பாலியல் தொல்லை கொடுத்த தந்தைக்கு சாகும்வரை சிறை தண்டனை - எங்கு நடந்தது?

பாலியல் வன்முறை

பட மூலாதாரம், Getty Images

(இன்றைய நாளில் இந்தியாவின் இரு வேறு பகுதிகளில் நடந்த பெண்களுக்கு எதிரான வழக்கு மற்றும் சம்பவத்தின் சுருக்கத்தை இங்கு வழங்குகிறோம்.)

பெற்ற மகள்களுக்கு பாலியல் தொல்லை கொடுத்த தந்தைக்கு சாகும் வரை சிறை தண்டனை விதித்து ராமநாதபுரம் மகளிர் விரைவு நீதிமன்றம் வியாழக்கிழமை தீர்ப்பளித்தது.

ராமநாதபுரம் மாவட்டம் கன்னிராஜபுரத்தைச் சேர்ந்தவர் மாரிமுத்து, இவர் தேனீர் கடையில் டீ மாஸ்டராக வேலை பார்த்து வந்தார். இவரது 10 வயது, 12 வயது மகள்களுக்கு இரவு நேரங்களில் அடிக்கடி பாலியல் தொல்லை கொடுத்து வந்துள்ளார். இது குறித்து போலீஸில் புகார் தெரிவித்தால் கொலை செய்து விடுவதாக மாரிமுத்து அவரது மனைவியை தொடர்ந்து மிரட்டி வந்துள்ளார். இதனால் அவரது மனைவி போலீஸாரிடம் புகார் அளிக்காமல் இருந்து வந்துள்ளார்.

உங்களுக்கு பிடித்த வீராங்கனைக்கு வாக்களிக்க CLICK HERE

இந்நிலையில் கடந்த ஆண்டு ஜனவரி மாதம் 29ஆம் தேதி இரவு குடிபோதையில் வீட்டுக்கு வந்த மாரிமுத்து, தூங்கிக் கொண்டிருந்த தனது மகள்களுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்துள்ளார். இதனால் மகள்கள் இருவரும் கூச்சலிட்டனர். சத்தம் கேட்ட அக்கம் பக்கத்தினர், மாரிமுத்துவிடம் இருந்து மகள்களை மீட்டு உறவினர் வீட்டில் தங்க வைத்துள்ளனர்.

இது குறித்து தகவலறிந்த குழந்தைகள் உதவி அமைப்பினர் (CHILD LINE ) கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் 1ஆம் தேதி கீழக்கரை மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். அதன் பேரில் போலீஸார் வழக்குப் பதிவு செய்து மாரிமுத்துவை கைது செய்தனர்.

இது தொடர்பான ராமநாதபுரம் மகளிர் விரைவு நீதிமன்றத்தில் நடந்த வழக்கில் இறுதி விசாரணை நிறைவடைந்த நிலையில், நீதிபதி சுபத்ரா தீர்ப்பளித்தார். அப்போது அவர், "பெற்ற மகள்கள் என்றும் பார்க்காமல் பாலியல் தொல்லை கொடுத்த மாரிமுத்துவை இயற்கை மரணம் அடையும் வரை சிறையில் அடைக்கவும், ரூ.8 ஆயிரம் அபராதமும் விதிக்கிறேன்," என்று தீர்ப்பளித்தார். பாதிக்கப்பட்ட 2 மகள்களுக்கும் தலா 1.5 லட்சம் ரொக்கத்தை மாரிமுத்து வழங்க வேண்டும் என்றும் நீதிபதி உத்தரவிட்டார்.

உன்னாவில் வயல்வெளியில் இறந்து கிடந்த பதின் வயது தலித் சிறுமிகள்

பாலியல் வன்முறை

பட மூலாதாரம், AFP

உத்தர பிரதேசத்தின் உன்னாவ் மாவட்டத்தில், தங்களின் வயல் வெளியில் 13 மற்றும் 16 வயது தலித் சமூக சிறுமிகள் சடலமாக கிடந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

அதே இடத்தில் ஒரு 17 வயது பெண் பலத்த காயங்களோடு கண்டுபிடிக்கப்பட்டு இருக்கிறார். அவர் தற்போது மிக மோசமான உடல் நலத்தோடு மருத்துவமனையில் இருக்கிறார்.

இவர்கள் அனைவரும் ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவர்கள். 16, 17 வயது சிறுமிகள் இருவரும் சகோதரிகள். 13 வயது சிறுமி அவர்களின் ஒன்று விட்ட சகோதரி.

நேற்று மதியம், கால்நடைகளுக்கு தீவனம் சேகரிக்க வயல் வெளிக்குச் சென்றார்கள். வழக்கமாக ஒரு மணி நேரத்துக்குள் வீடு திரும்பி விடும் சிறுமிகள், நேற்று நீண்ட நேரம் ஆகியும் திரும்பாததால், அவர்களை குடும்பத்தினர் தேடியுள்ளனர்.

இந்த நிலையில், மாலையில் சிறுமிகளின் உடல்கள் அவர்கள் அணிந்திருந்த ஆடைகளாலேயே கை மற்றும் கால்கள் கட்டப்பட்டிருந்த நிலையில் கண்டுபிடிக்கப்பட்டனர். அதில் இருவர் உயிர் பிரிந்திருந்தது.

இந்த சிறுமிகள் விஷத்தால் இறந்திருக்கலாம் என ஒரு மூத்த காவல் துறை அதிகாரி கூறினார்.

"அந்த சிறுமிகளின் வாயில் இருந்து ஏதோ வெள்ளை நிறத்தில் ஒன்று வெளிவந்து கொண்டிருந்தது. அது விஷத்தின் வெளிப்பாடு என மருத்துவர்கள் கூறினார்கள். இந்த சம்பவத்தோடு தொடர்புடைய எல்லோரிடமும் விசாரித்து வருகிறோம்," என காவல் துறை கண்காணிப்பாளர் சுரேஷ் ராவ் ஏ குல்கர்னி தெரிவித்தார்.

2012ஆம் ஆண்டு, டிசம்பரில் இந்திய தலைநகரான டெல்லியில், ஓடும் பேருந்தில் நடந்த கூட்டுப் பாலியல் வன்கொடுமைக்குப் பிறகு, இந்தியாவில் பெண்களுக்கு எதிரான வன்முறைகள் கவனம் பெறத் தொடங்கி இருக்கின்றன.

ஆனால், பெண்களுக்கு எதிரான குற்றங்கள் குறைந்ததாகத் தெரியவில்லை.

பெண்கள் பாலியல் ரீதியிலான வன்முறைகளுக்கு ஆளான விவகாரத்தில், உத்தர பிரதேசத்தின் உன்னாவ் மாவட்டத்தின் பெயர் தொடர்ந்து பத்திரிகை செய்திகளில் வெளிவந்து கொண்டிருக்கிறது.

2019ஆம் ஆண்டில், தன்னை பாலியல் வன்கொடுமை செய்ததாக சாட்சி கூறச் சென்று கொண்டிருந்த பெண் ஒருவர், இதே உன்னாவ் மாவட்டத்தில் எரிக்கப்பட்டார். கடுமையான தீக்காயங்கள் காரணமாக அவர் இறந்து போனார்.

2019ஆம் ஆண்டில், மத்தியில் ஆளும் பாரதிய ஜனதா கட்சியைச் சேர்ந்த குல்தீப் சிங் செங்கர் என்கிற சட்டசபை உறுப்பினர், உன்னாவ் மாவட்டத்தைச் சேர்ந்த ஒரு இளம்பெண்ணை பாலியல் ரீதியாக துன்புறுத்திய குற்றம் நிரூபிக்கப்பட்டு தண்டனை வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

BBC Indian sports woman of the year

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: