அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு: சிறந்த மாடுபிடி வீரர் தேர்வில் ஆள்மாறாட்டம் செய்தது உறுதி

பட மூலாதாரம், Getty Images
புகழ்பெற்ற மதுரை அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டில் ஆள்மாறாட்டம் செய்தது உறுதி செய்யப்பட்டுள்ளது.
மதுரை அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு விளையாட்டு போட்டி கடந்த 16ஆம் தேதி நடைபெற்றது. இதில் கண்ணன் என்பவர் சிறந்த மாடுபிடி வீரராக தேர்வு செய்யப்பட்டார். இவர் மதுரை விராட்டிபத்துவை சேர்ந்தவர். இதற்காக அவருக்கு கார் பரிசாக வழங்கப்பட்டது. ஆனால், இவர் வேறு ஒருவரின் பனியனை மாற்றி அணிந்து வந்து போட்டியில் பங்கேற்றதாக கூறப்பட்டது.
இந்நிலையில் முதல்கட்டமாக வருவாய்த்துறை அதிகாரிகள் நடத்திய முதல்கட்ட ஆய்வில் முதல் பரிசு பெற்ற கண்ணன் பனியனை மாற்றி களத்தில் விளையாடியுள்ளது உறுதி செய்யப்பட்டுள்ளது.
"அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டியில் 33ஆம் எண் கொண்ட பனியன் கண்ணன் என்ற பெயரில் முன்பதிவு செய்யப்படவில்லை. ஆனால் பனியனை மாற்றி 13 காளைகளை அடக்கியது கண்ணன் என்பதும் உறுதி செய்யப்பட்டுள்ளது. பரிசை யாருக்கு வழங்குவது என்பதனை விழா கமிட்டியே முடிவு செய்யும்," என வாடிப்பட்டி வட்டாட்சியர் பழனிகுமார் தெரிவித்துள்ளார்.
என்ன நடந்தது?
கடந்த 16ம் தேதி நடந்த ஜல்லிக்கட்டின் முதல் சுற்றில் 33ஆம் நம்பர் பனியன் அணிந்த ஹரிகிருஷ்ணன் என்பவர் முதல் சுற்றில் களம் இறங்கியுள்ளார்.
மூன்று சுற்றுகளுக்கு பிறகு அவருக்கு காயம் ஏற்பட்டது. இதனால் 33ஆம் நம்பர் போட்டிருந்த அவரது பனியனை கழற்றி, மற்றொரு நபரான கண்ணன் என்பவரிடம் கொடுத்துவிட்டு போட்டியிலிருந்து வெளியேறியுள்ளார். அந்த பனியனை அணிந்து கொண்டு களமிறங்கிய கண்ணன் 12 காளைகள் பிடித்துள்ளதாக கணக்கிடப்பட்டு வருவாய்த்துறையால் முதலிடத்துக்கு தேர்வு செய்யப்பட்டார்.
இதில் ஹரிகிருஷ்ணன் பிடித்த 7 காளைகள், கண்ணன் பிடித்த 5 காளைகள் என 33ஆம் நம்பர் பனியன் அணிந்த இருவரும் மொத்தமாக 12 காளைகளை பிடித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. ஆனால், மருத்துவ பரிசோதனை பதிவேட்டில் 33ஆம் நம்பரில் கண்ணன் பெயர் இடம் பெறவில்லை. அதில் ஹரிகிருஷ்ணன் என்றே குறிப்பிடப்பட்டிருந்தது.
இது குறித்து ஹரிகிருஷ்ணனிடம் பிபிசி தமிழ் நேற்று பேசியபோது, "நான் முதல் முறையாக மாடுபிடிக்க வந்தேன். அலங்காநல்லூரை சேர்த்த சக மாடுபிடி வீரர்கள் தாக்கியதால் மன உளைச்சலில் களத்தில் நின்று கொண்டிருந்த நிலையில் காளையை அவிழ்த்து வந்த கண்ணன் கேட்டுக்கொண்டதற்கு இணங்க தனது பனியனை அவரிடம் கொடுத்துவிட்டு களத்திலிருந்து வெளியேறினேன், " என ஹரிகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
ஆள்மாறாட்டம் செய்து முதல் பரிசு பெற்றதாக கூறப்படும் கண்ணன் என்பவர், தான் முறையாக முன் பதிவு செய்த பின்னரே களத்தில் இறங்கியதாக பிபிசி தமிழிடம் தெரிவித்திருந்தார்.
"வேண்டுமென்றே தன் மீது அவதூறு குற்றச்சாட்டு முன் வைக்கப்படுகிறது. 33ஆம் எண் கொண்ட ஹரிகிருஷ்ணன் சிலரின் தூண்டுதலால் தவறான தகவல்களை தெரிவித்து வருகிறார். தான் 12 காளைகளை அடக்கியதற்கான ஆதாரத்தை திரட்டி வருகிறேன். மாடுபிடி முன்பதிவு டோக்கன் தன்னிடமிருந்து தொலைந்துவிட்டது," எனக் கண்ணன் தெரிவித்திருந்தார்.
பிற செய்திகள்:
- அமெரிக்க அதிபர் ஜோ பைடன் பிறப்பித்த மின்னல் வேக முதல் உத்தரவுகள் என்னென்ன?
- திருக்குறள் மீது சிறுவயதில் எழுந்த ஆர்வம்; ஓலைச்சுவடியில் எழுதும் பஞ்சாபியர் ஜஸ்வந்த் சிங்
- சசிகலாவுக்கு ஏற்பட்டது கொரோனா தொற்றா? எப்போது டிஸ்சார்ஜ்? டாக்டர் பேட்டி
- ரெய்னா உள்ளே, கேதர் வெளியே: ஐபிஎல் 2021 சீசனில் விடுவிக்கப்பட்டவர்கள் யார் யார்?
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்












