"திருமணத்திற்காக செய்யப்படும் மதமாற்றம் சட்டபூர்வமானது அல்ல" - அலகாபாத் நீதிமன்றம் தீர்ப்பு

திருமண நோக்கத்திற்காக மட்டும் மதத்தை மாற்றுவது சட்டபூர்வமானது அல்ல என்று அலகாபாத் உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

இரண்டு வெவ்வேறு மதங்களை சேர்ந்த தம்பதிகளின் மனுவை தள்ளுபடி செய்த நீதிமன்றம், அவர்களை மாஜிஸ்திரேட் முன் ஆஜராகி வாக்குமூலம் அளிக்குமாறு உத்தரவிட்டது.

தங்களது திருமண வாழ்க்கையில் பெற்றோர்கள் தலையிடுவதை தடுத்து நிறுத்துமாறு நீதிமன்றம் உத்தரவிட கோரி, தம்பதிகள் தரப்பில் கோரிக்கை விடுக்கப்பட்டிருந்தது. எனினும், இந்த விவகாரத்தில் தலையிட வெள்ளிக்கிழமையன்று நீதிமன்றம் மறுப்புத் தெரிவித்துவிட்டதாக ஏ.என்.ஐ. முகமை செய்தி வெளியிட்டுள்ளது.

பிரியான்ஷி என்றழைக்கப்படும் சம்ரீன் மற்றும் பிறரின் தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட மனுவை அலகாபாத் நீதிமன்றத்தின் நீதிபதி எம்.சி. திரிபாதி தள்ளுபடி செய்தார். முன்னதாக, வழக்கு விசாரணையின்போது, மணப்பெண் கடந்த ஜூன் 29ஆம் தேதி இந்து மதத்துக்கு மாறிய நிலையில், ஜூலை மாதம் 31ஆம் தேதியே திருமணம் நடைபெற்றது தெரியவந்தது. இதன் மூலம், மதமாற்றம் திருமண நோக்கத்திற்காக மட்டுமே செய்யப்பட்டது என்பது தெளிவாகிறது என்று நீதிமன்றம் கருதியது.

இதையடுத்து, நூர் ஜஹான் பேகம் என்பவரின் வழக்கை மேற்கோள் காட்டிய நீதிமன்றம், திருமணத்திற்காக மதத்தை மாற்றுவது செல்லுபடியாகாது என்று கூறியது. நீதிபதியால் மேற்கோள் காட்டப்பட்ட வழக்கில், இந்து பெண் திருமணத்திற்காக இஸ்லாமிய மதத்திற்கு மாற்றப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

முன்னதாக, நூர் ஜஹான் பேகம் வழக்கு விசாரணையின்போது, இஸ்லாமியர்களின் புனித நூல்களில் ஒன்றான குர்ஆனுடன் தொடர்புடைய ஹத்தீஸை மேற்கோள் காட்டி, நம்பிக்கை இல்லாமல் ஒருவர் மதத்தை மாற்ற முடியாது என்று கூறியிருந்தது.

இந்த வழக்கை அடிப்படையாக கொண்டு திருமண நோக்கத்திற்காக முஸ்லிம் மதத்திலிருந்து இந்து மதத்துக்கு மாறிய பெண்ணின் கோரிக்கையை அலகாபாத் நீதிமன்றம் மறுத்துவிட்டது.

நூர் ஜஹான் வழக்கில் கூறப்பட்டது என்ன?

நூர் ஜஹான் பேகத்தின் வழக்கில் 2014ஆம் ஆண்டு தீர்ப்பளித்த நீதிமன்றம், "வழக்கு விசாரணையின் மூலம் தெரியவந்துள்ள விடயங்களை பார்க்கும்போது, இந்த பெண் இஸ்லாமிய மதத்தின் மீது நம்பிக்கை இல்லாமல் திருமணத்திற்காக மட்டும் மதம் மாறியுள்ளதாக தெரியவருவதால் இதை முறையான மதமாற்றமாக ஏற்றுக்கொள்ள முடியாது. மேலும், இத்தகைய திருமணங்கள் புனித குர்ஆனின் சூரா II அயோத் 221 என்ற கூற்றுக்கு எதிராக அமைந்துள்ளது" என்று தெரிவித்தது.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: