பாகிஸ்தான் நிர்வாக காஷ்மீரில் துல்லிய தாக்குதல் நடத்தியதா இந்தியா? மற்றும் பிற செய்திகள்

காஷ்மீர்

பட மூலாதாரம், Getty Images

பாகிஸ்தான் நிர்வாகத்துக்கு உட்பட்ட காஷ்மீர் பகுதியில் இந்திய ராணுவம் துல்லிய தாக்குதல் நடத்தியதாக இந்திய ஊடகங்கள் பலவற்றில் வியாழக்கிழமை செய்திகள் வெளியான நிலையில் அது பற்றிய விளக்கத்தை இந்திய ராணுவ நடவடிக்கைகள் பிரிவு தலைமை இயக்குநர் வெளியிட்டுள்ளார்.

இது தொடர்பாக அந்த ராணுவ பிரிவின் தலைமை அதிகாரி லெஃப்டிணன்ட் ஜெனரல் பரம்ஜித் சிங், நேற்று (19 நவம்பர் 2020, வியாழக்கிழமை), இந்திய ராணுவம், பாகிஸ்தான் நிர்வாகத்துக்கு உட்பட்ட காஷ்மீர் பகுதியில் (POK), எந்தவொரு தாக்குதலையும் நடத்தவில்லை என்று தெரிவித்தார்.

இந்திய ராணுவம் தாக்குதல் நடத்தியதாகச் சொல்வது பொய் செய்தி என்று அவர் தெளிவுபடுத்தினார்.

X பதிவை கடந்து செல்ல
X பதிவை அனுமதிக்கலாமா?

இந்தக் கட்டுரையில் X வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் X குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.

எச்சரிக்கை: வெளியார் தகவல்களில் விளம்பரங்கள் இருக்கலாம்

X பதிவின் முடிவு

சில ஊடகங்களில் பிஓகே பகுதிகளில், இந்திய ராணுவம், தீவிரவாதிகளின் ஏவுதளங்களில் தாக்குதல் நடத்தியதாகச் செய்திகள் வெளியானது. இந்தியாவின் அமைதிக்கு குந்தகம் விளைவிக்கும் ரீதியில் பாகிஸ்தான் நடந்து கொள்வதற்கு எதிராக இந்த தாக்குதல் நடத்தப்பட்டதாக அந்த செய்திகளில் கூறப்பட்டன.

கடந்த 13ஆம் தேதி, தீவிரவாதிகள் பயன்படுத்திய முகாம்கள் மீது இந்திய ராணுவம் தாக்குதல் நடத்தியிருந்த நிலையில், அந்த நடவடிக்கை குறித்து இந்திய செய்தி நிறுவனமான பிடிஐக்கு ராணுவ வட்டாரங்களில் இருந்து தகவல் தெரிவிக்கப்பட்டதாக கூறப்படுகிறது. அதைத்தொடர்ந்தே, சில ஊடகங்கள் அந்த நடவடிக்கையை மிகைப்படுத்தி பாகிஸ்தான் நிர்வாகத்துக்கு உட்பட்ட காஷ்மீர் பகுதியில் துல்லிய தாக்குதலை நடத்தியதாக செய்திகளை வெளியிட்டதாக அறிய முடிகிறது.

இந்தியா - சீனா எல்லை மோதல்: மைக்ரோ வேவ் ஆயுதங்கள் ஆயுதங்களை பயன்படுத்தியதா சீனா? அப்படி என்றால் என்ன?

கடற்படை

பட மூலாதாரம், US NAVY

லடாக்கில், சீன மக்கள் விடுதலை இராணுவம் (பி.எல்.ஏ) மைக்ரோ வேவ் ஆயுதங்கள் எனப்படும் நுண்ணலை ஆயுதங்களைப் பயன்படுத்தியதாக வெளிவந்த இணைய தள ஊடகச் செய்திகளை இந்திய ராணுவம் செவ்வாய்க்கிழமை அன்று முற்றிலுமாக மறுத்துள்ளது.

இந்திய இராணுவத்தின் கூடுதல் பொது இயக்குநரகம்(ஏ.டி.ஜி.பி.ஐ), தனது ட்விட்டர் தளத்தில், "கிழக்கு லடாக்கில் நுண்ணலை ஆயுதங்களைப் பயன்படுத்தியது குறித்த ஊடக செய்திகள் ஆதாரமற்றவை, அது குறித்த செய்தி போலியானது," என்று ட்வீட் செய்துள்ளது.

சீனாவின் கூற்று முற்றிலும் ஆதாரமற்றது என்று பாதுகாப்பு நிபுணரும் இந்தியன் டிஃபன்ஸ் ரிவியூ பத்திரிகையின் இணை ஆசிரியருமான கர்னல் தான்வீர் சிங் கூறுகிறார்.

"இதுபோன்ற ஆயுதங்கள் அனைத்தும் ஒரு நேர்க் கோட்டில் தாக்கக்கூடியன. மலைப்பாங்கான பகுதிகளில் பயன்படுத்த எளிதானவை அல்ல. இது அறிவார்ந்த சிந்தனைக்கு ஒவ்வாத ஒரு விஷயம். இது சீனாவின் விஷமப் பிரசாரமேயாகும்," என்று சிங் கூறுகிறார்.

ரூபா முட்கில் தீபாவளி குறித்து என்ன பேசினார்: ஐபிஎஸ் அதிகாரி இந்து மதத்தை தூற்றியதாக இணையத் தாக்குதல்

ரூபா

தீபாவளி பண்டிகை அன்று பட்டாசுகள் வெடிப்பதற்கு எதிராக ஐபிஎஸ் அதிகாரி ரூபா எழுதிய ஒரு ஃபேஸ்புக் பதிவு சர்ச்சையாகி உள்ளது.

இந்து மத பாரம்பரியத்தை புண்படுத்துவதாக ரூபாவை பலரும் சமூக ஊடகங்களில் விமர்சித்து வருகின்றனர். குறிப்பாக வலதுசாரி ஆதரவாளர்கள் அவரை கடுமையாக விமர்சித்து வருகின்றனர்.

"பட்டாசுகள் வெடிப்பது இந்து பாரம்பரியம் கிடையாது. உடனே இந்து மதத்தை தாக்கிப் பேசுவதாக கூறுபவர்கள், நம் புராணங்களிலும் வேதங்களிலும் பட்டாசுகள் குறித்து எந்த குறிப்பும் இல்லை என்பதை தெரிந்துகொள்ள வேண்டும். நம் நாட்டிற்குள் ஐரோப்பியர்கள் வந்தபோதுதான் பட்டாசுகள் அறிமுகமாகியது" என்று எழுதியிருந்தார்.

ஒபாமா புத்தகம்: இந்திய எதிர்காலத்தை குறைத்து மதிப்பிடுகிறாரா முன்னாள் அதிபர்? எது உண்மை?

ஒபாமா

பட மூலாதாரம், Getty Images

A Promised Land - அமெரிக்க முன்னாள் அதிபர் பராக் ஒபாமாவின் நினைவுக் குறிப்புகளை அடிப்படையாகக் கொண்ட இந்த புத்தகம், இந்தியாவில் சிறிது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்தியாவின் முக்கிய எதிர்கட்சியான காங்கிரஸின் தலைவர் ராகுல் காந்தியைப் பற்றிய அவரது வெளிப்படையான மனம் திறந்த கருத்துக்கள், காங்கிரஸ் ஆதரவாளர்களிடையே கோபத்தை தூண்டியது. ஆனால், ராகுலின் எதிர்ப்பாளர்கள் ஆரவாரக்குரலை எழுப்பியுள்ளனர்.

ஒபாமாவின் அரசியல் வாழ்க்கையை ஆதாரமாகக் கொண்ட நினைவுக் குறிப்பின் முதல் பகுதியான 'A Promised Land', என்ற புத்தகம் செவ்வாய்க்கிழமை வெளியிடப்பட்டது.

அலெக்சாண்டர் டுபியான்ஸ்கி: 50 ஆண்டுகளாக தமிழுக்கு உழைத்த ரஷ்ய தமிழறிஞர் மரணம்

டுபியான்ஸ்கி

ரஷ்ய நாட்டு தமிழறிஞர் பேராசிரியர் அலெக்சாண்டர் டுபியான்ஸ்கி, மாஸ்கோவில் கொரோனாவால் மரணம் அடைந்தார். அவருக்கு வயது 79.

இவர் கடந்த 50 ஆண்டு காலமாக தமிழ் பணியாற்றி வந்தார். ரஷ்யாவில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட நிலையில் அலெக்சாண்டர் டுபியான்ஸ்கி காலமானார்.

அவர் உயிரிழந்த தகவலை சென்னையில் உள்ள ரஷ்ய அறிவியல் கலாசார மையத்தின் நிர்வாகிகளும் உறுதிப்படுத்தியிருக்கிறார்கள்.

"தமிழ்நாடு எம்.பி.க்கு இந்தியில் பதில் தருவது விதி மீறல்" - மத்திய அமைச்சருக்கு மதுரை எம்.பி. சு.வெங்கடேசன் கடிதம்

வெங்கடேசன்

பட மூலாதாரம், SU. VENKATESAN

மத்திய ரிசர்வ் போலீஸ் படைக்கு ஆள் எடுக்கும் தேர்வு மையங்களை தமிழ்நாட்டிலும், புதுச்சேரியிலும் அமைக்க வேண்டும் என்று கோரி மத்திய அமைச்சர் நித்தியானந்த் ராய்க்கு ஒரு கடிதம் எழுதினார் மதுரை எம்.பி. சு. வெங்கடேசன்.

இதற்குப் பதில் அளித்து மத்திய அமைச்சர் நித்தியானந்த் ராய் கடந்த நவம்பர் 9-ம் தேதி வெங்கடேசனுக்கு ஒரு கடிதம் எழுதுகிறார்.

ஆனால், அந்தக் கடிதம் முழுவதும் இந்தி மொழியில் இருந்தது.

இந்நிலையில், இப்படி இந்தியில் எழுதிய அந்த பதிலை தம்மால் படிக்க முடியவில்லை என்றும், தமிழ்நாட்டு எம்.பி. ஒருவர் ஆங்கிலத்தில் எழுதிய கடிதத்துக்கு மொழி பெயர்ப்பு இல்லாமல் இந்தியில் பதில் தருவது விதி மீறல் என்றும் குறிப்பிட்டு, அந்த விதிகளை மேற்கோள் காட்டி, வெங்கடேசன் ஒரு பதில் கடிதம் எழுதியுள்ளார்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: