விவசாயிகள் போராட்டம்: இறப்பு, திருமணம், கல்வி - உணர்ச்சிப்பூர்வமான சம்பவங்களின் தொகுப்பு

இந்திய அரசு கொண்டு வந்துள்ள மூன்று வேளாண் சட்டங்களை உடனடியாக திரும்பப் பெற வலியுறுத்தி டெல்லியில் பல்லாயிரக்கணக்கான விவசாயிகள் ஒன்பதாவது நாளாக போராட்டம் நடத்தி வருகின்றனர்.

டெல்லியிலும் அதன் எல்லை பகுதிகளிலும் பஞ்சாப், ஹரியாணா, மகாராஷ்டிரா உள்ளிட் மாநிலங்களைச் சேர்ந்த விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். அவர்களுடன் கடந்த செவ்வாய்க்கிழமையும், நேற்றும் (டிசம்பர் 4) மத்திய அரசு நடத்திய பேச்சுவார்த்தையில் எந்த முடிவும் எட்டப்படவில்லை.

டெல்லியின் நடுங்கும் குளிரில் பல்லாயிரக்கணக்கான விவசாயிகள் உறுதியுடன் போராடி வரும் காணொளிகளும், புகைப்படங்களும் சமூக ஊடகங்களில் வைரலாகி வருகின்றன. இந்த நிலையில், விவசாயிகளின் போராட்ட களத்தில் நடந்துள்ள சில உணர்ச்சிப்பூர்வமான சம்பவங்களை இங்கு தொகுத்துள்ளோம்.

அதிகரிக்கும் விவசாயிகளின் உயிரிழப்புகள்

டெல்லியில் நடைபெற்று வரும் விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளோரில் ஏராளமானோர் வயது முதிர்ந்தவர்களாக உள்ளனர். பல்வேறு காரணங்களினால் போராட்டக் களத்திலேயே விவசாயிகள் உயிரிழக்கும் சம்பவங்கள் நடந்தேறி வருகின்றன. பலர் உடல் சுகவீனத்துடன் காணப்படுகின்றனர்.

இந்த நிலையில், போராட்டத்தில் களத்தில் உயிரிழந்த பஞ்சாபை சேர்ந்த இரண்டு விவசாயிகளின் குடும்பங்களுக்கு தலா ஐந்து லட்சம் ரூபாய் இழப்பீடு வழங்கி அந்த மாநில அரசு உத்தரவிட்டுள்ளது.

இது தொடர்பாக அறிக்கை வெளியிட்டுள்ள பஞ்சாப் முதல்வர் அமரிந்தர் சிங், "டெல்லியில் நடைபெற்று வரும் போராட்டத்தில் விவசாயிகள் இருவர் உயிரிழந்தது வேதனையளிக்கிறது. உயிரிழந்த இரு விவசாயிகளின் குடும்பத்தினருக்கும் அரசு நிதி உள்ளிட்ட உதவிகளை வழங்கும்" என்று தெரிவித்துள்ளார்.

இந்த நிலையில், போராட்டத்தின் எட்டாம் நாளான நேற்றுவரை (டிசம்பர் 3) உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை ஆறாக உயர்ந்துள்ளதாக தி இந்தியன் எக்ஸ்பிரஸ் நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது.

மகளின் திருமணத்தை தவறவிட்ட விவசாயி

டெல்லியின் காஸிபூர் எல்லையில் குவிந்துள்ள விவசாயிகளில் சுபாஷ் சீமாவும் ஒருவர். கடந்த ஒரு வாரமாக இங்கு மற்ற விவசாயிகளுடன் இணைந்து தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் அவர் இதன் காரணமாக தனது மகளின் திருமணத்தை பார்க்க முடியாத நிலை ஏற்பட்டதாக பல ஊடகங்களும் செய்தி வெளியிட்டுள்ளன.

"நான் வாழ்க்கை முழுவதையுமே விவசாயியாகவே கழித்துள்ளேன். அதுதான் என் வாழ்க்கையில் தற்போதுள்ள அனைத்தையும் கொடுத்துள்ளது. அதனால்தான், போராட்டக்களத்தை விட்டுவிட்டு வியாழக்கிழமை (டிசம்பர் 3) நடைபெறும் எனது மகளின் திருமணத்திற்கு செல்லவில்லை" என்று அவர் கூறியுள்ளதாக தி டைம்ஸ் ஆஃப் இந்தியா நாளிதழ் வெளியிட்டுள்ள செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.

"திருமணத்திற்கான அனைத்து ஏற்பாடுகளையும் நான் கிராமத்தில் செய்துவிட்டேன். உறவினர்களும் எனது மகன்களும் விழாவை பார்த்துக்கொள்வார்கள். நான் எனது மகளிடம் தினமும் அலைபேசியில் பேசும்போது, என்னை திரும்ப வருமாறு அவர் கூறுவார். ஆனால், இப்படிப்பட்ட சூழ்நிலையில், எனது விவசாய சகோதரர்களை விட்டுவிட்டு வர முடியாது என்று நான் கூறிவிட்டேன்" என்று அவர் மேலும் கூறியுள்ளார்.

இருப்பினும், தனது மகளின் திருமணத்தை காணொளி அழைப்பு மூலமாக பார்க்கவுள்ளதாக அவர் தெரிவித்திருக்கிறார்.

போராட்டக்களத்திலும் கல்வியை தொடரும் மாணவர்கள்

இந்திய அரசின் புதிய வேளாண் சட்டங்களுக்கு எதிரான போராட்டத்தில் பல விவசாயிகள் குடும்பத்துடன் பங்கேற்றுள்ளனர். இதில், பள்ளி, கல்லூரி படிக்கும் மாணவர்களும் அடக்கம்.

பஞ்சாபில் ஆறாம் வகுப்பு படித்து வரும் பதினோரு வயதான குர்சிம்ரத் கவுர், குடும்பத்தினர் டெல்லி போராட்டத்திற்கு தேவையான பொருட்களை தயார் செய்யபோது, இவர் தனது புத்தகங்களை மறக்காமல் எடுத்துக்கொண்டதாக இந்துஸ்தான் டைம்ஸின் செய்தி கூறுகிறது.

டெல்லியின் சிங்கு எல்லையில் குடும்பத்தினருடன் போராட்டத்தில் ஈடுபட்டு, பேருந்தில் தங்கி வரும் அந்த சிறுமி, "எனக்கு எப்போதெல்லாம் நேரம் கிடைக்குமோ அப்போதெல்லாம் நான் படிப்பேன். போராட்டத்தில் ஈடுபடுகிறோம் என்பதற்காக படிப்பை தவறவிட வேண்டுமென்று இல்லை. மற்ற தேர்வுகளை போன்றே, இம்மாத இறுதியில் நடைபெறும் பள்ளித் தேர்விலும் நான் நல்ல மதிப்பெண்களை பெறுவேன்" என்று அவர் கூறியுள்ளார்.

குர்சிம்ரத் கவுரை போன்று எண்ணற்ற மாணவர்கள் டெல்லியின் பல்வேறு எல்லைப்பகுதிகளில் நடைபெறும் போராட்டங்களில் குடும்பத்தினருடன் பங்கேற்றுள்ளபோதிலும், இணையம் வழியாக கல்வியையும் தொடர்ந்து வருவதாக செய்திகள் தெரிவிக்கின்றன.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: