You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
அமெரிக்க துணை அதிபராகும் கமலா ஹாரிஸ்: கொண்டாடி தீர்த்த மன்னார்குடி கிராம மக்கள்
அமெரிக்க அதிபர் தேர்தலில் வெற்றி பெற்றுள்ள ஜோ பைடன் அரசில் துணை அதிபராகவுள்ள கமலா ஹாரிஸ், கருப்பின - தமிழ் பூர்வீகம் உள்ளவர்.
குறிப்பாக இவரது தாய்வழி தாத்தா கோபாலன், பாட்டி ராஜம் ஆகியோர் மன்னார்குடியை அடுத்துள்ள துளசேந்திரபுரம் கிராமத்தை சேர்ந்தவர்கள்.
அந்த கிராமமே இப்போது விழாக்கோலம் பூண்டுள்ளது. தங்கள் மண்ணின் மைந்தர் மிகப் பெரிய உச்சத்தை தொட்டது குறித்த பெருமிதம் இங்கே ஒவ்வொருவரிடமும் ததும்பி வழிகிறது.
பெரும்பாலானவர்கள் வீட்டின் வாசலில் கமலா ஹாரிஸுக்கு வாழ்த்து தெரிவித்து கோலம் வரையப்பட்டிருக்கிறது. இனிப்புகள் பகிர்ந்து தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தி வருகின்றனர்.
கமலா ஹாரிஸின் தாய்வழி குலதெய்வமான தர்மசாஸ்தா கோயில் துளசேந்திரபுரம் கிராமத்தில் உள்ளது. இந்த கோயிலுக்கு ஒவ்வொரு ஆண்டும் கமலாவின் உறவினர் மூலம் நன்கொடை வழங்கப்பட்டு வருவதாக கோயில் நிர்வாகத்தினர் தெரிவிக்கின்றனர்.
அங்கு இன்று சிறப்பு பூஜைகளும் நடந்தன.
பிபிசி தமிழிடம் பேசிய கோயில் நிர்வாகி எஸ்.வி.ரமணன், ''கமலாவின் அத்தை சரளா கோபாலன் என்பவர் 2014ல் கோயில் கும்பாபிஷேகத்திற்கு நன்கொடை அளித்தார். கமலாவின் பெயரும் கோயில் நன்கொடையாளர்கள் பட்டியலில் இடம்பெற்றுள்ளது. ஐந்து வயது சிறுமியாக இருந்தபோது கமலா இந்த கோயிலுக்கு வந்திருக்கிறார்." என்றார்.
கமலா வெற்றி பெற வாழ்த்து தெரிவித்து துளசேந்திரபுரத்தில் பதாகைகள் வைத்துள்ளனர்.
அரசியலே எதிர்காலம்
பிபிசி தமிழ் செய்தியாளர் பிரமிளாவிடம் பேசிய துளசேந்திரபுரம் கிராமத்தை சேர்ந்த ஒன்றிய கவுன்சிலரானஅருள்மொழி சுதாகர், "எங்கள் வீட்டு பெண் அமெரிக்க துணை அதிபராக ஆவது பெரும் மகிழ்ச்சி தருகிறது," என்கிறார்.
"அரசியல் தளத்தில் பல்வேறு சவால்கள் உள்ளன. ஓர் ஒன்றிய கவுன்சிலராகவே அவ்வளவு இடர்களை சந்திக்கிறேன். எத்தனை சவால்களை சந்தித்து கமலா ஹாரிஸ் துணை அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்டிருப்பார். உண்மையில் இது பெண் சமூகத்திற்கு நிச்சயம் உத்வேகம் அளிக்கும். இனி பல பெண்கள் அரசியலை தங்கள் எதிர்காலமாக தேர்ந்தெடுப்பார்கள்," என்று அவர் கூறினார்.
முன்னதாக கமலா ஹாரிஸின் தாய் வழி மாமாவான கோபாலன் பாலகிருஷ்ணன் தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்தி இருக்கிறார்.
அற்புதமான துணை அதிபராக...
டெல்லியில் வசித்து வரும் இவர் கமலா ஹாரிஸ் வெற்றி குறித்து, " ''அமெரிக்க துணை அதிபர் தேர்தலில் கமலா ஹாரிஸ் வெற்றிபெறுவார் என நான் எதிர்பார்த்தேன். என் எதிர்பாப்பு நிறைவேறி உள்ளது," என தெரிவித்து இருந்தார்.
அமெரிக்க வரலாற்றில் கமலா ஒரு அற்புதமான துணை அதிபராக செயலாற்றுவார் என்றும் அவர் கூறி இருந்தார்.
துளசேந்திரபுரத்தில் மக்கள் ஒன்றுகூடி தேர்தலுக்கு முன்பாக கமலா வெற்றி பெற வழிபாடு நடத்தினார்கள். இப்போது அவரது வெற்றி உறுதியான நிலையில், கடவுளுக்கு நன்றி செலுத்தும் வகையில் அந்த கோயிலில் ஞாயிற்றுக்கிழமை பூஜைகள் நடக்கின்றன.
பிற செய்திகள்:
- கொரோனா வைரஸ்: உலகெங்கும் பாதிப்பு, பலி எண்ணிக்கை எவ்வளவு?
- பைடன் அமெரிக்க அதிபராவதை டிரம்ப் நீதிமன்றம் மூலம் நிறுத்த முடியுமா?
- ஜோ பைடன் வெற்றி உறுதி: இனி வரும் நாட்களில் என்ன நடக்கும்?
- அமெரிக்க தேர்தலில் ஜோ பைடன் வெற்றி: எப்படி நடந்தது?
- அமெரிக்க தேர்தல் 2020: வெள்ளை மாளிகையில் அதிபராக நுழைய தகுதி பெற்ற பைடன்
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: