You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
பிகார் தேர்தல் முடிவுகள்: வாக்கு எண்ணிக்கை தாமதமாவது ஏன்?
பிகார் மாநில சட்டப்பேரவை தேர்தலில் வாக்கு எண்ணிக்கை காலை 8 மணிக்கு தொடங்கியது முதல் தற்போது வரை 20 - 30 சதவீத வாக்குகளே எண்ணப்பட்டுள்ளன. அசாதாரணமான வகையில் இந்த தாமதம் ஏற்பட என்ன காரணம்?
இது குறித்து பிகார் மாநில கூடுதல் தலைமை தேர்தல் அதிகாரி சஞ்சய் சிங் கூறுகையில், "கொரோனா பெருந்தொற்று காரணமாக பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கையை தேர்தல் அலுவலர்கள் கடைப்பிடித்து வருகிறார்கள். 2015ஆம் ஆண்டு தேர்தலுடன் ஒப்பிடும்போது இம்முறை வாக்குப்பதிவுக்கு பயன்படுத்தப்பட்ட மின்னணு இயந்திரங்களின் எண்ணிக்கை சுமார் 50 சதவீதம் அதிகரிக்கப்பட்டுள்ளது," என்று கூறினார்.
டெல்லியில் செய்தியாளர்களிடம் செவ்வாய்க்கிழமை பேசிய தேர்தல் ஆணைய துணை ஆணையாளர் ஆஷிஷ் குந்த்ரா, வாக்கு எண்ணிக்கை தாமதம் தொடர்பாக விளக்கம் அளித்தார்.
சமீபத்தில் நடந்து முடிந்த பிகார் சட்டப்பேரவை தேர்தலின்போது 1.06 லட்சம் வாக்குச்சாவடிகளில் வாக்குப்பதிவு நடந்தது. முந்தைய தேர்தலுடன் ஒப்பிடும்போது இந்த எண்ணி்க்கை 63 சதவீதம் அதிகம்.
முந்தைய தேர்தல் போல அல்லாமல் இம்முறை ஒரு வாக்குச்சாவடிக்கு அதிகபட்சமாக 1,000 வாக்காளர்களே அனுமதிக்கப்பட்டனர். வழக்கமாக இது 1,500 ஆக இருக்கும்.
இதனாலும் வாக்குச்சாவடிகளின் எண்ணிக்கை அதிகரிக்கப்பட்டன. வாக்குப்பதிவு இயந்திரங்களும் அதிகமாக பயன்படுத்தப்பட்டன. இவற்றை எண்ணும் நடவடிக்கையில் ஏற்படும் தாமதமும், முடிவுகள் விரைவாக வெளிவராததற்கு காரணம் என்று தேர்தல் அதிகாரிகள் தெரிவித்தனர்.
இந்த நிலையில், "வாக்கு எண்ணும் மையத்தில் சமூக இடைவெளியைக் கடைப்பிடிக்கும் வகையில் வாக்குகள் சரிபார்க்கும் இயந்திரங்கள் இடைவெளி விட்டு போடப்பட்டிருக்கின்றன. பல தொகுதிகளில் முன்னிலை நிலவரம் மிகவும் நெருக்கமான அளவில் இருப்பதால் சுமார் 30 முதல் 35 சுற்றுகள் வரை வாக்குகள் எண்ணப்பட்டு வருகிறது," என்று கூடுதல் தேர்தல் அதிகாரி சஞ்சய் சிங் தெரிவித்தார்.
சமீபத்திய நிலவரப்படி வெளிவரும் முடிவுகளில் கிட்டத்தட்ட 70 இடங்களில் தேசிய ஜனநாயக கூட்டணிக்கும் மகாகட்பந்தன் அணிக்கும் இடையிலான வாக்குகள் இடைவெளி மிகவும் குறைவு தான். இதனாலேயே அதிக சுற்றுகளுக்கு வாக்குகள் எண்ண அதிகாரிகளை அரசியல் கட்சிகள் வலியுறுத்தி வருகின்றன.
பிற செய்திகள்:
- பிகார் தேர்தல் முடிவுகள்: நிதிஷ் கூட்டணி பெரும்பான்மைக்கு தேவையான 122 இடங்களை கடந்து முன்னிலை
- கொரோனா வைரஸ்: உலகெங்கும் பாதிப்பு, பலி எண்ணிக்கை எவ்வளவு?
- கொரோனா பரவலுக்குப் பிந்தைய சூழலுக்கு தமிழக பள்ளிகள் தயாரா?
- சசிகாந்த் செந்தில்: காங்கிரஸில் இணைந்த முன்னாள் ஐஏஎஸ் அதிகாரி
- ஜோ பைடனின் முதல் நடவடிக்கை எது? கொரோனா முதல் இனவெறி பிரச்னை வரை
- லக்ஷ்மி: லவ் ஜிஹாத், இந்து கடவுள் இழிவு சர்ச்சையில் அக்ஷய் குமார் படம் - தற்போதைய நிலை என்ன?
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: