லக்ஷ்மி விலாஸ் வங்கி: இந்திய அரசின் புதிய திட்டம் நெருக்கடியை சமாளிக்க உதவுமா?

லக்ஷ்மி விலாஸ் வங்கி

பட மூலாதாரம், LAKSHMI VILAS BANK

    • எழுதியவர், பரணி தரன்
    • பதவி, பிபிசி தமிழ்

சென்னையை தலைமையிடமாகக் கொண்டு இயங்கி வரும் லக்ஷ்மி விலாஸ் வங்கியின் செயல்பாடுக்கு இந்திய நிதியமைச்சகம் பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்திருக்கிறது. இந்திய ரிசர்வ் வங்கி அளித்த பரிந்துரையின்படி இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இதன்படி, வாடிக்கையாளர்களின் முதலீடுகளையும் அந்த வங்கியில் வைத்துள்ள டெபாசிட்டுகளையும் பாதுகாக்கும் நோக்குடன், நவம்பர் 17 முதல் டிசம்பர் 16ஆம் தேதி வரை அனைத்து சேமிப்பு, நடப்புக் கணக்கு ஆகியவற்றில் இருந்து அதிகபட்சமாக ரூ. 25 ஆயிரம் மட்டுமே எடுக்கலாம் என்று இந்திய நிதியமைச்சகம் அறிவித்திருக்கிறது.

இந்த 30 நாட்களில் வங்கியின் கடுமையான நிதி நிலைமை விவகாரத்தை கவனிக்க அதன் நிர்வாக அதிகாரியாக கனரா வங்கி முன்னாள் தலைவர் டி.என். மனோகரன் நியமிக்கப்பட்டுள்ளார். இதற்கு ஏதுவாக, லக்ஷ்மி விலாஸ் இயக்குநர்கள் வாரியக்குழு அதன் பொறுப்பில் இருந்து விலக்கி வைக்கப்பட்டிருக்கிறது.

"இந்த விவகாரத்தில் அனைத்து டெபாசிட்தாரர்களின் நலன்களும் பாதுகாக்கப்படும். அதற்கு உரிய நடவடிக்கை எடுக்கப்படும். வங்கியின் நிதி நிலையை சீர்படுத்தும் நடவடிக்கைகள் ஆராயப்பட்டு வருகிறது" என்று இந்திய ரிசர்வங் உயரதிகாரி பிபிசியிடம் தெரிவித்தார்.

இந்திய நிதியமைச்சகத்தின் திடீர் கட்டுப்பாட்டால், நவம்பர் 17ஆம் தேதிக்கு பிறகு அந்த வங்கி பெயரிலான டிராஃப்டுகள் உள்ளிட்டவைக்கு இனி பணம் கொடுக்கப்படாது. மேலும், இந்த வங்கியின் கடன் உறுதிப் பத்திரம் ரத்து செய்யப்படும். பெரிய கடன்கள் வழங்க விதிக்கப்பட்ட தடை அமலுக்கு வரும்.

வங்கியின் டெபாசிட்தாரர்கள், தங்களின் கணக்கில் இருந்து ரூ. 25 ஆயிரத்துக்கு மிகாமல் மட்டுமே எடுக்க முடியும்.

எனினும், மருத்துவ தேவைகள், உயர் கல்விக்கட்டணம், திருமணம் அல்லது தமது நேரடி வாரிசுகளின் நிகழ்ச்சிக்கான செலவுக்கு ரூ. 25 ஆயிரத்துக்கும் அதிகமாக பணம் தேவைப்பட்டால் ரிசர்வ் வங்கி அனுமதி பெற்று வாடிக்கையாளருக்கு வங்கி நிர்வாகம் பணம் கொடுக்கலாம்.

கடந்த இரண்டு ஆண்டுகளுக்கும் மேலாக அதிக அளவில் வாரா கடன் தொகை அதிகரித்து வந்ததால் இந்த நிறுவனம் கடும் நிதிச்சுமையை எதிர்கொண்டு வருகிறது. இது தொடர்பாக பல்வேறு புகார்கள் இந்திய ரிசர்வ் வங்கிக்கு சென்றன. இந்த நிலையில், கடந்த செப்டம்பர் 30ஆம் தேதியுடன் முடிவடைந்த காலாண்டில் லக்ஷ்மி விலாஸ் வங்கியின் நிதி இழப்பு ரூ. 396 கோடியாக இருந்தது. இதற்கு முந்தைய 10 ஆண்டு காலத்திலும் இந்த வங்கி தொடர் நஷ்டத்தையே எதிர்கொண்டது.

வங்கி

பட மூலாதாரம், Getty Images

எப்போது பிரச்னை தொடங்கியது?

லக்ஷ்மி விலாஸ் வங்கியின் நிதி இழப்பை சமாளிக்கும் வகையில், அதை வாங்கக் கூடிய ஒரு நிறுவனத்தை அதன் நிர்வாகம் தேடி வந்தது. ஆனால், ஓராண்டுக்கும் மேலாக அந்த முயற்சி பலன் கொடுக்கவில்லை.

இந்த விவகாரத்தில் இந்தியாபுல்ஸ் ஹவுசிங் ஃபைனான்ஸ் என்ற தனியார் வீட்டுவசதி வட்டிக்கடன் நிறுவனத்துடன் வங்கியை இணைக்க லக்ஷ்மி விலாஸ் நிர்வாகம் முன்மொழிந்த பரிந்துரையை கடந்த ஆண்டு ரிசர்வ் வங்கி நிராகரித்தது. பிறகு கிளிக்ஸ் கேப்பிடல் நிறுவனத்துடன் இணைக்கும் வங்கியின் முயற்சி கைகொடுக்கவில்லை.

இந்த விவகாரத்தில் தங்களுடைய வங்கி நிதி இழப்பில் இருக்கவில்லை என்று லக்ஷ்மி விலாஸ் மேம்பாட்டாளர் கே.ஆர். பிரதீப், ப்ளூம்பெர்க் தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியில் கூறியிருந்தார். நிதி இழப்பை சீர் செய்ய தேவைப்படும் 80 சதவீதத்தை விட 260 சதவீதம் அளவுக்கு தங்களிடம் பணம் இருப்பதாகவும் அவர் குறிப்பிட்டார்.

முன்னதாக, கடந்த செப்டம்பர் மாதம், லக்ஷ்மி விலாஸ் வங்கியின் தொடர் இழப்பு தொடர்பாக ஆராய மீத்தா மக்கன் தலைமையில் மூன்று பேர் கொண்ட குழுவை இந்திய ரிசர்வ் வங்கி நியமித்தது.

அந்த குழுவின் பரிந்துரைப்படியே லக்ஷ்மி விலாஸ் வங்கி நிர்வாகத்தை தற்காலிகமாக தனது பொறுப்பில் ரிசர்வ் வங்கி கொண்டு வந்திருக்கிறது. "இது நிர்வாக ரீதியிலான நிதிப்பாதுகாப்பு நடவடிக்கை என்பதால், வங்கியில் டெபாசிட் வைத்துள்ளவர்கள், கணக்கு வைத்துள்ளவர்கள் அச்சப்பட தேவையில்லை" என்று இந்திய நிதியமைச்சக உயரதிகாரிகள் தெரிவித்தனர்.

இதற்கிடையே, சிங்கப்பூரின் மிகப்பெரிய வங்கியான டிபிஎஸ் (DBS)உடன் லக்ஷ்மி விலாஸ் வங்கியை இணைக்கும் வரைவு திட்டத்தை ரிசர்வ் வங்கி முன்மொழிந்திருக்கிறது. இந்திய தனியார் வங்கியை வெளிநாட்டு வங்கியுடன் இணைக்க ரிசர்வ் வங்கி யோசிப்பது இதுவே முதல் முறை.

இந்த யோசனை தொடர்பான கருத்துகளை ரிசர்வ் வங்கி வரவேற்றுள்ளது. நவம்பர் 20ஆம் தேதிக்குள் இந்த விவகாரத்தில் கருத்துகளையோ ஆட்சேபத்தையோ தெரிவிக்குமாறு ரிசர்வ் வங்கி கேட்டுக் கொண்டுள்ளது.

வங்கி

பட மூலாதாரம், Getty Images

நிதி நிலை எப்படி உள்ளது?

லக்ஷ்மி விலாஸ் வங்கியின் நவம்பர் 16ஆம் தேதி முடிவடைந்த நாளில் அதன் வர்த்தகம் ரூ. 526 கோடி அளவுக்கு இருந்தது. அதில் இந்தியாபுல்ஸ் ஹவுசிங் ஃபைனான்ஸ் நிறுவனம் 4.99 சதவீதம், பிஇ ஃபண்ட் ஜூப்பிட்டர் கேப்பிடல் நிறுவனம் 1.08 சதவீதம், ஸ்ரீ இன்ஃப்ரா ஃபைனான்ஸ் 3.34 சதவீதம், கேப்ரி குளோபல் ஹோல்டிங்ஸ் 3.82 சதவீதம், எல்ஐசி 1.62 சதவீதம் பொதுப்பிரிவின்கீழ் பங்குகளை வைத்துள்ளன.

தமிழ்நாட்டில் குறிப்பிடத்தக்க பங்களிப்பை கொண்ட லக்ஷ்மி விலாஸ் வங்கிக்கு 569 கிளைகள், ஏழு பிராந்திய அலுவலகங்கள் உள்ளன. இந்திய அளவில் 16 மாநிலங்கள், 3 யூனியன் பிரதேசங்களில் இந்த வங்கியின் அலுவலகங்கள் உள்ளன.

லக்ஷ்மி விலாஸ் வங்கியின் நிதி நிலையை மீட்க வேண்டுமானால், ரிசர்வ் வங்கியின் விதிமுறைகளின்படி அந்த வங்கியில் ரூ. 2,500 கோடி அளவுக்கு முதலீடு செய்ய வேண்டும். இந்த தொகையை முதலீடு செய்ய சிங்கப்பூர் வங்கியான டிபிஎஸ் முன்வந்துள்ளது. அனேகமாக இந்த பரிந்துரை ஏற்கப்படும்பட்சத்தில் வங்கியின் நிதி நிலையை மீட்டெடுக்கும் வாய்ப்புகள் உள்ளதாக இந்திய நிதியமைச்சக அதிகாரிகள் நம்புகிறது.

94 ஆண்டுகால பாரம்பரியம்

1926ஆம் ஆண்டு, நவம்பர் 10ஆம் தேதி, கரூரைச் சேர்ந்த தொழிலதிபர் வி.எஸ்.என். ராமலிங்க செட்டியாரால் லக்ஷ்மி விலாஸ் வங்கி தொடங்கப்பட்டது.

ஆரம்பத்தில் கரூர் மற்றும் அதன் சுற்று வட்டாரத்தில் ஜவுளித்துறையில் வியாபாரம் செய்யும் வணிகர்களின் வங்கித் தேவைகளைப் பூர்த்தி செய்வதற்காக இந்த வங்கி ஒரு முன்மாதிரி முயற்சியாக நிறுவப்பட்டது. பிறகு அந்த பகுதிகளின் வேளாண், தொழிற்துறையினரும் இந்த வங்கியின் வாடிக்கையாளர்களாயினர்.

முறைப்படி வங்கிச்சேவையை வழங்குவதற்கான உரிமையை 1958ஆம் ஆண்டில் ரிசர்வ் வங்கி அளித்தது. அப்போது முதல் முழுமையான வர்த்தக வங்கியாக லக்ஷ்மி விலாஸ் செயல்பட்டு வருகிறது.

1970களில் இந்த வங்கியின் கிளைகள் தமிழத்தை கடந்து ஆந்திர பிரதேசம், கர்நாடகா, கேரளா, மேற்கு வங்கம், டெல்லி ஆகியவற்றுக்கும் விரிவடைந்தன. தொண்ணூறு ஆண்டுகளுக்கும் மேலாக தனக்கென வாடிக்கையாளர் பலத்தை பெற்றிருக்கும்போதும், வாரா கடன்களின் நிதிச்சுமை ஏற்படுத்திய தாக்கத்தால் கடந்த 10 ஆண்டுகளாக வங்கி எதிர்கொண்டு வரும் நிதி நெருக்கடி, தற்போது மிக மோசமான நிலையை எட்டியிருக்கிறது.

வங்கி

பட மூலாதாரம், Getty Images

தொடரும் வங்கி மோசடி சர்ச்சைகள்

இந்திய வங்கிகளின் வரலாற்றிலே கடந்த பல தசாப்தங்களில் இல்லாத அளவுக்கு மிகப்பெரிய நெருக்கடி நிலையை தற்போது வங்கிகள் எதிர்கொண்டு வருகின்றன.

2019 நிலவரப்படி, நாடு முழுவதும் 1,122 கிளைகளுடன், பத்தாயிரத்துக்கும் மேற்பட்ட ஊழியர்களுடன் இயங்கி வந்த யெஸ் பேங்கை கடந்த மார்ச் மாதம், இந்திய ரிசர்வ் வங்கி அதன் கட்டுப்பாட்டில் எடுத்தது.

சுமார் 3,200 கோடி ரூபாய் மதிப்பிலான வாரா கடனை அந்த வங்கி கொண்டிருப்பதை, இந்திய ரிசர்வ் வங்கி கண்டுபிடித்தது. இதையடுத்து இந்திய ஸ்டேட் வங்கி உதவியுடன் அந்த வங்கியின் நிதி நிலையை மீட்டெடுக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. வாரா கடன் மோசடி வழக்கில் யெஸ் வங்கியின் தலைவர் ராணா கபூர் தற்போது சிபிஐ வழக்கை எதிர்கொண்டு வருகிறார்.

இதற்கு முன்பாக, கடந்த ஆண்டு பிஎம்சி (PMC) எனப்படும் பஞ்சாப் மற்றும் மகாராஷ்டிரா கூட்டுறவு வங்கியும் வாரா கடன் விவகாரத்தில் பல்வேறு முறைகேடுகளில் ஈடுபட்டதாக எழுந்த புகார்களையடுத்து அதன் கட்டுப்பாட்டை ரிசர்வ் வங்கி எடுத்துக் கொண்டது.

ஹவுசிங் டெவலப்மெண்ட் மற்றும் இன்பிராஸ்ட்ரக்சர் லிமிடெட் என்ற ரியல் எஸ்டேட் நிறுவனத்துக்கு ரூ. 6,500 கோடி வரை பிஎம்சி வங்கி கடன் வழங்கியுள்ளது. இது ரிசர்வ் வங்கி விதித்துள்ள கட்டுப்பாட்டு வரம்பை விட 4 மடங்கு அதிகமாகும். அத்துடன் வங்கியின் மொத்த சொத்து மதிப்பான ரூ.8,800 கோடியில் 73 சதவீதம் இந்நிறுவனத்துக்கு கடன் வழங்கப்பட்டது. இந்த விவகாரத்தில், ஹெச்டிஐஎல் ரியல் எஸ்டேட் நிறுவன இயக்குநர்கள் சரங் வாத்வான், ராகேஷ் வாத்வான், பிஎம்சி வங்கியின் இயக்குநர் ஜாய் தாமஸ் மற்றும் வங்கியின் முன்னாள் தலைவர் வார்யம் சிங் மும்பை காவல்துறையின் வழக்குகளை எதிர்கொண்டு வருகின்றனர்.

இதுபோலவே, தற்போது லக்ஷ்மி விலாஸ் வங்கியும் வாரா கடன் சர்ச்சையில் சிக்கி சட்ட பிரச்னைகளை எதிர்கொண்டிருக்கிறது. இந்த வங்கி ரெலிகேர், ஜெட் ஏர்வேஸ் குழுமம், காக்ஸ் அண்ட் கிங்ஸ், நீரவ் மோடி குழுமம், காபி டே, ரிலையன்ஸ் ஹவுசிங் பைனான்ஸ் உள்ளிட்ட நிறுவனங்களுக்கு ரூ.2 ஆயிரம் கோடி வரை கடன் வழங்கியுள்ளதாக வங்கியின் முன்னாள் ஊழியர் ஆர். சுப்பிரமணியன் சென்னை உயர் நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தொடர்ந்துள்ளார்.

இந்த வங்கியின் கடன்கள் திருப்பி செலுத்தப்படாமல் இருப்பதால், 2017ஆம் ஆண்டு கால கட்டத்தில் 2.67 சதவீதமாக இருந்த லக்ஷ்மி விலாஸ் வங்கியின் வாரா கடன் (NPA), கடந்த மார்ச் மாதம், 25.39 சதவீதமாக அதிகரித்தது. மேலும், வங்கியின் நிரந்தர வைப்பு நிதி (fixed deposit) ரூ. 31,000 கோடியில் இருந்து ரூ. 15,143 கோடி ஆக சரிந்தது.

வங்கியின் முக்கியப் பொறுப்புகளில் இருந்தவர்கள் வங்கி நிதியை முறைகேடாக பயன்படுத்தியதன் காரணமாகவே இந்த வங்கி கடும் நிதி நெருக்கடிக்கு உள்ளானதாக கூறப்பட்ட நிலையில், இதில் இந்திய ரிசர்வ் வங்கி தலையிட்டு மீட்பு நடவடிக்கையை தற்போது தொடங்கியிருக்கிறது.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: