You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
கொரோனா எதிர்ப்புத்திறன் குழந்தை: சிங்கப்பூரில் மருத்துவத்துறையை ஆச்சரியமூட்டிய பிரசவம்
சிங்கப்பூரில் கொரோனா நோய் எதிர்ப்புச் சக்தியுடன் பிறந்த குழந்தை, அதன் பெற்றோருக்கு மகிழ்ச்சியையும், மருத்துவர்களுக்கு ஆச்சரியத்தையும் அளித்துள்ளது.
அக்குழந்தையின் உடலில் கொரோனா வைரஸுக்கு எதிரான ஆன்டிபாடிகள் (வைரசுக்கு எதிராகப் போராட ரத்தத்தில் உருவாகும் ஒருவகைப் புரதம்) இருப்பது பரிசோதனையில் தெரியவந்துள்ளது.
இந்நிலையில் கொரோனா பாதித்த கர்ப்பிணித் தாயிடமிருந்து கருவில் உள்ள குழந்தைக்கு நோய்த்தொற்று பரவுமா என்பது தொடர்பாக எழுந்துள்ள பல்வேறு கேள்விகளுக்கு சிங்கப்பூரில் நடந்துள்ள இந்நிகழ்வின் மூலம் விடை கிடைக்கும் என நம்பப்படுகிறது.
தாயிடமிருந்து நோய் எதிர்ப்பாற்றல் புதிதாகப் பிறந்த குழந்தைக்கும் கடத்தப்பட்டிருக்கலாம் என மருத்துவர்கள் நம்புகின்றனர். கடந்த மார்ச் மாதம் இக்குழந்தையின் தாய் செலின் சான் (Celine Ng Chan) தாய்மையடைந்தார்.
அச்சமயம் அவர் தனது குடும்பத்தாருடன் ஐரோப்பாவுக்குச் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார்.
நாடு திரும்பிய பிறகு அவருக்குக் கொரோனா வைரஸ் தொற்று இருப்பது தெரியவந்தது. அதன் பின்னர் உரிய சிகிச்சை பெற்ற அவர், இம்மாத துவக்கத்தில் தனது இரண்டாவது குழந்தையைப் பெற்றெடுத்தார். செலினுக்கு ஏற்கெனவே இரண்டு வயதில் ஒரு மகள் இருக்கிறாள்.
செலின் பெற்றெடுத்த ஆண் குழந்தைக்கும் வைரஸ் தொற்று இருக்கிறதா என்பதைக் கண்டறிய மருத்துவர்கள் பரிசோதனை மேற்கொண்டபோது அக்குழந்தையின் உடலில் கோவிட்-19 நோய்க்கு எதிரான 'ஆன்டிபாடி'கள் இருப்பதைக் கண்டு ஆச்சரியமடைந்தனர். தாயிடமிருந்து நோய் எதிர்ப்பாற்றல் குழந்தைக்குக் கடத்தப்பட்டிருக்க வேண்டும் என்று அவர்கள் கருதுகின்றனர்.
கர்ப்பிணிப் பெண்ணிடமிருந்து கர்ப்ப காலத்தில் கருவில் உள்ள குழந்தைக்கு கொரோனா வைரஸ் தொற்று பரவுமா என்பது குறித்து தெளிவான ஒரு முடிவுக்கு உலக சுகாதார அமைப்பு இன்னும் வரவில்லை. இன்றைய தேதி வரை கருப்பையைச் சுற்றியுள்ள திரவத்திலோ அல்லது தாய்ப்பாலிலோ கொரோனா வைரஸ் தொற்று கண்டறியப்பட்டதாக தகவல் இல்லை.
எனினும், கர்ப்ப காலத்தில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட பெண்கள் பெற்றெடுக்கும் குழந்தைகளிடம் வைரஸ் தொற்றுக்கு எதிரான 'ஆன்டிபாடி'கள் இருப்பது கண்டறியப்பட்டுள்ளதாக சீன மருத்துவர்கள் கடந்த அக்டோபர் மாதம் தெரிவித்திருந்தனர். இத்தகவல் journal Emerging Infectious Diseases என்ற மருத்துவ இதழ் ஒன்றில் வெளியானது.
இதேபோல் கொரோனா வைரஸ் தொற்று உள்ள கர்ப்பிணிப் பெண்ணிடமிருந்து அவருக்குப் பிறக்கும் குழந்தைக்கு நோய்த்தொற்று பரவுவது மிக அரிதான நிகழ்வாக இருக்கும் என்று New York-Presbyterian/Columbia University Irving Medical Center தெரிவித்துள்ளது.
கொரோனா பாதித்த தாயின் பிரசவ அனுபவங்கள்
கொரோனாவால் பாதிக்கப்பட்டபோது தமக்கு ஏற்பட்ட அனுபவங்களைப் பேட்டி ஒன்றில் விவரித்துள்ளார் செலின்.
31 வயதான அவர் நவம்பர் 7ஆம் தேதி பிறந்த தனது மகனுக்கு அல்ட்ரின் என்று பெயர் சூட்டியுள்ளார். இவருக்கு ஏற்கெனவே அல்ட்ரினா (Aldrina) என்ற இரண்டு வயது மகள் இருக்கிறாள்.
"எனக்கு மூன்று இளைய சகோதரர்கள் உள்ளனர். அவர்களோடு வளர்ந்து ஆளானதால் ஆண்களுடன் சகஜமாகப் பேசிப் பழகுவேன். எனக்கும் ஒரு ஆண் குழந்தை பிறக்கவேண்டும் என்ற விருப்பம் இயல்பாகவே என் மனதில் எழுந்தது. கடந்த மார்ச் மாதம் குடும்பத்துடன் ஐரோப்பாவுக்குச் சுற்றுப்பயணம் மேற்கொண்டோம். எனது கணவர், எனது பெற்றோருடன் மேற்கொண்ட அந்தப் பயணம் முடிந்து நாடு திரும்பிய போதுதான் கொரோனா வைரஸ் தொற்று பாதிப்பு இருப்பது உறுதியானது," என்கிறார் செலின்.
- கொரோனா சந்தேகங்கள்: முக்கிய கேள்விகளும் அதற்கான பதில்களும்
- கொரோனா வைரஸ்: உங்களை தற்காத்துக் கொள்வது எப்படி?
- கொரோனா வைரஸ் சிகிச்சைக்கு மருந்து எப்போது கிடைக்கும்?
- கொரோனா வைரஸ்: எந்தெந்த பரப்புகளில் எவ்வளவு நேரம் உயிர் வாழும்?
- கொரோனா வைரஸ் : இதுவே கடைசி கொள்ளை நோய் அல்ல
- கொரோனா வைரஸ்: கோவிட் - 19 பற்றி நமக்கு தெரியாத விஷயங்கள் என்ன?
கணவருக்கும் தந்தைக்கும் தொற்று ஏற்படவில்லை. செலினுக்கும் அவரது மகள் அல்ட்ரினாவுக்கும் லேசான காய்ச்சல் மட்டுமே இருந்தது. சற்றேறக்குறைய இரு வாரங்களுக்கு சிகிச்சை பெற்ற பின்னர் மருத்துவமனையிலிருந்து வீடு திரும்பியுள்ளனர். ஆனால், செலினின் 58 வயது தாயார் மரணத்தின் விளிம்பு வரை சென்று மீண்டுள்ளார். சுமார் 4 மாதங்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த அவருக்கு 29 நாட்கள் செயற்கை சுவாசம் அளிக்கப்பட்டது.
"நான் இரண்டாவது முறை கருவுற்று 10 வாரங்கள் ஆன நிலையில்தான் கொரோனா பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டது. கருவுற்ற பெண்ணிடமிருந்து கருவில் உள்ள குழந்தைக்குக் கொரோனா வைரஸ் பரவாது என படித்திருந்ததால் நான் பயப்படவில்லை. எனக்கு முன்பாக சிங்கப்பூரில் நடாஷா, பீலே (Pele) தம்பதியரும் வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டிருந்தனர்.
"அப்போது நடாஷா கருவுற்றிருந்தார். தங்களின் முதல் குழந்தையை எதிர்பார்த்திருந்த வேளையில் இருவரும் கொரோனா காய்ச்சலால் பாதிக்கப்பட்டனர். கருவுற்ற 36வது வாரத்தில் நடாஷாவுக்கு வைரஸ் தொற்று இருப்பது கண்டறியப்பட்டது. ஏப்ரல் 26ஆம் தேதி அவருக்குப் பிரசவமானது. சிங்கப்பூரில் கோவிட்-19க்கு எதிரான 'ஆன்டிபாடி'களுடன் பிறந்த முதல் குழந்தை அதுவாக இருக்கலாம்," என்கிறார் செலின்.
கர்ப்ப காலத்தில் வைரஸ் தொற்று ஏற்பட்டு பின்னர் அதிலிருந்து மீளும் பெண்கள் பெற்றெடுக்கும் குழந்தைகள் ஆரோக்கியமாகவும் எந்தவித நோய் அறிகுறிகளும் இன்றி பிறந்தால் அக்குழந்தைகளுக்கு தொற்று ஏற்பட்டிருக்க வாய்ப்பில்லை என்கிறார்கள் மருத்துவ நிபுணர்கள்.
"கொரோனா வைரஸ் பாதிப்பு இருந்தபோதிலும் நான் தாய்மை அடைந்திருந்த காலமும் குழந்தைப் பிறப்பும் சுமூகமாக இருந்தன. எனது மகன் அல்ட்ரினை நல்லவிதமாக பெற்றெடுத்தது மகிழ்ச்சி அளிக்கிறது. ஒரு வழியாக எனது கோவிட்-19 பயணம் முடிவுக்கு வந்திருப்பது நிம்மதி அளிக்கிறது," என்கிறார் செலின் சான்.
அவரது பிரசவமும் குழந்தையும் மருத்துவத்துறை சார்ந்த பல கேள்விகளுக்கும் சந்தேகங்களுக்கும் முடிவுரை எழுத வாய்ப்புள்ளதாக மருத்துவர்கள் கூறுகின்றனர்.
பிற செய்திகள் :
- அரசியல் பிரவேசம் குறித்து ரஜினிகாந்த்: “விரைவில் எனது முடிவை அறிவிப்பேன்”
- இலங்கை சிறை துப்பாக்கிச் சூடு: உயிரிழந்தோரின் எண்ணிக்கை 8 ஆக உயர்வு
- தமிழகத்தில் மீண்டும் புயல் வருமா?: கடலோர மாவட்டங்களுக்கு மீண்டும் கன மழை எச்சரிக்கை
- கொரோனா சடலங்களை எரிக்க பணம் கேட்கும் இலங்கை அரசு: அதிர்ச்சியில் தாயக முஸ்லிம்கள்
- 'பழிவாங்கும்' போலி சர்ச்சை படம் - சீனா மன்னிப்பு தெரிவிக்க வலியுறுத்தும் ஆஸ்திரேலிய பிரதமர்
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்