You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
தங்கம் தேடும் ஆந்திர கடலோர மக்கள்: நிவர் புயல் கொண்டு வந்ததா?
நிவர் புயலால் தமிழகம், புதுவை மற்றும் ஆந்திர பிரதேசத்தை சேர்ந்த பல பொதுமக்களும் விவசாயிகளும் கடும் இழப்பை சந்தித்துள்ளனர்.
பல இடங்களில் குடியிருப்பு பகுதிகள் தண்ணீர் சூழ்ந்தும், சாலைகள் துண்டிக்கப்பட்டும் மக்கள் அவதிப்பட்ட அதே நேரத்தில், ஆந்திராவின் கிழக்கு கோதாவரி மாவட்டத்தை சேர்ந்த பலர் வங்க கடலில் இருந்து தங்கத்தை தேடும் பணியில் தீவிரமாக ஈடுபட்டனர்.
ஆம், நிவர் புயல் கரையை கடந்த பிறகு, ஆந்திர பிரதேசத்தின் கிழக்கு கோதாவரி மாவட்டத்தின் கடலோர கிராமங்களை சேர்ந்த மக்கள் கடற்கரையில் கடந்த வெள்ளிக்கிழமை முதல் தங்கத்தை ஆவலோடு தேடி வருகின்றனர்.
குறிப்பாக, காக்கிநாடாவுக்கும், உப்படா கிராமத்துக்கும் இடைப்பட்ட சில பகுதிகளில் உள்ள மீனவர்கள் ஏற்கனவே தங்கத்தைக் கண்டெடுத்துள்ளதாக கூறுகின்றனர்.
இது குறித்த செய்தி மற்ற பகுதிகளுக்கு பரவவே நூற்றுக்கும் அதிகமான மக்கள் உப்படா கிராமத்துக்கு விரைந்து தங்களுக்கும் அதிர்ஷ்டம் உள்ளதா என்பதை பரிசோதிக்க தொடங்கினர்.
இது தொடர்பாக பிபிசி தெலுங்கு மொழி சேவையிடம் பேசிய சூர்யராவ் பேட் என்ற பகுதியை சேர்ந்த அஞ்சம்மா என்ற பெண், "கடந்த ஆண்டு கூட எங்களுக்கு இந்தப் பகுதியில் சில சிறிய தங்க மணிகள் கிடைத்தன" என்று கூறினார்.
"அதற்காகத்தான் நாங்கள் இங்கு மீண்டும் வந்துள்ளோம். ஆனால், இந்த முறை இரண்டு நாட்கள் தேடியும் இதுவரை எதுவும் கிடைக்கவில்லை. இருப்பினும், நான் வசிக்கும் பகுதியை சேர்ந்த சிலருக்குத் தங்கம் கிடைத்துள்ளதாக கூறுகின்றனர். ஆனால், எவ்வளவு என்று எனக்கு தெரியாது," என்று அவர் மேலும் கூறினார்.
பிபிசியிடம் பேசிய காக்கிநாடாவை சேர்ந்த லக்ஷ்மண் என்பவரும் இதே கருத்தை கூறுகிறார். "பொதுவாக ஒவ்வொரு ஆண்டும் உப்படா கிராமத்தை ஒட்டிய வசிப்பிடங்கள் புயல்களினால் பாதிக்கப்படுகின்றன. கடல் முன்னோக்கி வருவதால் வீடுகள் உள்ளிட்டவையும் சேதத்துக்கு உள்ளாகின்றன. அதேபோன்று வெள்ளத்தின்போதுகூட பல வீடுகளும், பொருட்களும் கடலுக்குள் இழுத்துச் செல்லப்படுகின்றன. எனவே, அவை கரையொதுங்கும்போது மதிப்புமிக்க பொருட்கள் ஏதாவது கிடைக்கிறதா என்பதை மக்கள் நோக்குகின்றனர்," என்று அவர் கூறுகிறார்.
"சில தடவை கடற்கரைக்கு குளிக்க வருபவர்கள் தங்களது மோதிரம், கம்மல் உள்ளிட்ட ஆபரணங்களை தவற விடுவதுண்டு. எனவே, அதுபோன்ற ஆபரணங்கள் கரையொதுங்கும் வாய்ப்புள்ளதால் மக்கள் தொடர்ந்து அவற்றைத் தேடி வருகின்றனர்," என்கிறார் அவர்.
இதுவரை ஆந்திர பிரதேசத்தின் வருவாய்த்துறை அதிகாரிகள் இந்த கிராமத்தை நேரில் பார்வையிடவில்லை என்பதால் மக்களின் தேடுதல் வேட்டை தடையின்றித் தொடர்கிறது.
இந்த நிலையில், டைம்ஸ் ஆஃப் இந்தியா நாளிதழுக்கு பேட்டியளித்துள்ள உள்ளூர் காவல் நிலையத்தை சேர்ந்த உதவி காவல் ஆய்வாளர் லோவு ராஜு, "வீடுகள் மற்றும் கோயில்களுக்கு அடிக்கல் நாட்டும்போது சிறிய தங்க மணிகள் அல்லது துகள்களைப் புதைப்பது இந்தப் பகுதிகளில் வழக்கம். கடல் அரிப்பின் காரணமாக இங்குள்ள பழைய கட்டடங்கள் அவ்வப்போது இடிந்து விழுவதால், தங்கத் துகள்களும் குப்பைகளுடன் கடலுக்குள் கொண்டு செல்லப்பட்டிருக்க வேண்டும். நிவர் சூறாவளி கடலோரப் பகுதியை மாற்றியமைத்துள்ளது. எனவே, இந்த காரணமாக சில தங்கத் துகள்கள் கடல் படுகையிலிருந்து கடற்கரையில் ஒதுங்கியிருக்க வேண்டும்" என்று கூறியுள்ளார்.
பிற செய்திகள் :
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்