You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
நரேந்திர மோதி மன் கி பாத் உரை: 2020-இன் கடைசி மன் கி பாத் உரையில் நரேந்திர மோதி பேசியது என்ன?
இந்தியப் பிரதமர் நரேந்திர மோதியின் 72-வது மற்றும் 2020-ம் ஆண்டின் கடைசி 'மன் கி பாத்' நிகழ்ச்சி இன்று ஒலிபரப்பானது. அதில் கோவையைச் சேர்ந்த காயத்ரி எனும் சிறுமியைப் பாராட்டிப் பேசியுள்ளார் நரேந்திர மோதி.
மனிதர்கள் பயன்படுத்தும் சக்கர நாற்காலியை நாம் பார்த்திருக்கிறோம், ஆனால் கோயம்புத்தூரில் காயத்ரி என்பவர், தன் தந்தையுடன் சேர்த்து நாய்க்காக ஒரு சக்கர நாற்காலியைச் செய்திருக்கிறார். இது நமக்கு ஊக்கமளிப்பதாக இருக்கிறது. எல்லா உயிர்களிடத்திலும் அன்பு செலுத்தும் போதுதான் இது சாத்தியமாகிறது எனக் கூறி காயத்ரி மற்றும் அவரது தந்தையைப் பாராட்டி இருக்கிறார் மோதி.
கோவை காயத்ரியைப் போலவே, தமிழகத்தைச் சேர்ந்த ஸ்ரீநிவாசாச்சாரி ஸ்வாமி என்பவரைக் குறித்தும் பேசி இருக்கிறார் மோதி. தமிழ் மற்றும் சம்ஸ்கிருதப் பண்டிதரான இவர், 16 ஆன்மிக புத்தகங்களை எழுதி இருக்கிறார். தன் 92-வது வயதிலும், தன் புத்தகத்தைத் தானே கணிணியில் தட்டச்சு செய்கிறார். அவருடைய நம்பிக்கை மற்றும் ஆர்வம் அவரது இளமைக் காலத்தில் இருந்தது போலவே தொடர்கிறது எனப் பாராட்டியிருக்கிறார் மோதி.
'மன் கி பாத்' நிகழ்ச்சியில் பிரதமர் பேசிய முக்கிய தகவல்களை மட்டும் இங்கே பார்க்கலாம்.
- கொரோனாவால் உலக அளவில் சரக்குகளுக்கான விநியோகச் சங்கிலிகள் பாதிக்கப்பட்டன. ஒவ்வொரு நெருக்கடியின் போதும் நாம் சில பாடங்களைக் கற்கிறோம். இந்தமுறை இந்தியா 'ஆத்மநிர்பார்' (தற்சார்பு இந்தியா திட்டம்) என்கிற புதிய திறனை மேம்படுத்திக் கொண்டது.
- தற்போது வாடிக்கையாளர்களும் இந்தியாவில் தயாரான பொருட்களைக் கேட்கிறார்கள். இது ஒரு பெரிய மனநிலை மாற்றம். இந்த பெரிய மாற்றம் வெறும் ஓர் ஆண்டுக்குள் நடந்திருக்கிறது. இந்த மனநிலை மாற்றத்தை அளவிடமுடியாது.
- நான் அன்றாடம் பயன்படுத்தும் பொருட்களில், என்ன மாதிரியான இறக்குமதி பொருட்கள் எல்லாம், நமக்கே தெரியாமல் நம்மை அடிமையாக்கி வைத்திருக்கிறது என்பதை கவனியுங்கள். அதற்கு சரியான மாற்றுப் பொருட்களை (இந்திய தயாரிப்புகளை) பயன்படுத்துங்கள் எனக் கேட்டுக் கொண்டுள்ளார் நரேந்திர மோதி.
- மக்கள் இந்தியாவில் தயாரிக்கப்பட்ட பொருட்களுக்கு தங்களின் முழு ஆதரவைக் கொடுக்கத் தொடங்கிய பிறகு, நம் உற்பத்தியாளர்கள் மற்றும் முன்னணி தொழில்துறையினர், நம் பொருட்கள் உலகத் தரத்தில் இருப்பதை உறுதி செய்ய வேண்டும்.
- உலகிலேயே தலை சிறந்த பொருட்கள் இந்தியாவில் உற்பத்தி செய்யப்பட வேண்டும். இதற்கு நம் தொழில்முனைவோர்களும், ஸ்டார்ட்-அப் நிறுவனங்களும் முன் வர வேண்டும் என மோதி அழைப்பு விடுத்திருக்கிறார்.
- இந்தியாவில் சிறுத்தைப் புலிகளின் எண்ணிக்கை கடந்த 2014-ம் ஆண்டில் இருந்த 7,900 எண்ணிக்கையில் இருந்து, 2019-ம் ஆண்டில் 60 சதவீதம் அதிகரித்து 12,852 ஆக உயர்ந்திருக்கிறது. குறிப்பாக மத்திய இந்தியாவில் சிறுத்தைப் புலிகளின் எண்ணிக்கை அதிகரித்திருக்கிறது.
- இந்தியாவில் சிங்கம், புலி போன்ற வன விலங்குகளின் எண்ணிக்கை அதிகரித்திருக்கின்றன. வனப் பகுதிகளின் அளவும் அதிகரித்திருக்கிறது. இதற்கு அரசு மட்டும் காரணமல்ல. மக்கள், சிவில் சொசைட்டிகள், மற்ற அமைப்புகள் என பலரும் தங்கள் பங்களிப்பை வழங்கியிருக்கிறார்கள்.
- இன்று சீக்கிய குரு, கோபிந்த் சிங் அவர்களின் தாயார் குஜிர் அவர்கள் வீரமரணமடைந்த நாள். கடந்த வாரம் குரு தேஜ் பகதூர் அவர்கள் மறைந்த நாளன்று, டெல்லியில் இருக்கும் ரகப் கன்ச் குருத்வாராவில் அவருக்கு மரியாதை செலுத்தியதை பெருமையாகக் கருதுகிறேன் என்றார் மோதி. குரு கோபிந்த் சிங் அவர்களின் குடும்பம் செய்த தியாகத்துக்கு நாம் என்றும் கடமைப்பட்டிருக்கிறோம் என்றார் மோதி.
- கடந்த மே 2020-ல் காஷ்மீரின் குங்குமப் பூவுக்கு புவிசார் குறியீட்டை வழங்கினோம். இதன் மூலம் நம் காஷ்மீரத்துக் குங்குமப்பூவை, நாம் உலக அளவில் ஒரு பெரிய பிராண்டாக உருவாக்க வேண்டும் எனக் கூறினார் மோதி.
பிற செய்திகள்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்