You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
எம்.ஜே. அக்பரின் அவதூறு வழக்கில் இருந்து பிரியா ரமணி விடுதலை - டெல்லி நீதிமன்ற தீர்ப்பின் முழு விவரம்
இந்திய வெளியுறவுத்துறை முன்னாள் இணை அமைச்சரும் பத்திரிகையாளருமான எம்.ஜே. அக்பர் தன் மீது பாலியல் புகார் சுமத்திய பத்திரிகையாளர் பிரியா ரமணிக்கு எதிராக தொடர்ந்த அவதூறு வழக்கில் அந்த பெண் பத்திரிகையாளரை டெல்லி நீதிமன்றம் விடுவித்திருக்கிறது.
இந்த வழக்கில் தனக்கு சாதகமாக வந்த தீர்ப்புக்காகவும் தனக்காக சாட்சி சொல்ல முன்வந்த அனைவருக்காகவும் நன்றி தெரிவித்துக் கொள்வதாக பிரியா ரமணி தெரிவித்தார்.
"பாலியல் தொந்தரவுக்கு ஆளானதாக புகார் தெரிவித்த நானே குற்றம்சாட்டப்பட்டு நீதிமன்றத்தில் நிறுத்தப்பட்டேன். இந்த தீர்ப்பு, பாலியல் துன்புறுத்தல்களுக்கு ஆளானவர்கள் வெளிப்படையாக பேசுவதற்கான ஊக்கத்தை தரும் என நம்புகிறேன்," என்று அவர் கூறினார்.
அவரது சார்பில் ஆஜரான வழக்கறிஞர் ரெபேக்கா ஜான், "அதிகாரத்தில் உள்ளவர்களுக்கும் செல்வாக்கு படைத்தவர்களுக்கும் எதிராக வழக்காடும்போது பல்வேறு சவால்களை பாதிக்கப்பட்டவர்கள் எதிர்கொள்ள நேரிடும். அது எம்.ஜே. அக்பருக்கு எதிரான இந்த வழக்கிலும் நடந்தது. ஆனாலும் அதையும் மீறி இந்த வழக்கில் நியாயம் கிடைத்துள்ளது. எனது வழக்கறிஞர் தொழிலில் இதை மிகப்பெரிய வழக்காக கருதுகிறேன்," என்று கூறினார்.
முன்னதாக இந்த வழக்கை விசாரித்த தலைமை பெருநகர நடுவர் நீதிமன்ற கூடுதல் நீதிபதி ரவீந்திரா குமார் பாண்டே புதன்கிழமை பிற்பகலில் தீர்ப்பு வழங்கினார்.
இதையொட்டி வழக்கு தொடர்ந்த எம்.ஜே. அக்பர், குற்றம்சாட்டப்பட்ட பிரியா ரமணி ஆகியோர் ரூஸ் அவென்யூவில் உள்ள மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் ஆஜராகியிருந்தனர்.
இதையடுத்து கூடுதல் நீதிபதி ரவீந்திரா குமார் பாண்டே "ஒருவருடைய மதிப்பை விலையாகக் கொடுத்து இன்னொருவரின் மதிப்பை பாதுகாக்க முடியாது. பாலியல் தொந்தரவு என்பது சுய மதிப்பையும் தன்னம்பிக்கையையும் குலைக்கக் கூடியது," என்று குறிப்பிட்டார்.
"பாலியல் தொந்தரவு மற்றும் துன்புறுத்தலால் பாதிப்புக்குள்ளானவரின் தாக்கத்தை சமூகம் புரிந்து கொள்ள வேண்டும். பல தசாப்தங்களுக்குப் பிறகும் தனது குறைகளை முன்வைக்க பெண்ணுக்கு உரிமை உண்டு."
"பணியிடத்தில் பாலியல் துன்புறுத்தல் தொடர்பான விசாகா வழிகாட்டுதல்களை 1997ஆம் ஆண்டில் தான் உச்சநீதிமன்றம் அறிவித்தது. அத்தகைய வாய்ப்புகள் சம்பவம் நடந்ததாக கூறப்பட்ட காலத்தில் நடைமுறையில் இல்லை. பணியிடத்தில் முறையான துஷ்பிரயோகம் நடந்து வருவதை இந்த நீதிமன்றம் கவனத்தில் எடுத்துக் கொள்கிறது," என்று நீதிபதி குறிப்பிட்டார்.
தொடர்ந்து தீர்ப்பை வாசித்த நீதிபதி, "பாலியல் தொந்தரவால் பாதிக்கப்பட்டவர், எத்தனை தசாப்தங்களுக்குப் பிறகும் தனக்கு நேர்ந்த கொடுமை குறித்த புகாரை பதிவு செய்ய உரிமை உண்டு. இந்த வழக்கில் பிரியா ரமணி அவதூறு பரப்பியதாக சுமத்திய குற்றச்சாட்டுகளை மனுதாரர் (எம்.ஜே. அக்பர்) நிரூபிக்கவில்லை," என்று தெரிவித்தார்.
"சமூகத்தில் உயர்ந்த அந்தஸ்தில் ஒருவர் இருப்பதை வைத்து அவர் பாலியல் தொந்தரவு செய்ய மாட்டார் என கூறி விட முடியாது. இந்த வழக்கின் தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்ய இரு தரப்புக்கும் உரிமை உள்ளது," என்றும் தீர்ப்பில் நீதிபதி ரவீந்திரா குமார் பாண்டே குறிப்பிட்டார்.
"பாலியல் மற்றும் துன்புறுத்தலால் ஏற்படும் தாக்கத்தை இந்த சமூகம் புரிந்து கொள்ள வேண்டும். அக்பர் புகழ்பெற்ற மனிதராக இருந்தபோதிலும், சமூக அந்தஸ்துள்ள ஒரு மனிதர் பாலியல் துன்புறுத்தலில் ஈடுபட மாட்டார் என்று கூற முடியாது."
"பல தசாப்தங்களுக்குப் பிறகும் தனது புகாரை முன்வைக்க பெண்ணுக்கு உரிமை உண்டு."
"1997 ஆம் ஆண்டில் உச்சநீதிமன்றம் முன்வைத்த, பணியிடத்தில் பாலியல் துன்புறுத்தல் தொடர்பான விசாகா வழிகாட்டுதல்கள் சம்பவத்தின் போது நடைமுறையில் இல்லை என்பதை சுட்டிக்காட்டிய நீதிபதி, பணியிடத்தில் முறையான துஷ்பிரயோகம் செய்யப்படும் நிகழ்வுகளை இந்த நீதிமன்றம் கவனத்தில் எடுத்துக்கொள்கிறது."
ராமாயணத்தை மேற்கோள் காட்டிய நீதிபதி
"சமூகத்தில் உயர்ந்த அந்தஸ்தில் ஒருவர் இருப்பதை வைத்து அவர் பாலியல் தொந்தரவு செய்ய மாட்டார் என கூறி விட முடியாது. இந்த வழக்கின் தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்ய இரு தரப்புக்கும் உரிமை உள்ளது. மேல்முறையீடு செய்ய விரும்பினால், பிரியா ரமணி ஜாமீன் மனு தாக்கல் செய்யலாம்" என்றும் தீர்ப்பில் நீதிபதி ரவீந்திரா குமார் பாண்டே குறிப்பிட்டார்.
1993ஆம் ஆண்டில் பிரியா ரமணி தனக்கு நேர்ந்ததாக கூறப்படும் பாலியல் புகாரை பதிவு செய்ய தற்போதுள்ள வசதிகள் போல அப்போது இருந்திருக்கவில்லை என்று குறிப்பிட்டு, ராமாயணத்தில் சிதையை காக்க வந்த ஜடாயுவின் தலையீட்டை நீதிபதி ரவீந்திரா குமார் பாண்டே தனது தீர்ப்பின் வரிகளில் மேற்கோள் காட்டியிருந்தார்.
முன்னதாக, வழக்கின் இறுதி வாதத்தை முன்வைத்த பிரியா ரமணி சார்பில் ஆஜரான வழக்கறிஞர் ரெபேக்கா ஜான், "எனது கட்சிக்காரரை வழக்கில் இருந்து விடுவிக்க வேண்டும்," என்று வலியுறுத்தினார். எம்.ஜே. அக்பர் சார்பில் ஆஜரான வழக்கறிஞர் கீதா லூத்ரா, "பிரியா ரமணியின் ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளால் எனது கட்சிக்காரரின் கெளரவம் மோசமாக பாதிக்கப்பட்டுள்ளது," என்று வாதிட்டார்.
மூன்று ஆண்டுகளுக்கு முன்பு, எம்.ஜே. அக்பருக்கு எதிராக பாலியல் புகாரை பிரியா ரமணி சுமத்தியிருந்த நிலையில், அவரது ட்விட்டர் கணக்கை நீதிமன்ற உத்தரவின்படி அந்நிறுவனம் முடக்கியது.
பிற செய்திகள்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: