`ஆந்திராவில் பெற்றோரால் நரபலி கொடுக்கப்பட்ட மகள்கள் உயிர்பெறுவோம் என நம்பிக்கையில் இருந்தனர்` - காவல் துறை

(இன்று (28.01.2021, வியாழக்கிழமை) இந்தியாவில் உள்ள சில முக்கிய நாளிதழ்களிலும், அவற்றின் இணையதளங்களிலும் வெளியான முக்கிய செய்திகள் சிலவற்றை இங்கே தொகுத்து வழங்குகிறோம்.)
ஆந்திரபிரதேச மாநிலம் சித்தூர் மாவட்டம் மதனப்பள்ளியைச் சேர்ந்த கல்லூரி துணை முதல்வர் வி.புருசோத்தம் நாயுடு - பள்ளி முதல்வரான அவரது மனைவி பத்மஜா, தமது 2 மகள்களை கடந்த ஞாயிற்றுக்கிழமை வீட்டில் நரபலி கொடுத்தனர்.
ஆந்திராவையும் தாண்டி அதிர்ச்சியை ஏற்படுத்திய இச்சம்பவம் தொடர்பாக போலீசார், புருசோத்தம் - பத்மஜா தம்பதியை கைது செய்து நீதிமன்றக் காவலில் சிறையில் அடைத்தனர்.
இந்நிலையில் இதுதொடர்பாக சித்தூர் மாவட்ட காவல் துறை கண்காணிப்பாளர் செந்தில்குமார் நேற்று அளித்த பேட்டியில், "தங்கள் மகள்களை ஏன் கொன்றோம் என்று புருசோத்தமும், பத்மஜாவும் ஒரே மாதிரி வாக்குமூலம் அளித்தனர். அத்தம்பதிக்கு ஏதாவது மனநல பிரச்சினை இருக்கலாம். ஆனால் அவர்களிடம் அதீத மூடநம்பிக்கையும், மிதமிஞ்சிய பக்தியும் காணப்படுகிறது.
தங்கள் மகள்களின் உடம்பில் தீயஆவிகள் குடிகொண்டிருந்தன எனவும், மரணத்துக்குப் பின் அத்தீய ஆவிகளிடம் இருந்து விடுபட்டு அவர்கள் புதிதாக உயிர்பெறுவார்கள் என்கிற நம்பிக்கை அந்தப் பெற்றோரிடம் இருந்திருக்கிறது. அதே நம்பிக்கையை, பலியான அந்தப் பெண்களும் கொண்டிருந்ததாக தெரிகிறது.
மகள்கள் இருவரும் மறுபடியும் உயிர்பெற்ற பிறகு, நான்கு பேரும் எப்போதும் போல் சந்தோஷமாக வாழ்வோம் என புருசோத்தமும், பத்மஜாவும் நம்பியிருக்கின்றனர். கணவன்-மனைவியின் மனநிலை குறித்து தற்போது எதுவும் கூற முடியாது," எனக் குறிப்பிட்டுள்ளதாக தினத்தந்தியில் செய்தி வெளியாகியுள்ளது.
இதற்கிடையில், நரபலி கொடுக்கப்பட்ட அலேக்கியா, சாய் திவ்யாவின் உடல்கள் பிரேத பரிசோதனைக்குப் பின் உள்ளூர் மயானத்தில் தகனம் செய்யப்பட்டன. அங்கு தாய் பத்மஜாவை விடுத்து தந்தை புருசோத்தம் மட்டும் போலீசாரால் அழைத்து வரப்பட்டிருந்தார். உறவினர்களுடன் சேர்ந்து இறுதிச்சடங்குகளை செய்து உடல்களுக்கு தீ மூட்டிய புருசோத்தம், 'எங்கள் மகள்களை அநியாயமாக கொன்றுவிட்டோம். நாங்கள் உயிர் வாழவே கூடாது' என அழுது புலம்பியதாக அச்செய்தி குறிப்பிடுகிறது.
அரசுப் பள்ளி மாணவா்களுக்கு 7.5 இடஒதுக்கீடு ஏன்? - தமிழக அரசு விளக்கம்

பட மூலாதாரம், Getty Images
அரசுப் பள்ளியில் படித்த மாணவா்களுக்கு மருத்துவப் படிப்புகளில் சம வாய்ப்பை வழங்க வேண்டும் என்ற நோக்கத்தில் தான் 7.5 சதவீத உள் ஒதுக்கீடு வழங்கி சட்டம் கொண்டு வந்ததாக தமிழக அரசு தாக்கல் பதில்மனுவில் தெரிவித்துள்ளதாக தினமணியில் செய்தி வெளியாகியுள்ளது.
அரசுப் பள்ளி மாணவா்களுக்கு மருத்துவ படிப்புகளில், 7.5 சதவீத உள்ஒதுக்கீடு வழங்கி தமிழக அரசு கொண்டு வந்த சட்டத்தை எதிர்த்து உயா்நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டது. அரசு உதவி பெறும் பள்ளி மாணவா்களுக்கும் மருத்துவ படிப்பில் 7.5 சதவீத உள்ஒதுக்கீடு வழங்க கோரி தமிழ்நாடு கத்தோலிக்க கல்விச் சங்கம் சார்பிலும் வழக்கு தொடரப்பட்டது.
இந்த வழக்குகள் தலைமை நீதிபதி சஞ்சீவ் பானா்ஜி, நீதிபதி செந்தில்குமார் ராமமூா்த்தி ஆகியோர் அடங்கிய அமா்வுக்கு முன் விசாரணைக்கு வந்தது. அப்போது தமிழக அரசு தரப்பில் பதில்மனு தாக்கல் செய்யப்பட்டது.
அதில், உயா்நீதிமன்ற ஓய்வுபெற்ற நீதிபதி பொன்.கலையரசன் தலைமையில், அரசுப் பள்ளி மாணவா்களும், பொருளாதார ரீதியில் பின்தங்கிய மாணவா்களும் மருத்துவப் படிப்பில் சேர ஏதுவாக இட ஒதுக்கீடு வழங்குவது குறித்து ஆய்வு செய்ய குழு அமைக்கப்பட்டது. இந்த குழு அரசுப் பள்ளி மாணவா்களுக்கு 10 சதவீதத்துக்கும் குறையாமல் இட ஒதுக்கீடு வழங்க பரிந்துரைத்தது. அந்தப் பரிந்துரையின் அடிப்படையிலேயே, அரசுப் பள்ளி மாணவா்களுக்கு மருத்துவப் படிப்பில் 7.5 சதவீதம் உள் ஒதுக்கீடு வழங்கி சட்டம் இயற்றப்பட்டது. அதற்கு ஆளுநா் ஒப்புதல் பெறப்பட்டு அரசிதழிலும் வெளியிடப்பட்டுள்ளது.
இந்த, இட ஒதுக்கீட்டிலும் கூட நீட் தோ்வு மதிப்பெண் அடிப்படையிலேயே மாணவா் சோ்க்கை வழங்கப்படும். இந்த சட்டத்தின்படி நடப்பு கல்வியாண்டில் 435 அரசுப் பள்ளி மாணவா்கள், மருத்துவம் மற்றும் பல் மருத்துவப் படிப்பில் இடங்களை பெற்றுள்ளனா். இந்தச் சட்டத்தை இயற்ற அரசுக்கு அதிகாரம் உள்ளது. அரசு பள்ளி மாணவா்களுக்கு சமவாய்ப்பு வழங்கும் நோக்கத்தில், அனைத்து அம்சங்களையும் உள்ளடக்கிய விரிவான ஆய்வுக்குப் பின்னரே இந்த சட்டம் இயற்றப்பட்டுள்ளது. விதிமீறல் இல்லாத போது அரசின் கொள்கை முடிவில் நீதிமன்றம் தலையிட முடியாது எனத் தெரிவிக்கப்பட்டிருந்ததாக அச்செய்தியில் கூறப்பட்டுள்ளது.
அரசு தரப்பு பதில்மனுவுக்கு, பதிலளிக்க மனுதாரா்கள் தரப்பில் கால அவகாசம் கேட்கப்பட்டது. இதனையடுத்து வழக்கை விசாரித்த நீதிபதிகள் விசாரணையை 4 வாரத்துக்கு ஒத்திவைத்தனா்.
திரையரங்குகளில் 50% இருக்கைகளுக்கு மேல் அனுமதி

பட மூலாதாரம், Getty Images
கொரோனாவைத் தொடர்ந்து அமல்படுத்தப்பட்ட தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு பிப்ரவரி மாதமும் நீட்டிக்கப்படுகிறது. அதேசமயம் திரையரங்குகளில் 50 சதவீத இருக்கைகளுக்கு மேல் அனுமதிக்கலாம் என கூடுதல் தளர்வை மத்திய உள்துறை அமைச்சகம் அறிவித்துள்ளதாக இந்து தமிழ் திசையில் செய்தி வெளியாகியுள்ளது.
கொரோனா பரவலை முன்னிட்டு மத்திய உள்துறை அமைச்சகம் கடந்த மார்ச் 24ம் தேதி பிறப்பித்த உத்தரவுகள், தளர்த்தப்பட்டு வருவதால், கட்டுப்பாடு மண்டலங்களுக்கு வெளியே கிட்டதட்ட அனைத்து நடவடிக்கைகளும், படிப்படியாக தொடங்கப்பட்டு வருகின்றன.
மக்கள் அதிகளவில் கூடும் சில நடவடிக்கைகளுக்கு, சுகாதாரம் மற்றும் பாதுகாப்பு முன்னெச்சரிக்கை தொடர்பாக சில கட்டுப்பாடுகள் மற்றும் நிலையான செயல்பாட்டு நெறிமுறைகளுடன் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
தற்போது தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு ஜனவரி 31-ம் தேதியுடன் நிறைவடைகிறது. இந்நிலையில், அமலில் உள்ள தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு மேலும் ஒரு மாதத்திற்கு நீட்டித்து மத்திய உள்துறை அமைச்சகம் இன்று உத்தரவு பிறப்பித்துள்ளது.
அதன்படி, பிப்ரவரி 1-ம் தேதி முதல் பிப்ரவரி 28-ம் தேதி வரை ஊரடங்கு அமல்படுத்தப்படுகிறது.
திரையரங்குகளில் 50 சதவீத இருக்கைகளுக்கு மேல் அனுமதிக்கலாம் என உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. இதற்கான விரிவான வழிகாட்டும் நெறிமுறைகளை மாநில அரசுகள் வெளியிடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அதே போல நீச்சல் குளம் உள்ளிட்டவற்றிக்கும் வழிகாட்டும் நெறிமுறைகளை மாநில அரசுகள் அறிவிக்கும் என மத்திய உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளததாக அச்செய்தி கூறுகிறது.
தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கில் கரோனா நோய் கட்டுப்பாட்டு பகுதிகளில் விதிமுறைகளை கடுமையாக பின்பற்றப்பட வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளதாக அச்செய்தியில் குறிப்பிடப்பட்டிருக்கிறது.
பிற செய்திகள்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:












