You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
ஜெயலலிதா நினைவிடத்தை திறந்து வைத்த எடப்பாடி பழனிசாமி: எதற்கு எவ்வளவு பணம்? சிறப்புகள் என்னென்ன?
மறைந்த தமிழக முதலமைச்சர் ஜெயலலிதாவின் நினைவிடம் சுமார் 80 கோடி ரூபாய் மதிப்பில் கட்டப்பட்டு திறக்கப்பட்டுள்ளது. இதன் சிறப்புகள் என்ன?
மறைந்த தமிழக முதலமைச்சர் ஜெ. ஜெயலலிதாவின் நினைவிடம் புதன்கிழமைன்று காலையில் துணை முதல்வர் ஓ. பன்னீர்செல்வம் முன்னிலையில் தமிழக முதலமைச்சர் எடப்பாடி கே. பழனிசாமியால் திறந்துவைக்கப்பட்டது.
தமிழக முதலமைச்சராக இருந்த ஜெயலலிதா கடந்த 2016ஆம் ஆண்டு டிசம்பர் 5ஆம் தேதியன்று உயிரிழந்தார். அவரது உடல் சென்னை மெரீனா கடற்கரையில் எம்.ஜி.ஆர். சமாதி அருகேயே புதைக்கப்பட்டது.
அந்த இடத்தில் ஜெயலலிதாவுக்கு பிரம்மாண்டமான நினைவிடம் அமைக்கப்படும் என முதலமைச்சர் பழனிசாமி 2017ஆம் ஆண்டு ஜூன் மாதம் அறிவித்தார்.
இதற்காக முதலில் 50.8 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்து அரசாணை பிறப்பிக்கப்பட்டது. பிறகு, இந்தத் தொகை சுமார் 58 கோடி ரூபாயாக உயர்த்தப்பட்டது.
பிறகு, அருங்காட்சியகம், அறிவுப் பூங்கா, ஐந்தாண்டுகளுக்கான மின் கட்டணம், பராமரிப்புத் தொகை என சுமார் 21 கோடியே 79 லட்ச ரூபாய் இதற்கென ஒதுக்கீடு செய்யப்பட்டது.
ஜெயலலிதாவின் நினைவிடத்திற்கான கட்டுமானப் பணிகள் கடந்த 2018ஆம் ஆண்டு துவங்கின.
ஃபீனிக்ஸ் பறவையின் வடிவில் இந்த நினைவகம் கட்டப்பட்டது. நினைவகம், அருங்காட்சியகம், அறிவுப்பூங்கா ஆகியவை என மூன்று பிரிவுகள் இந்த நினைவிடத்தில் இடம்பெற்றுள்ளன.
ஜெயலலிதாவின் சமாதிக்கு மேலே அமைக்கப்பட்டிருக்கும் ஃபீனிக்ஸ் பறவை உருவம் 15 மீட்டர் உயரமும் 30.5 மீட்டர் நீளமும் 43 மீட்டர் அகலமும் கொண்டதாகக் கட்டப்பட்டுள்ளது.
இந்த நினைவகப் பகுதி முழுக்க கிரானைட்டால் ஆன நடைபாதை அமைக்கப்பட்டுள்ளது. இங்கே உள்ள அருங்காட்சியகத்தில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் வாழ்க்கை நிகழ்வுகளைச் சித்தரிக்கும் புகைப்படங்கள், மெழுகு சிலைகள் ஆகியவை அமைக்கப்படவுள்ளன.
அறிவுசார் பூங்காவில் பல்வேறு தகவல்கள் காட்சிப்படுத்தப்படுவதோடு, டிஜிட்டல் இன்டராக்ட்டிவ் வீடியோ காட்சி ஒன்றும் வைக்கப்படவுள்ளது.
இந்தத் திறப்பு விழாவில் கலந்துகொள்வதற்காக மாநிலம் முழுவதுமிருந்து அ.தி.மு.க. தொண்டர்கள் சென்னையில் குவிந்தனர். இதனால், காமராஜர் சாலை மற்றும் அதற்கான அணுகு சாலைகளில் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
ஜெயலலிதாவின் நினைவிடத்தைத் திறந்துவைத்துப் பேசிய முதலமைச்சர் எடப்பாடி கே. பழனிசாமி, வரும் தேர்தலிலும் அ.தி.மு.க. வெற்றிபெறுவதற்கு தொண்டர்கள் வீர சபதம் ஏற்கவேண்டுமெனக் கேட்டுக்கொண்டார்.
இந்தத் திறப்பு விழா முடிந்த பிறகு, ஆயிரக் கணக்கான தொண்டர்கள் புதிதாக திறக்கப்பட்ட நினைவிடத்தைப் பார்ப்பதற்காக முண்டியடித்துக்கொண்டு உள்ளே சென்றனர்.
வியாழக்கிழமையன்று ஜெயலலிதா வசித்துவந்த வேதா இல்லம் பொதுமக்களின் பார்வைக்காகத் திறக்கப்படவிருக்கிறது.
பிற செய்திகள்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: