ஜோ பைடன் அமெரிக்க அதிபர் ஆவதால் இந்தியாவில் ஏற்படும் மாற்றங்கள் என்ன?

பட மூலாதாரம், Getty Images
- எழுதியவர், பிரதீப் குமார்
- பதவி, பிபிசி செய்தியாளர்
அமெரிக்காவின் அதிபராக தகுதி பெற்றுள்ள ஜோ பைடன் வெள்ளை மாளிகைக்கு வரும்போது, இந்தியா மற்றும் அமெரிக்கா இடையிலான உறவின் மீது என்ன தாக்கத்தை ஏற்படுத்தும் ? இந்த கேள்விகள் அரசியல் வட்டாரத்தில் கேட்கப்பட்டு வருகின்றன.
இந்த சர்சசைகளுக்கு இடையே, கடந்த செவ்வாய்க்கிழமை, இந்திய பிரதமர் நரேந்திர மோதி, ஜோ பைடனுடன் தொலைபேசியில் உரையாடினார்.
அவர்களின் உரையாடல் குறித்து ட்விட்டரில் விளக்கம் அளித்த மோதி, "பைடனுக்கு தொலைபேசியில் வாழ்த்து தெரிவித்தேன். இந்திய-அமெரிக்க முக்கியத்துவம் வாய்ந்த கூட்டுக்கான ஈடுபாட்டை நாங்கள் வெளிப்படுத்தினோம், மேலும் இந்திய-பசிஃபிக் பிராந்தியத்தில் Covid-19 தொற்று, காலநிலை மாற்றம் மற்றும் பரஸ்பர ஒத்துழைப்பு உள்ளிட்ட எங்கள் பொதுவான முன்னுரிமை பிரச்னைகள் குறித்து விவாதித்தோம்," என்று கூறியிருந்தார்.
இதேபோல, ஜோ பைடனின் அரசில் துணை அதிபர் ஆக தகுதி பெற்றுள்ள கமலா ஹாரிஸுடனும் இந்திய பிரதமர் மோதி பேசினார்.
அமெரிக்காவின் தற்போதைய அதிபர் டொனால்ட் ட்ரம்புடன், பிரதமர் நரேந்திர மோதி சுமூகமான உறவை கொண்டிருந்ததை பார்க்கும் போது, பைடன் உடனான அவரது உறவு மேலும் சம்பிரதாயமானதாக இருக்கும் என்றே நம்பப்படுகிறது.
எவ்வாறெனினும், இரு நாடுகளும் கடந்த இரு தசாப்தங்களாக வர்த்தக மட்டத்தில் மிக நெருக்கமாக வந்துள்ளன, அவை இனி பின்னோக்கிச் செல்ல முடியாதவை என வல்லுநர்கள் நம்புகின்றனர்.

பட மூலாதாரம், Getty Images
அமெரிக்க அதிகாரம் ஜோ பைடென் மற்றும் கமலா ஹாரிஸின் கைக்கு வந்ததும் அமெரிக்கா - இந்தியா இடையிலான உறவுகள் மீது என்ன தாக்கம் இருக்கும் என்பது குறித்து இந்திய-அமெரிக்க நட்புறவுச் சங்கம் ஒரு கருத்தரங்கை நடத்தியது.
"பைடன்-ஹாரிஸின் கீழ், அமெரிக்கா-இந்தியா உறவு சிறப்பாக இருக்கும்" என்று இந்திய அமெரிக்க நட்புறவு சங்கத்தின் நிறுவன தலைவரும் முன்னாள் தூதருமான சுரேந்திர குமார் கூறினார்.
"பாணி மாறலாம், ஆனால் அடிப்படையில் உறவு நன்றாக இருக்கும். இரு தரப்பு வர்த்தகம் வளரும், ஆனால் ஒரு மாற்றமாக அமெரிக்க வெளியுறவுக் கொள்கை பற்றிய முடிவு இனி ட்விட்டரில் இருக்காது" என்று அவர் தெரிவித்தார்.
முன்னாள் தூதர் ரொனென் சென், இரு நாடுகளுக்கும் இடையே சிறந்த உறவுகள் இருக்கும் என்று நம்பிக்கை தெரிவித்தார்.
"வெளியுறவு கொள்கை அடிப்படையில் டொனால்ட் ட்ரம்பின் காலத்தில் நடந்து கொண்டிருந்த அதே விஷயங்களை பைடென் தொடர்வார் என்று நான் நினைக்கிறேன். நடைமுறைகளில் சில சிறிய மாற்றம் இருக்கலாம், ஆனால் ஏறக்குறைய விஷயங்கள் ஒரே மாதிரியாகவே இருக்கும்," என்கிறார் ரொனென் சென்.
ரோனென் சென்னுக்கு, அவரது பதவிக்காலத்தில் ஜார்ஜ் புஷ் மற்றும் பராக் ஒபாமா மற்றும் ஜோ பைடன் ஆகியோரை பலமுறை சந்திக்க வாய்ப்பு கிடைத்தது, ஆனால் டொனால்ட் டிரம்ப்பை அவர் ஒரு முறை மட்டுமே சந்தித்தார்.
"டொனால்ட் டிரம்ப் பதவிக்காலத்தில் அமெரிக்காவின் வெளியுறவுக் கொள்கை எப்படி இருந்ததோ அதுவே பைடன் காலத்திலும் தொடரும். ஏனெனில், கடந்த இரண்டு தசாப்தங்களாக அமெரிக்க வெளியுறவுக் கொள்கையில் எந்த மாற்றமும் இருக்கவில்லை" என அவர் கருதுகிறார்.
இந்தியா-அமெரிக்க உறவுகள் எப்படி இருக்கும் என்பதை, சீனா-அமெரிக்கா இடையிலான உறவுகளுடன் ஒப்பிட்டு சில ஆய்வாளர்கள் பார்க்கிறார்கள்.

பட மூலாதாரம், Getty Images
இந்த அம்சம் குறித்து ரோனென் சென் கூறுகையில், "இது பற்றி இந்தியாவும் கவனம் கொண்டிருக்கிறது. சீனாவுடன் பல துறைகளில் போட்டி போடும் இந்தியா, சில நேரங்களில் அதை எதிர்க்கவும் செய்கிறது. ஆனால் மோதல் சூழ்நிலை இருக்காது. புவிசார் அரசியல் ரீதியாகவும், இந்தியா தொடர்ந்து அமெரிக்காவிற்கு முக்கியமானதாக இருக்கும், ஆனால் சீனாவின் விஷயத்தில் அப்படி இருக்காது. காரணம், அது நமது பிராந்திய உரிமைகளுக்கு ஆதரவாக இருக்காது. சீனா நமக்காக துருப்புக்களை அனுப்பாது," என்று ரொனென் கூறினார்.
எனினும், இந்தியா மற்றும் அமெரிக்காவால், பாதுகாப்புத் துறையில் ஒத்துழைப்பை அதிகரிக்க முடியும் என்று ரோனென் சென் நம்புகிறார்.
கடந்த நான்கு ஆண்டுகளில் நிறைய முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது, ஆனால் இன்னும் நிறைய விஷயங்கள் நிலுவையில் உள்ளன. இரு நாடுகளுக்கும் இடையிலான 2005 உடன்படிக்கை முழுமையாக பின்பற்றப்படவில்லை, 1987 ல் இருந்து இரு நாடுகளும் பாதுகாப்புத் துறையில் ஒத்துழைப்பை அதிகரிக்கத் தொடங்கின.
பாதுகாப்பு விவகாரங்களில் அமெரிக்காவின் மிக நெருங்கிய கூட்டாளிகளில் இந்தியாவும் ஒன்று.
மேஜர் ஜெனரல் அசோக் மேத்தாவின்படி, 1970களின் இந்திய-சோவியத் நட்பை விட, இந்தியாவுக்கும் அமெரிக்காவுக்கும் இடையிலான தற்போதைய உறவு ஒரு சிறந்த நிலையை அடைந்துள்ளது.
1975ல் இந்தியாவும் அமெரிக்காவும் ஒரே ஒரு ராணுவ பயிற்சி திட்டத்தை மட்டுமே நடத்தின. ஆனால் தற்போது, இரு நாடுகளும் ஆண்டு முழுவதும் ஒரே நேரத்தில் 300 ராணுவப் பயிற்சிகளை நடத்துகின்றன என்று அவர் சுட்டிக்காட்டுகிறார்.
மேஜர் ஜெனரல் அசோக் மேத்தா கூறுகையில், "அமெரிக்காவுடனான இந்தியாவின் உறவு பாதுகாப்பு தொழில்நுட்பத்தில் மேம்பட்டுள்ளது, ஆனால் இரு நாடுகளுக்கும் இடையே வாங்குபவர் மற்றும் விற்பனையாளர் என்ற நிலை இன்னும் உள்ளது. ராணுவ தொழில்நுட்பம் பரிமாற்றம் மற்றும் மேக் இன் இந்தியா திசையில் எந்த பணியும் நடக்கவில்லை. பைடனின் பதவிக்காலத்தில் இந்தியா இந்த திசையில் செயல்பட வேண்டும்".
மேஜர் மேத்தாவைப் பொறுத்தவரை, இந்தியாவின் ராணுவ தளவாடங்களில் 80 சதவீதம் இன்னமும் ரஷ்ய மாதிரியை அடிப்படையாகக் கொண்டவை.
ரஷ்யாவிலிருந்து இறக்குமதி செய்யப்படும் நிலைமையை, அமெரிக்கா மாற்ற விரும்புகிறது. மேலும், சீனா முன் ஒரு வலுவான இந்தியா வேண்டும் என்று பைடன் விரும்புகிறார், எனவே இந்தியா தொழில்நுட்ப பரிமாற்றத்திற்கு அழுத்தம் அளிக்க வேண்டும்.
இஸ்ரேல், பிரான்ஸ் மற்றும் அமெரிக்காவுக்கான இந்திய தூதர் அருண் குமார் சிங் கருத்துப்படி, பைடென்-கமலா ஹாரிஸ் நிர்வாகத்தின், பாகிஸ்தானுடனான உத்தி, டொனால்ட் டிரம்ப் நிர்வாகத்தின் காலத்தில் இருந்தது போலவே இருக்கும்.
இது பற்றி அருண் குமார் சிங் கூறுகையில், "இந்தியா மற்றும் பாகிஸ்தானுக்கு இடையில் பல முறை மத்தியஸ்தம் செய்ய டொனால்ட் டிரம்ப் முன்வந்தார். ஆனால் பைடன் இந்தியாவின் நிலைப்பாட்டை புரிந்து கொணடுள்ளதால் அதை செய்ய மாட்டார். சீனாவுடனான பைடன்-ஹாரிஸின் உறவு டொனால்ட் ட்ரம்ப் காலத்தில் இருந்தது போலவே இருக்கும், ஆனால் தொனி நிச்சயமாக மாறும்," என்கிறார்.
"2016இல் சமூக ஊடகங்கள் மூலம், டொனால்ட் டிரம்புக்கு ரஷ்யா உதவியது என்ற கருத்து அமெரிக்காவில் உள்ளது," என்கிறார் அருண் குமார் சிங்.
"ரஷ்யாவுடனான பைடனின் உறவு சுமூகமானதாக இருக்காது. பல ஐரோப்பிய நாடுகளை டிரம்ப் விமர்சித்தார் , நேட்டோவையும் விமர்சித்தார். ஆனால், பைடன் ஐரோப்பாவுடனான தனது உறவை சிறப்பாக வைத்திருப்பார். தேர்தலில் வெற்றி பெற்ற பின்னர் பிரிட்டன், பிரான்ஸ், ஜெர்மனி ஆகிய நாடுகளின் தலைவர்களை அவர் முதலில் தொலைபேசியில் அழைத்துப் பேசியதை இது காட்டுகிறது. அவர் சீனாவிற்கு எதிராக ஐரோப்பிய நாடுகளை தன்னுடன் இணைத்து செல்ல முயற்சி செய்வார்" என்று அவர் கூறினார்.
"இரானுடன் பைடனுக்கு சுமூக உறவை மேற்கொள்வது கடினமாகவே இருக்கும், அவர்கள் டொனால்ட் ட்ரம்பின் கொள்கைகளை பின்பற்றப் போவதில்லை, ஆனால் புதிய ஒப்பந்தங்களை செய்யும் அளவுக்கு பின் நோக்கி செல்ல மாட்டார். அவர் ஏற்கனவே உள்ள ஒப்பந்தத்தையே திருத்துவார் என்று தெரிகிறது. மேலும், இஸ்ரேலுடன் ட்ரம்ப் அளவுக்கு அதிக அரவணைப்பை பைடன் காட்டமாட்டார்."

பட மூலாதாரம், Getty Images
டொனால்ட் டிரம்புடன் ஒப்பிடும்போது பைடன் விசா விதிகள் மீது குறைவாகவே கடுமை காட்டக்கூடும். அதாவது, இது அமெரிக்கா, திறமை மற்றும் திறமையான தொழிலாளர்களுக்கு தனது கதவுகளை மூடாது என்பதை குறிப்பதாக கூறப்படுகிறது . இருப்பினும், அது பெரும்பாலும் அமெரிக்காவின் உள்நாட்டு நிலைமைகளை சார்ந்திருக்கும். இந்த ஆண்டு ஆகஸ்ட் 15ம் தேதி பைடன் தனது உரையில் இந்திய அமெரிக்க மக்களுக்கு ஆதரவாக இருப்பதாக கூறியிருந்தார் .
"பைடன்-ஹாரிஸ் நிர்வாகத்தில் அதிக இந்திய அமெரிக்கர்கள் இடம் பெறுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது", என்கிறார் அருண் குமார் சிங்.
ஆனால் ஜோ பைடன் மற்றும் கமலா ஹாரிஸ் நிர்வாகத்தின் முன்னுரிமை, கோவிட் பிரச்னையை தீர்ப்பதில் இருக்கும் என்றும், இந்தியா உட்பட உலகின் அனைத்து நாடுகளுடனும் ஒத்துழைப்பை மேம்படுத்தும் என்றும் நம்பப்படுகிறது.
ஒரு பயனுள்ள தடுப்பூசிக்கான கூட்டணியை உருவாக்குவதில் அவரது கவனம் இருக்கும். அதன் பிறகு, அவரது கவனம் பொருளாதார மீட்சியில் இருக்கும்,அதில் இந்தியா தனது பங்கை ஆற்ற வேண்டும்.
டொனால்ட் டிரம்ப் மற்றும் நரேந்திர மோடி இடையே பரஸ்பர நல்லுறவுகள் இருந்தபோதிலும், இந்தியாவுடனான அமெரிக்க உறவுகளில் அதிக முன்னேற்றம் இருக்கவில்லை .
"இந்தியா, அமெரிக்காவிடமிருந்து FTA, அதாவது , சுதந்திர வர்த்தக ஒப்பந்தம் என்ற அந்தஸ்தைப் பெறமுடியாது. 2019 ஜூனில் பொது விருப்பப் பட்டியலில் இருந்து விலக்கப்பட்ட பிறகு, இந்தியா மீண்டும் பட்டியலில் இடம் பெற்றிருக்கலாம், ஆனால் ,இன்னமும் , இந்தியாவில் இருந்து பொருட்களை இறக்குமதி செய்யும் அமெரிக்கா, 10 சதவீதத்ததை , மட்டுமே வரி விலக்கு பிரிவில் வைத்துள்ளது , இது அதிகரிக்கப்பட வேண்டும்." என்கிறார் ரோனென் சென்.
பிற செய்திகள்:
- "தமிழ்நாடு எம்.பி.க்கு இந்தியில் பதில் தருவது விதி மீறல்" அமைச்சருக்கு சு.வெங்கடேசன் கடிதம்
- வட கொரியாவுக்கு சுற்றுலா செல்ல விருப்பமா? இதற்கு நீங்கள் தயாரா? மாறுபட்ட பயண அனுபவம்
- பிச்சை எடுத்தாலும், கொடுத்தாலும் தண்டனை - இலங்கை போலீஸ்
- க்ரியா எஸ். ராமகிருஷ்ணன் காலமானார் - தமிழுக்கு அவரது பங்களிப்பு என்ன?
- ஜோ பைடனுக்கு ஆட்சி அதிகாரத்தை மாற்ற மறுக்கும் டிரம்ப்
- மருத்துவ தர வரிசைப் பட்டியல்: சாதித்து காட்டிய அரசு பள்ளி மாணவர்கள்
- பிகாரிலேயே அதிக வாக்கு வித்தியாசத்தில் வென்ற கம்யூனிஸ்ட் எம்.எல்.ஏ பற்றி தெரியுமா?
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:












