நாராயணசாமி vs நமச்சிவாயம்: பாஜகவில் சேர்ந்த புதுச்சேரி காங்கிரஸ் முன்னாள் தலைவர் நமச்சிவாயம்

தமிழக, இந்திய மற்றும் உலக அளவிலான செய்திகளை நேயர்கள் இந்த பக்கத்தில் தெரிந்து கொள்ளலாம்.

புதுச்சேரி முன்னாள் அமைச்சர் நமச்சிவாயம் மற்றும் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் தீப்பாய்ந்தான் இருவரும் டெல்லியில் இன்று‌ (வியாழக்கிழமை) பாரதிய ஜனதா கட்சியில் இணைந்தனர்.

இவர்கள் கடந்த திங்கட்கிழமை அன்று அவர்களது சட்டமன்ற உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்திருந்தனர்.

இதனிடையே நமச்சிவாயம் அவரது ஆதரவாளர்களின் விருப்பத்திற்கு இணங்க அடுத்தக்கட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என தெரிவித்திருந்தார்.

முன்னதாக, புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி தன்னை ஓரம் கட்டுவதாகவும், மத்திய அரசு மற்றும் கிரண் பேடியுடன் மோதல் போக்கை கடைப்பிடித்து வந்த காரணத்தினால் தன்னை சார்ந்தவர்களுக்கும், தொகுதி மக்களுக்கும் எதுவுமே செய்ய முடியவில்லை என்றும் கூறி தனது சட்டமன்ற உறுப்பினர் பதவியை நமச்சிவாயம் ராஜினாமா செய்வதாக நமச்சிவாயம் கூறியிருந்தார்.

புதுச்சேரியில் காங்கிரஸ் கட்சி ஆட்சியில் இருந்தபோது கடந்த 2001ஆம் ஆண்டிலிருந்து மூன்று முறை அமைச்சராகவும், நான்கு முறை சட்டமன்ற உறுப்பினராகவும் நமச்சிவாயம் பதவி வகித்துள்ளார்.

இதனிடையே கடந்த 2015ஆம் ஆண்டு புதுவை காங்கிரஸ் தலைவராகப் பொறுப்பேற்றார். பின்னர் 2016ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில் நமச்சிவாயம்‌ தலைமையில் தேர்தலை எதிர்கொண்ட காங்கிரஸ் அமோக வெற்றி பெற்றது.

அதன் பிறகு புதுச்சேரி முதல்வராக நமச்சிவாயம் தேர்வு செய்யப்படுவார் என்று பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட நிலையில், காங்கிரஸ் தலைமை நாராயணசாமியை முதல்வராக தேர்வு செய்தது.

அதிலிருந்து பல்வேறு காலகட்டங்களில் முதல்வர் நாராயணசாமிக்கு எதிராக தனது அதிருப்தியை நமச்சிவாயம் வெளிப்படுத்தி வந்தார்.

அர்ஜுன மூர்த்திபுதிய கட்சி : 'ரஜினியின் அறிவிப்பின் அடிப்படையில் அமையவில்லை'

விரைவில் அரசியல் கட்சி தொடங்கவுள்ளதாக தெரிவித்துள்ளார் அர்ஜுன மூர்த்தி.

இன்று செய்தியாளர்களை சந்தித்த அவர், புதிய சித்தாதங்களுடன் தான் விரைவில் கட்சி ஒன்றை தொடங்கவுள்ளதாகவும், அது வரவிருக்கும் சட்டமன்ற தேர்தலில் போட்டியிடும் என்றும் தெரிவித்தார்.

அது பாஜகவின் சித்தாந்தத்திலிருந்து வேறுபட்டதாக இருக்கும் எனவும் அவர் தெரிவித்தார்.

ரஜினிகாந்த் தொடங்கவிருப்பதாக சொன்ன கட்சி செயல்திட்டத்தின் அடிப்படையில் இந்த புதிய கட்சி அமையுமா என்று கேட்டதற்கு, "இந்த புதிய கட்சி அதனுடைய தொடர்ச்சி என்று சொல்ல முடியாது. ஏனென்றால் அவரின் சித்தாந்தம் அவரை சார்ந்தது. அதில் கற்றுக் கொண்டதுதான் அதிகம். அதை எங்கேயாவது பயன்படுத்தாலேமே தவிர அதற்கு மாற்றாக இருக்க முடியாது," என்று தெரிவித்தார்.

இந்நிலையில் நேற்று அறிக்கை ஒன்றை வெளியிட்டிருந்த அவர், "சூப்பர் ஸ்டார் அவர்களின் நல்ல எண்ணம், நல்ல மனது, நம் தமிழகத்தின் மீது கொண்ட அக்கறை நிறைவேறும் என நம்புங்கள்,"

ரஜினிகாந்த் கட்சி தொடங்குவது தொடர்பான அறிவிப்பை அறிவித்தபோது, அவருடன் இருந்த அர்ஜுனமூர்த்தியை தமது கட்சி தொடக்கப் பணிகளுக்கான தலைமை ஒருங்கிணைப்பாளராக நியமிப்பதாக தெரிவித்திருந்தார் இவர் பாஜகவின் முன்னாள் அறிவுசார் பிரிவு தலைவராக இருந்தவர்.

ஜெயலலிதாவின் நினைவில்லம், சிலை திறப்பு

மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதா வசித்துவந்த 'வேதா நிலையம்' நினைவில்லமாக்கப்பட்டு, இன்று திறந்துவைக்கப்பட்டுள்ளது. ஜெயலலிதாவின் உருவச் சிலையையும் முதலமைச்சர் எடப்பாடி கே. பழனிசாமி திறந்துவைத்தார்.

ஜெயலலிதாவின் நினைவு இல்லமாக மாற்றப்பட்டுள்ள 'வேதா நிலையம்' இல்லத்தை முதலமைச்சர் திறந்து வைக்கலாம்; ஆனால், பொதுமக்களை அனுமதிக்கக்கூடாது என சென்னை உயர் நீதிமன்றம் புதன்கிழமையன்று உத்தரவிட்டிருந்த நிலையில், வியாழக்கிழமையன்று காலை 10.30 மணியளவில் போயஸ் கார்டனுக்கு வந்த முதலமைச்சர் கே. பழனிச்சாமி முதலில் இது தொடர்பான கல்வெட்டைத் திறந்துவைத்தார்.

பிறகு வளாகத்திற்குள் சென்று அங்கு வைக்கப்பட்டிருந்த ஜெயலலிதாவின் உருவப்படத்திற்கு மலரஞ்சலி செலுத்தியதோடு, குத்துவிளக்கையும் முதலமைச்சர் ஏற்றினார். பொதுமக்கள் யாரையும் உள்ளே அனுமதிக்கக்கூடாது என சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டிருப்பதால் வீட்டின் உள்ளே யாரும் அனுமதிக்கப்படவில்லை.

இந்த நிகழ்ச்சியில் கலந்துகொள்வதற்காக ஏராளமான தொண்டர்கள் போயஸ் கார்டன் பகுதியில் குவிந்தனர்.

இந்த நிகழ்ச்சிக்குப் பிறகு, மெரீனா கடற்கரையை ஒட்டி அமைந்திருக்கும் காமராஜர் சாலையில் உள்ள உயர்கல்வி மன்ற வளாகத்திற்கு ஜெயலலிதா வளாகம் என்று பெயர் சூட்டப்பட்டதோடு, அங்கு அமைக்கப்பட்டிருந்த 9 அடி உயரம் கொண்ட ஜெயலலிதாவின் வெண்கல சிலையையும் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி திறந்து வைத்தார்.

இந்த விழாவில் பேசிய முதலமைச்சர் பழனிச்சாமி, ஜெயலலிதாவின் பிறந்தநாளான பிப்ரவரி 24ம் தேதி அரசு விழாவாக கொண்டாடப்படும் என்றும் உயர் கல்வி வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள வெண்கலச் சிலைக்கு ஆண்டு தோறும் மலர் தூவி மரியாதை செலுத்தப்படும் என்றும் அறிவித்தார்.

மறைந்த முதலமைச்சர் ஜெ. ஜெயலலிதா போயஸ் கார்டனில் உள்ள வேதா நிலையம் என்ற வீட்டில் வசித்துவந்தார். அவர் கடந்த 2016ஆம் ஆண்டு டிசம்பரில் மறைந்துவிட்ட நிலையில் அந்த வீட்டை நினைவில்லமாக்க தமிழக அரசு முடிவுசெய்தது. இதற்கான அறிவிப்பு 2017ல் வெளியிடப்பட்டது.

இதற்குப் பிறகு 2020ஆம் ஆண்டு மே மாதம் இதற்கான அவசரச் சட்டம் பிறப்பிக்கப்பட்டது. பிறகு இது தொடர்பான பணிகள் நடந்துமுடிந்த நிலையில், நினைவில்லம் ஜனவரி 28ஆம் தேதியன்று - வியாழக்கிழமை - திறக்கப்படும் என அறிவிக்கப்பட்டது.

இந்த நிலையில், ஜெயலலிதாவின் வேதா நிலையம் தொடர்பாக தாங்கள் தொடர்ந்திருக்கும் இரண்டு வழக்குகளும் முடிவுக்குவரும்வரை நினைவில்லத்தைத் திறக்க அனுமதிக்கக்கூடாது என ஜெயலலிதாவின் அண்ணன் மகன் தீபக்கும் மகள் தீபாவும் சென்னை உயர் நீதிமன்றத்தில் ரிட் மனு ஒன்றைத் தாக்கல் செய்தனர்.

அந்த வழக்கில் தீர்ப்பளித்த சென்னை உயர்நீதிமன்றம் ஜெயலலிதாவின் நினைவில்லத்தை திறக்கலாம்; ஆனால், பொது மக்களை உள்ளே அனுமதிக்கக்கூடாது என உத்தரவிட்டது. சென்னை உயர் நீதிமன்றத்தின் இந்த உத்தரவை எதிர்த்து தமிழக அரசு உடனடியாக மேல் முறையீடு செய்தது. அந்த வழக்கு வெள்ளிக்கிழமையன்று விசாரணைக்கு வரவுள்ளது.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: