விவசாயிகள் போராட்டம்: ஊடகங்களின் மீதான நம்பிக்கை குறைவது ஏன்?

    • எழுதியவர், தில்நவாஸ் பாஷா
    • பதவி, பிபிசி செய்தியாளர்

சிங்கு எல்லையில் ஒரு விவசாயி போராட்டக்காரருடன் நாங்கள் பேசிக் கொண்டிருந்தோம். அப்போது ஒரு நபர் ஒரு சுவரொட்டியுடன் அங்கு வந்தார்.

அந்த சுவரொட்டியில் "ஊடகங்களே தயவுசெய்து உண்மையை பேசுங்கள்!"என்று எழுதப்பட்டிருந்தது.

விவசாயிகள் போராட்டத்தின்போது, எம்.எஸ்.பி அதாவது குறைந்தபட்ச ஆதரவு விலை என்று மிக அதிகமாக அடிபடும் சொற்றொடருக்குப்பிறகு அதிகமாக காதில் கேட்டும் மற்றொரு சொல் 'கோதி மீடியா' அதாவது 'மடியில் அமர்ந்துள்ள ஊடகங்கள். (ஒருவருக்காக தாளம் போடுபவை என்று இதை நாம் பொருள் கொள்ளலாம்).

அரசிற்கு சாதகமாகவும், விவசாயிகள் இயக்கம் பற்றிய ஆதாரமற்ற எதிர்மறையாகவும் செய்திகளை ஒளிபரப்பும் ஊடகங்களின் ஒரு பகுதியினருக்காக இந்த சொற்றொடரை போராட்டக்காரர்கள் பயன்படுத்துகின்றனர்.

கேமராமேன் மற்றும் கையில் மைக்குடன் செய்தியாளர்களை பார்த்ததுமே , "கோதி ஊடகமே திரும்பிப்போ' என்ற முழக்கங்கள் எழுப்பப்படுகின்றன.

பத்திரிகையாளர்களுடன் பேசுவதற்கு முன், மைக்கில் எந்த சேனலின் சின்னம் உள்ளது என்பதை மக்கள் பார்க்கிறார்கள்.

ஊடகங்கள் மீதான மனக்கசப்பு புதியதல்ல

இந்தியாவில் அரசின் முடிவுகளுக்கு எதிராக குரல் கொடுக்கும் எந்தவொரு போராட்டத்தின்போதும் ஊடகங்கள் மீது அதிருப்தி தெரிவிப்பது இது முதல் முறை அல்ல.

ஆனால் டெல்லியை ஹரியானா மற்றும் உத்தர பிரதேசத்துடன் இணைக்கும் தேசிய நெடுஞ்சாலைகளில் விவசாயிகள் நடத்திவரும் போராட்டத்தில் ஊடகங்கள் மீது காணப்படும் கோபம் அசாதாரணமாகத் தெரிகிறது.

பல முக்கிய சேனல்களின் பத்திரிக்கையாளர்களுக்கு எதிராக மக்கள் பகிரங்கமாக குரல் எழுப்புகிறார்கள். அவர்களை சுவரொட்டிகள் மற்றும் வாசக அட்டைகள் மூலம் எதிர்க்கிறார்கள்.

ஜனநாயகத்தின் நான்காவது தூண் என்று சொல்லப்படும் ஊடகங்கள், மக்களின் பார்வையில் எங்கோ அதன் நம்பகத்தன்மையை இழந்துள்ளன.

மக்களின் நம்பிக்கையை இழந்த பிரதான ஊடகங்களின் இடத்தை சிறிய சேனல்கள் மற்றும் சமூக ஊடக சேனல்களைச் சேர்ந்த பத்திரிக்கையாளர்கள் நிரப்புகின்றனர். போராட்டம் நடக்கும் இடத்திலிருந்து இயங்கும் நூற்றுக்கணக்கான பத்திரிகையாளர்கள் தங்கள் யூடியூப் சேனல்களை இயக்கி, விவசாயிகள் போராட்டம் தொடர்பான செய்திகளை வெளியிடுகிறார்கள்.

பஞ்சாப் இளைஞர் கழக அமைப்புடன் தொடர்புடைய ஜோகிந்தர் ஜோகி கூறுகையில், 'சமூக ஊடகங்களும் உள்ளூர் சேனல்களும் இந்த இயக்கத்தை உயிர்ப்பித்தன. இல்லையெனில் அது இறந்திருக்கும். தேசிய ஊடகங்கள் இது குறித்து எந்த கருத்தும் தெரிவிக்கவில்லை."என்றார்.

"ஊடகங்கள் ஜனநாயகத்தின் நான்காவது தூண். சமூகத்தில் நிகழும் அநீதியை வெளிச்சம் போட்டுக்காட்டுவது ஊடகங்களின் பொறுப்பு. ஆனால் இங்கே ஊடகங்கள் விலைபோய்விட்டதாகத் தெரிகிறது. ஊடகங்கள் மக்களின் கருத்தை முன்வைக்காமல் அரசுக்கு ஆதரவை காட்டுகின்றன," என்று ஜோகி தெரிவிக்கிறார்.

"பல சேனல்கள் இந்தப் போராட்டத்தை பாகிஸ்தான் மற்றும் காலிஸ்தானுடன் இணைத்து காட்டுகின்றன. இதன் காரணமாக, ஊடகங்கள் மீதான கோபம் மக்களிடையே அதிகரித்து வருகிறது," என்கிறார் அவர்.

"அரசின் பாராட்டுக்களை பெறுவதற்காக விவசாயிகளை தேச விரோதிகளாக சித்தரிக்க ஊடகங்கள் முயற்சி செய்கின்றன. இந்தப்போராட்டத்தில் தேச விரோத சக்திகள் ஈடுபட்டுள்ளன என்பதைக் காட்டும் ஒரு வாய்ப்பை பத்திரிக்கையாளர்கள் தேடுகின்றனர் ," என்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ள ஓர் இளைஞர் தெரிவிக்கிறார்.

தேசிய ஊடகங்களில் சிறப்பு கவனம் தரப்படவில்லை

கடந்த இரண்டு மாதங்களாக விவசாயிகளின் இந்தப் போராட்டம் பஞ்சாபில் நடந்து கொண்டிருந்தது. விவசாயிகள் பல ஆர்ப்பாட்டங்கள், பேரணிகளை நடத்தி ரயில் போக்குவரத்தை நிறுத்தினர். ஆனால் அவர்களுக்கு தேசிய ஊடகங்களில் எந்த சிறப்பு இடமும் கிடைக்கவில்லை.

விவசாயிகள் டெல்லியின் எல்லையை அடையும் வரை தேசிய ஊடகங்கள் இந்த இயக்கத்தை புறக்கணித்ததாக கூறி விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளோர் கோபத்தில் உள்ளனர்.

அரசு சங்கடமாக உணரக்கூடிய அல்லது கோபம் கொள்ளக்கூடிய இதுபோன்ற விஷயங்களை முன்வைப்பதை இன்று ஊடகங்கள் தவிர்க்கின்றன என்று மூத்த பத்திரிக்கையாளர் அஜீத் அஞ்சும் கூறுகிறார்.

"அரசின் நிகழ்ச்சி நிரலை முன்னெடுத்துச்செல்லும் ஒரு கோணத்தை ஊடகங்கள் இப்போது தேடுகின்றன. விவசாயிகளின் இந்தப்போராட்டம் 2014 க்கு முன்னர் நடந்திருந்தால், டஜன் கணக்கான சேனல்களைச் சேர்ந்த ஐம்பதுக்கும் அதிகமான செய்தியாளர்கள் அங்கு சென்று விவசாயிகளின் கோரிக்கைகள் எத்தனை நியாயமானவை என்பதை நாட்டிற்குச் சொல்லியிருப்பார்கள்," என்று அஞ்சும் கூறுகிறார்.

இந்தியப் பிரதமர் நரேந்திர மோதி, விவசாயச் சட்டங்கள் விவசாயிகளின் நலனுக்காகவே உள்ளன என்றும் அவர்கள் பயனடைவதற்காகவே கொண்டு வரப்பட்டுள்ளன என்றும் கூறியுள்ளார். வதந்திகள் பரவி வருவதாகவும், விவசாயிகள் ஏமாற்றப்படுவதாகவும் பிரதமர் மீண்டும் மீண்டும் கூறிவருகிறார்.

"மோதி இன்று ஆட்சியில் இருக்கிறார். இதுபோன்ற சூழ்நிலையில் அரசுக்கு ஏற்புடையவகையில் இந்தப்போராட்டத்தை காட்ட ஊடகங்கள் முயற்சிக்கின்றன. அதனால்தான் வெளிநாட்டு நிதி மற்றும் காலிஸ்தான் கோணம் சேர்க்கப்படுகின்றன. இது துரதிர்ஷ்டவசமானது,"என்று அஜீத் அஞ்சும் தெரிவிக்கிறார்.

போராட்டத்தில் ஈடுபட்டுள்ள விவசாயிகளின் கோரிக்கைகளைப் புரிந்துகொண்டு அதை அரசிடமும், நாட்டிடமும் தெரிவிப்பதே ஊடகங்களின் பணியாக இருக்கவேண்டும். ஆனால், இதைச் செய்வதற்கு பதிலாக எப்படியாவது போராட்டத்தில் குறைபாட்டைக் கண்டுபிடிக்க ஊடகங்கள் விரும்புகின்றன என்று போராட்டத்தில் ஈடுபட்டுள்ள விவசாயிகள் நினைக்கிறார்கள்.

"ஆயிரக்கணக்கான விவசாயிகள் இங்கு அமர்ந்திருக்கிறார்கள். அதில் பல முதியவர்கள் உள்ளனர். இவர்களிடம் கேட்பதற்கு பதிலாக ஊடக கேமராக்கள் அவர்களுக்கு தகுந்தபடி பேசும் ஓரிருவரைத்தேடுகின்றன. 'ஜோ ஸோ நிஹால்' என்ற முழக்கத்தை நாங்கள் எழுப்பினால், காலிஸ்தானி என்று எங்களை தவறாக சித்தரிக்கிறார்கள் ," என்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ள பாபி என்ற இளைஞர் கூறுகிறார்.

சமூக ஊடகங்கள் மற்றும் உள்ளூர் சேனல்கள் மீது அதிக நம்பிக்கை

போராட்டத்தில் ஈடுபட்டுள்ளவர்கள் சமூக ஊடகங்கள் மற்றும் சிறிய உள்ளூர் ஊடக சேனல்களில் அதிக நம்பிக்கை வைத்துள்ளனர். ஹரியானா உத்சவ் என்ற சமூக ஊடக சேனலின் பத்திரிகையாளர் அனில் கத்ரி, டிக்ரி எல்லையில் கவரேஜ் செய்து வருகிறார். அவரைச்சுற்றி மக்கள் குழுமியுள்ளனர்.

அவர் தனது மொபைல் போன் மூலம் வீடியோக்களை பதிவு செய்கிறார். அதன்மூலம் நேரலை ஒளிபரப்பும் செய்கிறார். "நான் தொடர்ந்து இங்கிருந்து வீடியோக்களை வெளியிடுகிறேன். என்னுடைய பல வீடியோக்களை லட்சக்கணக்கானவர்கள் பார்த்துள்ளனர். எங்களது சேனல் சிறியதுதான். ஆனால் போராட்டம் பற்றிய கவரேஜ் மிகப்பெரிய வரவேற்பை பெற்றுள்ளது ," என்று அனில் கத்ரி தெரிவித்தார்.

"மக்கள் பெரிய ஊடகங்கள் மீது கோபமாக உள்ளனர். யூடியூபர் அல்லது சமூக ஊடக சேனல்கள் வரவேற்கப்படுகின்றன. சிறிய ஊடகங்கள் மட்டுமே போராட்டத்தை ஒளிபரப்புகின்றன. நாங்கள் உண்மையான படங்களைக் காட்டுகிறோம். எங்களுக்கு உள்நோக்கம் எதுவும் இல்லை. எனவே யாரும் எங்களை எதிர்க்கவில்லை. உண்மையான கவரேஜ் செய்பவர்களையே மக்கள் விரும்புகின்றனர்," என்று அனில் கூறுகிறார்.

2012 முதல் பத்திரிகையாளராக பணியாற்றிவரும் அனில் கத்ரி, 2019 ல் வேலையை விட்டுவிட்டு, சொந்தமாக யூடியூப் சேனலைத் தொடங்கினார். இப்போது அவருக்கு 30,000-க்கும் அதிகமான சந்தாதாரர்கள் உள்ளனர்.

"முன்பு நாங்கள் செய்திகளை அனுப்புவோம். பின்னர் ஆசிரியர்கள் அதை பயன்படுத்தலாமா வேண்டாமா என்று தீர்மானிப்பார்கள். இப்போது நாங்கள் நேரடி ஒளிபரப்பு செய்கிறோம். நாங்கள் எந்தவித இடையூறும் இல்லாமல் மக்களின் குரலை வெளிப்படுத்துகிறோம்," என்று அவர் மேலும் தெரிவித்தார்.

ராஜஸ்தானின் ஹனுமான்கட் மாவட்டத்தில் 'பப்ளிக் பில்லர் ' என்ற வெப் சேனலை நடத்தி வரும் மந்த்ருப் சிங்கும் விவசாயிகள் போராட்டத்தை பற்றி ஒளிபரப்ப இங்கு வந்துள்ளார். "இங்குள்ளவர்கள் தேசிய ஊடகங்கள் மீது மிகுந்த கோபத்தில் உள்ளனர். மைக்கைப் பார்த்தாலே மக்கள் கோபப்படுகிறார்கள். நாங்கள் ஊடகங்களிலிருந்து வந்தவர்கள் அல்ல, ஆனால் சமூக ஊடகங்களிலிருந்து வந்தவர்கள் என்று அவர்களிடம் சொன்னபிறகே பேசுகிறார்கள்," என்று மந்தருப் கூறுகிறார்.

அம்பாலாவைச் சேர்ந்த வினர் சிங், சீக்கிய சேனலுக்காக செய்திகளை அளித்து வருகிறார். பொது மக்களிடையே பிரதான ஊடகங்கள் மீதான கோபம் அதிகரித்து வருவதாக அவரும் நினைக்கிறார்.

"ஊடகங்களை சார்ந்திருக்க விரும்பாத ஒரு பெரிய போராட்டத்தை முதல் முறையாக காணமுடிகிறது. போராட்டத்தில் ஈடுபட்டுள்ளவர்கள் ஊடகங்களை வெறுக்கிறார்கள்," என்று அவர் தெரிவிக்கிறார்.

"முன்பு மக்கள் தங்கள் கருத்தை அரசிடம் கொண்டு செல்லும்பொருட்டு ஊடகங்களுக்கு முன்னால் வருவார்கள். ஆனால் பல பெரிய ஊடகங்களின் செய்தியாளர்கள் இங்கிருந்து விரட்டப்படுவதை நாங்கள் காண்கிறோம். போராட்டம் நடக்கும் இடத்திலிருந்து அவர்கள் வெளியேற்றப்படுகிறார்கள். ஊடகங்கள் மீதான இதுபோன்ற கோபத்தை இதற்கு முன்பு பார்த்ததில்லை," என்று வினர் சிங் குறிப்பிடுகிறார்.

" போராட்டத்தை இழிவுபடுத்துவதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதே இதற்கான காரணம். ஊடகங்களின் மீதான மக்களின் நம்பிக்கை தூளாகிவிட்டது. சேனலின் மைக் ஐடியைப் பார்த்த பிறகே மக்கள் இங்கு பேசுகிறார்கள். இது பத்திரிகையியல் தொடர்பாக தீவிர கேள்வியை எழுப்பியுள்ளது," என்று வினர் கூறுகிறார்..

இது ஒரு துரதிர்ஷ்டவசமான கட்டமாகும். இதில் பத்திரிக்கையாளர்கள் மற்றும் கட்சிகளின் செய்தித் தொடர்பாளர்கள் ஆகியோரை வேறுபடுத்துவது கடினமாக உள்ளது என்று மூத்த பத்திரிகையாளர் அஜீத் அஞ்சும் கூறுகிறார்.

இருப்பினும் சமூக ஊடகங்கள் ஒரு மாற்று விருப்பமாக நிற்கின்றன என்று அவர் உணர்கிறார். "அரசு அடக்கவோ அல்லது நசுக்கவோ விரும்பும் பல குரல்களை சமூக ஊடகங்கள் எழுப்பியுள்ளன. மக்கள் தங்களிடம் உள்ள வளங்கள் மூலம் தங்கள் குரலை எழுப்பியுள்ளனர்," என்று அஞ்சும் தெரிவிக்கிறார்.

"சமூக ஊடகங்களின் கண்ணோட்டத்தில் பார்த்தால், தங்கள் அடையாளத்தை உருவாக்க இது ஒரு சிறந்த வாய்ப்பு. கார்ப்பரேட் மீடியாக்கள் மீது இருக்கும் அழுத்தம், சமூக ஊடகங்கள் மீது இல்லை. அதனால்தான் சமூக ஊடக சேனல்கள் இன்னும் சுதந்திரமாக செயல்பட முடிகிறது," என்று அவர் குறிப்பிட்டார்.

அதிரடி பதில்

சையத் அக்ரம் ஒரு பெரிய சேனலில் தனது வேலையை விட்டுவிட்டு, ஒரு வருடத்திற்கு முன்பு 'தி நேஷன்' என்ற யூடியூப் சேனலை தொடங்கினார். அவரிடம் இப்போது சுமார் ஏழு லட்சம் சந்தாதாரர்கள் உள்ளனர். அவர் போராட்ட இடத்திலிருந்து தொடர்ந்து செய்திகளை ஒளிபரப்பி வருகிறார்.

"பெரிய ஊடகங்கள் காலியாக விட்ட இடத்தை சமூக ஊடகங்களும் வலை ஊடகங்களும் நிரப்புகின்றன. போராட்டத்தின் கவரேஜ் இதுபோன்ற மாபெரும் ஆதரவைப் பெறும் என்று நாங்கள் நினைக்கவில்லை. மக்கள் இப்போது எந்த நிலைச் சார்பும் இல்லாமல் அடிமட்டத்தில் உள்ளவர்களின் குரல்களை நேரடியாக கேட்க விரும்புகிறார்கள். நாங்கள் அதையே செய்கிறோம்,"என்று சையத் அக்ரம் கூறுகிறார்.

காசிப்பூர் எல்லையில் நாள் முழுக்க கவரேஜ் செய்தபின், நான் ஒரு பழைய பத்திரிகையாளர் நண்பருடன் ஒரு டிவைடரில் அமர்ந்திருந்தேன். அவரது கையில் சேனலின் மைக் ஐடியைப் பார்த்த பிறகு, சில இளைஞர்கள் வந்து எதிர்ப்புத் தெரிவிக்கத் தொடங்கினர்.

தாங்கள் கோபமடையக்காரணமான செய்திகளின் ஸ்கிரீன் ஷாட்களை தங்கள் மொபைலில் அவர்கள் வைத்திருந்தனர். ' செய்திகளை அவர்கள் பார்க்கும் கண்ணோட்டம் சரியானது அல்ல, சேனலின் நோக்கம் போராட்டத்தை இழிவுபடுத்துவது அல்ல,' என்று அந்தப் பத்திரிக்கையாளர் மிகவும் சிரமப்பட்டு அவர்களுக்கு புரிய வைத்தார்.

ஊடகங்கள் மீதான நம்பிக்கை குறைந்துள்ளதை போராட்டம் நடக்கும் இடத்தில் இருக்கும் பத்திரிக்கையாளர்களும் பொதுமக்களும் உணர்ந்துள்ளனர். முன்பு ஊடகங்களின் மைக்கைப் பார்த்ததும் மக்கள் அவர்களை நோக்கி ஓடுவார்கள். ஆனால் இப்போது மைக்கை வைத்துள்ள பத்திரிகையாளர்களை தங்கள் பின்னே மக்கள் ஓடவைப்பதற்கு இதுவே காரணமாக இருக்கலாம்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: