"கமலா ஹாரிஸ் அமெரிக்க அதிபராகும் வாய்ப்பு அதிகம்" - தாய்வழி மாமா பாலச்சந்திரன்

    • எழுதியவர், பரணி தரன்
    • பதவி, பிபிசி தமிழ்

அமெரிக்க துணை அதிபராக தேர்வாகியுள்ள கமலா ஹாரிஸுக்கு அந்நாட்டின் அதிபராகும் வாய்ப்பு அதிகம் உள்ளதாக அவரது தாய்வழி மாமாவும் இந்திய தலைநகர் டெல்லியில் வசிப்பவருமான கோ. பாலச்சந்திரன் தெரிவித்துள்ளார்.

வெளியுறவு விவகாரங்கள் தொடர்பான ஆய்வு அமைப்பின் முன்னாள் ஆலோசகரான பாலச்சந்திரன், சென்னையில் வாழும் அவரது சகோதரி சரளா ஆகியோர் மட்டும்தான் கமலா ஹாரிஸுக்கு இந்தியாவில் உள்ள ஒரே ரத்த சொந்தங்கள்.

இந்த நிலையில், கமலா ஹாரிஸின் சமீபத்திய தேர்தல் வெற்றி குறித்து பிபிசி தமிழுக்கு அவர் வெள்ளிக்கிழமை இரவு பேட்டியளித்தார். அதில் இருந்து சில பகுதிகள்.

ஜோ பைடன்-கமலா ஹாரிஸ் தேர்தல் வெற்றிச் செய்தியை அறிந்ததும் உங்களுக்கு ஏற்பட்ட முதல் உணர்வு?

கமலா ஹாரிஸ் வெற்றி பெறுவார் எனத் தெரியும். காரணம், இறுதி முடிவு ஒவ்வொன்றாக எண்ணப்பட்டு வரும் வேளையில், முடிவு தொடர்பான பதற்றம் இருந்து கொண்டே இருந்தது. அந்த பதற்றம் இப்போது குறைந்து விட்டது. அடுத்த ஆண்டு தொடக்கத்தில் கமலா ஹாரிஸின் பதவியேற்பு நிகழ்வுக்கு நாங்கள் குடும்பத்தோடு செல்ல திட்டமிட்டுள்ளோம்.

போர்க்கள மாகாணங்களான பென்சில்வேனியா, ஜோர்ஜா போன்றவற்றில் ஜனநாயக கட்சிக்கு சாதகமாக விழுந்த வாக்குகள், மக்களின் மனமாற்றத்தை காட்டுகிறதா?

பாதி இடங்களில் முன்பு யாரெல்லாம் டிரம்புக்கு வாக்களித்தார்களோ அவர்கள் இம்முறை பைடனுக்கு ஓட்டு போடவில்லை. ஆனால், டிரம்பின் ஆதரவாளர்களும் பைடனின் ஆதரவாளர்களும் இந்த தேர்தலில் வழக்கத்தை விட அதிகமாக வாக்களிக்க ஆர்வம் காட்டினார்கள். அதனால்தான் டிரம்ப் வெற்றி பெற்ற இடங்களில் பைடன் முன்னிலை பெறாவிட்டாலும் கூட தேர்தல் சபை வாக்குகளை அவர் அதிகமாக வாங்கினார்.

தபால் வாக்குகள் பதிவில் மோசடி நடந்ததாக கூறப்படுவது பற்றி...

டிரம்பின் கூற்று பற்றி எல்லாம் யோசிப்பதில் பயன் இல்லை. அமெரிக்காவின் நிலை தொடர்பாக வாக்காளர்கள் பெரும் கவலையில் இருந்தனர். அதனால்தான் அதிக அளவில் வந்து மக்கள் வாக்களித்தனர். அதை வைத்து டிரம்ப் தெரிவிக்கும் புகாரை எல்லாம் தொடர்புபடுத்தக் கூடாது.

அமெரிக்க துணை அதிபர் பதவி வகிக்க கமலா ஹாரிஸுக்கு உதவக்கூடிய அவரது திறன்கள் என்ன?

அமெரிக்காவிலேயே மிகப்பெரிய மாகாணம் கலிஃபோர்னியா. அங்கு மாவட்ட அட்டர்னியாக கமலா இருந்தார். பிறகு மாகாண அட்டர்னி ஜெனரலாக இருந்தார். அதன் பிறகு செனட்டர் ஆக நான்கு ஆண்டுகள் இருந்தார்.

இப்போது துணை அதிபர் வேட்பாளராகி அந்த பதவிக்கும் தேர்வாகக் கூடிய தகுதியைப் பெற்றிருக்கிறார். அடிப்படையில் பைடனுக்கு வெளியுறவு அனுபவம் நிறைய உள்ளது. உள் விவகாரங்களில் அவ்வளவாக அவருக்கு அனுபவம் இல்லாமல் இருக்கலாம்.

ஆனால், கமலாவுக்கு உள் விவகாரங்களில் அதிக அனுபவம் உள்ளதால் பைடனுக்கு அவர் பல வகைகளில் உதவியாக இருப்பார். இதுவரை இருந்த துணை அதிபர்களிலேயே அதிக பொறுப்பை சுமக்கக் கூடியவராக கமலா இருப்பார். காரணம், அவருக்கு என சில கோட்பாடு, மதிப்புகள் உள்ளன.

ஒரு முறை மாவட்ட அட்டர்னியாக இருந்தபோது ஒரு காவலரை ஒருவர் கொன்று விட்டார். அப்போது கமலா, நான் அவருக்காக வாதாடுவேன். ஆனால், அவருக்கு மரண தண்டனை கோர மாட்டேன். அது எனது கொள்கைக்கு உடன்பாடு அல்ல என்று தெரிவித்தார்.

அப்படி கூறினால் உங்களுக்கு அடுத்த முறை எங்களுடைய ஆதரவு இருக்காது என மாவட்ட காவல் சங்கம் எச்சரித்தது. ஆனாலும், கமலா தனது கொள்கையில் இருந்து பின்வாங்கவில்லை. கடைசியில் கமலாவின் கொள்கை பிடிப்பை உணர்ந்து அவரை அதே காவல் சங்கம் மறுமுறை நடந்த அட்டர்னி தேர்வின்போது தானாக முன்வந்து ஆதரித்தது.

எது நல்லது என கமலாவுக்கு தெரிகிறதோ அதை வெளிப்படையாக செய்யும் மனோபாவம் அவருக்கு உண்டு. பிறருக்காக தனது கொள்கையை அவர் மாற்றிக் கொள்ள மாட்டார்.

ஜோ பைடன், கமலா ஹாரிஸ் கூட்டணியால் இந்தியாவுக்கு ஏற்படும் பலன்கள் என்னவாக இருக்கும்?

இந்தியாவுக்கும் அமெரிக்காவுக்கும் இடையே அதிபர் மாற்றம் நடப்பதால் பெரிய வேறுபாடு இருக்காது. அமெரிக்க அதிபராக டிரம்ப் இருந்தாலும் சரி, பைடன் இருந்தாலும் சரி - இரு நாட்டு கேந்திர ரீதியிலான நட்புறவு வலுவாகவே இருக்கும். அதில் பெரிய வேறுபாடு இருக்காது.

பைடன், கமலா தலைமையிலான புதிய அரசு மூம் உலகுக்கு எந்த வகையிலாவது பயன் இருக்குமா?

பாரிஸ் பருவநிலை மாநாட்டில் இருந்து வெளியேறியது, உலக வர்த்தக அமைப்பில் இருந்து வெளியேறியது, இரான் உடனான அணுசக்தி உடன்பாட்டை முறித்துக் கொண்டது என சர்வதேச உடன்பாடுகள் அனைத்தையும் டிரம்ப் முறித்து வந்தார்.

இனி அந்த உடன்பாடுகள் எல்லாம் மீட்டெடுக்கப்படலாம். அதேபோல, தென் கொரியாவுக்கு வழங்கி வந்த பாதுகாப்பு, நேட்டோ அமைப்புக்கான ஆதரவை கைவிடப்போவதாக டிரம்ப் கூறி வந்தார். இனி ஆட்சி மாற்றத்தால் அந்த நாடுகளும் அமைப்புகளும் நிம்மதியடையும். ஒரு விஷயத்தை ஒப்புக் கொள்ள வேண்டும். உலகிலேயே இன்றும் அமெரிக்காதான் சக்தி வாய்ந்த நாடு.

அது சர்வதேச அமைப்புகளில் இருந்தும் உடன்பாடுகளில் இருந்தும் விலகிச் சென்றால் அதனால் பலன் பெறும் வாய்ப்பு, சீனாவுக்கே சாதகமாக இருக்கும். அது உலகுக்கு நல்லதல்ல.

பிறருடன் ஒப்பிடும்போது குறுகிய காலத்தில் அட்டர்னி, செனட்டர், இப்போது துணை அதிபராகும் அளவுக்கு கமலா ஹாரிஸ் எப்படி உயர்ந்தார்?

அர்ப்பணிப்பு, நம்பிக்கை, புத்திசாலித்தனம், மக்களுடன் அணுகும் பண்பு ஆகியவைதான் அவரது வெற்றிக்கு உதவியது. அரசியலில் வாக்காளர்களின் நம்பிக்கையை பெற உழைக்க வேண்டும். அதை அவர் சிறப்பாக செய்து வருகிறார்.

தமிழகத்தின் துளசேந்திரபுரத்தில் கமலா ஹாரிஸின் வெற்றிக்கு வழிபாடு செய்யும் பூர்விகவாசிகள் பற்றி உங்கள் கருத்து...

பூஜை எங்கு செய்தாலும் நல்லது. ஆனால், அந்த பூஜையால் அமெரிக்காவில் ஒருவர் மனம் மாறி ஓட்டு போடுவார் என்று கூற முடியாது. அந்த பூஜையால் ஒரு மாற்றம் வரும் என்று எதிர்பார்க்கக்கூடாது. மகிழ்ச்சியான விஷயம் என்னவெனில் நமக்காக நமது கிராமத்தில் ஊர் மக்கள் பூஜை செய்கிறார்கள் - இப்படித்தான் அவர்களின் செயலை நினைக்கத் தோன்றுகிறது.

கமலா ஹாரிஸ் கடைசியாக தமிழ்நாட்டுக்கு எப்போது வந்தார்?

கமலா ஹாரிஸ் தமிழ்நாட்டுக்கு வந்தபோது நான் வெளிநாட்டில் இருந்தேன். நான் 18 ஆண்டுகளாக வெளிநாட்டில் இருந்தேன். கடைசியாக கமலா ஹாரிஸ், அவரது தங்கை அவரது தாயின் அஸ்தியை இந்தியாவில் கரைப்பதற்காக வந்தார். அப்போது எனது தாயும் உயிரோடுதான் இருந்தார். அதற்கு முன்பும் வாய்ப்பு கிடைக்கும் போது கமலா இந்தியாவுக்கு வருவார். அது சுற்றுலாவுக்கான பயணமாக இருக்காது. சொந்தங்களை பார்த்து நேரத்தை செலவிடக்கூடியதாக இருக்கும்.

அமெரிக்க துணை அதிபராகவுள்ள கமலா ஹாரிஸுக்கு அந்நாட்டின் அதிபராகும் வாய்ப்புள்ளதா?

வாய்ப்பு அதிகமாகவே உள்ளது. பைடன் அடுத்த முறை தேர்தலில் நிற்கப்போவதில்லை என்று அறிவித்திருக்கிறார். அதனால் துணை அதிபராக இருக்கும் கமலாவுக்கு அதற்கான வாய்ப்பு அதிகம் உள்ளது.

இந்திய அரசியல் பற்றி அறிய கமலா ஹாரிஸ் ஈடுபாடு காட்டுவாரா?

அதிகமாகவே உண்டு. இந்தியாவில் என்ன நடக்கிறது என்பது பற்றி எங்களுடன் பேசி அறிந்து கொள்வார். காஷ்மீரில் என்ன நடக்கிறது என்றெல்லாம் எங்களிடம் பேசுவார்.

கமலா ஹாரிஸ் மரண தண்டனை எதிர்ப்பாளர் என்கிறார்களே... அது உண்மையா?

மரண தண்டனை என்பது ஒரு கைதியை தூக்கில் போடுவது. அவருக்கு தூக்கு தண்டனையை நிறைவேற்றிய பிறகு அவர் குற்றம் செய்யவில்லை என தெரிய வந்தால் பறிபோன உயிருக்கு யார் பொறுப்பு? அதனால்தான் அத்தகைய தூக்கு தண்டனைக்கு எதிரான நிலைப்பாட்டை கமலா கொண்டிருக்கிறார்.

அதுவே சிறையில் அடைக்கப்பட்டிருந்தால், மேல் விசாரணையில் அவர் மீதான குற்றம் நிரூபிக்கப்படாவிட்டால் அவரை விடுதலை செய்ய வாய்ப்புள்ளது. கமலா பொறுத்தவரை மரண தண்டனை என்பது மிகவும் கடுமையான தண்டனை. சித்தாந்த ரீதியாகவும் தத்துவார்த்த ரீதியாவும் அதற்கு கமலா எதிர்ப்பானவர் என்பது உண்மைதான்.

கமலா ஹாரிஸுடன் சமீபத்தில் என்ன பேசினீர்கள்?

நேற்று காலையில்தான் பேசினேன். பரஸ்பரம் நலம் விசாரித்தோம். தேர்தலில் நிச்சயமாக வெற்றி பெறுவோம் என்பதை ஏற்கெனவே அவர்கள் அறிந்திருந்தார். அதனால் மிகவும் நம்பிக்கையுடன் இருந்தார்.

கமலா ஹாரிஸின், பலம் - பலவீனம் எது?

தான் செய்ய வேண்டிய விஷயத்தை முடிவெடுத்து விட்டால் அதை நிச்சயம் செய்வார். அதுதான் அவரது பலம். பலவீனம் என எடுத்துக் கொண்டால் அது குடும்பம்தான். ஆனால், அதைத் தவிர பெரிய பலவீனம் அவரிடம் ஏதுமில்லை.

கமலா ஹாரிஸுக்கு தமிழ் பேச தெரியுமா?

எனக்கே தமிழ் அவ்வளவாக பேசத் தெரியாது. நான் வட மாநிலத்துக்கு வந்து பல ஆண்டுகளாகி விட்டன. சின்ன வயதில் வீட்டில் தமிழ் பேசுவோம். கமலாவின் தாய்க்கு தமிழ் தெரியும். தனது பிள்ளைகளுடன் சில வார்த்தைகளை அவர் தமிழில் பேசுவார். அதைத்தாண்டி கமலாவுக்கு தமிழ் எல்லாம் பேசவோ, எழுதவோ தெரியாது.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: