You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
நான் தமிழ் பேசும் ஆளுநர், சட்டப்படியே நடப்பேன் - தமிழிசை
(புதுச்சேரியில் இன்றைய நாளில் நடந்த இரு வேறு தலைவர்களின் வருகை தொடர்பான தகவல்களை இங்கே வழங்குகிறோம்.)
தமிழ் பேசும் ஆளுநராக இங்கே வந்திருப்பது அதிக மகிழ்ச்சியளிக்கிறது. அரசியல் சட்டத்திற்கு உட்பட்டு பணியாற்றுவேன் என்று புதுச்சேரி துணைநிலை ஆளுநர் ஆக நியமிக்கப்பட்டுள்ள தமிழிசை சௌந்தர்ராஜன் தெரிவித்துள்ளார்.
புதுச்சேரியில் துணை நிலை ஆளுநராக கடந்த நான்கரை ஆண்டுகளாக கிரண் பேடி பணியாற்றி வந்தார். கடந்த இரண்டு வருடங்களாக மக்கள் நல திட்டங்களை செயல்படுத்த விடாமல் கிரண்பேடி தடுப்பதாக ஆளும் காங்கிரஸ் அரசு பல்வேறு குற்றச்சாட்டுகளை சுமத்தியது. முதல்வர் நாராயணசாமி கிரண் பேடிக்கு எதிராக வீதியில் இறங்கு போராட்டங்களை நடத்தினார்.
இந்த நிலையில் நேற்று புதுச்சேரி துணைநிலை ஆளுநர் பதவியில் இருந்து கிரண்பேடி விடுவிக்கப்பட்டார். அந்த பதவியை மாற்று ஏற்பாடு செய்யும்வரை கூடுதல் பொறுப்பாக தெலங்கானா மாநில ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் கவனிப்பார் என்று குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் உத்தரவிட்டார்.
இதைத்தொடர்ந்து வியாழக்கிழமை காலை 9 மணிக்கு துணைநிலை ஆளுநர் மாளிகையில் தமிழிசை செளந்தர்ராஜன் பதவியேற்கவுள்ளார். இதையொட்டி புதன்கிழமை மாலையில் புதுச்சேரிக்கு வந்த அவரை விமான நிலையத்தில் புதுச்சேரி பாரதிய ஜனதா கட்சி நிர்வாகிகள் வரவேற்றனர்.
பின்னர் தமிழிசை சௌந்தர்ராஜன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர், "புதுச்சேரிக்கு வருவது மகிழ்ச்சி அளிக்கிறது. தெலங்கானா மற்றும் புதுச்சேரி இரண்டும் எனது இரட்டை குழந்தைகள். புதுச்சேரி மக்களுக்காக இங்கே வந்திருக்கிறேன். மக்களுக்கான ஆளுநராக நான் புதுச்சேரியில் இருப்பேன். எப்பொழுதும் சட்ட விதிமுறைகளுக்கு உட்பட்டு தான் நடந்து வருகிறேன், அதில் எந்த மாற்றுக்கருத்தும் கிடையாது. தமிழ் பேசும் ஆளுநராக இங்கே வந்திருப்பது அதிக மகிழ்ச்சியை கொடுக்கிறது," என தெரிவித்தார்.
பின்னர் துணைநிலை ஆளுநர் மாளிகை சென்ற தமிழிசை சௌந்தர்ராஜனை மரியாதை நிமித்தமாக புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி, சபாநாயகர் சிவக்கொழுந்து, அமைச்சர்கள் மற்றும் சட்டமன்ற உறுப்பினர்கள் சந்தித்து வாழ்த்து தெரிவித்தனர்.
மத்திய அரசை எதிர்த்தால் தீவிரவாதியா? மோதி அரசுக்கு ராகுல் காந்தி கேள்வி
யாரெல்லாம் மத்திய அரசை எதிர்த்து நிற்கிறார்களோ, அவர்கள் எல்லாம் குற்றவாளிகள், தேசவிரோதிகள், தீவிரவாதிகள் என்று மத்தியில் ஆட்சியில் உள்ளவர்கள் சொல்கிறார்கள் என்று காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி தெரிவித்தார்.
புதுச்சேரியில் சட்டமன்ற தேர்தல் பிரசார பொதுக் கூட்டத்தில் பங்கேற்க இன்று ராகுல் காந்தி புதுச்சேரி வருகை தந்தார். முதல் கட்டமாக புதுச்சேரி மீனவ மக்களை சந்தித்து அவர்களது குறைகளை அவர் கேட்டறிந்தார். பிறகு புதுச்சேரி அரசு மகளிர் கலைக் கல்லூரியில் மாணவிகளிடம் நேரடியாக ராகுல் கலந்துரையாடினார். இதையடுத்து மாலையில் நடந்த காங்கிரஸ் தேர்தல் பிரசார பொதுக்கூட்டத்தில் அவர் பங்கேற்றார்.
ராகுல்காந்தி தலைமையில் நடைபெற்ற இந்த பொதுக் கூட்டத்தில், புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி, அமைச்சர்கள் மற்றும் சட்டமன்ற உறுப்பினர்கள், தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி உட்பட பல பங்கேற்றனர்.
பொதுக் கூட்டத்தில் பேசிய ராகுல்காந்தி, "புதுச்சேரி சிறிய மாநிலமாக இருக்கலாம். ஆனால் இந்தியாவின் பெரிய மாநிலங்களுக்கு இருக்கக் கூடிய முக்கியத்துவம் புதுச்சேரிக்கு உள்ளது. நாம் இந்தியாவின் ஒரு பகுதி, புதுச்சேரி வெளி நபர்களுக்கு சொந்தமானது இல்லை. யாராவது புதுச்சேரி என்னுடைய சொந்த சொத்து என்று நினைத்தால் அவர்கள் வெகு விரைவிலேயே ஏமாந்து போவார்கள்," என்றார்.
புதுச்சேரியில் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசு கிட்டத்தட்ட ஐந்து ஆண்டுகளாக உள்ளது. இங்கு வாழும் மக்கள் நல்லாட்சியை இந்த அரசால் மட்டுமே வழங்க முடியும் என்று கருதி காங்கிரஸ் தலைமையிலான அரசை தேர்ந்தெடுத்தனர். கடந்த ஐந்து வருடங்களாக இந்த அரசு செயல்பட பிரதமர் மோதி விடவில்லை. இங்கே இருந்த துணை நிலை ஆளுநர், உங்கள் வாக்கை மதிக்க மாட்டேன் என்பவராக ஒவ்வொரு நாளும் தனது நடவடிக்கைகள் மூலம் உணர்த்தி வந்தார். உங்களுடைய கடின உழைப்பை அவர் கருத்தில் கொள்ளவில்லை," என்று ராகுல் கூறினார்.
என்னைப் போன்ற மக்கள் பிரதிநிதிகளுக்கு, நாடாளுமன்றத்தில் பேச அனுமதி இல்லை. மோதி தன்னை இந்த நாட்டின் பிரதமராக நினைக்கவில்லை, தன்னை ஒரு சக்கரவர்த்தியாகவே நினைக்கிறார் என்றார் ராகுல் காந்தி.
"இங்கே துணை ஆளுநராக இருந்தவர் புதுச்சேரியில் பிறக்கவில்லை, வளரவில்லை. ஆனால் புதுச்சேரி மாநில மக்களின் எதிர்காலம் குறித்து முடிவெடுக்கும் அதிகாரத்தை அவருக்கு யார் வழங்கினார்? சிபிஐ, வருவாய் புலனாய்வுத்துறை போன்ற துறைகளின் அதிகாரம் தங்கள் கையில் இருப்பதால் அப்படி செய்கிறார்களா? இதை ஒருபோதும் அனுமதிக்க மாட்டோம்.
மத்தியில் ஆட்சியில் இருப்பவர்கள் புதுச்சேரிக்கு என்ன செய்கிறார்களோ அதைத் தான் இந்தியாவில் உள்ள பிற மாநிலங்களிலும் செய்து வருகிறார்கள். தமிழகத்திற்குச் சென்று தமிழ் பேசக்கூடாது என்கிறார்கள். மேற்கு வங்கத்திற்குச் சென்று வங்க மொழியைப் பேசக் கூடாது என்கிறார்கள். பஞ்சாப் மாநிலத்திற்குச் சென்று அங்குள்ளவர்களை தீவிரவாதிகள் என்று சொல்கின்றனர். யாரெல்லாம் அவர்களை எதிர்த்து நிற்கிறார்களோ, அவர்களை எல்லாம் குற்றவாளிகள், தேச விரோதிகள் என்று சொல்கின்றனர்," என்று ராகுல் கடுமையாகச் சாடினார்.
"நரேந்திர மோதி எதைக் கற்பனை செய்கிறாரோ, அதைத் தான் அவர்கள் இந்தியா என்று அழைக்கின்றனர். நரேந்திர மோதிக்கு என்ன யோசனை வருகிறதோ, அதைத் தான் இந்தியா நினைக்க வேண்டும் என்கின்றனர்.
இந்த தேசத்தில் உள்ள பணக்காரர்களுக்கு உதவ மட்டுமே மோதி நினைக்கிறார். இந்த நாட்டில் நிறைய பணக்காரர்கள் இருக்கின்றனர். ஆனால் 5 அல்லது 6 பேருக்காகே பிரதமர் ஆட்சியை நடத்துகிறார். அவர்கள் எதை கேட்கிறார்களோ அதை உடனே செய்து கொடுக்கிறார். காரணம் அவர்கள் தான் நாட்டின் ஊடகத்தைக் கையில் வைத்திருக்கிறார்கள். அவர்கள் எதை சொல்ல நினைக்கிறார்களே, அதைத் தான் அந்த ஊடகம் சொல்கிறது.
நரேந்திர மோதி பண மதிப்பிழப்பு நடவடிக்கையை இந்தியாவில் திடீரென அறிவித்தார். அதனால் யாராவது பயன்பெற்றது உண்டா சொல்லுங்கள். நீங்கள் வங்கியில் செலுத்திய பணம் அந்த 5 அல்லது 6 பணக்காரர்களுக்குத்தான் சென்றது. லட்சக்கணக்கான அல்லது கோடிக்கணக்கில் அவர்களுக்கு கடன் கொடுக்கப்படுகிறது. ஜி.எஸ்.டி சட்டமும் அந்த பணக்காரர்களுக்கு தான் உதவி செய்தது," என ராகுல் காந்தி குறிப்பிட்டார்.
பிற செய்திகள்:
- ஐபிஎல் 2021: எப்படி நடக்கிறது வீரர்களின் ஏலம்? யாருக்கு எவ்வளவு விலை?
- பிரிட்டன் இளவரசர் ஃபிலிப் மருத்துவமனையில் அனுமதி - என்ன நடந்தது?
- "என் தந்தையை கொன்றவர்களை மன்னித்து விட்டேன்": ராகுல் காந்தி உருக்கம்
- எம்.ஜே. அக்பரின் அவதூறு வழக்கு: பாலியல் புகார் சுமத்திய பிரியா ரமணியை விடுவித்தது நீதிமன்றம்
- #MeToo பிரியா ரமணி: தீர்ப்பை கொண்டாடும் பெண் உரிமை செயல்பாட்டாளர்கள்
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: