You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
சசிகலா தமிழக எல்லைக்குள் நுழைந்தார் - காரில் அதிமுக கொடி; உற்சாக வரவேற்பு
சொத்துக் குவிப்பு வழக்கில் தண்டனை காலம் முடிந்து விடுதலை ஆனாலும், கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டு முதலில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று, பிறகு விடுதி ஒன்றில் தனிமைப்படுத்தி கொண்டிருந்த சசிகலா, பெங்களூருவிலிருந்து சென்னை நோக்கி புறப்பட்டார்.
இன்று காலை 10.30 மணியளவில் தமிழக எல்லைக்குள் நுழைந்த அவருக்கு, ஆயிரக்கணக்கான அவரது ஆதரவாளர்கள் உற்சாக வரவேற்பு அளித்து வருகின்றனர்.
அதிமுகவின் எதிர்ப்பையும் மீறி, சசிகலாவின் காரில் அந்த கட்சியின் கொடி பொருத்தப்பட்டுள்ளது.
தமிழக - கர்நாடக எல்லையில் சசிகலா நுழையும்போது அதிமுக கொடியை பயன்படுத்த வேண்டாம் என காவல்துறை வலியுறுத்தியும் சசிகலா பயணித்த வாகனத்திலிருந்து கொடி அகற்றப்படவில்லை.
மேலும், தமிழக எல்லைக்குள் நுழைந்ததும் பெங்களூரில் இருந்து பயணித்த காரில் இருந்து இறங்கி சசிகலா, மற்றொரு காரில் ஏறி தமிழக எல்லைக்குள் பயணிக்கத் தொடங்கினார்.
தமிழக எல்லையில் நுழைந்ததும் அதிமுக கொடி பொருத்தப்பட்ட காரில் பயணித்தால் காவல்துறையின் கெடுபிடிக்கு உள்ளாக நேரிடும் என்பதால் சசிகலா வேறு காருக்கு மாறினாரா என்று அமமுகவின் பொதுச் செயலாளர் டி.டி.வி. தினகரனிடம் பிபிசி தமிழ் செய்தியாளர் மு. ஹரிஹரன் கேட்டபோது, "சசிகலா பெங்களூருவிலிருந்து கிளம்பிய காரின் குளிர்சாதன வசதியில் பிரச்சனை ஏற்பட்டதுவிட்டது. எனவே, தன்னை வரவேற்க வந்திருந்த கட்சி நிர்வாகி ஒருவரின் காருக்கு மாறி, அதில் சசிகலா சென்று கொண்டிருக்கிறார். அவரது கார் சரிசெய்யப்பட்டதும் அதில் பயணத்தை மேற்கொள்வார்" என்று கூறினார்.
சசிகலாவோடு டி.டி.வி. தினகரன் மற்றும் திவாகரனின் மகன் ஜெய் ஆனந்த் ஆகியோர் உள்ளனர். சுமார் பத்து வாகனங்கள் சசிகலா வரும் வாகனத்துடன் வந்து கொண்டிருக்கின்றன.
இந்த நிலையில், பெங்களூரில் இருந்து தமிழகம் வரும் சசிகலாவிற்கு வரவேற்பளிக்கவும் பேனர்கள் வைக்கவும் தமிழக - கர்நாடக எல்லை பகுதியான அத்திப்பள்ளியில் அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.
இதனால் அத்திப்பள்ளி அடுத்துள்ள ஜூஜூவாடி பகுதியில் சசிகலாவின் ஆதரவாளர்கள் மற்றும் அமமுக தொண்டர்கள் பலரும் குவிந்துள்ளனர். மேலும், சாலையின் நடுவே வாழை மரங்கள், கட்சிக்கொடிகள், சாலையோரங்களில் பதாகைகள் வைக்கப்பட்டுள்ளன. செண்டைமேள இசையோடு சசிகலாவின் வருகைக்காக தொண்டர்கள் காத்திருக்கின்றனர் என்று அங்குள்ள பிபிசி தமிழின் செய்தியாளர் மு. ஹரிஹரன் கூறுகிறார்.
"எங்களுக்கு பயமில்லை"
முன்னதாக, அதிமுக முன்னாள் பொது செயலாளர் சசிகலா, இன்று (பிப்ரவரி 8) சென்னை வருவதை ஒட்டி, ஜெயலலிதா நினைவிடம், போயஸ் கார்டன் மற்றும் அதிமுக தலைமை அலுவலகம் ஆகிய இடங்களில் காவல்துறையின் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.
கடந்த ஒரு வார காலத்தில் அதிமுகவின் மூத்த அமைச்சர்கள் இரண்டு முறை சசிகலா மற்றும் தினகரன் ஆதரவாளர்களுக்கு எதிராக, தமிழக காவல் துறை தலைவரிடம் இரண்டு முறை புகார் அளித்துள்ளனர்.
சசிகலா அதிமுக கட்சி அலுவலகத்திற்குள் நுழைந்தால் அவர் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என கூறியுள்ள அதிமுக அமைச்சர் ஜெயக்குமார், சசிகலாவின் வருகையால் அதிமுகவில் எந்த மாற்றமும் நிகழாது என தெரிவித்துள்ளார்.
"அதிமுக மிகப்பெரிய இயக்கம். கொசு, ஈக்கெல்லாம் பயப்படுபவர்கள் நாங்கள் கிடையாது. அவரது வருகையால் எந்த மாற்றமும் ஏற்படப்போவதில்லை,'' என அவர் ஊடகங்களிடம் தெரிவித்தார்.
விடுதலையும், கொரோனா தொற்றும்
சொத்துக் குவிப்பு வழக்கில் கடந்த பிப்ரவரி 2017-ல் உச்ச நீதிமன்றத் தீர்ப்பின் படி கைதான சசிசகலா கர்நாடகத்திலுள்ள பரப்பன அக்ரஹாரா சிறையில் அடைக்கப்பட்டார்.
நான்கு ஆண்டு தண்டனைக் காலம் முடிந்து, அபராதத் தொகையான 10 கோடி ரூபாயையும் செலுத்தியப் பின்னர், கடந்த ஜனவரி 27, 2021 புதன்கிழமை விடுதலை செய்யப்பட்டார்.
ஆனால் விடுதலையாவதற்கு சில தினங்களுக்கு முன், சசிகலாவின் உடல் நிலை மோசமானதால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
அவருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டு, பெங்களூரு விக்டோரியா அரசு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.
இதையடுத்து, கடந்த ஜனவரி 31ஆம் தேதி சிகிச்சை நிறைவடைந்து, மருத்துவமனையிலிருந்து வெளியேறிய சசிகலா பெங்களூருவிலுள்ள விடுதி ஒன்றில் மருத்துவர்கள் ஆலோசனைப்படி மேலும் ஒரு வார காலத்திற்கு தனிமைப்படுத்திக்கொண்டார்.
அ.தி.மு.க-வின் பொதுச் செயலளாளராக பதவியில் இருந்த சசிகலா, கடந்த ஆகஸ்ட் 2017-ல் பொதுச் செயலாளர் பதவியில் இருந்து நீக்கப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும், அவரது நெருங்கிய உறவினரான டி.டி.வி. தினகரன், அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம் (அ.ம.மு.க) என்ற கட்சியை தனியே நடத்தி வருகிறார்.
பிற செய்திகள்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: