You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
சசிகலா வேறு காருக்கு மாற தமிழ்நாடு காவல்துறை கெடுபிடி காரணமா? - டி.டி.வி. தினகரன் பதில்
- எழுதியவர், மு. ஹரிஹரன்
- பதவி, பிபிசி தமிழுக்காக
பெங்களூருவில் இருந்து தமிழகத்திற்கு அதிமுக கொடி பொருத்தப்பட்டிருந்த காரில் வந்த சசிகலா வேறு காருக்கு மாறியது கவனத்திற்கு உள்ளானது.
தமிழக காவல்துறையின் கெடுபிடிக்கு உள்ளாக நேரிடும் என்பதால் சசிகலா வேறு காருக்கு மாறவில்லை என்றும் சசிகலா பெங்களூருவிலிருந்து பயணித்து தமிழகம் நோக்கி வந்த காரில் குளிர்சாதன வசதியில் பழுது ஏற்பட்டதால்தான் மாறினார் என்றும் அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் பொதுச் செயலாளர் டி.டி.வி. தினகரன் பிபிசி தமிழிடம் தெரிவித்துள்ளார்.
சொத்துக் குவிப்பு வழக்கில் தண்டனை காலம் முடிந்து விடுதலை ஆனாலும், கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டு முதலில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று, பிறகு விடுதி ஒன்றில் தனிமைப்படுத்தி கொண்டிருந்தார் சசிகலா.
சசிகலா பெங்களூருவிலிருந்து சென்னை நோக்கி இன்று புறப்பட்டார். காலை 10.30 மணியளவில் தமிழக எல்லைக்குள் வந்த அவருக்கு, அவரது ஆதரவாளர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.
'காகம் உட்கார பனம்பழம் விழுந்த கதை'
வண்டியில் ஏசி பழுதடைந்ததால் ஜன்னல் கண்ணாடியை இறக்கிவிட்டு பயணிக்கலாம்; ஆனால், கொரோனா தொற்றுக்கு சிகிச்சை முடிந்து சசிகலா பயணம் மேற்கொள்கிறார் என்பதால் ஏற்கனவே பயணித்து வந்த வாகனத்தின் ஜன்னல் கண்ணாடியை இறக்கி விடாமல் கிருஷ்ணகிரி மாவட்டத்தைச் சேர்ந்த அதிமுக நிர்வாகி ஒருவரின் காருக்கு மாறி பயணம் மேற்கொண்டதாக தினகரன் கூறினார்.
தாம் வந்த வாகனம் சசிகலாவின் வாகனத்துக்கு பல வாகனங்களுக்கு பின்னால் இருந்த்தால், அவர் தமது வாகனத்திற்கு மாறவில்லை என்று அவர் தெரிவித்தார்.
அதிமுக கொடியைப் பயன்படுத்துவதால் காவல்துறை மேற்கொள்ளும் கெடுபிடி காரணமாக சசிகலா வேறு வண்டிக்கு மாறினார் என்று கூறுவது 'காகம் உட்கார பனம்பழம் விழுந்த கதை' போன்றது என்றும் கூறினார் டிடிவி தினகரன்.
ஜெயலலிதாவின் மறைவுக்கு பின்பு அதிமுகவின் பொதுச் செயலாளராக தேர்ந்தெடுக்கப்பட்ட சசிகலா, சொத்துக்குவிப்பு வழக்கில் தண்டனை பெற்று சிறைக்கு சென்ற பின்னர் அப்பதவியிலிருந்து அதிமுகவினரால் நீக்கப்பட்டார்.
ஓ.பன்னீர்செல்வம் ஒருங்கிணைப்பாளராகவும், எடப்பாடி பழனிசாமி இணை ஒருங்கிணைப்பாளராகவும் இருக்கும் அதிமுக அணிக்கே கட்சிப் பெயர் மற்றும் சின்னம் அதிகாரப்பூர்வமாக சொந்தமென்று உச்ச நீதிமன்றம் கூறியுள்ளதால் அதிமுகவின் கொடியை சசிகலா பயன்படுத்துவதற்கும் தமிழக அதிமுக அமைச்சர்கள் கடுமையாக எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.
சசிகலா அதிமுக தலைமை அலுவலகத்திற்கு வர முயன்றால் அவர் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
எடப்பாடி பழனிசாமி, ஓ. பன்னீர்செல்வம் தரப்பினர் சசிகலா அதிமுகவில் மீண்டும் சேர்த்துக்கொள்ளப்பட மாட்டார் என்று தொடர்ந்து கூறி வருகின்றனர். ஆனால், அவர்தான் இன்னும் கட்சியின் பொதுச் செயலாளர் என சசிகலா மற்றும் தினகரன் ஆதரவாளர்கள் கூறிவருகின்றனர்.
"தற்போது கிருஷ்ணகிரி மாவட்டம் சூளகிரி ஒன்றிய அதிமுக இளைஞரணி செயலாளராக இருப்பவரின் காருக்குத்தான் சசிகலா மாறியுள்ளார். தங்களது பொதுச் செயலாளரை வரவேற்க அதிமுக தொண்டர்கள் வந்துள்ளனர்," என்று டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்.
பிற செய்திகள்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: