You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
டெல்லி விவசாயிகள் போராட்டம்: குடியரசு நாள் டிராக்டர் பேரணி தொடர்பாக தீப் சித்து கைது
விவசாயிகள் போராட்டத்தின் ஒரு பகுதியாக நடந்த டிராக்டர் பேரணியின்போது, டெல்லி செங்கோட்டையில் ஏற்பட்ட வன்முறை தொடர்பாக நடிகர் தீப் சித்து கைது செய்யப்பட்டுள்ளதாக டெல்லி காவல்துறை தெரிவித்துள்ளது.
தேடப்பட்டு வந்த பஞ்சாபி நடிகர் தீப் சித்து பஞ்சாப் மாநிலம் சிர்க்காபூரில் திங்கள் இரவு கைது செய்யப்பட்டார் என்கிறது டெல்லி காவல்துறை.
இவர் குறித்த தகவல்களுக்கு ஒரு லட்சம் ரூபாய் சன்மானம் வழங்கப்படும் என்று டெல்லி காவல் துறை ஏற்கனவே அறிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
இந்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா மற்றும் பிரதமர் நரேந்திர மோதியுடன் தீப் சித்து எடுத்த புகைப்படங்களை அடிப்படையாகக் கொண்டு, இவர் பாஜக மற்றும் ஆர்.எஸ்.எஸ்-ன் நோக்கத்தை விவசாயிகள் போராட்டத்தில் முன்னெடுத்து செல்வதாகவும் குற்றம் சாட்டப்பட்டது .
ஆனால் அவர் இந்தக் குற்றச்சாட்டுகளை மீண்டும் மீண்டும் மறுத்து வந்தார்.
குடியரசு நாள் டிராக்டர் பேரணி
இந்திய அரசின் புதிய வேளாண் சட்டங்களை எதிர்த்துப் போராட்டம் நடத்தி வரும் விவசாய அமைப்புகள் இந்திய குடியரசு நாளான ஜனவரி 26-ஆம் தேதி டெல்லியில் டிராக்டர் பேரணி ஒன்றை அறிவித்திருந்தன.
அந்தப் பேரணியின்போது செங்கோட்டையில் வன்முறைச் சம்பவங்கள் நிகழ்ந்தன. அப்போது சீக்கிய மதக் கொடி செங்கோட்டையில் ஏற்றப்பட்டது.
அதன் காணொளிகள் இந்திய ஊடகங்கள் மற்றும் சமூக வலைத்தளங்களில் மிகவும் பரவலாக பகிரப்பட்டன.
இந்த நிகழ்வில் குழப்பத்தைத் தூண்டியதாகவும், வன்முறைக்குக் காரணமாக இருந்ததாகவும் தீப் சித்து மற்றும் ஏழு பேர் மீது வழக்குப்பதிவு செய்திருந்தது டெல்லி காவல்துறை.
தீப் சித்து மற்றும் பிற மூவர் குறித்த தகவல் தருவோருக்கு, ஒரு குற்றவாளிக்கு தலா ஒரு லட்சம் ரூபாய் வீதம் சன்மானம் வழங்கப்படும் என்றும் காவல்துறை தெரிவித்திருந்தது.
வேறு நால்வர் தொடர்பான தகவல்களுக்கு ஒரு குற்றவாளிக்கு தலா 50,000 ரூபாய் வீதம் சன்மானம் வழங்கப்படும் என்றும் கூறிய டெல்லி காவல்துறை எட்டு பேர் குறித்த தகவலுக்கு மொத்தம் ஆறு லட்சம் ரூபாய் சன்மானம் அறிவித்திருந்தது.
பிற செய்திகள்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: