உ.பி பயங்கரம்: சூனியம் செய்ய 6 வயது சிறுமி கொலை - நுரையீரலை திருடிய கும்பல்

இந்திய நாளிதழ்களில் வெளியான சில முக்கிய செய்திகளை இங்கே தொகுத்து வழங்குகிறோம்.

6 வயது சிறுமியை கொலை செய்து நுரையீரலை எடுத்த கும்பல்

உத்தர பிரதேசத்தின் கான்பூர் மாவட்டத்தில் இறந்த நிலையில் 6 வயது சிறுமியின் உடல் கண்டெடுக்கப்பட்டது. சிறுமி கூட்டு பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு கொடூரமாக கொல்லப்பட்டுள்ளதாகவும் அவரது நுரையீரல் உடலில் இருந்து வெளியே எடுக்கப்பட்டது என்றும் கூறப்படுகிறது. கட்டம்பூர் பகுதியிலிருந்து இந்த சிறுமி தீபாவளியன்று இரவு காணாமல் போனாதாக தினத்தந்தி நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது.

ஒரு பெண், குழந்தை பாக்கியத்தைப் பெற ஒரு சிறுமியின் நுரையீரல் கொண்டு சில சடங்குகள் செய்ய வேண்டும் என்ற மூட நம்பிக்கையால், நுரையீரல் சிறுமியின் உடலிலிருந்து அகற்றப்பட்டதாக போலீசார் தெரிவித்தனர்.

ஞாயிற்றுக்கிழமை கைது செய்யப்பட்ட குற்றவாளிகளான அங்குல் குரில் (20) மற்றும் பீரன் (31) ஆகியோர் முக்கிய குற்றவாளியும் பரசுராம் குரிலிடம் சூனியம் செய்ய சிறுமியின் நுரையீரலை அளித்ததாக மூத்த போலீஸ் அதிகாரி பிரஜேஷ் ஸ்ரீவாஸ்தவா தெரிவித்தார்.

பரசுராம் நேற்று கைது செய்யப்பட்டார். இந்த சம்பவம் குறித்து பரசுராமின் மனைவிக்கும் தெரிந்திருந்தும் அவர் இது குறித்து யாரிடமும் கூறாமல் இருந்ததால், அவரும் கைது செய்யப்பட்டார்.

குற்றம் சாட்டப்பட்டவர்கள் மீது இந்திய தண்டனைச் சட்டம் மற்றும் பாலியல் குற்றங்களிலிருந்து குழந்தைகளைப் பாதுகாக்கும் சட்டத்தின் கீழ் வழக்கு போடப்பட்டுள்ளது.

பரசுராம் 1999 இல் திருமணம் செய்து கொண்டார். ஆனால் இதுவரை அவருக்கு குழந்தை பிறக்கவில்லை. அதைத் தொடர்ந்து அவர் தனது மருமகன் அன்குல் மற்றும் அவரது நண்பர் பீரன் ஆகியோரிடம் சிறுமியைக் கடத்தி, நுரையீரலை அகற்றும்படி வற்புறுத்தினார்.

அதிக அளவில் குடிபோதையில் இருந்த குற்றவாளிகள் சிறுமியைக் கடத்திச் சென்று கொலை செய்வதற்கு முன்பு அவரை பாலியல் வல்லுறவு செய்தனர்.

இதற்கிடையில், குற்றம் சாட்டப்பட்டவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்குமாறு உத்தரபிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். குற்றம் சாட்டப்பட்டவர்களுக்கு விரைவாக தண்டனை வழங்கப்படும் வகையில் இந்த வழக்கு விரைவான நீதிமன்றத்தில் விசாரிக்கப்படும் என்று முதல்வர் கூறியுள்ளார்.

பாஜகவில் இணைய எல்.முருகன் அழைப்பு விடுத்தது மகிழ்ச்சி - மு.க.அழகிரி

மு.க.அழகிரி

பாஜகவில் இணையுமாறு அக்கட்சியின் மாநிலத் தலைவர் எல்.முருகன் அழைப்பு விடுத்தது மகிழ்ச்சி அளிக்கிறது. எனது அரசியல் நிலைப்பாடு குறித்து ஜனவரியில் அறிவிப்பேன் என முன்னாள் மத்திய அமைச்சர் மு.க.அழகிரி தெரிவித்துள்ளதாக தி இந்து தமிழ் நாளிதழ் செய்தி கூறுகிறது.

மத்திய அமைச்சர், திமுக தென் மண்டல அமைப்பாளர் என்று திமுகவில் முக்கிய சக்தியாக இருந்த மு.க.அழகிரி, கடந்த 2014 மக்களவைத் தேர்தலுக்கு பிறகு மு.க.ஸ்டாலினுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக கட்சியில் இருந்து நீக்கப்பட்டார்.

அதன்பிறகு அரசியலில் இருந்து ஒதுங்கியிருந்த அழகிரி, கருணாநிதியின் மறைவுக்கு பிறகு தீவிர அரசியலுக்கு வருவார், திமுகவில் இணைவார் என்று கூறப்பட்டது.

ஆனால், தனது தந்தை கருணாநிதியின் மறைவுக்கு அஞ்சலி செலுத்தி சென்னையில் அமைதிப் பேரணி நடத்தியதோடு அவர் அரசியல் நடவடிக்கைகளில் ஈடுபடவில்லை.

இந்நிலையில், வரும் 21-ம் தேதி சென்னை வரும் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவை, மு.க.அழகிரி சந்திக்க இருப்பதாகவும், பாஜகவில் இணைய இருப்பதாகவும் செய்திகள் வெளியாகின.

இதுகுறித்து மு.க அழிகிரி கூறுகையில், ''மு.க.அழகிரி பாஜகவில் இணைந்தால் வரவேற்போம் என்று எல்.முருகன் கூறியிருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது. எந்தக் கட்சியிலும் இணைவது பற்றியோ, அரசியல் தொடர்பான எந்த நிலைப்பாட்டையோ இதுவரை நான் எடுக்கவில்லை. இது கரோனா காலம். அனைவரும் எச்சரிக்கையாக இருக்க வேண்டிய நேரம். எனவே, ஜனவரி அல்லது பிப்ரவரியில் ஆதரவாளர்களுடன் ஆலோசனை நடத்தி எனது அரசியல் நிலைப்பாடு குறித்து அறிவிப்பேன்'' என்றார்.

சூரியசக்தி மூலம் இயங்கும் இஸ்திரி பெட்டி கண்டுபிடிப்பு: திருவண்ணாமலை மாணவிக்கு ஸ்வீடன் விருது

சூரியசக்தி மூலம் இயங்கும் இஸ்திரி பெட்டி கண்டுபிடிப்பு: திருவண்ணாமலை மாணவிக்கு ஸ்வீடன் விருது

பட மூலாதாரம், DINAMANI

சூரியசக்தி மூலம் இயங்கும் இஸ்திரி பெட்டியைக் கண்டுபிடித்து, திருவண்ணாமலையைச் சேர்ந்த 9-ஆம் வகுப்பு மாணவி வினிஷா உமாசங்கா் சாதனை படைத்துள்ளதாக தினமணி நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது.

இதற்காக இவருக்கு ஸ்வீடன் நாட்டின் குழந்தைகளுக்கான சூழலியல் அறக்கட்டளை சார்பில் இள வயது கண்டுபிடிப்பாளா்களுக்கான விருது அறிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து அந்த மாணவி கூறியதாவது: எனக்கு 5 வயது இருக்கும்போது எனது தந்தை அறிவியல் களஞ்சிய புத்தகத்தை பரிசளித்தார். அந்தப் புத்தக வாசிப்பின் மூலம் அறிவியல் மீதான ஆா்வம் எனக்கு நாள்தோறும் அதிகரித்தது. தற்போது நான் வடிவமைத்த இஸ்திரி பெட்டி உள்ள வண்டியின் மேல்புறத்தில் சூரிய ஒளித் தகடுகள் பொருத்தப்பட்டிருக்கும். இவை 100 ஏ.எச். திறன் கொண்ட மின்கலனுடன் இணைக்கப்பட்டிருக்கும். இந்த மின் கலனை முழுமையாக மின்னேற்றம் செய்ய 5 மணி நேரம் சூரிய ஒளி தேவை. இதன் மூலம் 6 மணிநேரம் வரை தொடா்ச்சியாக இஸ்திரி செய்ய முடியும். இந்தத் தொழில்நுட்பத்தைக் கண்டறிய எனக்கு 2 மாத காலமானது. இதன் வடிவமைப்பை குஜராத்தில் உள்ள நேஷனல் இன்னோவேஷன் அறக்கட்டளையின் பொறியாளா்கள் வடிவமைத்து, காப்புரிமை பெற விண்ணப்பித்துள்ளனா். இந்த ஆண்டு இறுதிக்குள் காப்புரிமையும் கிடைத்து விடும். தற்போது கரோனா தடுப்பு நடவடிக்கையாக தொடாமல் இயங்கும் வகையிலான உபகரணங்கள் உருவாக்கும் பணியில் ஈடுபட்டுள்ளேன் என்று அவா் கூறினார்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: