You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
நன்மாறன் மரணம்: "என்கிட்ட 20 ரூபாய் தான் இருக்கு, வரலாமா?" ஆட்டோ ஓட்டுநரிடம் கேட்ட முன்னாள் எம்.எல்.ஏ
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் நன்மாறன் இன்று மதுரை ராஜாஜி அரசு மருத்துவமனையில் காலமானார்.
மதுரை கிழக்கு சட்டமன்றத் தொகுதியில் இருமுறை சட்டப்பேரவை உறுப்பினராக இருந்த நன்மாறன் வாழ்வில் நடந்த ஓர் உண்மைச் சம்பவம் அவர் மறைந்த இன்று மீண்டும் பகிரப்படுகிறது.
"என்கிட்ட 20 ரூபாய்தான் இருக்கு, வரலாமா?"
மதுரை முனிச்சாலையை சேர்ந்த பாண்டியன் என்பவர், ஆட்டோ ஓட்டும் தொழில் செய்து வருகிறார். அவர், கடந்த ஆண்டு நவம்பர் மாதம் 27-ம் தேதி காலையில் மதுரை அண்ணா சாலை பேருந்து நிலையத்திலிருந்து கோரிப்பாளையம் நோக்கிச் சென்ற போது, அரசு மருத்துவமனை அருகே உள்ள பேருந்து நிலையத்தில், முதியவர் ஒருவர் பேருந்தில் ஏற முற்பட்டுள்ளார்.
முதியவரின் ஒற்றைக்கால் செருப்பு அப்போது கீழே தவறி விழுந்துள்ளது. எனவே அவர் பேருந்திலிருந்து இறங்கிச் செருப்பைத் தேடியுள்ளார். அவரை அடையாளம் கண்ட ஆட்டோ ஓட்டுநர் பாண்டியன், முதியவரிடம் சென்று ஆட்டோவில் வரும்படி கேட்டுள்ளார்.
அதற்கு அந்த முதியவர், "என்னிடம் 20 ரூபாய்தான் இருக்கிறது. கொண்டு போய் விட்டுவிடுவீர்களா?" என்று கேட்டிருக்கிறார்.
"சரிங்கய்யா" என்று சொல்லி அவரை ஆட்டோவில் ஏறக்கூறிய பாண்டியன், ஆட்டோவில் இருந்த அந்த முதியவருடன் ஒரு செல்ஃபி எடுத்து அதனை ஃபேஸ்புக்கில் பதிவிட்டார்.
அதில், "வெறும் 20 ரூபாயுடன், ஒற்றைக் கால் செருப்பைக் கையில் எடுத்துக்கொண்டு மறு செருப்பைத் தேடித் திரிந்த அந்தப் பெரியவர் மதுரை கிழக்கு தொகுதியில் இரு முறை எம்.எல்.ஏ.வாக இருந்தவர் எளிமையின் சிகரமான தோழர் நன்மாறன் அய்யா. கொள்கையில் முரண்பாடுகள் இருந்தாலும் மிகவும் எளிமையான, நேர்மையான, மனிதநேயம் கொண்ட மனிதரான அவரை எனக்கு மிகவும் பிடிக்கும்" என்று பாண்டியன் தனது பேஸ்புக்கில் குறிப்பிட்டுள்ளார். இந்த படம் தற்போது சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது.
யார் இந்த நன்மாறன்?
"மேடை கலைவாணர்" என்று அழைக்கப்படும் நன்மாறன் (எ) ராமலிங்கம், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியில் தீவிரமாகப்பணியாற்றியவர்களில் ஒருவர். மதுரையில் முக்கிய அரசியல் கட்சி தலைவர்களின் பெயரை பட்டியலிடும் போது இவர் தவிர்க்க முடியாத நபராக கருதப்படுகிறார்.
மதுரை கிழக்கு தொகுதியில் இரண்டு முறை எம்.எல்.ஏ ஆக இருந்த போதும் எளிமையான வாழ்க்கையை வாழ்ந்தவர்.
தமிழில் முதுகலை மேல்படிப்பு முடித்த பின்னர் ரயில்வே தொழிலாளர் சங்கத்தில் தட்டச்சராக நன்மாறன் பணியாற்றினார். தொடர்ந்து கைத்தறி தொழிலாளர் சங்கத்திலும், பஞ்சாலை தொழிலாளர் சங்கத்திலும் ஊழியராக பணியாற்றினார்.
தமிழக அரசியலில் கலைஞர், ஜெயலலிதா போன்ற தலைவர்களால் மதிக்கப்பட்ட இவர், 2001, 2006ஆம் ஆண்டுகளில் நடந்த சட்டமன்ற தேர்தலின் போது மதுரை கிழக்கு தொகுதியில் போட்டியிட்டார். அப்போது அவருக்காக ஜெயலலிதா வாக்கு சேகரித்தார்.
ஆரப்பாளையத்தில் மனைவியுடன் வசித்து வரும் நன்மாறனுக்கு 2 மகன்கள் உள்ளனர். மூத்த மகன் குணசேகரன் நாகமலை புதுக்கோட்டையில் இருக்கும் பாண்டியன் (தமிழ்நாடு) கிராம வங்கியில் பணியாற்றுகிறார். இளைய மகன் ராஜசேகரன் மதுரை அரசு மருத்துமனையில் தற்காலிகப் பணியில் இருக்கிறார்.
பிற செய்திகள்:
- சிக்கலில் சீனா: மின்சாரத்துக்கு அடுத்து டீசலுக்கும் தட்டுப்பாடு
- இயற்கைக்கு பாதிப்பின்றி உடலுறவு கொள்வது எப்படி? பாலுறவும் பருவநிலை மாற்றமும்
- ஒரே நாடு ஒரே சட்டம் - "தமிழ் இனப் படுகொலையின் இன்னுமொரு பரிமாணம்": விக்னேஷ்வரன்
- பொறியியல் படிப்புகள்: 5 ஆண்டுகளில் இல்லாத மாணவர் சேர்க்கை - 4 காரணங்கள்
- டி20 உலகக் கோப்பையில் இந்தியாவுக்கு பாகிஸ்தான் செய்த 'நன்மை'
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யுடியூப்