You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
புதுச்சேரி அரசியல்: "காங்கிரஸ் தலைவர்களின் செருப்பை தூக்கியவர் காங்கிரஸ் முதல்வர்"
புதுச்சேரியில் முதல்வராக இருந்தவர், தான் சார்ந்த காங்கிரஸ் தலைவரின் செருப்பை தூக்கியவர் என்றும் மக்கள் நலத்திட்டங்கள் அமல்படுத்த வேண்டுமானால் அதற்கு பாரதிய ஜனதா கட்சிக்கு ஆதரவளிக்க வேண்டும் என்று இந்திய பிரதமர் நரேந்திர மோதி கேட்டுக் கொண்டார்.
புதுச்சேரி யூனியன் பிரதேசத்திற்கு தேர்தல் பிரசாரப் பயணமாக வந்த பிரதமர் நரேந்திர மோதி முதல் கட்டமாக காணொளி வாயிலாக காரைக்கால் பிராந்தியத்தை உள்ளடக்கிய ரூ. 2,426 கோடி மதிப்பிலான சட்டநாதபுரம் - நாகப்பட்டினம் இடையிலான நான்கு வழி தேசிய நெடுஞ்சாலைப் பணிகயை தொடங்கி வைத்தார். இதைத்தொடர்ந்து, ஜிப்மர் காரைக்கால் பிராந்தியத் ரூ.491 கோடி மதிப்பிலான புதிய வளாகம் கட்டவும், சாகர் மாலா திட்டத்தின் கீழ் ரூ.44 கோடியில் புதுச்சேரியில் சிறிய துறைமுகம் அமைக்கும் திட்டம் உள்ளிட்ட பல்வேறு திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டினார்.
புதுச்சேரியில் நாராயணசாமி தலைமையிலான காங்கிரஸ் அரசு கவிழ்ந்த நிலையில், பிரதமர் நரேந்திர மோதியின் புதுச்சேரி வருகை அரசியல் முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்பட்டது.
புதுச்சேரியில் அரசு நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பிறகு, அங்கு நடைபெற்ற பாஜக தேர்தல் கூட்டத்தில் கலந்து கொண்டு பேசிய பிரதமர், "முன்னேற்றத்தின் விரோதிகளாக உள்ள காங்கிரஸ் கட்சியை மக்கள் தூக்கி எறிய வேண்டும். மக்கள் முன்னேற்றத்திற்கும் மாநில வளர்ச்சிக்கு பாஜகவிற்கு ஆதரவு தாருங்கள்," என்று கேட்டுக் கொண்டார்..
"நான் புதுச்சேரி மாநிலத்திற்கு இரண்டு காரணங்களுக்காக வந்துள்ளேன். அதில் ஒன்று இன்று தொடங்கி வைக்கப்பட்ட மக்கள் நலத் திட்டங்கள். மற்றொன்று புதுச்சேரி மக்கள் காங்கிரஸின் மோசமான ஆட்சியில் இருந்து விடுதலை பெற்றுள்ளது. அதை புதுச்சேரி மக்கள் கொண்டாடுகின்றனர்," என்று கூறினார் நரேந்திர மோதி.
"2016ஆம் ஆண்டில் புதுச்சேரி மக்கள், காங்கிரஸ் கட்சிக்கு மிகப் பெரிய நம்பிக்கையுடன் வாக்களித்தனர். ஆனால் இந்த ஐந்தாண்டுகளில் மக்களுடைய அந்த நம்பிக்கை நிறைவேறாமல் போய்விட்டது. அவர்களுடைய கனவு நொறுங்கி, தகர்ந்து போனது. புதுச்சேரியில் காங்கிரஸ் அரசு தலைமை அனைத்து நிர்வாகங்களையும் சீரழித்துவிட்டது. உள்ளூர் தொழிலாளர்கள் கஷ்டத்திற்கு ஆக்கியுள்ளனர். காங்கிரஸ் கட்சிக்கு மக்களுக்காக வேலை செய்வதில் விருப்பமில்லை," என்றார் அவர்.
மற்றவர்களுடன் இணைந்து மக்களுக்காக பணியாற்றுவதை காங்கிரஸ் அரசு ஏன் விரும்பவில்லை என்று தெரியவில்லை. மத்திய அரசின் திட்டங்களை செயல்படுத்துவதில் காங்கிரஸ் அரசு ஒத்துழைக்கவில்லை. நிதி உபயோகப்படுத்தாமல், கடல்சார் மீனவ நலத் திட்டங்களை காங்கிரஸ் அரசு செயல்படுத்தாமல் இருந்தாக பிரதமர் குற்றம்சாட்டினார்.
"சில நாட்களுக்கு முன்பாக நாடு முழுவதும் ஒரு காணொளி ஒன்று வைரலானது. அதில் ஒரு பெண் புதுச்சேரி அரசு குறித்து, முதல்வர் குறித்தும் புகாரளித்தார். புயல் மற்றும் வெள்ளத்தின் போது புதுச்சேரி அரசு கண்டுகொள்ளாமல் இருந்தது என்று வலியுடனும் வேதனையுடன் அவர் அதை கூறினார். ஆனால் அந்த பெண் கூறியதை முதல்வராக இருந்த நாராயணசாமி தவறாக மொழிப்பெயர்த்தார். நாட்டு மக்களிடமும், கட்சித் தலைவரிடமும் பொயுரைத்தார். மக்கள் பிரச்னையை தவறாக எடுத்துரைத்த இதுபோன்றவர்கள், மக்கள் பிரதிநிதிகளாக இருக்க முடியுமா," என மோதி கேள்வி எழுப்பினார்.
"உச்சநீதிமன்றம் பஞ்சாயத்து தேர்தலை நடத்த உத்தரவிட்டிருந்தது. ஆனால் புதுச்சேரி காங்கிரஸ் அரசு அதை செய்யவில்லை. ஜம்மு காஷ்மீரில் பஞ்சாயத்து தேர்தல் நடத்தப்பட்டது, பெரிய அளவில் மக்கள் வாக்களித்தனர். இதே போன்று குஜராத்தின் நகரப் பகுதியில் தேர்தல் நடைப்பெற்றது. ஜம்மு காஷ்மீர், லடாக், குஜராத்தில் பஞ்சாயத்து தேர்தல் நடத்த முடிகிறது. ஆனால் புதுச்சேரியில் நடத்த முடியவில்லை. இதற்காக மக்கள் அவர்களை தண்டிப்பார்கள்"
காலனி ஆதிக்கத்தின் ஆட்சி போல பிரித்தாளும் கொள்கையை காங்கிரஸ் அரசு பின்பற்றி வருகின்றனர். மக்களை பிரித்து அவர்களிடம் பொய்களை கூறி ஆட்சி செய்வதை காங்கிரஸ் விரும்புகிறது. ஒரு மாநில மக்களை இன்னொரு மாநில மக்களுக்கு எதிராகவும், ஒரு சமுதாயத்தை மற்றொரு சமுதாயத்திற்கு எதிராகவும் திருப்பி விட்டு, அரசியல் செய்கின்றனர். பொய் சொல்வதில் காங்கிரஸ் கட்சிக்கு நிறைய விருதுகளை கொடுக்கலாம்," என்று கூறினார் பிரதமர்.
தொடர்ந்து பேசிய அவர், "மீனவ நலத் துறைக்காக ஒரு அமைச்சகம் அமைக்க வேண்டும் என ஒரு காங்கிரஸ் தலைவர் (ராகுல் காந்தி) இங்கே பிரசாரம் செய்தார். அவர் பேசியது எனக்கு ஆச்சரியத்தை ஏற்படுத்தியது. காரணம், 2019ஆம் ஆண்டிலேயே மீன்வளத்துறைக்கு என தனி அமைச்சகம் ஏற்படுத்தப்பட்டுள்ளது.
இந்தியா முழுவதும் காங்கிரஸ் கட்சியை மக்கள் புறக்கணித்து வருகின்றனர். இந்திய வரலாற்றில் முதன்முறையாக பாராளுமன்றத்தில் காங்கிரஸ் அரசு 100க்கும் குறைவான இடங்களைப் பெற்றுள்ளது. மன்னர் ஆதிக்க குடும்ப தலைமுறை ஆட்சிக் கொள்கையை பாரம்பரியமாக கொண்டுள்ளது," என்று கூறினார்.
"புதுச்சேரி மக்களுக்காக எனது தேர்தல் அறிக்கையை கேட்டால்? புதுச்சேரி அரசை சிறந்த மாநிலமாக மாற்ற விரும்புகிறேன். வர்த்தகம், கல்வி, ஆன்மீகம், சுற்றுலா மையங்களில் புதுச்சேரி சிறந்து இருக்கும் என்பதே என் தேர்தல் அறிக்கை.
புதுச்சேரி இளைஞர்களுக்கு சரியான ஆதரவு தேவை. அதற்காக வேலைவாய்ப்பில், தகவல் தொழில்நுட்பம், மருந்துவம் நெசவு உள்ளிட்ட துறைகளில் மேம்பட வேலைவாய்ப்பு ஏற்படுத்த இருக்கிறது.
கல்வியில் மொழி பிரச்னையாக இருப்பதை பார்க்க முடிகிறது. ஆகவே மருத்துவம் மற்றும் பொறியியல் படிப்பில் உள்ளூர் மொழியில் கற்பதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறோம். இதனால் மாணவர்கள் பயன்பெறுவார்கள்," என்றார்.
"புதுச்சேரியில் உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்தி வருகிறோம். சுற்றுலா பயணிகள் மேலும் இங்கு அதிகளவில் வர இயலும். உலக அளவில் சுற்றுலாத்துறையில் 65வது இடத்திலிருந்து 34வது இடத்திற்கு முன்னேறியுள்ளோம்.
கடல் சார்ந்த துறையை மேம்படுத்துவது அதில் கூட்டுறவு துறையை பலப்படுத்துவது உள்ளிட்டவைகளில் நாம் கவனம் செலுத்த இருக்கிறோம். மீனவர் பொருளாதாரத்தை பலப்படுத்தாமல் சுயசார்பு இந்தியா வலுப்பெறாது. சாகர்மாலா உள்ளிட்ட திட்டங்கள் மூலம் கடற்கரை மற்றும் மீனவ சமுதாயத்தினர் இடையே மாற்றத்தைக் கொண்டுவரமுடியும் . 2014ஆம் ஆண்டை விட 50 சதவீதம் அதிகமாக நிதி ஒதுக்கியுள்ளோம்.
தொழில் கூட்டுறவு நிர்வாகத்தை சரியாக நிர்வகிக்க வில்லை. கூட்டுறவு துறையை துடிப்பு மிக்க துறையாக மாற்றுப்படும், இது புதுச்சேரி மகளிருக்கு பயனுள்ளதாக அமையும்," என பிரதமர் நரேந்திர மோதி தெரிவித்துள்ளார்.
பிற செய்திகள்:
- செய்திகளுக்கு கூகுள் – ஃபேஸ்புக் பணம் செலுத்தும் சட்டம்: இந்தியாவிலும் ஏற்படுமா?
- BBC Indian Sportswoman of the Year 2020: மார்ச் 8இல் வெற்றியாளர் அறிவிப்பு
- பைடன் அரசில் அமெரிக்க வாழ் இந்தியர்கள் நீரா டாண்டன் மற்றும் விவேக் மூர்த்தியின் நியமனத்தில் சிக்கல் - காரணம் என்ன?
- மீண்டும் டிராக்டர் பேரணிக்கு அழைப்பு விடுக்கும் ராகேஷ் திகைத்: என்ன சொல்கிறது அரசு?
- தினகரனை முதலமைச்சராக்க அ.ம.மு.க. தீர்மானம்; சசிகலாவின் நிலைப்பாடு என்ன?
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: