால் ஏற்பட்ட மண் திட்டுகளால் பொருள்களைக் கொண்டு போக முடியவில்லை. அங்குள்ள பணியாளர்கள் பலரும் வடமாநிலத்தைச் சேர்ந்தவர்கள். அவர்களுக்கு இந்தி மட்டும்தான் தெரியும். `இந்த மண் திட்டுகளை அப்புறப்படுத்தி கரையில் போட்டுவிடுங்கள்' என அவர்களிடம் தெரிவித்தோம். ஆனால், அந்த மணலை வேறு இடத்தில் கொட்டிவிட்டார்கள். அந்த மணல் எதற்குமே பயன்படாது. அந்த மணலை நாங்கள் எதற்குமே பயன்படுத்தவில்லை. இதையே காரணமாக வைத்து எங்களை சிலர் எங்களை மிரட்டினார்கள். இதுதொடர்பாக எங்கள் பணியாளர்களுக்கும் அறிவுறுத்தியுள்ளோம்" என்கிறார்.
கவனக்குறைவால் மரணமா?
வடிகால் வாய்க்கால் இடிப்பு குறித்து விளக்கமளித்த அப்துல் சமது, `` அந்தப் பகுதியில் ஒரே ஒரு வடிகால் வாய்க்கால்தான் உள்ளது. அதற்கும் மீனவர்களுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. அங்கு கனரக வாகனங்கள் வந்து சென்றதால் சற்று பாதிப்பு ஏற்பட்டது. அதனை சரிசெய்வதற்கு மதிப்பீடு போட்டு மாவட்ட ஆட்சியருக்கு சமப்பித்திருக்கிறோம்" என்றகிறார்.
தொடர்ந்து, உயிர்ப் பலி ஏற்பட்டது குறித்துப் பேசுகையில், `` எங்கள் துரப்பண இயந்திரம் ஒன்று நீருக்கு அடியில் சிக்கிக் கொண்டது. அதனை சரிசெய்வதற்காக தொழில்முறை நீச்சல் வீரர் ஒருவரை ஏஜென்சி மூலமாகக் கூட்டி வந்தோம். அவருக்கு ஒருநாளுக்கான சம்பளம் மட்டும் 20,000 ரூபாய். இத்தனைக்கும் சான்று பெற்ற நீச்சல் வீரர் அவர். இந்தப் பணியின்போது அவர் 10 முறை உள்ளே சென்று வந்தார். 11 வது முறைதான் அசம்பாவிதம் ஏற்பட்டது. நீருக்கடியில் மூச்சுத் திணறி அவர் இறந்துவிட்டார். அதேநேரம், நாங்கள் கவனக்குறைவாக இல்லை. இந்தச் சம்பவம் நடந்த பிறகு 3 லட்ச ரூபாயை இழப்பீடாகக் கொடுத்தோம். இதனை நாங்கள் காப்பீடு மூலமாக பெறவும் முடியாது. ஏனென்றால், அவர் எங்கள் ஊழியர் இல்லை. இதையே காரணமாக வைத்து சிலர் ஒரு கோடி ரூபாய் வரையில் இழப்பீடு வழங்க வேண்டும் என்றனர். இந்த விவகாரத்தில் சமாதானம் ஏற்பட்டுவிட்டது" என்கிறார்.
இடையூறு செய்வது யார்?
மேலும், "இங்குள்ள சிலர் மீது எங்களால் ஏராளமான புகார்களைக் கூற முடியும். மீனவர்களுக்குப் பாதிப்பு ஏற்படாமல் திட்டத்தைச் செயல்படுத்தி வருகிறோம். எங்கள் ஊழியர்கள் வந்த படகை மறித்த சிலர், அவர்களைக் கம்பால் தாக்கும் சம்பவங்களும் நடந்தன. இந்தச் சம்பவத்தில் ஈடுபட்டவர்கள் மீது வழக்கு போட முடியும். ஆனால், நாங்கள் அவ்வாறு செய்யவில்லை. மத்திய அரசின் ரயில்வே பணிகளில் இடையூறு செய்வதால், எவ்வளவோ சட்ட நடவடிக்கைகளை எடுத்திருக்க முடியும். இன்று வரையில் மீனவர் சங்கங்கள் எங்களுக்கு நல்ல ஒத்துழைப்பைக் கொடுக்கின்றன. மீனவர்கள் என்ற பெயரில் வலம் வருகிறவர்களால்தான் இவ்வளவு பிரச்னையும்" என்கிறார்.
தெற்கு ரயில்வே பாலங்களின் தலைமைப் பொறியாளர் ஸ்மித் சிங்கால் நேற்று முன்தினம் பாம்பனுக்கு வந்தார். தொடர்ந்து தூக்குப் பாலத்தையும் தூண்களையும் ஆய்வு செய்தார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசியவர், "பாம்பன் ரயில்வே பாலம் மிகவும் உறுதியுடன் உள்ளது. அதனால்தான் ரயில் போக்குவரத்து சிறப்பாக நடைபெற்று வருகிறது. இந்தப் பணிகளை எல்லாம் இந்த ஆண்டுக்குள் முடிக்கத் திட்டமிட்டுள்ளோம்" என்றார்.
அதற்குள் எந்தவித இடர்ப்பாடுகளும் ஏற்படாமல் பாலப் பணிகள் சிறப்பாக நடைபெற வேண்டும் என்பதே ராமநாதபுரம் மீனவர்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.
பிற செய்திகள்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: