You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
வறுமையில் தேசம்: நாய்க்கு 19 அடி தங்க சிலை திறந்துவைத்த அதிபர்
துருக்மெனிஸ்தான் அதிபர், நாய் ஒன்றின் மிகப்பெரிய தங்க சிலையை இன்று திறந்து வைத்தார். இந்த நாய் சிலையின் உயரம் 19 அடி இது அலாபை எனும் இனத்தை சேர்ந்த நாய்; துருக்மெனிஸ்தான் அதிபர் குர்பங்குலிக்கு விருப்பமான நாய் இனமாக இருந்தது.
தமிழர்கள் காங்கேயம் இன காளையைக் கொண்டாடுவது போல துருக்மெனிஸ்தான் நாட்டு இனமான அலாப இன நாய் கொண்டாடப்படுகிறது.
மத்திய ஆசியாவில் மேய்ச்சல் நாயான இது, துருக்மெனிஸ்தான் நாட்டின் பாரம்பரிய சின்னமாக இருக்கிறது.
அந்நாட்டின் அதிபரால் இவ்வாறாக அந்நாய் இனம் அங்கீகரிக்கப்படுவது, கொண்டாடப்படுவது இது முதல்முறையல்ல. கடந்த ஆண்டு அந்த நாய் இனத்திற்காக ஒரு புத்தகத்தை அர்ப்பணித்துள்ளார் குர்பங்குலி.
நாயின் தங்க சிலையும் மக்கள் நிலையும்
ஒரு பக்கம் இவ்வாறு நாய்க்கான தங்கத்தில் ஆடம்பரமான சிலை திறந்து வைக்கப்பட, மறுபக்கம் அந்நாட்டு மக்கள் மிக மோசமான வறுமையில் உழன்று கொண்டிருக்கிறார்கள்.
பத்திரிகை சுதந்திரம் மிக மோசமாக உள்ள நாடுகளில் இதுவும் ஒன்று. எந்தளவிற்கு என்றால் பத்திரிகை சுதந்திரம் மிக மோசமாக உள்ள நாடுகளின் பட்டியலில் வட கொரியாவிற்கு ஓரிடத்திற்கு மேலே இந்த நாடு உள்ளது.
எங்கு உள்ளது இந்த நாயின் சிலை?
யுரேஷியா நெட் தரும் தகவல்களின்படி இந்த தங்க நாய் சிலையானது, துருக்மெனிஸ்தான் அரசு ஊழியர்கள் குடியிருப்பு பகுதியில் திறந்து வைக்கப்பட்டுள்ளது.
அந்த தங்க நாயின் சிலையைச் சுற்றி மின் விளக்கு அலங்காரம் செய்யப்பட்டுள்ளது.
இந்த தங்க நாயின் சிலையை வடிவமைக்க உண்டான செலவு குறித்து இதுவரை தெளிவாகத் தெரியவில்லை.
அரசு சொல்வது என்ன?
அந்த நாட்டின் அரசு ஊடகம், இந்த நாய் சிலை நாட்டின் தன்னம்பிக்கையையும், பெருமையையும் வெளிப்படுத்துவதாக தெரிவித்துள்ளது.
இந்த நாய் சிலை திறந்துவைக்கப்பட்ட பொழுது ஒரு சிறுவனுக்கு இந்த அலாப இன நாய் ஒன்று பரிசாக வழங்கப்பட்டுள்ளது. அதுமட்டுமல்லாமல் அகல்தெக எனும் பந்தயக் குதிரையும் வழங்கப்பட்டது.
அகல்தெக குதிரை இனத்தின் மீதும் பெரும் காதல் கொண்டவர் அந்நாட்டின் அதிபர். 2015ஆம் ஆண்டு துருக்மெனிஸ்தான் அதிபர் இந்த குதிரையை ஓட்டுவது போல தங்க சிலை ஒன்று திறந்து வைக்கப்பட்டது.
2017ஆம் ஆண்டு இந்த நாயை புதினுக்கு அன்பளிப்பாக வழங்கினார் அப்போது துருக்மெனிஸ்தான் அதிபர் நாயைக் கழுத்தை பிடித்து தூக்கிய காணொளி சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவியது.
பிற செய்திகள்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: