You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
தேன் சுவையை கூட்ட சீன சர்க்கரை கலந்து கலப்படமா? பரிசோதனையில் திடுக்கிடும் தகவல்கள்
இந்தியாவில் விற்கப்படும் சில வகை தேனில், செயற்கையாக சுவையைக் கூட்ட சீன சர்க்கரை சிரப்பை சில தயாரிப்பாளர்கள் பயன்படுத்துவதை இந்திய அறிவியல் மற்றும் சுற்றுச்சூழல் மையத்தின் ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்துள்ளனர்.
இந்தியாவில் சுத்தமான தேனை தயாரிக்க வேண்டுமானால், அதற்கு அரசு நிர்ணயித்துள்ள 18 அம்ச அளவீடுகளை அந்த தேன் கொண்டிருக்க வேண்டும். அப்போதுதான் சுத்தமான தேன் ஆக அந்த தயாரிப்பு கருதப்படும்.
இந்தியாவில் கொரோனா வைரஸ் போன்ற சில வைரஸ் தொற்றுகளை குணமாக்க மருந்துடன் தேன் கலந்து உண்ணும் வழக்கம் உள்ளது. ஆனால், கலப்பட தேனால் அது பயனற்றதாகும் நிலை உள்ளது.
13 வகை தேன்கள் மீது பரிசோதனை
இந்த விவகாரத்தில் தேனின் தரத்தை அறிய 13 வகை தேன் ரகங்கள் கடந்த ஆகஸ்ட் முதல் நவம்பர் மாதத்திலான காலகட்டத்தில் வெவ்வேறு நிறுவனங்களிடம் இருந்து சிறு கடைகள் மற்றும் ஆன்லைன் மூலம் வாங்கப்பட்டன. அவற்றை ஆராய்ச்சியாளர்கள், இந்தியாவின் குஜராத் மாநிலத்தில் உள்ள கால்நடை மற்றும் உணவு பகுப்பாய்வு மற்றும் கற்றல் மையத்துக்கும் (CALF), தேசிய பால் மேம்பாட்டு வாரியத்துக்கும் ஜெர்மனியில் உள்ள ஆய்வகத்துக்கும் அனுப்பி வைத்தார்கள்.
அதில் 8 தேன்கள், பதப்படுத்தப்பட்ட பெரிய நிறுவனத்தின் மாதிரிகள். 5 ரகங்கள் தனித்துவமானவை. அதில் நான்கு ரகங்கள் பதப்படுத்தாத பச்சைத் தேன் வகை.
ஒவ்வொரு ரகத்திலும் அதே தயாரிப்பு தொகுப்பைச் சேர்ந்த பல மாதிரிகள் வாங்கப்பட்டன. சில ரகங்கள், வெவ்வேறான தயாரிப்பு தொகுப்பாக இருந்தன.
இதில், குஜராத்தில் உள்ள இரண்டு மையங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்ட தேன்களில், இந்திய உணவு பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய ஆணையம் அமல்படுத்தி இருக்கும் புதிய மதிப்பீட்டு அளவைகள் சரியாக உள்ளதா என பரிசோதிக்கப்பட்டன.
அதில், சி3, சி4, ஃபாரின் ஒலிகோசாச்சரைடுகள், Specific Marker for Rice (SMR) போன்றவை தான் தேனில் முக்கிய கலப்பட அளவைகள்.
இதில் சி4 சர்க்கரை அளவு, சோளம், கரும்பில் இருந்து எடுக்கப்படும். சி3 சர்க்கரை, அரிசி, பீட்ரூட் போன்றவற்றில் இருந்து எடுக்கப்படும். இது தவிர, ஒலிகோசாச்சரைடுகள் ஸ்டார்ச்சை அடிப்படையாகக் கொண்ட பாலி சாச்சரைடு சக்கரை, அரசி மற்றும் சோளத்தில் இருந்து எடுக்கப்படும்.
இதனால் இந்த மாதிரிகளின் தரத்தை அறிய அவை, ஜெர்மன் ஆய்வகத்திற்கு அனுப்பப்பட்டன. அங்கு Trace Marker for Rice syrup (TMR) மற்றும் Nuclear Magnetic Resonance (NMR) profiling எனப்படும் பரிசோதனைக்கு அவை உட்படுத்தப்பட்டன. இந்த இரண்டு பரிசோதனைகளும் தற்போதைய FSSAI தரத்தில் குறிப்பிடப்படவில்லை.
என்.எம்.ஆர் என்பது தேனின் கலப்படத்தைப் பார்க்க உதவும் ஒரு மேம்பட்ட சோதனை. ஆய்வு மேம்பட்டு வந்ததால், தேன் மாதிரிகள் இரண்டு ஆய்வகங்களுக்கு வெவ்வேறு கட்டங்களாக அனுப்பப்பட்டன.
இது குறித்து சிஎஸ்இ தலைமை இயக்குநர் சுனிதா நரெய்ன் கூறுகையில், "சுத்தமான தேன் என்ற பெயரில் பாதியளவு சர்க்கரை சிரப்புடன் தேன் தயாரிக்கப்பட்டாலும் அவை பரிசோதனையில் சரியானவையாக இருக்க வாய்ப்புண்டு. இதற்காக சி4, சி3 ரக பரிசோதனை நடத்தப்படும். இந்த பரிசோதனைகளில் அந்த தேன் சுத்தமானவை என முடிவுகள் வந்தாலும், ரைஸ் சிரப் எனப்படும் இனிப்புச் சர்க்கரை தன்மையை அறிய நடத்தப்படும் டிரேஸ் மார்க்கர் பரிசோதனையில் அவற்றில் கலக்கப்படும் செயற்கை சர்க்கரை அளவு தெரிந்து விடும்," என்று கூறினார்.
இந்த வகையில், சஃபோலா, மார்க்ஃபெட் சோனா, நேச்சர் நெக்டார் ஆகிய நிறுவனங்களின் தேன் தயாரிப்புகள் பரிசோதனையில் வெற்றி பெற்றன. என்எம்ஆர் பரிசோதனையில் தேன் தயாரிக்க பயன்படுத்தப்படும் கூறுகளின் அளவு கண்டறியப்பட்டாலும் அதில் எவ்வளவு கலப்படம் உள்ளது என்பதை கண்டறிய முடியவில்லை என்று சுனிதா நரெய்ன் தெரிவித்தார்.
சர்க்கரை சிரப்புகள் தயாரிக்கும் நிறுவனம்
இதேவேளை, தங்களுடைய ஆய்வின் அங்கமாக உத்தரகண்ட் மாநிலத்தில் உள்ள ஜாஸ்பூரில் இருக்கும் தேன் தயாரிப்பு ஆலையில் சோதனை நடத்தியபோது, அங்கு தேனில் கலப்படம் செய்ய பயன்படுத்தப்படும் சர்க்கரை சிரப் தயாரிக்கப்படுவது கண்டறியப்பட்டது.
சிஎஸ்இ குழுவினர் கொண்டு சென்ற தேனுடன் இந்த சிரப்பை கலந்த பிறகு அதை பரிசோதனைக்கு உட்படுத்தியபோது, உணவு பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய ஆணையத்தின் பரிசோதனை அளவீடுகளை அந்த தேன் தயாரிப்பு பூர்த்தி செய்வதாக இருந்தது தெரிய வந்தது.
"இதுபோன்ற ஃப்ரக்டோஸ் சிரப்புகள், ஒழுங்குமுறை பரிசோதனைகளில் வெற்றி பெற உதவுவதாகவும் இந்த வகை சிரப்புகள், அலிபாபா போன்ற ஆன்லைன் மின்னணு வர்த்தக இணையதளங்கள் மூலம் வாங்க முடிகிறது" என்று சிஎஸ்இ தலைமை இயக்குநர் சுனிதா நரெய்ன் தெரிவித்தார் தி ஹிந்து நாளிதழுக்கு அளித்த பேட்டியில் கூறியிருக்கிறார்.
உலக அளவில் தேனில் கலப்படம் செய்யப்படும் விவகாரம் மிகப்பெரிய பிரச்னையாக மாறி வருகிறது. இவை பரிசோதனை அளவீடுகளிலும் அறிய முடியாததாக இருப்பதால் பரிசோதனை நடைமுறையை கடுமையாக்கும் வகையில் வரைவுச்சட்டத்தை மத்திய அரசு உத்தேசித்திருக்கிறது. இதன் அம்சங்களுக்கு உடன்பட தேன் தயாரிப்பு நிறுவனங்களுக்கு அடுத்த ஆண்டுவரை அவகாசம் அளிக்கப்பட்டிருக்கிறது.
இதுபோன்ற கலப்பட தேன்களின் சந்தை வருகையால், உண்மையாகவே தேன் கூட்டில் இருந்து தேனை சேகரிக்கும் தொழிலாளர்களின் எதிர்காலம் கேள்விக்குறியாகியிருக்கிறது. அதற்கு காரணம், தேன் கூட்டில் இருந்து நேரடியாக சேகரிக்கப்படும் தேனுக்கு நிர்ணயிக்கப்படும் விலையை விட, கலப்பட தேனின் விலை அசல் விலையில் பாதிக்கும் குறைவாக கிடைக்கிறது.
டாபர் நிறுவனம் விளக்கம்
இந்த நிலையில் டாபர் நிறுவன தேனில் கலப்படம் இருப்பதாக வெளியாகும் தகவலை அந்த நிறுவனம் மறுத்திருக்கிறது. இது தொடர்பாக அந்த நிறுவனம் வெளியிட்ட அறிக்கையில், இந்தியாவிலேயே என்எம்ஆர் பரிசோதனை கருவியைக் கொண்ட ஒரே தேன் தயாரிப்பாளராக நிறுவனம் உள்ளது என்றும் ஜெர்மனின் ப்ரக்கர் நிறுவனம் கூட இதற்கு சான்று கூறியிருப்பதாகவும் டாபர் நிறுவனம் தெரிவித்துள்ளது.
பிற செய்திகள் :
- ரஜினி அரசியல்: "ஆட்சி மாற்றம் வரும்; உயிரை கொடுக்கவும் தயார்"
- ரஜினியுடன் கைகோர்த்த இரு முக்கிய பிரபலங்கள் - பின்னணி என்ன?
- ரஜினி கட்சி ஜனவரியில் தொடக்கம்: டிசம்பர் 31ல் தேதி அறிவிப்பு
- "என்கிட்ட 20 ரூபாய் தான் இருக்கு, வரலாமா?" ஆட்டோ ஓட்டுநரிடம் கேட்ட முன்னாள் எம்.எல்.ஏ!
- விவசாயிகள் போராட்டத்தில் தமிழக விவசாயிகள் எங்கே? அய்யாக்கண்ணு என்ன செய்கிறார்?
- முன்னாள் நீதிபதி சி.எஸ். கர்ணன் சென்னையில் கைது - தொடரும் சர்ச்சை வரலாறு
- சர்வதேச கிரிக்கெட்டில் முதல் விக்கெட்டை வீழ்த்திய நடராஜன் - அசத்தும் தமிழக வீரர்
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்