You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
புதுச்சேரி உள்ளாட்சித் தேர்தல் நடத்தப்படவில்லை: மோதி குற்றச்சாட்டு, நாராயணசாமி பதிலடி
ராகுல் காந்தியின் ஜனநாயகம் குறித்த விமர்சனத்துக்கு பதிலளிக்கும் விதத்தில், பிரதமர் நரேந்திர மோதி புதுச்சேரியில் உள்ள காங்கிரஸ் அரசு உள்ளாட்சித் தேர்தலை நடத்தவில்லை என்பதைக் குறிப்பிட்டிருக்கிறார்.
சமீபத்தில் காங்கிரஸ் கட்சியின் மூத்த நிர்வாகிகளுடன், ராகுல் காந்தி, குடியரசுத் தலைவரைச் சந்தித்து வேளாண் திருத்தச் சட்ட விவகாரத்தில் தலையிட்டு ஒரு நல்ல தீர்வை வழங்க வேண்டும் எனக் கோரிக்கை வைத்தார்.
அதன் பின் பத்திரிகையாளர்களைச் சந்தித்த போது, இந்தியாவில் ஜனநாயகம் என்பது கற்பனையில் மட்டும் தான் இருக்கிறது, எதார்த்தத்தில் இல்லை என்று கூறினார் ராகுல் காந்தி.
மேலும் "மோதியை யார் எதிர்த்தாலும் அவர்கள் தீவிரவாதிகள் என முத்திரை குத்தப்படுகிறார்கள். அது விவசாயிகளாக இருக்கட்டும், தொழிலாளர்களாக இருக்கட்டும், அவ்வளவு ஏன் ஆர்.எஸ்.எஸ் அமைப்பின் தலைவர் மோகன் பகவத்தாக இருக்கட்டும். யாராக இருந்தாலும் மோதியை எதிர்த்தால் அவர்கள் தீவிரவாதிகளாக கருதப்படுகிறார்கள்" என்றார் ராகுல் காந்தி.
ஜம்மு காஷ்மீரில் ஆயுஷ்மான் பாரத் திட்டத்தை தொடங்கி வைத்து இன்று பேசிய பிரதமர் நரேந்திர மோதி ராகுல் கருத்துக்குப் பதிலளிக்கும் விதத்தில் பேசினார்.
பஞ்சாயத்து மற்றும் நகராட்சித் தேர்தல்களை நடத்த வேண்டும் என உச்ச நீதிமன்றம் அறிவுறுத்திய பிறகும், புதுச்சேரியில் இதுவரை உள்ளாட்சித் தேர்தல்கள் நடத்தப்படவில்லை. எனக்கு ஜனநாயகத்தைப் பற்றி பாடும் எடுக்குப்பவர்கள் தான் அந்த யூனியன் பிரதேசத்தை ஆள்கிறார்கள்.
நான் அவர்களுக்கு ஜம்மு காஷ்மீரில் நடத்தப்பட்ட மாவட்ட வளர்ச்சி சபைத் (டிடிசி) தேர்தலை ஜனநாயகத்துக்கு உதாரணமாகக் காட்ட விரும்புகிறேன். ஜம்மு & காஷ்மீர் யூனியன் பிரதேசம் உருவாக்கப்பட்டு ஒரு வருடத்துக்குள் அங்கு உள்ளாட்சித் தேர்தல் நடத்தப்பட்டிருக்கிறது என ராகுல் காந்திக்கு பதிலளித்திருக்கிறார் மோதி.
தமிழ்நாட்டில்...
பாஜகவின் கூட்டணிக் கட்சியான அதிமுக ஆட்சி செய்யும் தமிழ்நாட்டில், 2016ம் ஆண்டு முதல் உள்ளாட்சி அமைப்புகளுக்குத் தேர்தல் நடத்தப்படாமல் இருந்தது. கடந்த ஆண்டு புதிதாக பிரிக்கப்பட்ட மாவட்டங்கள் தவிர்த்த பிற மாவட்டங்களில் ஊரக உள்ளாட்சிப் பதவிகளுக்கு மட்டும் தேர்தல் நடந்தது. நகர்ப்புற உள்ளாட்சிகளுக்கும், புதிதாகப் பிரிக்கப்பட்ட மாவட்டங்களுக்கும் இன்னும் உள்ளாட்சித் தேர்தல் நடத்தப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
ஜனநாயகத்தை பற்றி பேச மோதிக்கு தகுதியில்லை - நாராயணசாமி
பிரதமரின் பேச்சு குறித்து புதுச்சேரி முதல்வர் நாராயணசாமியின் கருத்தைக் கேட்டது பிபிசி தமிழ்.
"நீதிமன்றத்தில் இது தொடர்பாக வழக்கு இருக்கிறது. ஏற்கனவே மாநிலத் தேர்தல் ஆணையரை நாங்கள் நியமித்தோம். அதை ஆளுநர் கிரண்பேடி தடுத்து நிறுத்தி அவரே ஒருவரை நியமித்தார். அதை தடுத்து நிறுத்தி பேரவைத் தலைவர் முன்னிலையில், புதுச்சேரி அரசு சார்பாக பாலகிருஷ்ணன் என்பவரை புதிய தேர்தல் ஆணையராக நியமித்தோம். பின்னர் அந்த உத்தரவை கிரண்பேடி ரத்து செய்தார். பிறகு கொரோனா தொற்று சூழலில் புதிதாக ஒருவரை நியமிக்க அவர் முயற்சி செய்தார். இதனிடையே தேர்தல் ஆணையரை நியமிக்க ஆளுநருக்குத்தான் அதிகாரம் உள்ளது என்ற உயர் நீதிமன்ற உத்தரவை எதிர்த்து உச்ச நீதி மன்றத்தில் மேல் முறையீடு செய்துள்ளோம். இரண்டாவதாக தேர்தல் ஆணையர் ஒருவரை ஆளுநர் கிரண்பேடி நியமித்துள்ளார். அதை எதிர்த்து நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. இது தொடர்பாக பலவிதமான வழக்குகள் நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளன" என்று கூறிய நாராயணசாமி,
எனவே உள்ளாட்சித் தேர்தல் நடக்காததற்கு மாநில அரசாங்கத்தை குற்றம் கூறுவது பொருளில்லை. முழுமையாக மாநில அரசின் அதிகாரத்தைப் பறித்து கொண்டு துணைநிலை ஆளுநர் இந்த தேர்தலை நடத்தவில்லை. இதை பிரதமர் முதலில் புரிந்துகொள்ள வேண்டும். மாநில உரிமையைப் பறிப்பதுதான் தான் ஜனநாயகமா? என்று கேட்டார்.
"மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசின் உரிமையை பறிப்பது ஜனநாயகம் அல்ல என்று பிரதமருக்குத் தெரியவில்லை. அவர் ஜனநாயகத்தை பற்றி பேசுகிறார்," என்றும் கூறினார் நாராயணசாமி.
ஜம்மு காஷ்மீரில் நடந்தது ஜனநாயகமா?
மேலும் பிரதமரின் பேச்சைக் குறிப்பிட்டுப் பேசிய நாராயணசாமி, "பிரதமர் நரேந்திர மோதி ஜனநாயக முறைப்படி ஜம்மு காஷ்மீரில் தேர்தல் நடத்தியதாக கூறுகிறார். ஆனால் வேட்பாளர்களை வீட்டை விட்டு வெளியே செல்லவிடாமல் செய்வதுதான் ஜனநாயக முறையா? வேட்பாளர்கள் வாக்கு சேகரிக்க வெளியே செல்ல முடியவில்லை. சிறைப்பிடித்து வீட்டுக்காவலில் வைத்து இருந்தனர். இதனால் எதிர்க் கட்சியைச் சேர்ந்தவர்கள் அனைவரும் பிரச்சாரம் செய்ய முடியாத சூழ்நிலை ஏற்பட்டது. இது ஜனநாயக முறைப்படி நடந்த தேர்தலா," என்று கேட்டார்.
"அப்படியிருந்தும் காஷ்மீர் மக்கள் பாஜக-வுக்கு எதிராகத் தான் இந்த தேர்தலில் வாக்களித்துள்ளனர். ராணுவத்தை வைத்துக்கொண்டு முழுவதுமாக அதிகார துஷ்பிரயோகம் செய்துள்ளார். ஜனநாயகத்தைப் பற்றி பேசுவதற்கு பிரதமருக்கு எந்த தகுதியும் இல்லை. மத்திய அரசாங்கமே ஜனநாயக முறைப்படி நடக்கவில்லை," என நாராயணசாமி தெரிவித்தார்.
கிரண்பேடி ட்வீட்
பிரதமர் மோதியின் கருத்தைத் தொடர்ந்து புதுவை துணை நிலை ஆளுநர் கிரண்பேடி டிவிட்டரில் ஒரு பதிவை இட்டார். அதில், "பிரதமர் கூறியதுபோல புதுச்சேரி யூனியன் பிரதேசத்தில் சுமார் 10 ஆண்டுகளாக உள்ளாட்சி தேர்தல்கள் நடத்தப்படாததால், ஊரகப் பகுதிகள் வளர்ச்சிக்கான நிதியை இழந்துவிட்டன" என்று கூறியுள்ள அவர், உள்ளாட்சித் தேர்தல் நடத்தப்படாததால், போதிய சுகாதாரம் இன்மை, மோசமான நிலத்தடி நீர் மேலாண்மை ஆகிய பாதிப்புகளும், தூர் வாருதல், பள்ளி கல்வி ஆகியவற்றில் பாதிப்புகளும் ஏற்பட்டுள்ளன என்றும் தெரிவித்துள்ளார்.
பிற செய்திகள்
- ரஜினி உடல்நிலை: ஹைதராபாத் மருத்துவனையில் தொடரும் சகிச்சை
- தொ.பரமசிவன் உடலுக்கு அரசு மரியாதை வழங்க கோரிக்கை
- இந்திய விவசாயிகள் தொடர்ந்து ஏழைகளாக இருப்பது ஏன்?
- கொரோனா சிகிச்சையில் இனப் பாகுபாடு குற்றம்சாட்டிய அமெரிக்க பெண் மருத்துவர் பலி
- புதுச்சேரி புத்தாண்டு கொண்டாட்டம்: ஆதரிக்கும் நாராயணசாமி, எதிர்க்கும் கிரண் பேடி
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்